Friday, May 1, 2020

ரமலான் சிந்தனைகள் - 8

குர்-ஆனில்  மோசே (மூஸா)

முந்தைய பதிவில், முஸ்லீம்களின் தீர்க்கதரிசியான முஹம்மது பற்றி குர்-ஆனில் மிக மிக குறைவாக நான்கு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லி இருந்தேன். அப்படியானால், குர்-ஆனில் அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் யார் என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், அதற்கான பதில் - மூஸா (வேதாகமத்து மோசே). ஏறக்குறைய 136 தடவை மோசே பற்றி குர்-ஆனில் நாம் வாசிக்கலாம் என்றாலும், பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மோசேயின் கதைக்கும் குர்-ஆனின் உள்ள மோசே கதைக்கும் பல வித்தியாசங்களும், சில ஒற்றுமைகளுமே உண்டு. குர்-ஆனில் பல இடங்களில் மோசேயின் கதை வந்தாலும், முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் இஸ்ரவேலர்களுக்கு மோசே அளித்த போதனைகள் பற்றிய குறிப்புகள் குர்-ஆனில் கிடையாது. இறைவன் மோசேக்குக் கொடுத்த இரண்டு கற்பலகைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த கற்பலகைகளில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. மோசே மூலமாக இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் வேதத்தை இறக்கினான் என்று சொன்னாலும், அவ்வேதம் பற்றிய விவரங்கள் குர்-ஆனில் இல்லை. மாறாக, மோசே பற்றி குர்-ஆனில் வாசிக்கும்போது வெவ்வேறு வேதாகமக் சம்பவங்களைக் கலந்து குழப்பி எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரணமாக, பார்வோன் தன் ஆலோசனைக்காரர்களில் ஒருவனாகிய ஆமானிடம், நெருப்பில் சுட்ட செங்கற்களினால் விண்ணை முட்டும் ஒரு கோபுரம் கட்டச் சொன்னதாகவும், பார்வோன் அந்த கோபுரத்தில் ஏறிச் சென்று மோசே சொல்கிற தேவன்  இல்லை என்று சொல்லி மோசேயை ஒரு பொய்யன் என்று சொல்வதாக குர்-ஆன் கூறுகிறது(கு.28:38). வேதாகமத்து மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியாக வேண்டும் என்று முஸ்லீம்களின் தீர்க்கதரிசி முஹம்மது முயன்றதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். மோசே மூலமாக இஸ்ரவேலர்களுக்கு சட்டம் (நியாயப்பிரமாணம்) கொடுக்கப்பட்டது போல, முஹம்மது மூலமாக குர்-ஆன் தங்களுக்குக் கொடுக்கப்பட்டது என முஸ்லீம்கள் நம்புகிறார்கள். ஆயினும் வேதாகமத்து மோசேயின் சம்பவத்தில் மிக முக்கியமான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, இரட்சிப்பு, இறைவன் இஸ்ரவேலர்கள் கூட இருந்து வழிநடத்தியது என பல முக்கியமான காரியங்கள் குர்-ஆன் கூறும் மோசேயின் கதையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” என்று வேதாகமத்து மோசே சொல்லியிருக்கிறார் (உபாகமம் 18:15). முஹம்மதுதான் அந்த தீர்க்கதரிசி என்று முஸ்லீம்கள் வாதாடினாலும், உபாகமம் 18ம் அதிகாரத்தை தொடர்ந்து வாசிக்கையில் அது உண்மை அல்ல என்பதைக் கண்டு கொள்ள முடியும். பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கையில் இயேசு கிறிஸ்து பற்றியே மோசே சொல்லி இருப்பதை அறியலாம். அது மட்டுமல்ல, “அன்பு கூறுதல்” என்ற ஒரே வார்த்தையில் நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புதுப் பிரமாணத்தை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார் (மத்தேயு 22:37-40; மாற்கு 12:29-31). “இவருக்கு (இயேசுவுக்கு)  செவிகொடுங்கள்” என்று தேவன் சொன்னதாக வேதம் சொல்கிறது (மத்தேயு 17:5; மாற்கு 9:7; லூக்கா 9:35). நாம் செவிகொடுக்கிறோமா? செவிகொடுத்தல் என்பது, கேட்டு அதன் படி செய்வது ஆகும்.

வேதாகமம் கூறும் இயேசுவை இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்துகொள்ளவும், இறை அன்பை ருசிக்கவும் ஜெபிப்போம்.

