வாசிக்க: 1 நாளாகமம் 7, 8; நீதிமொழிகள் 20; யோவான் 18: 1-24
வேத வசனம்: நீதிமொழிகள் 20: 9. என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
கவனித்தல்: தேவனுடைய ஆழமான சத்தியங்களுக்கு நம் கவனத்தைத் திருப்புகிற பல கேள்விகளை நாம் வேதாகமத்தில் காணலாம். நீதிமொழிகள் 20:9ல் நாம் பார்க்கிற கேள்வி அப்படிப்பட்ட ஒரு கேள்விதான். தன் இருதயத்தின் உண்மையான நிலை என்ன என்பதை அனைவரும் அறிவர். “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்கள்” ஆனார்கள் என்று வேதம் சொல்கிறது. (ரோமர்.3:23). பாவமில்லாதவர் என எவரும் இல்லை. ஆயினும், அனேகர் இந்த கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, கிறிஸ்தவர்கள் அனைவரையும் பாவிகள் என்று அழைக்கிறார்கள் என கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது” என்று அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார் (1 யோவான் 1:8-10). இந்த வேதப் பகுதியின் படி, நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாம் அல்லது தேவனுடைய மன்னிப்பைப் பெறுவதற்காக நம் உண்மையான நிலையை அறிக்கை செய்யலாம். தேவனால் மன்னிக்கப்பட்டவர்கள் மட்டுமே சுத்த இருதயத்தை உடையவர்களாக இருக்க முடியும் (சங். 51:1,2, 9,10). மனிதர்கள் தங்கள் முயற்சிகளால் இருதயத்தை சுத்தப்படுத்த முடியாது. சுயமாக தங்களுடைய இருதயத்தை சுத்தம் செய்து கொள்ள முயற்சி செய்கிறவர்கள், தங்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் அல்லது மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் அலைந்து திரிந்து பலவிதங்களில் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்கிறார்கள். முடிவில், மனித முயற்சிகள் அர்த்தமற்றவை, வீண், மற்றும் மாயை என்று சொல்கிறார்கள்.
“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7) என்றும், இயேசு “நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:4) என்றும் வேதம் சொல்கிறது . நம்மைக் குற்றப்படுத்துவதற்காக வேதம் ஒரு கேள்வியைக் கேட்பதில்லை. ஒவ்வொரு மனிதனின் இருதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை தேவன் ஏற்கனவே அறிந்திருக்கிறார். ஒருவரும் அவருக்குச் சொல்லத் தேவை இல்லை. நீதி.20:9க்கான பதில் என்ன என்று அவர் அறிந்திருக்கிறார். உலகப் பொய்களால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குப் பதிலாக, அனைவரும் தன்னிடம் வந்து மனித பாவ சுபாவத்திற்கு அவர் வைத்திருக்கும் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார். தேவன் அனைவரையும் நேசிக்கிறார், தன்னிடம் வருகிற அனைவரையும் வரவேற்று ஏற்றுக் கொள்கிறார். மாயையான காரியங்களில் நம் நேரத்தையும் வாழ்க்கையையும் வீணடிப்பதற்குப் பதிலாக, சுத்த இருதயத்தைப் பெற தேவனையும் அவருடைய மன்னிப்பையும் நாடுவது நல்லது. “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத்.5:8).
பயன்பாடு: நான் சுயமாக என் இருதயத்தை சுத்தமாக்கி, பாவம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாது. எனக்கு இயேசு தேவை. அவர் என் இருதயத்தை எல்லா பொல்லாத சிந்தனைகள் மற்றும் செயல்களில் இருந்து சுத்திகரித்து, ஒரு முழுமையான மனிதனாக என்னை மாற்றுகிறார். நான் என் பாவங்களுக்கு நியாயம் கற்பித்து, மற்றவர்களை குறைகூற கூடாது. நான் எவ்வளவு சீக்கிரமாக இயேசுவிடம் வருகிறேனோ, அவ்வளவு விரைவாக அவருடைய கிருபையையும் இரக்கத்தையும் கண்டடைகிறேன். நான் என் பாவங்களை அறிக்கை செய்து, அவருடைய மன்னிப்பைக் கேட்கும்போது, அவர் என்னை மன்னித்து அவருக்குச் சொந்தமானவனா(ளா)க ஏற்றுக் கொள்கிறார். நான் இனி பாவத்திற்கு அடிமை அல்ல, இயேசுவின் மகன்/மகள். நான் தேவனுடைய பெரிய குடும்பமாகிய சபையின் ஒரு அங்கமாக இருக்கிறேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் இருதயத்தின் உண்மையான நிலையை எனக்கு நினைவுபடுத்துவதற்காக உமக்கு நன்றி. எல்லா பாவங்களிலும் இருந்து என்னைச் சுத்திகரிக்க நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற ஏற்பாட்டிற்காக உமக்கு நன்றி. இயேசுவே, என் இருதயத்தைச் சுத்திகரித்து, அதை உந்தன் வீடாக மாற்றியருளும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 171
No comments:
Post a Comment