Sunday, March 10, 2019

3. லெந்து காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

லெந்து காலம் என்றால் என்ன என்றும், அது வேதாகமத்தின் அடிப்படையில் சரியா என்றும் முந்தைய இரு பதிவுகளில் பார்த்தோம். லெந்து காலத்தில் புலனடக்கம் அல்லது இச்சையடக்கம் என்பது சார்ந்து கிறிஸ்தவர்கள் பலர் சில விசயங்களை லெந்து காலத்தில் கடைபிடிக்கின்றனர். அதில் அசைவ உணவுகள், அலங்காரம் ஆகியவைகளை தவிர்த்தல் முக்கியம் என நம்புகின்றனர்.  இதினால் ஏதும் பலன் உண்டா என்றும், வேதாகமத்தின் படி இது சரியானதா என்றும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


ஆண்டவராகிய இயேசுவின் சீடர்கள் யூத வழக்கத்தின் படி கைகளைக் கழுவாமல் உணவருந்தின போது, வேதபாரகரும் பரிசேயர்களும் அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு இயேசு, “வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” என பதில் சொன்னார் (மத்தேயு 15:11). அலங்காரம் மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நல்லதுதான். ஆயினும் இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இவைகளைச் செய்வதினால் மட்டும் எவரும் தேவனை பிரியப்படுத்திவிட முடியாது. இரண்டாவதாக, சபைக்காகவும் மற்றவர்களுக்காகவும் அர்த்தமின்றி கடமைக்காக செய்யும்போது இவைகள் வெறும் சடங்காச்சாரமாகிவிடுகின்றன.


இருதயத்தில் இருந்து எழும் விருப்பத்தின் காரணமாக, ஜெபம் மற்றும் உபவாசத்திற்கு தடையாக இருக்காத படி இவைகளைத் தவிர்த்தல் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆயினும் இது வேதக் கட்டளை அல்ல.  லெந்து காலத்தை ஆசரிக்கும் ஒரு கிறிஸ்தவர், அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் அவர் செய்வது தவறு என்று எவரும் சொல்ல முடியாது. இது மற்ற விசயங்களுக்கும் இது பொருந்தும். அசைவ உணவுகளை, அலங்காரத்தை தவிர்த்தல் என புலனடக்கம் சார்ந்த விசயங்களில் அக்கறை செலுத்துபவர்கள், வழக்கமாக அவைகளுக்குச் செலுத்தும் விலையை, பணத்தை சேகரித்து ஏழைகளுக்குச் செலவிடலாம். உணவற்ற ஏழைக்கு அந்த அசைவ உணவையும், ஆடையற்ற தரித்திரருக்கு நல்ல உடையையும் வாங்கிக் கொடுத்து அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கலாம்.

 உணவுக் கட்டுப்பாடு மற்றும் மனக் கட்டுப்பாடு ஆகியவை எக்காலத்திலும் சரீரத்திற்கும், மனதிற்கும் ஆரோக்கியமானவை. இவைகளில், உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் ஒரு சீரான நல்ல முடிவைக் காண விரும்புகிறவர்கள், லெந்து காலத்தை முன்னிட்டு, கர்த்தருக்காக தியாகமாக எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற மனதோடு இவைகளை முழு விருப்பத்தோடு முயற்சித்துப் பாருங்கள். மிகுந்த பலனைக் காண்பீர்கள். ஆயினும் இது கட்டாயம் அல்ல.

ஆண்டவராகிய இயேசு சொன்னது போல, புறம்பான காரியங்களுக்கு நம் முழுக் கவனத்தையும் செலுத்திவிட்டு, இருதயத்தில் இருந்து வரும் தீய எண்ணங்களுக்கு நாம் இடங்கொடுக்கிறவர்களாக இருக்கக் கூடாது  (மத்தேயு 15:19). புறத் தூய்மையைக் காட்டிலும் அகத் தூய்மை மிக முக்கியமானதாகும். அதற்கு நாம் வேத வசனம், ஜெபம் மற்றும் தியானம் மூலமாக இயேசுவுடனான உறவில் நல்ல ஐக்கியத்தோடு இருப்பது மிகவும் அவசியம். அதுவே நம் நோக்கமாக இருக்க வேண்டும், லெந்து காலத்தில் மட்டுமல்ல, வருடத்தின் எல்லா நாட்களிலும். இவைகளில் நடைபயில விரும்புகிறவர்கள் இந்நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- தொடர்ந்து ச(சி)ந்திப்போம்
அற்புதராஜ்