Thursday, April 30, 2020

தெருப் பிரசங்க நினைவுகள் - 1

இன்று அதிகாலையில் ஒரு பழைய பாடல் நினைவுக்கு வந்து, அதைப் பாடிக் கொண்டிருந்தேன். “ பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்” என்ற அந்தப் பாடலை பாடும் போதே ரிவர்ஸ் கியர் போட்டு 20 ஆண்டுகளுக்கு முந்தைய அனுபவங்களுக்கு என் மனம் திரும்பியது. நீங்கள் விரும்பினால், என்னுடன் அந்த நாள் ஞாபகப் பயணத்தில் பயணிக்க அழைக்கிறேன்.

நான் அந்நாட்களில் ஞாயிற்றுக் கிழமை ஆலயத்துக்குப் போவதும் வருவதும் யாருக்கும் தெரியாது. ஏன், ஆலயத்தில் உள்ளவர்களுக்குக் கூட தெரியாதபடி சரியாக ஆராதனை துவங்குகிற சமயத்தில் உள்ளே நுழைந்து, முடிந்தவுடனே முதல் ஆளாக வெளியே வந்து விடுவேன். அப்படிப்பட்ட நாட்களில், ஒரு நாள் சபையில் உள்ள ஒரு தம்பி சகோ.தீமோத்தேயு என்னைப் பிடித்துக் கொண்டு, அண்ணன் ஞாயிறுக்கிழமை சாயங்கால நேரங்களில் என்ன செய்வீர்கள் என்று கேட்டான். சும்மா நண்பர்களைப் பார்ப்பேன், அவ்வளவுதான் என்றேன். முடிந்தால் சாயங்காலம் எங்களுடன் கலந்து கொள்ள முடியுமா, நாங்கள் கிராம ஊழியத்திற்கு குழுவாகச் செல்வோம், ரொம்ப நல்லா இருக்கும் என்றான். சரி வருகிறேன் என்று சொல்லி ஆரம்பித்தது என் தெருப் பிரசங்க அனுபவங்கள்.

பாஸ்டர் கே.ஜே. ஆபிரகாம் அவர்கள் மூலமாக இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற சில பெரிய அண்ணன்மார்கள், ஊழியர்கள் மற்றும் சில சபை மக்கள் ஒரு குழுவாக தொட்டி ஆட்டோவில் அமர்ந்து ஜெபத்துடன் அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்வோம். பொதுவாக, முதலில் ஜனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு பாடல் பாடப்படும். இது போன்ற தெருப் பிரசங்க அல்லது திறந்தவெளி பிரசங்கங்களுக்கென்ற சில பாடல்கள் இருக்கின்றன. அதில் எங்கள் குழுவினர் அடிக்கடிப் பாடும் பாடல்களில் ஒன்றுதான், சாரோள் நவரோஜி அம்மையார் எழுதிப் பாடிய, “பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்” பாடல். எனக்கு எல்லாம் புதிது என்பதால், என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதுதான் நான் பெரும்பாலும் செய்கிறதாக இருக்கும். குழுவில் உள்ள யாராவது ஒருவர் பாட, மற்றவர்கள் ஜெபிக்கவோ அல்லது துண்டுப் பிரதி விநியோகம் செய்யவோ சென்று விடுவர். சகோ. சாலமோன் வழக்கமாக விரும்பிப் பாடுவார். இப்பாடலைப் பாடும்போதே அதைப் பாடுபவர்களும், கேட்பவர்களும் ஒரு விதமான உணர்ச்சி வெள்ளத்தில் ஏன் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை நானும் மெகாபோனை வாங்கி பாட ஆரம்பித்தபோது உணர ஆரம்பித்தேன். அப்படி ஒரு கருத்தாழம்,  வசன செறிவு மற்றும் அன்பின் அழைப்பு நிறைந்த ஒரு பாடல். நீங்களும் கேட்டு அதை அனுபவிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து அதைப் பெறலாம்.

