Friday, July 21, 2017

தவறவிட்ட நினைவுகள்

நாம் தவறவிட்டவை அல்லது miss பண்ணியவை என்று பார்த்தால், நாம் தொலைத்தவை மற்றும் தவறவிட்டவைகளே நாம் பெற்றுக் கொண்டவைகளை விட அல்லது பத்திரப்படுத்தியவைகளை விட அதிகம். ஒரு நாளில் நமக்குக் கிடைக்கும் வினாடிகளை வீணடிப்பதில் இருந்து, சும்மா இருந்து தவறவிட்டவை கணக்கிலடங்கா. நாம் தவற விட்டவைகளை நினைத்துப் பார்த்து அதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பது மிக முக்கியம். ஏனெனில் வரலாறு முக்கியமானது!

இன்று நான் தவற விட்டவைகளை பட்டியலிடப்போவது இல்லை. நான் தவற விட்ட இரு சம்பவங்களை அசைபோடுகிறேன்.
1. நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, நான், என் அண்ணன் மற்றும் தங்கை ஆகிய மூவரும் இராஜகோபாலபுரம் என்ற கிராமத்தில் இருந்து பாளை வந்து படித்துக் கொண்டிருந்தோம்.  தினமும் 26ம் நம்பர் பேரூந்தில் கூட்டத்தோடு கூட்டமாக பயணம் செய்ய வேண்டும். ஒரு நாளில் நல்ல கூட்டம். நாங்கள் முண்டியடித்துக் கொண்டு பேரூந்தில் ஏறினோம். அரைமணி நேரம் பயணம் செய்து, இறங்கும்போது, நானும் அண்ணனும் மட்டுமே இறங்குகிறோம். தங்கை இறங்கவில்லை. உடனே முன்னே சென்று, தங்கை பெயரைச் சொல்லி இறங்குமாறு சொல்லியும் ஒருவரும் இறங்கவில்லை. உள்ளே ஏறிப் பார்த்தால் தங்கை இல்லை. அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று, அப்படியே எங்கள் அப்பா பனை ஏறிக் கொண்டிருந்த தோட்டத்திற்கு ஒடிச் சென்று சொன்னோம். கேட்டதும், உடனே எங்கள் தகப்பனார், ஓடிச் சென்று, நாங்கள் வந்த அதே பேரூந்து திரும்பி வருகையில் ஏறி பாளை நோக்கி பதைபதைப்புடன் சென்றார்.  அங்கே நாங்கள் ஏறின இடத்தில் விசாரித்துப் பார்த்து ஒரு துப்பும் கிடைக்கவில்லை. எதற்கும் பள்ளிக்கூடம் சென்று பார்ப்போம் என்று அங்கே சென்று பார்த்தால், என் தங்கை அழுது கொண்டு இருந்திருக்கிறாள்.  அதன்பின் தான் ஒரு நிம்மதி. இப்பொழுதிருக்கும் தொடர்பு வசதி அப்பொழுது கிடையாது. நாங்கள் ஜெபத்துடனும், அழுகையுடனும் காத்துக் கொண்டிருக்கிறோம். வந்து சொன்னபின் தான் புரிந்தது. நடந்ததுஎன்னவெனில், ஏற இருந்த அவசரத்தில் எல்லோரும் ஏறினோமா என்பதைக் கவனிக்க மறந்துவிட்டோம். தங்கை ஏறுவதற்குள் பேரூந்து கிளம்பிவிட்டது. அச்சம்பவம் காரணமாக, எங்களின் படிப்புக்காக பெற்றோர் பாளைக்கு குடிமாறினர். எங்கள் படிப்பும் தடையில்லாமல் தொடர்ந்தது.

2. நான் கல்லூரி படிப்பை முடித்து, மருந்து விற்பனைப் பிரதிநிதி வேலையைத் துறந்து முழுநேர ஊழியத்தில் இருந்த ஆரம்ப நாட்களில், என் நண்பரின் தாயார் மற்றும் என் ஆவிக்குரிய வாழ்வில் உதவியாகவும் இருந்த அம்மாவை  பிஸியோதரபி சிகிச்சைக்காக பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். அந்த அம்மா உடல் மெலிவானவர்கள். போகிற வழியில் பைக்கிற்கு  பெட்ரோல் போட்டுக் கொண்டு, மருத்துவமனைக்கு விரைந்தோம். ஆங்கே வாகனத்தை நிறுத்தி, திரும்பிப் பார்த்தால், அம்மாவைக் காணவில்லை. எனக்கு “பக்” என இருந்தது.  ஐயையோ, அம்மாவை காணவில்லையே, ஆண்டவர் எடுத்துக் கொண்டாரோ, அவருடைய வருகையில் நாம் கைவிடப்பட்டுவிட்டோமா தெரியவில்லையே என பல கேள்விகள் ஒரு பக்கம். ஒருவேளை வருகிறவழியில் வாகனத்தில் இருந்து விழுந்துவிட்டார்களோ என்ற பயம் மறுபக்கம். ஜெபித்துக் கொண்டே  வாகனத்தை திருப்பி நான் வந்தவழியே திரும்பி வந்தேன். அப்படியே பெட்ரோல் போட்ட இடம் வரைக்கும் வந்துவிட்டேன். அங்கே ஒரு ஓரமாக அம்மா நின்று கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய மனப் பாரம் நீங்கியது. அப்படியே ஓடிச் சென்று, என் மனதில் நிகழ்ந்தவைகளைச் சொல்லி, என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அவர்கள் ஏறி உட்கார்வதற்கு முன்னமே நான் பைக்கை கிளப்பிவிட்டிருக்கிறேன். எப்படியோ அன்றைக்கு தப்பித்துவிட்டேன்.

இந்த இருசம்பவங்களிலும் நான் தவறவிட்டவைகள் தவறிப்போகவில்லை. இன்றைக்கும் அதன் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன.   நாம் இது போன்ற தவற விட்டவைகளை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பது ஒரு நல்ல சுயபரிசோதனைக்கு ஏற்றது. நாம் தவற விட்ட நண்பர்கள், உறவுகள் என வரிசைப்படுத்திப் பார்க்கும்போது, நம் முன்னுரிமைப் பட்டியல்களை சரியாக திட்டமிட பேருதவியாக இருக்கும். தொடர்ந்து நாம் தவறவிடுபவர்களாக அல்லாமல்,  தவறை விடுபவர்களாக இருப்போம்.