Saturday, September 30, 2017

"இயேசுவுக்காக…" பாடல்கள் பிறந்த கதை - 3முந்தின பதிவில் எனக்கு மிகவும் பிடித்த “இயேசு எந்தன் கன்மலை” என்று ஆரம்பிக்கும் நான் எழுதியப் பாடலைப் பற்றி எழுதி இருந்தேன். எனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது பாடல் எழுதுகிற எல்லாருமே இது போன்று தான் பாடல்களைப் பெறுகிறார்களா என்று அறியேன். என்னைப் பொறுத்தவரையில், ஒரு பாடலை எழுத வேண்டும் என்று உட்கார்ந்து யோசித்து எழுதியப் பாடல்கள் மிகவும் குறைவு. ஆனால் ஒரு பாடல் கர்த்தரிடம் இருந்து வரும்போது, அதைத் தொடர்ந்து அடுத்து சில நாட்கள் ஒவ்வொருப் பாடல்களாக கர்த்தர் எனக்குக் கொடுப்பதை நான் காண்கிறேன். இந்தப் பதிவில் போன வருடம் நான் பெற்ற சிலப் பாடல்கள் பெறத் துவக்கமாக இருந்த ஒரு பாடலைப் பற்றி எழுதுகிறேன்.
3. உம் பாதம் சரணடைந்தேன் மனதெல்லாம் உம் நினைவே
உங்களில் பலர் அறிந்திருக்கிறபடி, நான் பெங்களூரில் உள்ள SAIACS எனும் இறையியல் கல்லூரியில் Training Coordinator ஆக பணிபுரிந்து வருகிறேன். கல்லூரிப் பணி,  ஊழியம், இதன் நடுவில் குடும்பம் என வாழ்க்கை பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகச் செல்வது போலத் தோன்றினாலும், என் மனதில் ஒரு வெறுமையை உணர்ந்தேன். வேதம் வாசிப்பு, ஜெபம், ஆராதனை எல்லாம் நான் வழக்கம் போல செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் எதையோ மிஸ் பண்ணுகிறோம் என்ற உணர்வு எனக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அது என்ன என்பதுதான் எனக்குப் புரியாதப் புதிராக இருந்தது.
நான் எனக்கு நானே ஒரு சுயபரிசோதனை செய்து பார்த்தேன். எங்கேயாவது நான் தவறி இருக்கிறேனா என்பதை ஆராய்ந்து பார்த்தேன். ஆண்டவருக்கும் எனக்கும் இடையில் உள்ள உறவில் விரிசல் வருமளவுக்கு நான் எதையாவது செய்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தேன். குழப்பமாகவே இருந்தது. என்ன செய்யலாம் என்பதே என் மனதின் நினைவாக எப்போதும் இருந்தது.

அப்படிப் பட்ட காலத்தில் ஒரு நாள் இரவு கிதாரை எடுத்து எனக்குத் தெரிந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருக்கிறேன். அப்படிப் பாடும்போது, எனக்குத் தெரிந்த சில இராகங்களின் சுருதிகளை வரிசையாக வாசித்துக் கொண்டு வந்தேன். அப்படிச் செய்து வருகையில் என் மனதில் இருந்து ஒரு புதிய இராகம் வருவதை என்னால் உணர முடிந்தது. அப்படியே என் செவியையும், புலனையும் கூர்மையாக்கி என் மனதில் மெதுவாக கேட்கிற சுருதிகளை ஒவ்வொன்றாக தட்டிப் பார்க்கிறேன். ஐந்து சுருதிகளை (penta tonic scale) மட்டுமே கொண்ட ஒரு இராகத்தில் 7/8 தாளத்தில் இயல்பாக ஒரு பாடல் எனக்குள் வந்தது. அப்போது நான் இருந்த குழப்பமான சூழ்நிலை மற்றும் வெறுமைக்குப் பதில் தேடி, “தகப்பனே நான் உம்மிடமே வருகிறேன்” என்று ஆண்டவரிடம் என்னை ஒப்புக் கொடுக்கையில் பாடல் வரிகள் எழுத ஆரம்பிக்கிறேன்,
“உம் பாதம் சரணடைந்தேன்
 மனதெல்லாம் உம் நினைவே
 பலவீனன் பெலன் தாருமே
உந்தன் அருள் தாருமே”

