வாசிக்க: 1 நாளாகமம் 13, 14; நீதிமொழிகள் 23; யோவான் 19: 25-42
வேத வசனம்: யோவான் 19: 35 அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
கவனித்தல்: யோவான் 19:35ல், யோவான் நற்செய்தி நூலை எழுதிய தன்னைப்பற்றிய ஒரு மறைமுகமான குறிப்பைத் தருகிறார். நற்செய்தி நூலாசிரியர்களின் நோக்கம் எல்லாம் இயேசுவின் மேல் இருந்தது, தங்களைப் பற்றி எழுதுவதில் அல்ல. இங்கே யோவான் நற்செய்தி நூலாசிரியர் இயேசு கிறிஸ்துவைப் பார்த்த நேரடியாகக் கண்ட சாட்சி என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்; அவர் தன் வாழ்வில் கண்டதைக் குறித்து சாட்சி கூறுகிறார். இயேசுவைப் பற்றி சாட்சியமளித்தல் அல்லது சாட்சி கூறுதல் என்பதற்கு யோவான் தனிப்பட்ட கவனம் கொடுக்கிறார். மற்ற எந்த நூலாசிரியரையும் விட அதிகமாக, சாட்சி கூறுதல் அல்லது சாட்சியமளித்தல் என்ற பொருள் தரும் martureó என்ற வினைச்சொல்லை 33 முறை பயன்படுத்துகிறார். இங்கே, இயேசுவின் சிலுவை மரணம் அம்ற்றும் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களில் ஒன்றின் நிறைவேறுதல் குறித்து சாட்சி அளிக்கிறார் (பார்க்க, வசனங்கள் 34 & 36). யோவான் சிலுவையின் அருகே நின்று, இயேசுவின் சிலுவை மரணத்தை தன் கண்களால் பார்த்தார். இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களின் மரணத்தில் இருந்து இயேசுவின் மரணம் வித்தியாசமானதாக இருந்ததை அவர் கண்டார். இயேசு தாமாக முன்வந்து சிலுவை மரணத்தின் வேதனையைச் சகித்து, தன் உயிரை விட்டார். வழக்கத்திற்கு மாறாக இயேசு சீக்கிரமே மரித்துப் போனதை போர்ச் சேவகர்கள் கண்டபோது, “போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்.” இயேசுவின் உடலில் இருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்ட பயங்கரமான காட்சியையும், அது மேசியாவைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசன நிறைவேறுதலாக இருந்ததையும் பற்றி யோவான் சாட்சி கூறுகிறார். (சக.12:10).
வரப்போகிற மேசியாவைப் பற்றி 300க்கும் அதிகமான தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் உண்டு. அவை எல்லாம் இயேசு பிறப்பதற்கு குறைந்தது 500 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவை. மேசியாவைப் பற்றிய அனைத்து தீர்க்கதரிசனங்களும் ஒரு மனிதனின் வாழ்வில் நிறைவேறுவது என்பது நடைபெறச் சாத்தியமில்லாதது. இயேசுவின் தெய்வீகத்தையும், வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதையும் நிரூபிக்க, பீட்டர் ஸ்டோனர் என்பவர் இயேசுவின் வாழ்வில் நிறைவேறிய மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களில் எட்டு தீர்க்கதரிசனங்களை ( “தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள்” என்பதும் அதில் ஒன்று) தெரிவு செய்தார். நிகழ்தகவு பற்றிய விதிகளின் படி (principles of probability), “இந்த நாள்வரை உயிர் வாழ்ந்த, வாழ்கிற ஏதாவது ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த எட்டு தீர்க்கதரிசனங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்பு 100000000000000000 ல் ஒன்று மட்டுமே என்று ஸ்டோனர் கூறுகிறார் (Science Speaks). ஆயினும், இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் இயேசுகிறிஸ்துவில் பரிபூரணமாக நிறைவேறின. யோவான் தன் கண்களால் கண்டதைப் பற்றி சாட்சியமளிக்கிறார்; அவருடைய சாட்சி எந்த நீதிமன்றத்திலும் செல்லுபடியாகக் கூடிய வல்லமையான சாட்சி ஆகும். இயேசுவைப் பற்றி தான் சாட்சி கூறுவதற்கான காரணத்தை யோவான் எழுதுகிறார். தன்னுடைய எழுத்துக்களை வாசிக்கும் வாசகர்கள் மேசியாவாகிய இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று யோவான் விரும்புகிறார். (பார்க்க. யோவான்.1:7; 20:31). தன் சாட்சி உண்மை என்றும் இயேசுவே சத்தியம் என்றும் யோவான் அறிந்து உறுதிப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்துவின் மீது உள்ள நம் விசுவாசமானது குருட்டு விசுவாசம் அல்ல, நமக்காக இந்த பூமிக்கு வந்து நம் பாவங்களில் இருந்து நம்மை இரட்சிக்க தம் உயிரைக் கொடுத்த இயேசுவைப் பற்றிய வரலாற்று உண்மை மீது கட்டப்பட்டது ஆகும்.
பயன்பாடு: இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க ஜனங்கள் பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லக் கூடும். ஆனால், இயேசுவை நம்புவதற்கு எனக்கு எண்ண முடியாத காரணங்கள் உண்டு. இயேசுவின் மீதான என் விசுவாசத்தைப் பற்றிய நம்பிக்கையை யோவானின் சாட்சியானது அதிகரிக்கிறது. இயேசு எனக்காக சிலுவையில் மரித்து, என் பாவங்களுக்கான விலைக்கிரயத்தை செலுத்தினார் என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசுவைப் பற்றிய தனிப்பட்ட சாட்சியம் என்னிடமும் உண்டு. இயேசுவே சத்தியம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எந்த சந்தேகமும் இல்லாமல் நான் அவரை எக்காலத்திலும் நம்ப முடியும்.
ஜெபம்: இயேசுவே, என்னை இரட்சித்த உம் அன்பிற்காக உமக்கு நன்றி. அனைத்து கட்டுகள் மற்றும் அடிமைத்தனங்களில் இருந்து என்னை விடுவித்த உம் சத்தியத்தைப் பற்றிய என் சாட்சியை பகிர்ந்து கொள்ள எனக்கு உதவியருளும். என் இரட்சகரே, உம் ஆச்சரியமான கிருபையை பற்றியும், என்றும் பசுமையாக விளங்கும் மாறாத உம் சத்தியத்திற்கும் சாட்சி பகர உம் ஞானத்தையும் வல்லமையையும் எனக்கு தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 174
No comments:
Post a Comment