பாடலை எவ்வளவுதான் சாதாரணமாக கட்டுப்பாட்டுடன் பாட ஆரம்பித்தாலும், ஒவ்வொரு சரணங்களையும் படிக்க படிக்க கண்களில் ஜலம் கட்டிக் கொண்டு, இறுதிப் சரணம் படிக்கும்போது இருதயத்தின் ஆழத்தில் இருந்து, “நம்பி ஓடி வா” என்று ஏக்கப் பெருமூச்சுகளுடன் கதறலாக வார்த்தைகள் வரும். தெருப் பிரசங்கங்கள் மூலமாக நான் பெற்றுக் கொண்ட, கற்றுக் கொண்ட கிறிஸ்தவப் பாடங்கள் ஏராளம். அதில் முதலாவது என்னவெனில், தகுதியில்லாத என்னையும் எடுத்து இயேசு பயன்படுத்த முடியும் என்பதே. இரண்டாவது, நான் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன, கற்றது கைம்மண்ணளவு என்பது ஆகும். இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம். அவைகளை பிறிதொரு சமயத்தில் சொல்கிறேன். இப்பொழுது உங்களுக்கு “பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்” பாடல் தெரியும் எனில் என்னுடன் சேர்ந்து பாட அழைக்கிறேன். தெரியவில்லை எனில், கொடுத்திருக்கும் இணைப்பில் கேட்டு, இணைந்து பாடுங்கள்.

பல்லவி

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

அனுபல்லவி
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

சரணங்கள்

1. காட்டிக் கொடுத்தான் முப்பதுவெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல் கொதா மலைக்கு இயேசுவை

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன்போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசி தாகமும்
படுகாயமும் அடைந்தாரே

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முள்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் காணும் உள்ளம் தாங்குமோ

4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா

5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா

6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நாடி நம்பி வா


தனித்திருக்கும் இந்நாட்களில் இயேசு இரட்சகரின் தியாகத்தையும், அவர் நமக்காக செய்து முடித்தவைகளையும் நினைத்துப் பார்த்து நம்மை அவரிடம் ஒப்புக் கொடுப்பது எவ்வளவு தேவையானதாக இருக்கிறது பாருங்கள்.
- அற்புதராஜ் சாமுவேல்
30/4/2020

Wednesday, April 15, 2020

மூன்றாம் நாளில் உயிர்தெழுவார் என்று பழைய ஏற்பாட்டில் எங்குள்ளது?

கேள்வி - சகோ. ரமேஷ்: 1 கொரி15:4ல் வேதவாக்கியங்களின் படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து" என்று வாசிக்கிறோம். பழைய ஏற்பாட்டில் எங்குள்ளது மூன்றாம் நாளில் உயிர்தெழுவார் என்று?.

1. நாம் நற்செய்தி நூலில் வாசிக்கிற படி, மூன்றாவது நாளில் உயிர்த்தெழுதல் என்பது ஆண்டவர் தனது பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி சொல்லிய நேரடி தீர்க்கதரிசனம் ஆகும். அவர் சொன்ன போது சீடர்கள் அதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். அப். பவுல் கொரிந்தியருக்கு நிருபம் எழுதின காலத்தில், நற்செய்தி நூல்கள் எழுத்து வடிவத்தில் எழுதப் படாவிட்டாலும், அப்போஸ்தலர்கள் மற்றும் ஆதிச்சபை ஊழியர்கள் மூலமாக இயேசுவின் வார்த்தைகள் சொல்லப்பட்டு வந்ததற்கு அனேக ஆதாரங்கள் உண்டு. அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் அவற்றில் சிலவற்றை நாம் காண்கிறோம். ஆக, ஆதிச் சபையில் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் வேத வாக்கியங்களாக கருதப்பட்டன என்றும், அதன் படி பார்த்தால் நாம் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

2. பழைய ஏற்பாட்டின் படி என்று கேட்டிருக்கிறீர்கள். பழைய ஏற்பாட்டின்படி அல்லது நியாயப்பிரமாணத்தின்படி அவர் ”மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார்” என்று 1 கொரி.15:4 வசனத்தில் இருக்கிறதா? விதண்டாவாதத்திறாக நான் இதைச் சொல்ல வில்லை. கேள்வியைப் புரிந்து கொள்வதற்காக, ஒரு தெளிவுக்காக எழுதுகிறேன். பொதுவாக வேதவாக்கியங்களின் படி என்று வாசிக்கும்போது, நாம் பழைய ஏற்பாட்டு புத்தகங்களைக் குறிப்பதாக கருதுகிறோம். நீங்களும் அப்படியே கருதி எழுதி இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

3. பழைய ஏற்பாட்டுக்கு வருவோம். பழைய ஏற்பாட்டில் மூன்றாவது நாளில் என்பது, யோனாவின் சம்பவத்தைத் தவிர மற்றவை எதிலும் நேரடியாகச் சொல்லப்படவில்லை.
ஆனாலும் இயேசுகிறிஸ்துவின் பாடு, மரணம் பற்றி சங்கீதம் 16, ஏசாயா 53, தானியேல் 9 என பல தீர்க்கதரிசனங்கள் உண்டு. இங்கே மூன்றாம் நாள் பற்றிதான் கேள்வி என்றாலும் கூட, இயேசு கிறிஸ்துவின் பாடு, மரணம் தீர்க்கதரிசன நிறைவேறுதல் என்பதைப் புரிந்து கொள்ளும் போது, உயிர்த்தெழுதலும் கூட தீர்க்க தரிசன நிறைவேறுதல் என்பது புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