இந்த வரிகளை எழுதியதும், அதுவரை இருந்த வெறுமையுணர்வு போன இடம் தெரியவில்லை. அதான் அனைத்தையும்  ஆண்டவரிடம் கொடுத்தாச்சுதே! எழுதியது போல, மனதெல்லாம் இறைவனைப் பற்றிய உணர்வு நிரம்பியது.  அந்த உணர்வின் மகிழ்ச்சியில் அந்தப் பாடலைப் பற்றி நள்ளிரவு என்றும் பாராமல் நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களுக்கு போன் பண்ணி தெரிவிக்கிறேன். அவர் கேட்டவுடனே, இது கம்பீர நாட்டையில் இருக்கிறதே, அட! என்று உற்சாகப்படுத்தினார். போனை கீழே வைத்து விட்டு, அதே உற்சாகத்தில் தேவ கிருபையால் மேலும் மூன்று சரணங்களை எழுதினேன். இந்தப் பாடலுக்கு நண்பர் Fairy Eby  மிகச் சிறப்பானதொரு இசையமைத்திருக்கிறார். அதை நீங்கள் சிடியில் கேட்கலாம். யூடியுபிலும் கூட விரைவில். அதற்கு முன் உங்களுக்காக அந்தப் பாடலின் வரிகள்:
உம் பாதம் சரணடைந்தேன் மனதெல்லாம் உம் நினைவே
பெலவீனன், பலம் தாருமே உந்தன் அருள் தாருமே

உம் பாதம் சரணடைந்தேன்
குறையெல்லாம் நீக்கிடுமே
பரிசுத்தம் பெற வேண்டுமே
உந்தன் அருள் போதுமே

 உம் பாதம் சரணடைந்தேன்
உமக்காக வாழ்ந்திடுவேன்
தடையெல்லாம் தகர்த்திடுமே
எந்தன் தகப்பன் நீரே

உம் பாதம் சரணடைந்தேன்
பயமெல்லாம் பறந்திட்டதே
சகலமும் படைக்கின்றேன் நான்
எந்தன் சகாயம் நீரே
இந்தப் பாடலின் சிறப்பு கருதி, இதை ஆங்கிலத்திலும் பாட வசதியாக English lyrics ஐயும் கொடுத்திருக்கிறேன். மொழிபெயர்ப்பைச் சரிசெய்து ஒரு poem ஆக மாற்றிய நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி.

I surrender me to thy feet
I’m filled with your thoughts so sweet
I’m weak, Lord, your strength I need
For your mercies I plead

I surrender me to thy feet
Perfect me, I’m incomplete
Holiness I should receive
In your mercies I believe

I surrender me to thy feet
To thee my life I commit
Remove all obstacles in my way
You’re my father to whom I pray

I surrender me to thy feet
You give me a fearless spirit
I offer my all before your throne
Helping hand to me you’ve shown

Arputharaj
9538328573

Friday, September 29, 2017

"இயேசுவுக்காக…" பாடல்கள் பிறந்த கதை - 2முந்தைய பதிவில் சங்கீதம் 27 ஐ அடிப்படையாகக் கொண்ட பாடல் உருவான கதையைச் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவில்  நான் எழுதியதிலேயே எனக்கு மிக மிகப் பிடித்தப் பாடல் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போகிறேன். 

2.  இயேசு எந்தன் கன்மலை
ஒரு நாள் காலையில் நடைபயிற்சி (walking) செய்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.  அச்சமயத்தில் இசையைப் பற்றி சிந்தித்துக் கொண்டு வருகிறேன். இன்று உலகில் எத்தனையோ விதமான இசை வடிவங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து இசை வடிவங்களிலும் மிகவும் துள்ளலான இசையுடன் அதைக் கேட்பவர்கள் மகிழ்ந்து ஆடிப் பாட பாடல்கள் இருக்கின்றன. கிறிஸ்தவத்தில் நாம் ஆடிப்பாடுவது இசைக்காகவோ அல்லது இசையின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நம் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். இதை நாம் உணர்ந்து வாழ்ந்தால் நாம் இப்பூமியிலேயே சொர்க்க வாழ்க்கையை வாழ முடியும். வாழ்க்கை மிகவும் சுகமாக இருப்பதை அனுபவிக்க முடியும். இதையே விதையாகக் கொண்டு அச்சமயத்தில் என் மனதில் எழுந்த உற்சாகமான உணர்வு மற்றும் எழுச்சியில் “இயேசு என்னைக் கைவிடார்” என்ற முதல் வரியை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறேன். வீடும் வந்து விட்டது.  உடனே கிதாரை எடுத்து என் மனதில் இருந்த டியூனை என் மொபைலில் பதிவு செய்து கொண்டேன். இது நடந்தது 2016 ஆகஸ்டில். வேறு அலுவல்கள் இருந்ததால் உடனே உட்கார்ந்து எதையும் எழுத முடியவில்லை. “இயேசு என்னைக் கைவிடார்” என்பதை மட்டும் மனதும் வாயும் திரும்பத் திரும்ப பாடி உச்சரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மேல் அடுத்து என்ன வரி என்பது என்னவென்று தெரியவில்லை.