Saturday, March 9, 2019

2. லெந்து காலம் வேதாகம அடிப்படையில் சரியா? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

எனது முந்தைய பதிவில்  “லெந்து காலம்” பற்றிய ஒரு சிறிய குறிப்பை உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.  பொதுவாகவே, கிறிஸ்தவ சபைகளிலும், கிறிஸ்தவர்களிடையேயும், “பரிசுத்த வேதாகமத்தில் லெந்து காலம் பற்றி இருக்கிறதா?” என்றும்,  “ஆதிக் கிறிஸ்தவ சபையில் கிறிஸ்தவர்கள் லெந்து காலம் என்ற ஒன்றை ஆசரித்தனரா?” என்றும் கேட்பதுண்டு. இது மிகவும் நல்ல கேள்வி ஆகும். எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் முறையானதாக இருக்காது. ஆகவே, இக்கட்டுரையில் லெந்து காலத்துக்கும், வேதாகமத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று ஆராய விரும்புகிறேன்.

இத்தொடரின் முதல் கட்டுரையில், லெந்து காலம் என்பது ஈஸ்டருக்கு முந்தின நாற்பது நாட்களைக் குறிக்கிறது என்றும், பரிசுத்த வேதாகமத்தில் “நாற்பது நாட்கள்” என்பது பல முக்கியமான வேதாகம நபர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்ததையும் கோடிட்டு காண்பித்திருந்தேன். ஆனாலும் அதை வைத்து லெந்து காலத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா என எனக்கு நானே நான் கேள்வி கேட்டுக் கொள்கிறேன். வேதாகமத்தில் லெந்து காலம் என்ற ஒன்றை எடுத்துக் காண்பியுங்கள் பார்க்கலாம் என்று அனேகர் சொல்லக் கேட்டிருக்கிறேன். முதலில் நாம் சில அடிப்படையான விசயங்களை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். மூல பரிசுத்த வேதாகமம் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டது. வேதத்தின் அடிப்படையில்,தேவனுடைய ஆள்தத்துவம், அன்பு மற்றும் அதன் வெளிப்பாடு ஆகியவைகளே கிறிஸ்தவ உபதேசத்தின் அஸ்திபாரம் ஆகும்.  லெந்து காலம் என்பது ஆதிச் சபையில் இருந்து, ரோமக் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டாண்டு சபைகளுக்குள் வந்த நல்ல ஒரு பாரம்பரியமாகும். ஆயினும் எதையும் பொருளுணராமல் கடமைக்குச் செய்யும்போது அதன் பொருளும் அர்த்தமற்றதாகி விடும், அது மட்டுமல்லாது அதைச் செய்பவர்களும் அப்படிப்பட்ட பாரம்பரியத்திற்கு எதிரானவர்களின் எளிய இலக்காக மாறிவிடுவார்கள். லெந்து காலத்தைப் பொறுத்த வரையிலும் அது தான் நடந்தது, நடக்கிறது. பெந்தெகோஸ்தே சபைகள் பெருகின வேளையில், ரோமக் கத்தோலிக்க சபை மற்றும் பாரம்பரிய சபைகளின் பண்டிகைகள் பெந்தெகோஸ்தே சபையினரால் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு பல கேள்விகள் முன் வைக்கப் பட்டன. அவைகளில் ஒன்றுதான் லெந்து காலம் பற்றியதும் ஆகும்.  

என்னைப் பொறுத்தவரையில், லெந்து காலம் என்ற ஒன்றை வேதாகமத்தில் இருந்து காண்பியுங்கள் என்று கேட்பதும், திரித்துவம் என்ற வார்த்தையை வேதாகமத்தில் இருந்து காண்பியுங்கள் என்பதும் ஒன்றுதான். வேதாகமத்தைப் பற்றியும், வேதாகம தேவனைப் பற்றியும் சரியான புரிதலில்லாமல் இருந்தால்தான் இப்படிப் பட்ட கேள்விகள் வரும். நான் இதைக் குறையாக சொல்ல வில்லை, ஒரு சுய பரிசோதனைக்காகவே சொல்கிறேன். லெந்து காலத்துக்கு ஆதரவாகப் பேசுகிறவர்களில் பெரும்பாலானோர், லெந்து காலம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்களாகவும், லெந்து காலம் பற்றிய கேள்விகளுக்கு முறையான பதில் சொல்லத் தயங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். அதிக பட்சமாக, ரோமர் 14:5,6 வசனங்களைக் காண்பித்து, “நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்” என்று வாதிடுகிறார்கள். லெந்து காலம் என்பது ஒரு விசேஷமான ஒன்று என்பதுடன் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். ஏன் விசேஷம், என்ன செய்ய வேண்டும் என்பதில் எல்லாம் அதிக அக்கறை கிடையாது. இப்படியாக, லெந்து காலத்தை ஏற்றுக் கொள்கிறவர்களையும், நிராகரிக்கிறவர்களையும் நான் ஒரே அளவுகோலுடன் காண முயற்சிக்கிறேன்.

