வாசிக்க: 2 இராஜாக்கள் 9, 10; நீதிமொழிகள் 9; யோவான் 12: 27-50
வேத வசனம்: யோவான் 12: 46. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
கவனித்தல்: யூதர்கள் மேசியாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆயினும், தேவன் அனுப்பிய மேசியா இயேசுதான் என்பதை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. வாக்குப் பண்ணப்பட்ட மேசியா குறித்து அவர்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தன. 1 யோவான் 12ல், இயேசு தன் மரணத்தைப் பற்றி பேசின போது, அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில், மேசியாவானவர் அவர்களுடன் எப்பொழுதும் இருப்பார் என்று அவர்கள் நம்பினர். வேதாகமத்தில் மேசியாவைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்களை அவர்கள் நினைத்துப் பார்த்திருக்கக் கூடும் (சங். 89:35-37, 110:4; ஏசாயா 9:7). ஆகவே அவர்கள் இயேசு தன்னை “மனுஷ குமாரன்” என்று சொன்னதைக் குறித்து கேள்வி எழுப்பினர். நற்செய்தி நூல் முழுவதிலும் இந்த ஒரு இடத்தில் மட்டுமே இயேசுவைத் தவிர மற்றவர்கள் “மனுஷ குமாரன்” என்ற பதத்தைப் பயன்படுத்தி இருப்பது சுவராசியமான தகவல் ஆகும். இங்கும் கூட இயேசுவுக்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த யூதர்களைப் போல, ஜனங்கள் இயேசுவைக் குறித்து கேட்கும்போது, கேள்விப்படும்போது, அவரைத் தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்குள் வைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகள் மற்றும் யதார்த்தம் ஆகியவற்றிற்கு எவ்வித தொடர்பும் இல்லை எனும்போது, அவர்கள் கேள்விகளைக் கேட்கவும், சந்தேகங்களை எழுப்பவும் ஆரம்பிக்கின்றனர்.
ஆயினும், தன்னை நிராகரித்தவர்களையும் தன்னை இரகசியமாகப் பின்பற்றினவர்களையும் இயேசு அறிந்திருந்தார். அவர்களிடம் தனது மனித அவதாரத்தின் நோக்கத்தைச் சொன்னார்; அவரே இந்த உலகத்தில் ஒளி. இயேசு முன்னமே இருந்தவர் என்பதையும் அவரை விசுவாசிப்பவர்கள் பற்றிய அவருடைய விருப்பத்தையும் யோவான் 12:46 குறிக்கிறது. இயேசுவின் ஊழியத்திற்கு முன், ஆரம்பத்தில் இயேசுவை “மனுஷருக்கு ஒளி” என்று யோவான் கூறுகிறார் (யோவான் 1:4-5). இங்கு, இயேசுவின் பொதுஜன ஊழியத்தின் முடிவில் அதே கருப்பொருளான “ஒளி” என்பதில் பொருத்தமாக நிறைவு செய்கிறார். கவனிக்க: இயேசு தன்னை விரும்புகிறவர்கள் அனைவரும் இருளில் அல்ல, ஒளியில் வாழ வேண்டும் என விரும்புகிறார். 47ம் வசனத்தில் நாம் வாசிப்பது போல, இயேசு “உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்க” வந்தார். ஆயினும் இயேசுவின் காலத்தில் வாழந்த யூதர்களைப் போல, அனேகர் இயேசுவை நம்பாமல் இருளை நோக்கி அதிகம் அதிகமாகச் செல்வதை நாம் காண்கிறோம். ஒளியை நோக்கி வருவதற்கான இயேசுவின் அழைப்பு அனவருக்குமானது ஆகும். எவரும் இயேசுவிடம் வர முடியும். “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” (மத். 18:11; லூக்கா 19:10). ஒளி அல்லது இருள் இதில் ஒன்றை நாம் தெரிவு செய்யலாம். நாம் தேர்வு செய்வதுதான் நம் வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கிறது. இயேசு பார்வை பெற்ற அந்தப் பிறவிக் குருடனிடம் கேட்ட அதே கேள்வியைத்தான் இன்றும் கேட்கிறார்: “நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா” (யோவான் 9:35).
பயன்பாடு: நான் இயேசுவின் ஒளியில் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த என் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவை நான் விசுவாசிக்கிறேன். அவரே மேசியா. அவருடைய வார்த்தைகள் சத்தியமும், நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறதாகவும் இருக்கிறது. எனக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் என்னை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார் (எபி.7:25).
ஜெபம்: இயேசுவே, இருளின் அதிகாரத்தில் இருந்து என்னை இரட்சிக்கிற உம் அன்பிற்காக நன்றி. ஆண்டவரே, என் வாழ்நாள் முழுவதிலும் உம் ஒளியில் வாழ எனக்கு உதவியருளும். என் சந்தேகங்கள் மற்றும் அவிசுவாசங்களை மேற்கொள்ள எனக்கு தயை கூர்ந்தருளும். “ஆண்டவரே, விசுவாசிக்கிறேன்.” ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573
Day - 160
No comments:
Post a Comment