அடுத்து வந்த சில நாட்கள் அந்த டியூன் மிகவும் பிரபலமான  Swing beat ல் இருப்பதை அறிந்து கொள்ள உதவின.  அமர்ந்து எழுத அமைதியான நேரம் கிடைத்த போது, இந்த டியூனுக்கு பாடல் வரிகள் எழுதவேண்டும் என்று நினைக்கையில், இயேசு எனக்கு என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அதையே இப்பாடல் வரிகளாக எழுத வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. அந்தத் தீப்பொறிச் சிந்தனை அடுத்த அரை மணிநேரத்திற்குள்ளாக பாடல் வரிகளை எழுதி முடிக்கப் போதுமானதாக இருந்தது. எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமலும், நான் அறிந்து அனுபவித்து சுவைத்ததை வைத்து மட்டுமே எழுத வேண்டும் என்ற ஒன்றை மட்டும் நான் அளவுகோலாக வைத்துக் கொண்டேன்.  என் மனதில் இருந்த துள்ளலான இசைக்கு, அதன் படி நான் எழுதின பாடலின் வரிகள் இதோ…
1.  
                                 இயேசு எந்தன் கன்மலை
            கவலை கண்ணீர் எனக்கில்லை
   வேதனை வருத்தம் வருகையில் 
   வேந்தனை நோக்கிப் பார்க்கிறேன்
    சிலுவையில் வெற்றி சிறந்தவர்
             எனக்காக யாவையும் முடிப்பவர்
    சிந்தனை செய்து பாடுவேன்  
     வந்தனம் சொல்லி போற்றுவேன்             

2.இயேசு எந்தன் இரட்சகர்
இன்னல் நீக்கும் வைத்தியர்
தழும்புகளால் நான் சுகமானேன்
கழுவப்பட்டு மகனானேன்
பழையவை எல்லாம் ஒழிந்தன
கிருபையால் எல்லாம் புதியன
சிந்தனை செய்து பாடுவேன்
வந்தனம் சொல்லிப் போற்றுவேன்

3. இயேசு எந்தன் மேய்ப்பரே
உயிரைத் தந்து மீட்டவர்
தனிமையில் தவிக்கும் வேளையில்
கரம் பற்றி நடத்தி தேற்றுவார்
அனைத்தும் அவரால் ஆகுமே
(தோல்விகள் தோற்றுப் போகுமே)
அவரால் வாழ்க்கை சுகமே
சிந்தனை செய்து பாடுவேன்
வந்தனம் சொல்லி போற்றுவேன்

4. இயேசு எந்தன் நாயகர்
தந்தையும் தாயுமானவர்
கண்ணின் மணிபோல் காப்பவர்
காலமும் துணைநிற்பவர்
இருள் நீக்கி வெளிச்சம் தருபவர்
இனிமையே வாழ்க்கை இன்பமே
சிந்தனை செய்து பாடுவேன்
வந்தனம் சொல்லி போற்றுவேன்
By Arputharaj
+91 9538328573

Thursday, September 28, 2017

"இயேசுவுக்காக…" பாடல்கள் பிறந்த கதை - 1


"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று சொல்லும் நாம், நமக்கு மிகப் பெரிய, மற்றும் தாங்க முடியாத பிரச்சனைகள் வரும்போது, அவை நம் எதிரிக்குக் கூட வரக் கூடாது என்று மனதார விரும்புகிறோம், பேசுகிறோம். ஏனெனில் துன்பங்கள், துயரங்கள் மற்றும் பிரச்சனைகள் மனிதனை அப்படியே அமிழ்த்தி கண்ணீரில் மூழ்கடித்து அவனை வீழ்த்தத் துடிக்கின்றன. ஒரு கிறிஸ்தவன் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது, அவன் வீழ்ந்து விடுவதில்லை, ஏனெனில் அவனைத் தூக்கித் தாங்க ஒருவர் உண்டு. இந்த “இயேசுவுக்காக…” பாடல் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் பின் ஒரு கதை உண்டு. அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியே.
1.     1. என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்
2012ம் வருடத்தில் என் வாழ்க்கையில் கடும் புயல் போன்ற வேகத்தில் பெரிதான பிரச்சனைகள் என்னைத் தாக்கியது. ஜெபிப்பதற்கும் திராணியற்றுப் போயிருந்தேன். இனிமேல் அவ்வளவுதான் நீ எழுந்திருக்க முடியாது, உன் ஊழியம், உன் வாழ்க்கை எல்லாமே தோல்வியே என்று எதிரியானவன் புதிராடிச் சதிராடிக் கொண்டிருந்தான்.  தேவ நடத்துதலினால் நான் உபவாசமிருந்து ஜெபிக்க ஆரம்பித்தேன்.

