Wednesday, July 25, 2018

ஏசுவைப் பாடுவேன் ஏனென்று கேட்காதீர்கள்

ஏசுவைப் பாடுவேன்
ஏனென்று கேட்காதீர்கள்
ஏழை என் மனதிலுள்ள
ஏக்கங்கள் அனைத்திலும்
ஏமாற்றாமலெனை மாற்றினார்
ஏசியவர்கள் மத்தியில்
ஏளனம் செய்தவர் காண
ஏற்றமுறச் செய்தாரவர்

ஏன் என்ற கேள்விகள்
ஏராளம் இருந்தன
ஏதேதோ குழப்பங்கள்
ஏவினவன் மகிழ்ந்தான்
ஏதேனினின் தொடர்ச்சி என
ஏகடியம் செய்து வீழ்த்தப் பார்த்தான்

ஏந்தினார் தம் கரங்களில்
ஏதுக்கழுகிறாய் நான் இருக்கிறேன்
ஏகாதிபதி, என் கைகளில் அதிகாரம்
ஏசாயா முதலிய தீர்க்கருரைத்தபடி
ஏறினேன், கொல்கதாவில் பாவத்தை கொன்றுபோட்டேன்
ஏனெனில் நீ என் பிள்ளை, உனக்காகவே உயிர்கொடுத்தேன்
ஏற்பாட்டில் உள்ள படி உயிர்த்தெழுந்தேன்
ஏற்ற தந்தை நானிருக்க கலங்காதே
ஏக மனதோடு என்னிடம் வா என்றவர்
ஏனையோர் விலகினாலும், எப்போதும் உடன் இருப்பேன்
ஏசுவே என்றழைத்தால், நான் பேசுவேன்
ஏன் என்ற கேள்விக்கு பதில் தருவேன்
ஏனெனில் நானே உன் பதில் என்றார், இயேசு.

- அற்புதராஜ்
#Tamil_Christian_poem
#தமிழ்_கிறிஸ்தவ_கவிதை

Monday, July 23, 2018

கீர்த்தனைப் பாடல்களின் காலம் முடிந்து விட்டதா? – ஒரு சிறிய அலசல்

Old Tamil Christians Keerthanai songs - Outdated or Outstanding!

தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்றாலே, சிலருக்கு அர்த்தம் புரியாத அவைகளை ஏன் பாட வேண்டும் என ஒதுக்கி விடுகின்றனர்.  தூய தமிழில் தன் பெயர் இருக்குமாறு மாற்றிக் கொண்டு, சிரிப்புக் காட்டிக் கொண்டு இருக்கும் சில பிரபலங்கள் கூட செந்தமிழ் கீர்த்தனைகளுக்கு எதிராக எதையாவது சொல்லி வைத்து, அனேகர் அதுவும் உண்மைதானோ என்று நம்பும்படி செய்து விடுகின்றனர். Old is Gold  என்று சொல்வார்கள். இது தமிழ் கிறிஸ்தவ சபைகளில், குறிப்பாக பாடல்களைப் பொறுத்தவரையில் அப்படி சொல்ல முடியுமா என்று ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம். சமீபத்தில் நிகழ்ந்த ஒரு உரையாடலில் இருந்து நான் ஆரம்பிக்கிறேன்.

அதென்ன அந்தர… சுந்தர?
சில நாட்களுக்கு முன் ஒரு தம்பியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, கீர்த்தனைப் பாடல்கள் பற்றி பேச்சு திரும்பியது. அர்த்தம் புரியாத கீர்த்தனைப் பாடல்களை, இப்போது எப்படி பாடுவது என்று அந்த தம்பி வாதாடினார். அர்த்தம் புரியாத ஒரு பாடலைச் சொல்லுங்கள் நாம் என்ன வென்று பார்ப்போம் என்றதற்கு, உடனே அவர் சொன்னது தான் இந்த பத்தியின் தலைப்பு. அந்தர சுந்தர மந்தர என்றால் என்ன?, யாருக்காவது புரியுமா என்று கேட்டார். நான் இந்த பாடலின் துவக்கம் தெரியுமா என்று கேட்ட போது, உடனே தெரியாமல் தடுமாறினாலும், சுதாரித்துக் கொண்டு, “ஏசுவையே துதி செய்” என்று என்னுடன் சேர்ந்து பாடத் துவங்கினார்.
உடனே கீர்த்தனைப் புத்தகத்தை தேடி எடுத்து அந்த குறிப்பிட்ட பத்தியின் வரிகளை அவருக்கு வாசித்துக் காண்பித்தேன்.

