வாசிக்க: 2 இராஜாக்கள் 7, 8 ; நீதிமொழிகள் 8 ; யோவான் 12: 1-26
வேத வசனம்: யோவான் 12: 24. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
கவனித்தல்: கிறிஸ்தவ வாழ்வு பற்றிய ஒரு முக்கியமான உபதேசத்தை, மரணம் மூலம் வரும் வாழ்க்கை, பற்றி யோவான் 12:24 சொல்கிறது. சில நேரங்களில், “நான் செத்தாலொழிய எனக்கு மன நிம்மதி கிடைக்காது” அல்லது “என் எல்லா பிரச்சனைகளும் என்றுதான் முடியுமோ” என்று ஜனங்கள் விரக்தியில் சொல்கிறார்கள். இதைப் போன்ற ஒன்றை இயேசு சொன்னாரா? நிச்சயமாக இல்லை. நற்செய்தியின் மூல மொழியில், இந்த வசனம் “amēn” என்ற வார்த்தையுடன் துவங்குகிறது. இது தமிழில் “மெய்யாகவே” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மெய்யாகவே என்ற வார்த்தையானது இரண்டு முறை வலியுறுத்தி சொல்லப்படுவது, இயேசு சொல்லப்போகிற செய்தியின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. ஆன்மீக வாழ்க்கை பற்றிய ஒரு ஆழமான உண்மையை/சத்தியத்தை இயேசு சொன்னார்.
கோதுமை மணியானது நிலத்தில் விழ தயாராக இல்லை எனில், அது பயனற்று தனித்திருக்கும். இது நாம் அனைவரும் நன்கறிந்திருக்கிற ஒரு விவசாய உண்மை. ஒரு பருவத்தில், ஒரு கோதுமை மணியானது சுமார் 400 விதைகளை உற்பத்தி பண்ண முடியும். ஆனால், அது தன் எஜமானுக்குப் பலனைக் கொடுப்பதற்கு நிலத்தில் விதைக்கப்பட வேண்டும். நாம் இரண்டு உள்ளார்ந்த பயங்களுடன் பிறப்பதாக அறிவியல் கூறுகிறது: கீழே விழுதல் பற்றிய பயம் மற்றும் இரைச்சலைப் பற்றிய பயம். யாருமே கீழே விழுவதை விரும்புவதில்லை. வேறு விதமாகச் சொல்வதானால், எவரும் மரிக்க விரும்புவதில்லை. மரணம் எல்லாவற்றிற்குமான முடிவு என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். ஆனால் இயேசுவோ வாழ்வைக் கொடுக்கிற மரணத்தைப் பற்றிப் பேசினார். இந்த வசனம் சொல்லப்பட்ட சூழலில், இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களின் சரீர மரணம் பற்றி சொல்லவில்லை. மாறாக, இயேசுவைப் பின்பற்றுவதற்கு சகலத்தையும் தியாகம் செய்ய/விட்டுவிட விருப்பமுள்ளவர்களாக இருப்பது பற்றி இந்த வசனம் குறிக்கிறது. நாம் நம் சுயத்தை வெறுத்து, அனேகரை நித்திய வாழ்விற்குள் நடத்துவதன் மூலமாக எல்லா வழிகளிலும் நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என அவர் விரும்புகிறார். நாம் அவரைப் பின்பற்றி, அவருடன் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். நம் சுயநல விருப்பங்கள், பாவ சுபாவம், மற்றும் உலக சிநேகம் ஆகியவற்றை சிலுவையில் அடிப்பதன் மூலமாக, கிறிஸ்துவில் நாம் நித்திய வாழ்வைப் பெறுகிறோம். இது நாமாக முன்வந்து தன்னார்வத்துடன் செய்யும் அன்பின் செயல் என்பது நினைவில் கொள்வோம். நாம் இயேசுவைப் பின்பற்றுவதற்கு ஒரு மாதிரியை முன் வைத்திருக்கிறார். நாம் இன்னமும் நமக்காகவே வாழ விரும்புகிறோமா? இயேசு சொன்னார்: “தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.”
பயன்பாடு: எனக்கும் தேவனுக்கும் இடையே என் உள்ளார்ந்த பயமானது தடையாக இருக்க நான் அனுமதிக்க மாட்டேன். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னது போல, “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலாத்தியர் 2:20). நான் கனி கொடுக்க வேண்டும் என அவர் என்னை தெரிந்தெடுத்திருக்கிறார். நான் இயேசுவில் நிலைத்து நிற்கும் போது, தேவ மகிமைக்காக நான் மிகுந்த கனி தருகிறவனா(ளா)க இருப்பேன்.
ஜெபம்: இயேசுவே, நீர் எனக்குத் தருகிற அபரிதமான/பரிபூரண வாழ்க்கைக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, உமக்குக் கனி தருகிற உண்மையுள்ள வாழ்க்கை வாழ எனக்கு இன்றும் என்றென்றும் உதவும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573
Day - 159
No comments:
Post a Comment