1. நாம் நற்செய்தி நூலில் வாசிக்கிற படி, மூன்றாவது நாளில் உயிர்த்தெழுதல் என்பது ஆண்டவர் தனது பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி சொல்லிய நேரடி தீர்க்கதரிசனம் ஆகும். அவர் சொன்ன போது சீடர்கள் அதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். அப். பவுல் கொரிந்தியருக்கு நிருபம் எழுதின காலத்தில், நற்செய்தி நூல்கள் எழுத்து வடிவத்தில் எழுதப் படாவிட்டாலும், அப்போஸ்தலர்கள் மற்றும் ஆதிச்சபை ஊழியர்கள் மூலமாக இயேசுவின் வார்த்தைகள் சொல்லப்பட்டு வந்ததற்கு அனேக ஆதாரங்கள் உண்டு. அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் அவற்றில் சிலவற்றை நாம் காண்கிறோம். ஆக, ஆதிச் சபையில் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் வேத வாக்கியங்களாக கருதப்பட்டன என்றும், அதன் படி பார்த்தால் நாம் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
2. பழைய ஏற்பாட்டின் படி என்று கேட்டிருக்கிறீர்கள். பழைய ஏற்பாட்டின்படி அல்லது நியாயப்பிரமாணத்தின்படி அவர் ”மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார்” என்று 1 கொரி.15:4 வசனத்தில் இருக்கிறதா? விதண்டாவாதத்திறாக நான் இதைச் சொல்ல வில்லை. கேள்வியைப் புரிந்து கொள்வதற்காக, ஒரு தெளிவுக்காக எழுதுகிறேன். பொதுவாக வேதவாக்கியங்களின் படி என்று வாசிக்கும்போது, நாம் பழைய ஏற்பாட்டு புத்தகங்களைக் குறிப்பதாக கருதுகிறோம். நீங்களும் அப்படியே கருதி எழுதி இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
3. பழைய ஏற்பாட்டுக்கு வருவோம். பழைய ஏற்பாட்டில் மூன்றாவது நாளில் என்பது, யோனாவின் சம்பவத்தைத் தவிர மற்றவை எதிலும் நேரடியாகச் சொல்லப்படவில்லை.
ஆனாலும் இயேசுகிறிஸ்துவின் பாடு, மரணம் பற்றி சங்கீதம் 16, ஏசாயா 53, தானியேல் 9 என பல தீர்க்கதரிசனங்கள் உண்டு. இங்கே மூன்றாம் நாள் பற்றிதான் கேள்வி என்றாலும் கூட, இயேசு கிறிஸ்துவின் பாடு, மரணம் தீர்க்கதரிசன நிறைவேறுதல் என்பதைப் புரிந்து கொள்ளும் போது, உயிர்த்தெழுதலும் கூட தீர்க்க தரிசன நிறைவேறுதல் என்பது புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
4. பழைய ஏற்ப்பாட்டின் படி, யூதர்கள் மூன்றாவது நாளில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்களினால் ”மூன்றாவது நாள்” என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அவற்றில் முதலாவது, ஆதியாகமம் 22 ல் ஆபிரகாம் ஈசாக்கை பலியிடச் சென்ற சம்பவம் ஆகும். கிறிஸ்தவர்களாகிய நாம் உயிர்த்தெழுதலுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் போல, அல்லது அதைவிட அதிகமாக யூதர்கள் ஈசாக்கை பலியிடச் சென்ற சம்பவத்தை நினைவு கூருகின்றனர். ஆங்கிலத்தில் Binding of Isaac என்றும், எபிரேய மொழியில் Aqidah என்றும் சொல்கின்றனர். ஆதியாகமம் 22:4 ல், ஆபிரகாம் மூன்றாம் நாளில் அந்த இடத்தைப் பார்த்ததாக வாசிக்கிறோம். அங்கு என்ன நடந்தது என்பது நாமறிந்த ஒன்றாக இருப்பதால் அதைப் பற்றி இங்கே எழுதவில்லை.
5. இதே போல, ஆதியாகமம் 42:18, யாத்திராகமம் 19:16, யோசுவா 2:16, மற்றும் எஸ்றா 8:15 போன்ற வேத பகுதிகள் காரணமாக மூன்றாவது நாளை முக்கியமானதாக அல்லது ஒரு அடையாளமாக யூதர்கள் கருதினர். இது போக ஓசியா 6ம் அதிகாரத்தில் உயிர்த்தெழுதலைப் பற்றிய ஒரு நம்பிக்கையைப் பற்றி 2ம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம்.
இப்படியாக பல வேத வசனங்கள் இருப்பதால், வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வதில் எந்தவிதமான முரண்பாடும், தவறும் இல்லை. வேதவாக்கியங்களின் படி இது முற்றிலும் சரியே.
மேலும், வேதவாக்கியங்களின் படி என்று ஏன் எழுத வேண்டும் என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உயிர்த்தெழுதல் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தன் முதல் நிருபத்தில் எழுதுகிறார். அவர்கள் கண்டு சாட்சி கொடுத்த உயிர்தெழுதல் என்பது கட்டுக்கதை அல்ல, மாறாக வேத வாக்கியங்களின்படியான தீர்க்க தரிசன நிறைவேறுதல் என்பதை அவர்கள் எழுதி வைத்துச் சென்றிருக்கின்றனர்
No comments:
Post a Comment