அந்தரவான் தரையுந் தரு தந்தன்

சுந்தர மிகுந்த சவுந்தரா ந்தன் – ஏசுவையே துதி செய்

இந்தப் பாடல் வரிகளை கொஞ்சம் நிதானமாக, வாசித்தால் எளிதில் பொருள் கொள்ளலாம் என்று சொல்லியும் அவர் நம்ப வில்லை. அந்தர வான் தரையும் தரு தந்தன் சுந்தரம் மிகுந்த சௌந்தர்ய அனந்தன் என்று சொல்லியும் தம்பிக்கு பிடிபடவில்லை. நான் எனக்குத் தெரிந்த தமிழில் பின்வருமாறு மொழிபெயர்க்க வேண்டியதாயிற்று.

அந்தரம் என்றால் மேலே இருக்கிற என்றும், வான் என்றால் வானம் என்றும்,  தரு தந்தன் என்றால் நன்மைகளைத் தருகிறவன் என்றும் சொல்லி, மேலே உள்ள வானத்திலும், பூமியிலும் உள்ள நன்மைகளைத் தருகிறவர் என்று பொருள் சொன்னேன்.
இரண்டாவது வரி மிகவும் எளிமையானது, சுந்தரம் மிகுந்த என்றால், அழகு நிறைந்த, முடிவிலா சௌந்தரியமுடைய இறைவன் என்பது அதன் பொருள் என்றேன். இந்தப் பாடல் எவ்வளவு பொருள் நிறைந்தது என்பதைச் சொல்லி, இந்தப் பாடல் பிறந்த கதையை அவருக்கு சொல்ல ஆரம்பித்தேன்.

வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் தஞ்சாவூர் சரபோஜி மன்னர் அரசவைக் கவிஞராக இருந்த போது, அரசர் அவர்கள் தன் கடவுளைப் புகழ்ந்து ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார். அது அரசக் கட்டளையானது. மிகுந்த குழப்பத்துடன் வீடு வந்த சாஸ்திரியார் அவர்கள், தீர்க்கமாக அரசரிடம் அவருடைய வேளை வந்த போது, என்னால் இதைத் தான் பாட முடியும் எனக் கூறி, “ஏசுவையே துதி செய்” பாடலைப் பாடினார் என்பது வரலாறு. இதைப் பற்றி முன்னமே பாடல் பிறந்த கதை தொடரில் எழுதி இருக்கிறேன்.

இன்று எத்தனை கிறிஸ்தவர்கள், போதகர்கள் தாங்கள் சொல்கிற வார்த்தையின் அர்த்தம் புரிந்து அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அல்லேலூயா என்பதன் முழுமையான அர்த்தம் தெரியாமல் மூச்சுக்கு முன்னூறு தடவை எப்போதெல்லாம் இடைவெளி தேவையோ அப்போதெல்லாம் அதை பயன்படுத்துகிற போதகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் எனக் கேட்டேன். ஒரு பாடலைப் பற்றி யாராவது ஒருவர் சொன்னார் என்பதற்காக அப்படியே அதைக் கிளிப்பிள்ளை போல ஒப்பிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன்.

“ஏசுவையே துதி செய்” பாடல் ஒரு உதாரணம் மட்டுமே. அக்காலத்திலும், இக்காலத்திலும் ஏன் எக்காலத்திலும் இறைவன் அருளும் பாடல்கள் அனைத்திற்கும் பின் ஒரு கதை இருக்கும். எனக்குத் தெரிய, முன்பெல்லாம் கீர்த்தனைப் பாடல் புத்தகத்தில் கடினமான வார்த்தைகளின் பொருள் இன்னவென்று கீழே போட்டிருப்பார்கள். அது போக அனேக கீர்த்தனைப் பாடல்களில் உள்ள வார்த்தைகள் அன்று பயன்பாட்டில் இருந்தவையும் கூட. தமிழ்நாட்டில் தமிழில் தான் மாணவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கும் காலகட்டத்தில், இனிமேல் இது போன்ற கருத்துச் செறிவுள்ள பாடல்களின் கடினமான வார்த்தைகளை பொருளுடன் அச்சிட்டால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். ஒரேயடியாக ஒரு பாடலை ஒதுக்கிவிடாமல், அதன் பொருளை குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முயற்சிக்கலாம் அல்லவா.

