Monday, March 30, 2020

கொரொனா காலத்தில்...கருணாகரனைத் தேடுவோம்

கடந்த சில நாட்களாக, எங்கு திரும்பினாலும் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப கேட்டு மனதளவில் சோர்ந்து போயிருந்தேன். மருத்துவ உலகில் Covid-19 என்றழைக்கப்படும் கொரொனா தொற்று நோய் உலகமெங்கிலும் பரவி, இந்நூற்றாண்டின் மாபெரும் பயத்தை மனிதர்களிடையே விதைத்திருக்கிறது. இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில், கரைகடக்க முடியாத அலைகள் போல பல சூறாவளிச் சிந்தனைகள் என் மனதில். மன அமைதியை இழந்தவனாக, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மனதில் நினைவுக்கு வந்த பழைய கிறிஸ்தவப் பாடல்களைப் பாடி இசைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அறிவுக்கெட்டாத ஒரு அமைதி மெல்ல என் மனதில் தென்றலாக எழும்பியதை உணர முடிந்தது.

அது மாத்திரமல்ல, என் அடிமனதில் ஒரு மெல்லிய இராகம் மெதுவாக எழும்புகிறதை உணர முடிந்தது. பல மாதங்களாக இசையுடனான என் உறவை ஒரு ஓரமாக வைத்திருந்த என் மனதில் ஆச்சரியம். அப்படியே அந்த மெல்லிய சத்தத்தைக் கேட்டு, இசைப்பெட்டியில் வாசித்த படியே பாடினேன். “ஏற்ற சமயத்தில் சொல்லப் பட்ட வார்த்தைகள்” என்று நீதி மொழிகள் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல நான் கேட்ட வார்த்தைகள் என் காதில் தேனாக இனித்தது.

நான் கேட்ட முதல் வார்த்தை....கருணாகரனே!

கருணாகரனே என்ற அருமையான தமிழ் வார்த்தையின் பொருள் என்னவெனில், கிருபாசனத்தில் வீற்றிருக்கும் எல்லா அருளும் நிறைந்த கருணைக்கடலாகிய இறைவன் என்பதாகும். மனதில் எழுந்த பாடலைப் பாடி முடித்ததும் ஒரு தெய்வீக அமைதியை உணர்ந்தேன். அந்தகார காரிருளின் சமயங்களிலும் அனைத்தும் அவரிடம் ஒப்புக்கொடுக்கையில் ஒரு நிம்மதி. பாடலின் வரிகள் இப்படியாக செல்கிறது.

கருணாகரனே
தயை கூர்ந்திடுமே
இயேசுவே என் தேவா
எனை நான் படைக்கின்றேன்

எண்ணமெல்லாம் நீர்தான்
என்று சொல்ல அருளும்
துன்பம் சூழும் நேரத்தில்
மனம் கலங்கி நிற்கையில்

கருணாகரனே
தயை கூர்ந்திடுமே
இயேசுவே என் தேவா
எனை நான் படைக்கின்றேன்

கொரொனா வைரஸின் பெயர்க் காரணத்தை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. கிரீடம் போன்று காட்சி அளிப்பதால் அப்பெயர் வந்ததாம். அனைத்தையும் படைத்த, அனைத்தையும் ஆளுகை செய்கிற சர்வ வல்ல இறைவனிடம் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளும்போதும், அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று அறிந்து கொள்ளும் போதும் ஒரு பேரமைதி.

நமக்கு அருளப்பட்டிருக்கும் இந்த தனிமை நாட்களில், மற்ற மனிதர்களிடம் இருந்து எந்தளவுக்கு நம்மை தனிமைப் படுத்துகிறோமோ, அந்தளவுக்காவது இறைவனிடம் நாம் நெருங்கிச் சேர முயற்சி செய்வோம். முயற்சி திருவினையாகும்.

(சமயம் வாய்க்கும்போது முறையாக இப்பாடலை ஒலிப்பதிவு செய்து பகிர்கிறேன்)