4. பழைய ஏற்ப்பாட்டின் படி, யூதர்கள் மூன்றாவது நாளில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்களினால் ”மூன்றாவது நாள்” என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அவற்றில் முதலாவது, ஆதியாகமம் 22 ல் ஆபிரகாம் ஈசாக்கை பலியிடச் சென்ற சம்பவம் ஆகும். கிறிஸ்தவர்களாகிய நாம் உயிர்த்தெழுதலுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் போல, அல்லது அதைவிட அதிகமாக யூதர்கள் ஈசாக்கை பலியிடச் சென்ற சம்பவத்தை நினைவு கூருகின்றனர். ஆங்கிலத்தில் Binding of Isaac என்றும், எபிரேய மொழியில் Aqidah என்றும் சொல்கின்றனர்.  ஆதியாகமம் 22:4 ல், ஆபிரகாம் மூன்றாம் நாளில் அந்த இடத்தைப் பார்த்ததாக வாசிக்கிறோம். அங்கு என்ன நடந்தது என்பது நாமறிந்த ஒன்றாக இருப்பதால் அதைப் பற்றி இங்கே எழுதவில்லை.

5. இதே போல,  ஆதியாகமம் 42:18, யாத்திராகமம் 19:16, யோசுவா 2:16, மற்றும் எஸ்றா 8:15 போன்ற  வேத பகுதிகள் காரணமாக மூன்றாவது நாளை முக்கியமானதாக அல்லது ஒரு அடையாளமாக யூதர்கள் கருதினர். இது போக ஓசியா 6ம் அதிகாரத்தில் உயிர்த்தெழுதலைப் பற்றிய ஒரு நம்பிக்கையைப் பற்றி 2ம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம்.

இப்படியாக பல வேத வசனங்கள் இருப்பதால், வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வதில் எந்தவிதமான முரண்பாடும், தவறும் இல்லை. வேதவாக்கியங்களின் படி இது முற்றிலும் சரியே.

மேலும், வேதவாக்கியங்களின் படி என்று ஏன் எழுத வேண்டும் என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உயிர்த்தெழுதல் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தன் முதல் நிருபத்தில் எழுதுகிறார். அவர்கள் கண்டு சாட்சி கொடுத்த உயிர்தெழுதல் என்பது கட்டுக்கதை அல்ல, மாறாக வேத வாக்கியங்களின்படியான தீர்க்க தரிசன நிறைவேறுதல் என்பதை அவர்கள் எழுதி வைத்துச் சென்றிருக்கின்றனர்

Friday, April 3, 2020

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் Lyrics Video

A song based on Psalm 27. நம்பிக்கையற்ற சமயங்களில் பாடத் தகுந்த பாடல். இந்த பாடல் பிறந்த கதையை ங்கு வாசிக்கலாம் (https://arputhaa.blogspot.com/2017/09/1.html).


Song Lyrics கர்த்தர் என் வெளிச்சம் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன் அல்லேலூயா (4) பொல்லாதோர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்கையில் கால் இடறினர் பகைவர் வீழ்ந்தனரே அல்லேலூயா (4) எனக்கெதிராக ஒரு பாளையம் வந்தாலும் யுத்தம் வந்தாலும் பயம் இல்லையே தேவனை நம்புவேன் அல்லேலூயா (4) ஒன்றைக் கேட்டேன் அதை நாடுவேன் தேவனே உம் மகிமையைக் கண்டு ஆய்ந்திட நாடுவேன் ஆலயம் அல்லேலூயா (4) தீங்கு நாளில் கூடாரத்தில் மறைப்பாரே கன்மலையின் மேல் என்னை உயர்த்துவார் ஆனந்தம் பாடுவேன் அல்லேலூயா (4) என் ஜெபத்தை கேட்டிரங்கி பதில் கொடும் உம் முகத்தைத் தேடிடுவேன் இரட்சிப்பின் தேவனே அல்லேலூயா (4) இப்பாடல் ஒலிப்பதிவுக்காக ஜெபித்த, கொடுத்த அனைவருக்கும் நன்றி. தேவனுடைய பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமானதாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும், ஆராதனை வேளைகளில் பாடும் போது ஆறுதலளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்.