இன்று பல பாரம்பரிய சபைகளிலும் இந்த நிலைதான் காணப்படுகிறது. சபையின், பாடல்களின் வரலாறு தெரியாமல், பக்தியில்லாமல் பாடல்கள் பாடப்படும்போது அது மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்ப்படுத்தாது. அனேக பெந்தெகோஸ்தே சபைகளில் புதிதாக எதாவது பாடல் அறிமுகம் செய்து மக்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நினைத்துக் கொண்டு பல நல்ல பழைய பாடல்களை அப்படியே ஓரமாக பரணில் தூக்கி வைத்து விட்டனர். முறையான உபதேசம் என்பது இன்று சபைகளில் காண்பதரிதாக இருப்பது உள்ளபடியே வருத்தமே. நிற்க. கட்டுரையின் நோக்கத்தை விட்டு நான் வழிவிலக வில்லை.

பழைய பாடல்களை மட்டுமே பாடவேண்டும் என்று சொன்னால் அது கண்டிப்பாக தவறு. அது போலவே, புதிய பாடல்கள் விஷயத்திலும். நாம் நல்ல பழைய கீர்த்தனைப் பாடல்களை நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, அவர்கள் இசையில் மட்டுமல்ல, தேவனை அறிகிற அறிவிலும் வளர்வர். வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள், கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனப்படுபவர்களின் சமகாலத்தவர். அன்றும் இசை உலகில் அவருக்கான இடம் முறையே கொடுக்கப்படவில்லை. இன்று கிறிஸ்தவர்கள் அவர் பற்றி அறிந்திருப்பதே அரிது என்றாகிவிட்டது. ”பழையன கழிதலும் புதியன புகுதலும்” என நாம்  சொல்லலாகாது. இப்படிச் சொல்லிதான் சிலர் மூல உபதேசத்தையே விட்டு விலகிச் சென்று விட்டனர்.  புதிய பாடல்களில் இருக்கும் எளிமையை வரவேற்க வேண்டும், அதே சமயத்தில் பழைய பாட்ல்களில் இருக்கும் கருத்தாழமிக்க வேத சத்தியங்களை மறந்துவிடாமல், அதை பாடி நினைவுபடுத்திக் கொள்வது என்றுமே பயன் தரும். அனேக கீர்த்தனைப் பாடல்கள் எழுதப்பட்ட சூழ்நிலைகளை வாசித்தால், மிகவும் பிரமிப்பாகவும், தேவனை மகிமைப்படுத்துவதாகவும் இருக்கிறது.

கிறிஸ்தவத்தில் நாம் அனேக நல்ல விஷயங்களை, இக்காலத்திற்கு உதவாது என ஒதுக்கிவைத்ததினால் இழந்துவிட்டோம். வசனத்திற்கு முரண்படாத எதுவும் வழக்கொழிந்து போவதில்லை. தேவனை மகிமைப்படுத்துகிற எதுவும் அதன் அழகை இழந்துவிடுவதுமில்லை.  நல்ல புதிய பாடல்களை கைதட்டி வரவேற்கிற நாம், இசையிலும், பொருளிலும் மிகவும் குறிப்பிடத்தகுந்த  கீர்த்தனைப் பாடல்களை புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது, அதன் மேன்மை இன்னதென்று உணர்ந்து, காலங்களைக் கடந்தும் அதன் outstanding quality ஐ நினைத்து இறைவனுக்கு நாம் நன்றி சொல்லி அவரை துதிப்போம்.

ஏசு
வையே துதிசெய்  நீ மனமே
ஏசு
வையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

மாசணுகாத பராபர வஸ்து
,
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

அந்தரவான் தரையுந் தரு தந்தன்

சுந்தர மிகுந்த சவுந்தரா ந்தன்

எண்ணின காரியம் யாவு முகிக்க

மண்னிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க