முதல் சில நாட்களில் ஜெபிப்பதற்கே கஷ்டமாயிருந்தாலும், விடாமல் ஜெபிக்க உறுதியாயிருந்து ஜெபித்தேன்.  ஒரு பக்கம் சத்துருவின் தாக்குதல்களும், அவமானக் குற்றச்சாட்டுகளும், ஏளனமான பரிகாசமும் இருந்தன, மறுபக்கம் நான் தைரியமிழந்து ஆண்டவரே பேசும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். உன் வாழ்க்கை இருள் விலகுவதில்லை என்று சொல்லி பிசாசானவன் போராடிக் கொண்டிருந்த அந்நேரத்தில், நான் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது என்னையும் அறியாமல் பாட ஆரம்பிக்கிறேன். பாடல் வாயில் வந்த உடனேயே கிதாரை எடுத்து இசைத்துப் பாடவும் ஆரம்பித்து விட்டேன். என் சூழ்நிலையை மறந்து, கவலை துறந்து சங்கீதம் 27:1 ஐ சொல்கிறேன், “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?"

இதைச் சொல்லும்போதே என் கவனம் முழுவதும் அப்படியே வேதாகமத்திற்குத் திரும்புகிறது. வேதாகமத்தை எனக்கு முன்பாக வைத்துக் கொண்டு அப்படியே பாடல் வரிகளை சங்கீதம் 27ல் உள்ளவாறே, பாடலுக்கேற்றவாறு பொருள் மாறாமல் எழுதிக் கொண்டு வந்தேன். ஒரு சில நிமிடங்களில் பாடல் தயார். என் மனதும் தேவனுடனான ஒரு சந்திப்புக்குத் தயாரானது.

பாடலை எழுதி முடித்ததும், நான் எப்போதும் செய்வது போல நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களுக்கு அனுப்புகிறேன். அப்போதே என் கருத்தாக இந்தப் பாடலை நண்பர் கிங்ஸ்லியில் கிதார் பிண்ணனியில் ஒரு வெஸ்டெர்ன் பாணி இசையில் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி வைத்தேன். நான் ஆசைப்பட்டபடி முழுமையும் நண்பர் கிங்ஸ்லியின் இசையில் இப்போது இசைப்பதிவு செய்யப்படவில்லை எனினும், அவரின் கைவண்ணத்தை நீங்கள்  சிடியில் கேட்கும்போது உணர முடியும்.
ஜான் அண்ணனும் பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்ற விமர்சனத்தைத் தந்தார்.

அச்சூழ்நிலையில் கர்த்தரே என்னுடன் பேசி, என் இருளான சூழ்நிலையிலும் அவரே வெளிச்சம் என்பதை உணர்த்தி, அவர்பக்கமாக என்னை இழுத்துக் கொண்டார் என்று நம்புகிறேன். உயிருள்ள வேதாகம வார்த்தைகள் என் சூழ்நிலையை மேற்கொள்ளும் தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது.  சத்துருவாகிய பிசாசானவன் வெட்கப்பட்டு ஓடிப் போனான்.  அடுத்து என்னென்ன நடக்கப் போகிறது என்பதை தேவன் வெளிப்படுத்தி என்னை அனைத்துத் தீங்குக்கும் விலக்கிக் காத்தார்.
இதோ உங்களுக்காக அந்தப் பாடலின் வரிகள்

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்
என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன்

அல்லேலூயா (4)

பொல்லாதோர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க
என்னை நெருக்கையில் கால் இடறினர் பகைவர் வீழ்ந்தனரே

அல்லேலூயா (4)

எனக்கெதிராக ஒரு பாளையம் வந்தாலும்
யுத்தம் வந்தாலும் பயம் இல்லையே தேவனை நம்புவேன்

அல்லேலூயா (4)

ஒன்றைக் கேட்டேன் அதை நாடுவேன் தேவனே
உம் மகிமையைக் கண்டு ஆய்ந்திட நாடுவேன் ஆலயம்

அல்லேலூயா (4)

தீங்கு நாளில் கூடாரத்தில் மறைப்பாரே
கன்மலையின் மேல் என்னை உயர்த்துவார் ஆனந்தம் பாடுவேன்

அல்லேலூயா (4)


என் ஜெபத்தை கேட்டிரங்கி பதில் கொடும்
உம் முகத்தைத் தேடிடுவேன் இரட்சிப்பின் தேவனே

அல்லேலூயா (4)
 - Arputharaj
+91 9379168300