Friday, December 28, 2018

திருமணத்திற்கு முன்... (A Christian premarital counseling article)


திருமணம் குறித்து அனேக தவறான புரிதல்கள் இன்று மக்களிடையே குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில்; பரவி வருகிறது. திருமணம் முடிந்தால்....அவ்வளவுதான் என்ற கருத்தை உருவாக்கும் நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் முறைப்படுத்தப்படாத குப்பைத் தகவல்களை எங்கும்        காணலாம். இதினிமித்தம் அனேக வாலிபர்கள் திருமண உறவில் நுழையவே பயப்படுகின்றனர். கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட திருமணம் பற்றிய புரிதல் குறைவினால், சரியான தெளிவு இல்லை. ஆகவே திருமணத்திற்கு முந்தைய அல்லது திருமணத்திற்கு ஆயத்தமாக ஒரு ஆலோசனை இருந்தால், சரியான துணையைத் தேர்ந்தெடுக்கவும், வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் அது மிகவும் பிரயோஜனமாயிருக்கும். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.

திருமணம் என்பது என்ன?
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆணும் பெண்ணும் முறையான குடும்ப வாழ்வில் நுழைய வழிகோலும் வாசலாக திருமணம் இருக்கிறது. திருமணம் மூலமாக ஒரு ஆணும், பெண்ணும் வெளிப்படையாக, சட்டப்பூர்வமான மற்றும் நிரந்தரமான திருமண உறவில் இணைகின்றனர். இந்த திருமண உறவு அவ்விருவரையும் மரணம் மட்டும் ஒன்றாக வாழ்வதற்கு ஏதுவாக இணைக்கிறது. திருமணம் என்பது குழந்தைகளைப் பெற்று அவர்களை ஒன்றாக வளர்ப்பதன் மூலமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நிரந்தரமான அர்ப்பணிப்புடன் இணைவதே திருமணம் என ஒருவர் வரையறுக்கிறார்.

ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
ஒருவர் திருமணம் செய்வதற்கான அவசியத்தை பரிசுத்த வேதாகமத்தில் மற்றும் கிறிஸ்தவத்தின் பார்வையில் நாம் சில முக்கியமான காரியங்களைப் பார்க்கலாம்.
1. குடும்பம் வாழையடி வாழையாக வளர்ந்துப் பெருக முறையான திருமண உறவு அவசியம். பலுகிப் பெருகவேண்டும் என்பது இறைவனின் கட்டளை ஆகும் (ஆதி.1:28).
2. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது என்றும் விவாக மஞ்சம் அசுசிப் படாததாகவும் இருக்க வேண்டும் என்று கூறும் பரிசுத்த வேதம், கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும் என வேதம் தெளிவாகக் கூறுகிறது (எபிரேயர் 13:4, 1 கொரி.7:4)
3. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருடைய பரஸ்பர தேவைகளை நிறைவு செய்து நிறைவான வாழ்வு வாழ திருமணம் தேவை. திருமண உறவில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்ற துணையாக இருக்கிற படியால், இருவரும் சேர்ந்து வாழ, இணைந்து அனேக காரியங்களைச் செய்ய ஏதுவுண்டாகிறது.
4. கிறிஸ்துவானவர் தம் சபையுடன் கொண்டுள்ள உறவு திருமண உறவுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறதை நாம் வேதத்தில் காணலாம் (எபேசியர் 5: 22-33)
5. ஆண் மற்றும் பெண் இருவரும் தங்களை கர்த்தருக்குள் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ள திருமண வாழ்வு உதவுகிறது (1 கொரி.7:2)

சரியான வாழ்க்கைத் துணையை தெரிவு செய்வதற்கு முன்...
1. சரியான வாழ்க்கத் துணை வேண்டும் என்று எதிர்பார்க்கிற அல்லது ஜெபிக்கிற அனேகர் சரியான வாழ்க்கைத் துணை யாக நான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லது முயற்சி இன்றி உள்ளனர். தேவனுக்குக் கீழ்ப்படியாமலும், ஜெப வாழ்வு இன்றியும், தேவனுடனான ஆவிக்குரிய வாழ்வில் தொடர்பின்றி காணப்படுகின்றனர்.
2. அனேகர் தங்களுடைய சொந்த அளவுகோல்களின் படி, சரீர தோற்றம் மற்றும் நம்பிக்கையின் படியான ஒருவரே சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும் என்று எண்ணி   தவறான நபரை எதிர்பார்க்கின்றனர்.


சரியான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வது எப்படி?
1. தெரிந்தெடு - ஒரு கிறிஸ்தவ ஆண் அல்லது பெண் கிறிஸ்துவையும் வேதாகமத்தையும் நம்புகிற விசுவாச வாழ்வில் உள்ள ஒருவரையே திருமணம் செய்ய வேண்டும்.              அவிசுவாசியான ஒருவரை திருமணம் செய்யக் கூடாது என வேதம் தெளிவாக எச்சரிக்கிறது (2 கொரி.6: 14-15).
2. தேவனை நம்பு - தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் தர விரும்புகிறார். ஆனால் நாம் அவருக்கு உண்மையாக இருப்பதும், அவரை முழுமையாகச் சார்ந்திருப்பதும் அவசியம் ஆகும். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கிறபடியால், நமக்கு கடவுளின் உதவி தேவை. அவருடைய சித்தத்தை நாம் அறிந்து கொள்ள அவர் நம் மனதில் பேசுவதன் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் மூலமாகவும் நமக்குதவுகிறார்.
3. குணநலன் நாடு - மனத் தாழ்மை, எளிமை, கிறிஸ்துவுக்கு அர்ப்பணம், சரியான முன்னுரிமைகள் மற்றும் நம்பிக்கைகள், அன்பான நடக்கை, சுய கட்டுப்பாடு, மற்றவர்களுடன் பொறுப்பாக பழகுதல் மற்றும் கிறிஸ்தவ சபையுடனான தொடர்பு ஆகியவைகளை கவனிக்க வேண்டும்.
4. ஞானம் தேவை - கர்த்தர் அருளுகிற ஞானத்தில் நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அவசர முடிவுகள் அவசியமா என்று ஆராய்ந்து தேவ துணை நாட வேண்டும்.

அன்பான தேவனுடைய பிள்ளைகளே ஒருவர் திருமணம் செய்வதற்கு முன், சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேதாகம ஒளியில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்களை மட்டுமே இங்கு கொடுத்திருக்கிறேன். இவை சரியாகப் பின்பற்றப் பட்டால் சரியான வாழ்க்கைத் துணை கண்டடைவதில் தேவையற்ற சிக்கல்களை எளிதாக தவிர்க்கலாம்.
 - அற்புதராஜ்
 +91 9538328573
(இக்கட்டுரை என் இறையியல் கல்வியின் ஒரு பகுதியாக முதலில் தயாரிக்கப்பட்டு, பின் “அமைதி நேர நண்பன்” 2016 பிப்ரவரி மாத இதழில் வெளியானது).

No comments: