"இதோ நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று, அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்." (வெளி.3:20)
" உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." (எரே.29:13)
(வரி பிரிக்கும் அதிகாரி சகேயு தன் உதவியாளன் பாரூக்கிடம் பேசிகின்றான்.)
சகேயு: வரி கொடிப்போர் யாரும் வரவில்லை இன்று
ஆகவே
அலுவலகம் தனை நீ கவனித்துக்கொள். நான் போகிறேன்.
பாரூக்: எங்கே செல்கிறீர்கள்?
இறைவாக்கினர் உரையைக் கேட்டிடவா?
சகேயு: இறைவாக்கினரா? யாரைச் சொல்கிறாய், பாரூக்?
பாரூக்: நசரேத்தூர் இயேசு எரிகோ வருகிறாராம்.
சகேயு: நல்ல செய்தி சொன்னாய்.
அடைத்துவிடு அலுவலகத்தை;
செல்வோம் அவரை பார்க்க.
இப்போழுது புரிகிறது,
இவ்விடம் மக்கள் வராதது
ஏனென்று.
பாரூக்: இயேசு புதுமைகள் செய்வாரோ?
சகேயு: அது தெரியாதெனக்கு,
ஆனால் ஒன்று தெரியும்:
கப்பர் நகூம் மத்தேயு
வரி பிரிப்பதை விடுத்து
அவர் பின் செல்கின்றார்;
அதுவே பெரும் புதுமை.
( கூட்டத்தில் மக்கள் சகேயுவை நெருக்குகின்றனர்; கேலி செய்கின்றனர்.)
ஒருவன்: வரி பிரிக்க வந்தாயா
எங்கள் இயேசுவிடம்?
சுங்க வரி பிரிக்கும்
இடம் அல்ல இது.
இன்னொருவன்: உன்னிடம் இயேசு சொல்வார்:
"இறக்கும் போது உன் பணம்
உன்னுடன் வராது" என்று.
மற்றொருவன்: வரிப்பணம் கேட்டு
ஆண்டு முழுவதும்
நெருக்குவான் நம்மை!
குள்ளன் இவனை இன்று
நெருக்கிடுவோம் நாம்.
(கூட்டத்திலிருந்து விலகி ஓடி, காட்டு அத்தி மரத்தில் ஏறி கொள்கிறான் சகேயு.)
(மக்கள் புடை சூழ வருகிறார் இயேசு.)
சகேயு: அதோ வருகிறார் இயேசு.
என்ன?....
திசை திரும்பி,.....
என் மரத்தை நோக்கியா?
நின்றுவிடும் என் இதயம்
இயேசு: சகேயுவே, சீக்கிரம் இறங்கி வா!
(சகேயு கீழே குதிக்கிறான்.)
சகேயு, இன்று நான்
தங்குவேன் உன் வீட்டில்!
சகேயு: நீர்,... என் வீட்டில்?
ஒருவன்: ஐயா, இவன் ஆயக்காரன்!
இன்னொருவன்: இவருக்கு விருந்திட
உனக்கில்லை தகுதி!
ஒப்புக்கொள் அவரிடம்!
சகேயு: ஆண்டவரே,
இவர் சொல்வது யாவும்
உண்மையே,
உமக்கு விருந்திட நான்
அருகதை அற்றவன்!
ஆயினும் நீர் வந்தால்,
வரவேற்பேன்
என் இல்லத்திலும்
இதயத்திலும்!
இயேசு: சகேயு, உன் வீடு செல்வோம்!
பரிசேயன்: சொன்னேன் அல்லவா நான்?
இயேசு மீட்பர் அல்ல,
பாவிகளைச் சேர்ந்தவன்!
அநியாயம் செய்வோரை
ஆதரிப்பவன்!
சகேயு: (வீட்டினுள் வந்த இயேசுவின் காலடிகளில் வீழ்ந்து)
ஆண்டவரே, என்னை மன்னியும்;
என் உடமைகளில் பாதியை
ஏழைகட்குக் கொடுக்கிறேன்!
அநியாயமாய் எவரிடமும்
அதிகம் வரி பிரித்திருந்தால், நான்
திருப்பி கொடுப்பேன்
நான்கு மடங்கு!
இயேசு: இன்றே மீட்பு வந்தது
உன் இல்லத்திற்கு!
நீதிமான் ஆபிரகாமிற்குப்
பிள்ளையாவாய் நீயும்?
(அலுவலகத்தில் சகேயுவும் பாரூக்கும் உரையாடுகின்றனர்)
பாரூக்: இன்று
வேறு வ்ழியாக வருகின்றீர்களே!
யாரையாவது பார்க்கச் சென்றீர்களோ?
சகேயு: ஆம்,
இருவர் இல்லம் சென்றேன், பாரூக்.
பாரூக்: வரி தராதவர் வீடா?
சகேயு: இல்லை --
இன்று நான் சென்று வந்தது
கூடுதல் வரி தந்தவர் வீடு.
பாரூக்: ஏன்?... எதற்கு?
சகேயு: இயேசுவிடம் சொன்னது போல்
அதைத் திரும்பக் கொடுத்தேன்.
பாரூக்: நாலு மடங்கு?
சகேயு: ஆம், நம் மதச் சட்டப் படி,
அநியாயம் செய்தால்
சரி செய்வது அப்படியே!
பாரூக்: இயேசுவைச் சந்தித்ததால்
இழப்பு மிகுதியோ?
சகேயு: முன்பு பணம் இருந்தது,
மகிழ்ச்சியோ ச்றிதுமில்லை!
இப்போது செலவுண்டு,
மகிழ்ச்சியும் மிக உண்டு.
பாரூக்: இயேசுவைத் தேடிச் சென்றது
சரியே என்கிறீர்கள்!
சகேயு: நான் தேடிச் சென்றேனா,
அல்லது
பாவியாம் என்னை
அவர் தேடி வந்தாரா?
எரிகோ வந்தது அவர்;
நான் ஏறிய அத்திமரம்
அருகில் வந்தவர் அவர்;
என் பெயரைச் சொல்லி
அழைத்தவரும் அவரே;
"இறங்கி வா" எனக் கூறி,
பாவியாம் என் இல்லத்திலும்
எழுந்தருளிய இறைவன் அவர்!
பாரூக்: இருப்பினும்,
இவ்வயதில் நீங்கள்
இம்மரம் ஏறியதும்
இறங்கிட்டதும்
அதிசயம்!
சகேயு: அத்திமரம் ஏறுகின்ற
(புன்னகையுடன்) அத்தியாயம் முடிந்தது, பாரூக்.
அவசியமில்லையே இனிமேல்!
Note: இந்த கவிதை நடை உரையாடல் "நற்செய்தி காவியம்" என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்டதாகும்.இந்நூலாசிரியரான பேராசிரியர் அருளானந்தம் பாளை.தூய யோவான் கல்லுரியில் ஆங்கில துறை தலைவராகவும், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தேர்வுத் துறை கட்டுப்பாடு அதிகாரியாகவும் (controller of examinations)இருந்தவர்.