 லெந்து காலம் என்பது இடையில் திணிக்கப்பட்ட ஒரு நடைமுறை அல்ல. இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் ஓய்வு நாளுக்கு (ஈஸ்டருக்கு) முந்தைய நாற்பது நாட்களை பக்தியுடன் ஆசரிப்பது என்பது ஆதிச் சபைகளில் இருந்து வந்த பழக்கம், நிசேயா கவுன்சிலில் முறைப்படுத்தப் பட்டு, பின்னர் வந்த காலங்களில் இச்சையடக்கம் சம்பந்தப் பட்டவைகளும் சேர்ந்து நாம் இன்று காண்பது போல இருக்கிறது. நாற்பது நாட்கள் மட்டும் கட்டுப்பாடாக இருந்து விட்டு மற்ற நாட்கள் எல்லாம் இஷ்டம் போல வாழ்வதைத் தான் வேதாகமம் போதிக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு முறையான பதிலை முன் வைக்க வேண்டும். அதே நேரத்தில் இப்படி கேள்வி கேட்பவர்கள் வருடத்தின் எல்லா நாட்களும் வேதாகமத்தின் படி வாழ்கிறார்களா என்றும் கேள்வி கேட்க விரும்புகிறேன். எல்லாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது என் நோக்கமன்று. மாறாக கேள்வி கேட்பவர்களும் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கேட்கிறேன்.

ஆம் உண்மைதான், வெறும் நாற்பது நாட்கள் மட்டும் கறி சாப்பிடாமல், பூ வைக்காமல், நல்ல உடை உடுத்தாமல், துக்க வீட்டில் இருப்பது போல சோகமாக இருந்துவிடுவதினால் தேவனை பிரியப்படுத்தி விட முடியும் என்றால் அதை விட முட்டாள்தனமான ஒன்று வேறேதுவும் இருக்க முடியாது. சபை ஒழுங்கில் இருப்பதற்காக லெந்து காலத்தை ஆசரிக்காமல், நமக்காக வந்து மரித்துயிர்த்த இயேசுவைப் பற்றிய சிந்தனைக்கு அதிக இடம் கொடுத்து, மனதையும் செயலையும் இயேசு காண்பித்த மாதிரிக்கு நேராக ஒருமுகப்படுத்துவது நலம். இதை வாசிக்கும் நண்பர்களே,  நம்மில் எவருமே 100 சதவீதம் பரிசுத்தவான்கள் அல்ல, அதற்காக, நாம்  பரிசுத்த அழைப்பினால் நம்மை அழைத்த பரிசுத்த தேவனை நோக்கிப் பார்ப்பதை விட்டு விடுவதில்லை. நம் பலவீனத்தின் மத்தியிலும் அவரை நோக்கிப் பார்த்து, நம்மை சுத்திகரித்துக் கொள்கிறோம். உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வின் அன்றாட அனுபவமாக இதைச் சொல்வார்கள்.
லெந்து காலத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒருவரையொருவர் கடித்து பட்சிப்பதற்குப் பதிலாக, வேதாகம அடிப்படையில், பயனுள்ள எதாவது ஒன்றைச் செய்யலாம் என்றால் பின் வரும் யோசனையை முயற்சித்துப் பாருங்கள்.
1. உங்களை அடிக்கடி சோதனைக்குட்படுத்தும் எதாவது ஒரு காரியத்தைப் பற்றி தீர்மானமாக முடிவெடுத்து, இந்த நாற்பது நாட்களில் அதை செயல்படுத்த கர்த்தருக்குள் முடிவெடுத்து செயல்படுங்கள். வருடத்தின் எல்லா நாட்களும் நாம் கர்த்தருக்குள், கர்த்தருக்கேற்றபடி வாழ்வது தான் இலக்கு. அதை ஜெபத்துடன் இந்நாட்களில் துவங்கலாம். சிறிய இலக்குகள் பெரிய சாதனைகளுக்குள் நம்மை வழிநடத்தும். நானும் இந்த வருடம் அப்படி ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன். (குறிப்பாக வாலிபப் பிள்ளைகள், உங்களை தொந்தரவு படுத்தும் பாவச் சோதனைகளுக்கு எதிராக ஒரு உறுதியான முடிவெடுங்கள்).
2. ”நானல்ல, கிறிஸ்துவே” என்பது தான் ஒவ்வொரு கிறிஸ்தவரின் இருதய விருப்பம். ஆனால் எல்லாருக்கும் நடைமுறையில் அது சாத்தியப்படுவதில்லை. ஆகவே, இயேசுவுடன் கூட இருப்பதுதான் இதற்கு உதவும். அனுதினமும் வேதம் வாசித்து, குறைந்தது ஒரு மணிநேரமாவது ஜெபத்தில் தரித்திருங்கள். ஜெபத்தில், நீங்கள் எதையாவது பேசிக்கொண்டே இருக்காமல், நீங்கள் வாசித்த வேத பகுதியில் இருந்து தேவனுடைய தன்மை மற்றும் அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை தனிமையில் தேவனுடன் கேளுங்கள். எதுவும் கடினமல்ல.
3. குறைந்தது ஒருவரிடமாவது இயேசுவைப் பற்றி பேசுங்கள். கிறிஸ்தவரல்லாதோர் என்றல்ல, உங்கள் வீட்டில் உள்ள சின்ன பிள்ளைகளிடம் கூட இதை நீங்கள் செய்யலாம் ( நாம் தான் இதில் expert ஆச்சுதே!).

