Friday, September 29, 2017

"இயேசுவுக்காக…" பாடல்கள் பிறந்த கதை - 2முந்தைய பதிவில் சங்கீதம் 27 ஐ அடிப்படையாகக் கொண்ட பாடல் உருவான கதையைச் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவில்  நான் எழுதியதிலேயே எனக்கு மிக மிகப் பிடித்தப் பாடல் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போகிறேன். 

2.  இயேசு எந்தன் கன்மலை
ஒரு நாள் காலையில் நடைபயிற்சி (walking) செய்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.  அச்சமயத்தில் இசையைப் பற்றி சிந்தித்துக் கொண்டு வருகிறேன். இன்று உலகில் எத்தனையோ விதமான இசை வடிவங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து இசை வடிவங்களிலும் மிகவும் துள்ளலான இசையுடன் அதைக் கேட்பவர்கள் மகிழ்ந்து ஆடிப் பாட பாடல்கள் இருக்கின்றன. கிறிஸ்தவத்தில் நாம் ஆடிப்பாடுவது இசைக்காகவோ அல்லது இசையின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நம் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். இதை நாம் உணர்ந்து வாழ்ந்தால் நாம் இப்பூமியிலேயே சொர்க்க வாழ்க்கையை வாழ முடியும். வாழ்க்கை மிகவும் சுகமாக இருப்பதை அனுபவிக்க முடியும். இதையே விதையாகக் கொண்டு அச்சமயத்தில் என் மனதில் எழுந்த உற்சாகமான உணர்வு மற்றும் எழுச்சியில் “இயேசு என்னைக் கைவிடார்” என்ற முதல் வரியை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறேன். வீடும் வந்து விட்டது.  உடனே கிதாரை எடுத்து என் மனதில் இருந்த டியூனை என் மொபைலில் பதிவு செய்து கொண்டேன். இது நடந்தது 2016 ஆகஸ்டில். வேறு அலுவல்கள் இருந்ததால் உடனே உட்கார்ந்து எதையும் எழுத முடியவில்லை. “இயேசு என்னைக் கைவிடார்” என்பதை மட்டும் மனதும் வாயும் திரும்பத் திரும்ப பாடி உச்சரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மேல் அடுத்து என்ன வரி என்பது என்னவென்று தெரியவில்லை.

அடுத்து வந்த சில நாட்கள் அந்த டியூன் மிகவும் பிரபலமான  Swing beat ல் இருப்பதை அறிந்து கொள்ள உதவின.  அமர்ந்து எழுத அமைதியான நேரம் கிடைத்த போது, இந்த டியூனுக்கு பாடல் வரிகள் எழுதவேண்டும் என்று நினைக்கையில், இயேசு எனக்கு என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அதையே இப்பாடல் வரிகளாக எழுத வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. அந்தத் தீப்பொறிச் சிந்தனை அடுத்த அரை மணிநேரத்திற்குள்ளாக பாடல் வரிகளை எழுதி முடிக்கப் போதுமானதாக இருந்தது. எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமலும், நான் அறிந்து அனுபவித்து சுவைத்ததை வைத்து மட்டுமே எழுத வேண்டும் என்ற ஒன்றை மட்டும் நான் அளவுகோலாக வைத்துக் கொண்டேன்.  என் மனதில் இருந்த துள்ளலான இசைக்கு, அதன் படி நான் எழுதின பாடலின் வரிகள் இதோ…
1.  
                                 இயேசு எந்தன் கன்மலை
            கவலை கண்ணீர் எனக்கில்லை
   வேதனை வருத்தம் வருகையில் 
   வேந்தனை நோக்கிப் பார்க்கிறேன்
    சிலுவையில் வெற்றி சிறந்தவர்
             எனக்காக யாவையும் முடிப்பவர்
    சிந்தனை செய்து பாடுவேன்  
     வந்தனம் சொல்லி போற்றுவேன்             

2.இயேசு எந்தன் இரட்சகர்
இன்னல் நீக்கும் வைத்தியர்
தழும்புகளால் நான் சுகமானேன்
கழுவப்பட்டு மகனானேன்
பழையவை எல்லாம் ஒழிந்தன
கிருபையால் எல்லாம் புதியன
சிந்தனை செய்து பாடுவேன்
வந்தனம் சொல்லிப் போற்றுவேன்

3. இயேசு எந்தன் மேய்ப்பரே
உயிரைத் தந்து மீட்டவர்
தனிமையில் தவிக்கும் வேளையில்
கரம் பற்றி நடத்தி தேற்றுவார்
அனைத்தும் அவரால் ஆகுமே
(தோல்விகள் தோற்றுப் போகுமே)
அவரால் வாழ்க்கை சுகமே
சிந்தனை செய்து பாடுவேன்
வந்தனம் சொல்லி போற்றுவேன்

4. இயேசு எந்தன் நாயகர்
தந்தையும் தாயுமானவர்
கண்ணின் மணிபோல் காப்பவர்
காலமும் துணைநிற்பவர்
இருள் நீக்கி வெளிச்சம் தருபவர்
இனிமையே வாழ்க்கை இன்பமே
சிந்தனை செய்து பாடுவேன்
வந்தனம் சொல்லி போற்றுவேன்
By Arputharaj
+91 9538328573

No comments: