Saturday, December 29, 2018

திருமணம் உனக்கானது அல்ல - Marriage is not for you

எனக்கு திருமணம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன் - திருமணம் எனக்காக அல்ல.
இப்பொழுது எதையாவது மனதில் யோசித்து தவறாகப் புரிந்து கொள்வதற்கு முன் தொடர்ந்து வாசியுங்கள்.

நானும் என் மனைவியும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தோம். ஆயினும் திருமணம் என்று வந்த போது, சில பயங்கள் மற்றும் கவலைகளை என்னால் தவிர்க்க முடியவில்லை. எங்கள் திருமண நாள் நெருங்க நெருங்க என்னுள் பயம் அதிகரித்துக் கொண்டே சென்றது. நான் ஆயத்தமா? நான் சரியான முடிவை எடுத்த்திருக்கிறேனா? இவள் நான் மணம் புரிய சரியான நபரா? இவள் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருபாளா? என எனக்குள் பல கேள்விகள்.

இப்படிப்பட்ட முக்கியமான காலத்தில், என் எண்ணங்கள் மற்றும் கவலைகளை என் தந்தையுடன் பகிர்ந்து கொண்டேன். கடிகாரம் மிகவும் மெதுவாக சுற்றுவது போல, அல்லது காற்று நின்று போனது போலவும் நம்மைச் சுற்றிலும் இருக்கிற அனைத்தும் நம்மை நோக்கி வருவது போலவும் உள்ள தருணங்களை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் பெற்றிருக்கிறோம். நாம் அப்படிப்பட்ட நேரங்களை ஒருபோதும் மறக்க முடியாததாகக் குறித்துக் கொள்வோம்.

என் தந்தை என் கேள்விகள் மற்றும் கவலைகளுக்குப் பதில் கொடுத்த நேரம் அப்படிப்பட்ட ஒரு நேரமாக எனக்கு இருந்தது. அவர் சிரித்துக் கொண்டே, 'மகனே, நீ மிகவும் சுயநலமுள்ளவனாக இருக்கிறாய். ஆகவே நான் இதை மிகவும் எளிமையானதாக இதை மாற்றுகிறேன்: திருமணம் உனக்கானது அல்ல. உன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக நீ திருமணம் செய்து கொள்ளவில்லை, மாறாக வேறு ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக திருமணம் செய்கிறாய். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், உன் திருமணம் உனக்காக மட்டும் அல்ல, நீ ஒரு குடும்பத்திற்காக திருமணம் செய்கிறாய். திருமணத்தினால் உருவாகும் புது உறவுகளுக்காக மட்டுமல்ல, உன் எதிர்கால குழந்தைகளுக்காக நீ திருமணம் செய்கிறாய். அவர்களை வளர்க்க உனக்கு உதவி செய்ய எவர் விரும்புவார்? அவர்களை சரியான விதத்தில் உருவாக்க எவர் விரும்புவார்? திருமணம் உனக்காக அல்ல. அது உன்னைப் பற்றியது அல்ல. திருமணம் என்பது நீ திருமணம் செய்யப் போகிற நபரைப் பற்றியது."

அந்த தருணத்தில் தான் எனக்கான சரியான வாழ்க்கைத் துணையாக நான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பெண் அமைய முடியும் என்பதை அறிந்து கொண்டேன். நான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க, அனுதினமும் அவள் முகத்தில் புன்னகையைக் காண, நன்றாக சிரித்து மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன்.  நான்      அவளுடைய ஒரு குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், அவள்; என் குடும்பத்தில் ஒரு அங்கமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

    என் தகப்பனின் ஆலோசனையானது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் அதே வேளையில் வெளிப்படுத்துகிறதாகவும் இருந்தது. இன்று பரவலாக காணப்படும் சிந்தனையான, 'ஒன்று உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வில்லை எனில், அதை விட்டுவிட்டு புதிய ஒன்றை எடுத்துக் கொள்" என்பதற்கு       எதிரானதாக இருந்தது.

உண்மையான திருமண வாழ்வு என்பது ஒருபோதும் உன்னைப் பற்றியது அல்ல. அது நீங்கள் நேசிக்கிற நபரைப் பற்றியது -   அவர்களின் விருப்பங்கள், அவர்களின் தேவைகள், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கனவுகள் ஆகும். 'எனக்கு என்ன கிடைக்கும்?" என சுயநலம் எதிர்பார்க்கிறது.    அதேவேளையில், அன்போ, 'நான் என்ன கொடுக்க முடியும்?" என கேட்கிறது.
சில காலத்திற்கு முன்பு, சுயநலமின்றி நேசித்தல் என்றால் என்ன என்பதை என் மனைவி எனக்குக் காண்பித்தாள். அனேக மாதங்களாக, என் இருதயமானது பயம் மற்றும் குழப்பம் ஆகியவை கலந்து கடினமாகிக் கொண்டிருந்தது. பின்னர் தாங்கமுடியாமல் உணர்ச்சிப் பிழம்பாக வெளிவந்து இருவரும் தாங்கமுடியாததாக இருந்தது. நான் அவளைப் பற்றிய கரிசனை அற்றவனாகவும், சுயநலமுள்ளவனாகவும் இருந்தேன்.

ஆனால், என் சுயநல நோக்கின்படி அவள் இல்லை, மாறாக என் மனைவி மிகவும் ஆச்சரியமானதொன்றைச் செய்தாள் - அவள் அன்பு மழை பொழிந்தாள். நான் அவளுக்கு உண்டாக்கிய அனைத்து வேதனை மற்றும் கவலைகளைப் புறம்பே தள்ளி வைத்து விட்டு, அவர் நேசத்துடன் என்னை எடுத்து, என் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் சுகத்தைத் தந்தாள்.

நான் என் தகப்பனின் ஆலோசனையை மறந்து  போனதை உணர்ந்தேன். என் மனைவியைப் பொறுத்தவரையில் என்னை நேசிப்பதே திருமணம் என இருந்த நேரத்தில், என் பக்கத்தில் திருமணம் என்பது முழுவதும் என்னைச் சுற்றியதும், பற்றியதுமாகவே இருந்தது. இந்த பயங்கரமான உணர்வு என்னுள் கண்ணீரை வரவழைத்தது. நான் என்னால் இயன்றதைச் செய்வேன் என என் மனைவியிடம் உறுதி கூறினேன்.

இந்தக் கட்டுரையை வாசிக்கிற அனைவருக்கும் - நீங்கள் திருமணமானவரோ, திருமணமாகப் போகிறவரோ, அல்லது திருமணமே செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டவரோ- நீங்கள் யாராக இருந்தாலும், திருமணம் என்பது உங்களுக்கானது அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான எந்த அன்பின் உறவும் உனக்கானது அல்ல. அன்பு என்பது நீங்கள் நேசிக்கிற நபரைப் பற்றியது ஆகும்.

இதில் உள்ள முரண்பாடான ஒரு விசயம் என்னவெனில், நீங்கள் எவ்வளவு அதிகமாக அந்த நபரை உண்மையாக நேசிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அன்பை நீங்கள்; பெறுவீர்கள். நீங்கள் நேசிக்கிற அந்த நபரிடம் இருந்து மட்டுமல்ல, மாறாக அவ்ர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நீங்கள் ஒருபோதும் சந்தித்திராத ஆயிரக்கணக்கானவர்களின் அன்பைப் பெறுவீர்கள். உங்களுடைய அன்பு சுயநலமுள்ளதாக இருந்திருந்தால் இவைகளை எல்லாம் நீங்கள் பெற மாட்டீர்கள்.

மெய்யாகவே, அன்பு மற்றும் திருமணம் என்பது உனக்கானது அல்ல, அது மற்றவர்களுக்கானதாகும்.

- சேத் ஆடம் ஸ்மித்

(இந்த ‘‘Marriage isn’t for you” கட்டுரை உலகம் முழுவதிலும் மூன்று கோடிக்கும் அதிகமானவர்களால் ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்கப் பட்ட கட்டுரை  ஆகும். தமிழில் மொழிபெயர்த்து  வெளியிட அனுமதி கொடுத்த ஆசிரியருக்கு நன்றி. இக்கட்டுரை  “அமைதி நேர நண்பன்” 2016 பிப்ரவரி மாத இதழில் வெளியானது)

Friday, December 28, 2018

திருமணத்திற்கு முன்... (A Christian premarital counseling article)


திருமணம் குறித்து அனேக தவறான புரிதல்கள் இன்று மக்களிடையே குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில்; பரவி வருகிறது. திருமணம் முடிந்தால்....அவ்வளவுதான் என்ற கருத்தை உருவாக்கும் நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் முறைப்படுத்தப்படாத குப்பைத் தகவல்களை எங்கும்        காணலாம். இதினிமித்தம் அனேக வாலிபர்கள் திருமண உறவில் நுழையவே பயப்படுகின்றனர். கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட திருமணம் பற்றிய புரிதல் குறைவினால், சரியான தெளிவு இல்லை. ஆகவே திருமணத்திற்கு முந்தைய அல்லது திருமணத்திற்கு ஆயத்தமாக ஒரு ஆலோசனை இருந்தால், சரியான துணையைத் தேர்ந்தெடுக்கவும், வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் அது மிகவும் பிரயோஜனமாயிருக்கும். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.

திருமணம் என்பது என்ன?
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆணும் பெண்ணும் முறையான குடும்ப வாழ்வில் நுழைய வழிகோலும் வாசலாக திருமணம் இருக்கிறது. திருமணம் மூலமாக ஒரு ஆணும், பெண்ணும் வெளிப்படையாக, சட்டப்பூர்வமான மற்றும் நிரந்தரமான திருமண உறவில் இணைகின்றனர். இந்த திருமண உறவு அவ்விருவரையும் மரணம் மட்டும் ஒன்றாக வாழ்வதற்கு ஏதுவாக இணைக்கிறது. திருமணம் என்பது குழந்தைகளைப் பெற்று அவர்களை ஒன்றாக வளர்ப்பதன் மூலமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நிரந்தரமான அர்ப்பணிப்புடன் இணைவதே திருமணம் என ஒருவர் வரையறுக்கிறார்.

ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
ஒருவர் திருமணம் செய்வதற்கான அவசியத்தை பரிசுத்த வேதாகமத்தில் மற்றும் கிறிஸ்தவத்தின் பார்வையில் நாம் சில முக்கியமான காரியங்களைப் பார்க்கலாம்.
1. குடும்பம் வாழையடி வாழையாக வளர்ந்துப் பெருக முறையான திருமண உறவு அவசியம். பலுகிப் பெருகவேண்டும் என்பது இறைவனின் கட்டளை ஆகும் (ஆதி.1:28).
2. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது என்றும் விவாக மஞ்சம் அசுசிப் படாததாகவும் இருக்க வேண்டும் என்று கூறும் பரிசுத்த வேதம், கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும் என வேதம் தெளிவாகக் கூறுகிறது (எபிரேயர் 13:4, 1 கொரி.7:4)
3. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருடைய பரஸ்பர தேவைகளை நிறைவு செய்து நிறைவான வாழ்வு வாழ திருமணம் தேவை. திருமண உறவில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்ற துணையாக இருக்கிற படியால், இருவரும் சேர்ந்து வாழ, இணைந்து அனேக காரியங்களைச் செய்ய ஏதுவுண்டாகிறது.
4. கிறிஸ்துவானவர் தம் சபையுடன் கொண்டுள்ள உறவு திருமண உறவுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறதை நாம் வேதத்தில் காணலாம் (எபேசியர் 5: 22-33)
5. ஆண் மற்றும் பெண் இருவரும் தங்களை கர்த்தருக்குள் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ள திருமண வாழ்வு உதவுகிறது (1 கொரி.7:2)

சரியான வாழ்க்கைத் துணையை தெரிவு செய்வதற்கு முன்...
1. சரியான வாழ்க்கத் துணை வேண்டும் என்று எதிர்பார்க்கிற அல்லது ஜெபிக்கிற அனேகர் சரியான வாழ்க்கைத் துணை யாக நான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லது முயற்சி இன்றி உள்ளனர். தேவனுக்குக் கீழ்ப்படியாமலும், ஜெப வாழ்வு இன்றியும், தேவனுடனான ஆவிக்குரிய வாழ்வில் தொடர்பின்றி காணப்படுகின்றனர்.
2. அனேகர் தங்களுடைய சொந்த அளவுகோல்களின் படி, சரீர தோற்றம் மற்றும் நம்பிக்கையின் படியான ஒருவரே சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும் என்று எண்ணி   தவறான நபரை எதிர்பார்க்கின்றனர்.


சரியான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வது எப்படி?
1. தெரிந்தெடு - ஒரு கிறிஸ்தவ ஆண் அல்லது பெண் கிறிஸ்துவையும் வேதாகமத்தையும் நம்புகிற விசுவாச வாழ்வில் உள்ள ஒருவரையே திருமணம் செய்ய வேண்டும்.              அவிசுவாசியான ஒருவரை திருமணம் செய்யக் கூடாது என வேதம் தெளிவாக எச்சரிக்கிறது (2 கொரி.6: 14-15).
2. தேவனை நம்பு - தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் தர விரும்புகிறார். ஆனால் நாம் அவருக்கு உண்மையாக இருப்பதும், அவரை முழுமையாகச் சார்ந்திருப்பதும் அவசியம் ஆகும். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கிறபடியால், நமக்கு கடவுளின் உதவி தேவை. அவருடைய சித்தத்தை நாம் அறிந்து கொள்ள அவர் நம் மனதில் பேசுவதன் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் மூலமாகவும் நமக்குதவுகிறார்.
3. குணநலன் நாடு - மனத் தாழ்மை, எளிமை, கிறிஸ்துவுக்கு அர்ப்பணம், சரியான முன்னுரிமைகள் மற்றும் நம்பிக்கைகள், அன்பான நடக்கை, சுய கட்டுப்பாடு, மற்றவர்களுடன் பொறுப்பாக பழகுதல் மற்றும் கிறிஸ்தவ சபையுடனான தொடர்பு ஆகியவைகளை கவனிக்க வேண்டும்.
4. ஞானம் தேவை - கர்த்தர் அருளுகிற ஞானத்தில் நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அவசர முடிவுகள் அவசியமா என்று ஆராய்ந்து தேவ துணை நாட வேண்டும்.

அன்பான தேவனுடைய பிள்ளைகளே ஒருவர் திருமணம் செய்வதற்கு முன், சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேதாகம ஒளியில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்களை மட்டுமே இங்கு கொடுத்திருக்கிறேன். இவை சரியாகப் பின்பற்றப் பட்டால் சரியான வாழ்க்கைத் துணை கண்டடைவதில் தேவையற்ற சிக்கல்களை எளிதாக தவிர்க்கலாம்.
 - அற்புதராஜ்
 +91 9538328573
(இக்கட்டுரை என் இறையியல் கல்வியின் ஒரு பகுதியாக முதலில் தயாரிக்கப்பட்டு, பின் “அமைதி நேர நண்பன்” 2016 பிப்ரவரி மாத இதழில் வெளியானது).