வாசிக்க: 1 நாளாகமம் 9, 10; நீதிமொழிகள் 21; யோவான் 18: 25-40
வேத வசனம்: நீதிமொழிகள் 21: 30. கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
31. குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
கவனித்தல்: உலக வரலாற்றில், அனேக வல்லமையான பேரரசர்கள், சிறந்த ஞானிகள், மற்றும் அதிக தாக்கத்தை உண்டாக்கின தலைவர்கள் என பலர் தேவனுடைய திட்டத்தை அவமாக்க தங்களால் கூடியமட்டும் முயற்சி செய்தார்கள். ஆயினும், அவர்கள் அனைவரும்—எகிப்தின் பார்வோம், அப்சலோமின் ஆலோசனைக்காரன் அகித்தோப்பேல், சீரியாவின் அரசன் பெனாதாத், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப், அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப், பாபிலோனியப் பேரரசின் சக்கரவத்தி நேபுகாத்நேச்சார், ஏரோது என பலரும்- மிக மோசமாகத் தோல்வியையே கண்டனர். தேவனுடைய திட்டத்திற்கு எதிராக வெற்றிபெற முடியாத அனேகரைப் பற்றி வேதம் சொல்கிறது. மனிதர்கள் நிலையற்றவர்கள், ஆனால் தேவனுடைய திட்டமானது அவர்கள் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து வெற்றி பெறுகிறதாகவே இருக்கும் என்பதை இச்சம்பவங்கள் விளக்குகின்றன. மனிதர்கள் பல திட்டங்களைத் தீட்டலாம்; “ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்” (நீதி.19:21). ஏனெனில், தேவன் அனைத்தையும், அனைத்து தேசங்களையும் ஆளுகை செய்கிறார். பாபிலோனின் ராஜாவிடம் தானியேல் சொன்னது போல, “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார்” (தானி.4:25). ஆகவே, தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் வெற்றி பெறுவதில்லை.
ஜனங்கள் வெற்றியைக் கண்டடைய தங்களுடைய படைபலம் மற்றும் யுத்த தந்திரம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். தங்களுடைய சக்தியைக் குறித்து பெருமை பாராட்டவும் செய்கிறார்கள். ஆயினும், இப்படிப்பட்ட உலக காரியங்களில் நம் நம்பிக்கையை வைப்பதற்கு எதிராக வேதாகமம் தெளிவாக எச்சரிக்கிறது. சங்கீதம் 20ல், தேவன் மீது நம்பிக்கை வைத்தல் மற்றும் உலகப் பிரகாரமான சக்திகளின் மீது நம்பிக்கை வைத்தல் ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை தாவீது காண்பிக்கிறார்: “சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்” (சங்.20:7,8). நம் வெற்றியானது கிழக்கிலோ, மேற்கிலோ, அல்லது வனாந்திர திசையிலோ இருந்து வராது (சங்.75:6); அது கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது (சங்.3:8; நீதி.21:31). ஆகவே, தேவன் நமக்கென வைத்திருக்கும் திட்டத்தை எந்த மனிதனும் தடுத்து நிறுத்த முடியாது என்பதில் உறுதியாக இருக்கலாம். ஆயினும், கர்த்தருக்குக் காத்திருந்து, யுத்தத்திற்கு ஆயத்தப் படுவது நம் பொறுப்பு ஆகும். நம் எதிரியாகிய பிசாசின் பெரும் பலத்தைக் குறித்து நாம் கவலைப்படத் தேவை இல்லை. ஏனெனில், “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (சங்.46:7); சகலமும் அவருடைய பாதங்களுக்குக் கீழ் இருக்கிறது.
பயன்பாடு: என் தேவன் “காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்”(தானி.2:21). உலக ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், எல்லா இடங்களிலும் அவர் தம் திட்டத்தை வெற்றி பெறச் செய்து, தம் ஜனங்களுக்கு ஜெயத்தைத் தருகிறார். கர்த்தராகிய ஆண்டவர் என் வாழ்க்கையை ஆளுகை செய்கிறார். நான் அவரை எப்பொழுதும் நம்ப முடியும். என் வாழ்க்கையில் சவால்களுக்கு எதிராக எழுந்து நிற்கவும் வெற்றியை ருசிக்கவும் அவர் எனக்கு உதவுகிறார். ஏனெனில், ஞானமும் வல்லமையும் கர்த்தருடையது.
ஜெபம்: சர்வவல்லமையுள்ள தேவனே, ஞானத்திலும் வல்லமையிலும் உமக்கு ஒப்பானவர் எவருமில்லை. நீர் அனைத்தையும் ஆளுகை செய்கிறீர். என் வாழ்க்கை உம் கரங்களில் இருக்கிறது. என் வாழ்க்கைக்கான உம் திட்டத்தை எதுவும்/எவரும் தடுத்து நிறுத்தமுடியாது. உம் வல்லமையையும் ஞானத்தையும் நம்பவும், உம் சித்தத்தின்படி வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 172
No comments:
Post a Comment