Album: இயேசுவுக்காக (Iyesuvukkaaga) Lyrics & tune: Arputharaj Samuel Sung by: Jinoth Music Arrangement: Nellai Riyaz Guitar: Kingsly Rhythm: Kiruba Recorded by Riyaz @ Grace Studio, Palayamkottai Mixed & mastered @ Derick Studio (Madurai) Lyrics Video prepared by Arputharaj with the help of my son Jeffrey Contact: +91 9538328573 E-mail: arpudham@gmail.com

Monday, March 30, 2020

கொரொனா காலத்தில்...கருணாகரனைத் தேடுவோம்

கடந்த சில நாட்களாக, எங்கு திரும்பினாலும் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப கேட்டு மனதளவில் சோர்ந்து போயிருந்தேன். மருத்துவ உலகில் Covid-19 என்றழைக்கப்படும் கொரொனா தொற்று நோய் உலகமெங்கிலும் பரவி, இந்நூற்றாண்டின் மாபெரும் பயத்தை மனிதர்களிடையே விதைத்திருக்கிறது. இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில், கரைகடக்க முடியாத அலைகள் போல பல சூறாவளிச் சிந்தனைகள் என் மனதில். மன அமைதியை இழந்தவனாக, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மனதில் நினைவுக்கு வந்த பழைய கிறிஸ்தவப் பாடல்களைப் பாடி இசைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அறிவுக்கெட்டாத ஒரு அமைதி மெல்ல என் மனதில் தென்றலாக எழும்பியதை உணர முடிந்தது.

அது மாத்திரமல்ல, என் அடிமனதில் ஒரு மெல்லிய இராகம் மெதுவாக எழும்புகிறதை உணர முடிந்தது. பல மாதங்களாக இசையுடனான என் உறவை ஒரு ஓரமாக வைத்திருந்த என் மனதில் ஆச்சரியம். அப்படியே அந்த மெல்லிய சத்தத்தைக் கேட்டு, இசைப்பெட்டியில் வாசித்த படியே பாடினேன். “ஏற்ற சமயத்தில் சொல்லப் பட்ட வார்த்தைகள்” என்று நீதி மொழிகள் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல நான் கேட்ட வார்த்தைகள் என் காதில் தேனாக இனித்தது.

நான் கேட்ட முதல் வார்த்தை....கருணாகரனே!

கருணாகரனே என்ற அருமையான தமிழ் வார்த்தையின் பொருள் என்னவெனில், கிருபாசனத்தில் வீற்றிருக்கும் எல்லா அருளும் நிறைந்த கருணைக்கடலாகிய இறைவன் என்பதாகும். மனதில் எழுந்த பாடலைப் பாடி முடித்ததும் ஒரு தெய்வீக அமைதியை உணர்ந்தேன். அந்தகார காரிருளின் சமயங்களிலும் அனைத்தும் அவரிடம் ஒப்புக்கொடுக்கையில் ஒரு நிம்மதி. பாடலின் வரிகள் இப்படியாக செல்கிறது.

கருணாகரனே
தயை கூர்ந்திடுமே
இயேசுவே என் தேவா
எனை நான் படைக்கின்றேன்

எண்ணமெல்லாம் நீர்தான்
என்று சொல்ல அருளும்
துன்பம் சூழும் நேரத்தில்
மனம் கலங்கி நிற்கையில்

கருணாகரனே
தயை கூர்ந்திடுமே
இயேசுவே என் தேவா
எனை நான் படைக்கின்றேன்

கொரொனா வைரஸின் பெயர்க் காரணத்தை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. கிரீடம் போன்று காட்சி அளிப்பதால் அப்பெயர் வந்ததாம். அனைத்தையும் படைத்த, அனைத்தையும் ஆளுகை செய்கிற சர்வ வல்ல இறைவனிடம் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளும்போதும், அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று அறிந்து கொள்ளும் போதும் ஒரு பேரமைதி.

நமக்கு அருளப்பட்டிருக்கும் இந்த தனிமை நாட்களில், மற்ற மனிதர்களிடம் இருந்து எந்தளவுக்கு நம்மை தனிமைப் படுத்துகிறோமோ, அந்தளவுக்காவது இறைவனிடம் நாம் நெருங்கிச் சேர முயற்சி செய்வோம். முயற்சி திருவினையாகும்.

(சமயம் வாய்க்கும்போது முறையாக இப்பாடலை ஒலிப்பதிவு செய்து பகிர்கிறேன்)