மேலே நான் கூறிய மூன்று காரியங்களும் வாசிக்க, கேட்க மிக எளிதானதாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் செயல்படுத்துவது என்பது சவாலானதாகும். லெந்து காலத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் எவரையும் இந்த சவாலுக்கு அழைக்கிறேன். கர்த்தரை முன் வைத்து, அவருக்காக வாழ விரும்பும் எவருக்கும் இந்த மூன்று காரியங்களும் இடறலாக இருக்காது என்று விசுவாசிக்கிறேன். லெந்து காலத்தில், வேதாகம அடிப்படையில் வாழ்கிறேனா, வாழ முயற்சிக்கிறேனா என்று அதை ஆதரிப்பவர்களும், அப்படி வாழ முயற்சிப்பது தவறாகுமா என்று எதிர்ப்பவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

- தொடர்ந்து ச(சி)ந்திப்போம்
அற்புதராஜ்
+91 9538328573

Wednesday, March 6, 2019

1. லெந்து காலம் என்றால் என்ன? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

லெந்து காலம் என்பது கிறிஸ்தவர்களால் பாரம்பரியமாக அனுசரிக்கப்படும் ஒன்றாகும். லெந்து, Lent என்ற வார்த்தையானது கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளில் உயிர்த்தெழுதல் நாளுக்கு முந்தைய நாற்பது நாட்களைக் (Forty days before Easter) குறிக்கிற ஒன்றாக இருக்கின்றது. லெந்து காலம் என்பது சாம்பற் புதன் கிழமை அன்று துவங்கி உயிர்த்தெழுதலை நினைவுகூறும் ஈஸ்டர் பண்டிகை வரையிலான நாட்களை உள்ளடக்கியது ஆகும்.  நாற்பது நாட்கள் என்று பொதுவாக கிறிஸ்தவர்கள் கூறினாலும், உண்மையில் 46 நாட்களை உள்ளடக்கியதே லெந்து காலம் ஆகும். லெந்து காலத்தில் வரும் ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதே நாற்பது என்ற எண் பரவலாகப் பயன்படுத்தப்படுவதன் காரணம் ஆகும்.

நாற்பது என்ற எண் வேதாகமத்தில் அடிக்கடி குறிப்பிடப் பட்டிருக்கிற ஒரு எண் ஆகும். மோசே, நோவா, எலியா, யோனா மற்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவர்களின் வாழ்க்கையில் நாற்பது நாட்கள் என்பது ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது. லெந்து காலம் என்பது கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே கிறிஸ்தவ சபைகளில் இருந்து வருகிற ஒன்றாகும். லெந்து காலம் என்பது நாளடைவில் தவக் காலமாக மாறிவிட்டது. உபவாசம், மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக தற்போது ஆசரிக்கப்படுகிறது.
உயிர்த்தெழுந்த இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் அவர் பட்ட பாடுகளை நினைவுகூறுவதுடன், இயேசு வந்த நோக்கம் நம் வாழ்விலும், நம் மூலமாகவும் நிறைவேற நம்மை நாமே பரிசோதித்துக் கொள்வதற்காக இந்நாட்களை பயன்படுத்திக் கொள்வது அர்த்த முள்ளதாக இருக்கும்.

- அற்புதராஜ்
9538328573