Friday, February 9, 2018

சுய பரிசோதனை – யார் அவன், விழுந்து போன ஆராதனை வீரன்???!!!



சமீபத்தில் ஒரு சபையில் பாடப்பட்ட பாடல் வரிகள் நன்றாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட பாடலை நான் திரும்ப் படித்த போது, இதைப் பாடியவர் யார் தெரியுமா? என்ற ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்தது. அதன் பின் அந்தப் பாடலை என்னால் பாட முடியவில்லை அல்லது விருப்பமில்லை. ஒரு இசைக் கலைஞராக அந்தப் பாடலின் வரிகளும், இசையும் நன்றாக இருப்பதை நான் ஒப்புக் கொண்டாலும், அதன் பின் இருக்கும் நோக்கத்தையும் ஆவியையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னை நானே ஒரு சுய பரிசோதனைக்குள்ளாக்கிக் கொண்டேன்.
எனக்கும் சம்பந்தப் பட்டவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நேரில் கூட பார்த்தது கிடையாது. நான் செய்வது தவறா அல்லது சரியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். எழுதியவர் யாராக இருந்தால் என்ன, அந்தப் பாடலைப் பாடுவதில் என்ன தவறு என்று ஒரு தற்பரிசோதனைக் கேள்வி ஒன்றை முன் வைத்து சிந்திக்க ஆரம்பித்தேன். அடுத்த சில விநாடிகளில் விடை கிடைத்தது. கர்த்தரே அதை நினைவுபடுத்தினார் என்று நம்புகிறேன்.

சாத்தான் யார், அவன் என்னவாக முன்பு இருந்தான் என்ற கேள்வியிலேயே எனக்கான பதிலும் கிடைத்தது.
இதை வாசிக்கும் சிலர், சாத்தானைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா, அவன் மிகவும் கேவலமானவன், தேவனுடைய சித்ததிற்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் எப்போதும் எதிர்த்து நிற்பவன் மாத்திரம் அல்ல இரவும் பகலும் அவர்கள் மேல் குற்றம் சாட்டுபவன் அல்லவா என்று நினைக்கக் கூடும். வேதாகமத்தில் எசேக்கியேல் 28: 12-19 ஐ வாசிக்கும்போது நாம் சாத்தான் அவன் வீழ்ச்சிக்கு முன் என்னவாக இருந்தான் என்பதை அறியலாம்.
ஏசாயா 14:12ல் “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே” எனத் துவங்கும் வேத பகுதிக்கு முன் பின்வரும் வசனத்தை வாசிக்கிறோம்.
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.

இதை எழுதுவதற்குச் சற்றுக் கடினமாக இருப்பினும், எழுத வேண்டிய தருணம் இது என்பதால் எழுதுகிறேன்.
ஆவியானவர்  சபைகளுக்குச் சொல்கிறதை காதுள்ளவன் கேட்கக் கடவன்.
(வெளி. 3:22).