இன்று என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது கஞ்சி வகைகள் மற்றும் அது தொடர்பான தானியங்கள் பற்றி பேச்சு வந்தது. அப்போது அந்தக் காலத்தில் நாங்க மழைப்பாட்டு பாடின நாட்களில் வீட்டில் கஞ்சிதான் எல்லாருக்கும் சாப்பாடுன்னு சொன்னாங்க. மழை பெய்யும்போது பாட்டுப்பாடி சூடா கஞ்சி குடிப்பாங்க போலன்னு நான் நினைச்சேன். ஆனா, அது பஞ்சகால பாட்டு என்று என் தாயார் சொன்னார். அவர்கள் சிறுமியாக இருக்கும்போது, ஊரில் உள்ள சிறு பெண்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் சோறு வாங்கி கடைசியில் அவை அனைத்தையும் ஒன்றாகப் பிணைந்து ஒரு உருண்டைச் சோறு அங்கு இருக்கிற ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படி அவர்கள் ஊரில் ஒவ்வொரு வீடாகச் செல்லும்போது பாடும் பாடல்தான் மழைப்பாட்டு என அறிந்தேன். என் அம்மா இது பற்றி சொன்னவுடன் இணையத்தில் அவர்கள் படித்த பாடலைத் தேடி கண்டிபிடித்தேன். இதில் ஒரு சில வரிகள் கொஞ்சம் மாற்றமிருப்பினும் பாடல் இதுதான்.
வானத்து ராசாவே! மழை வழங்கும் இன்னுயிரே!
கூழு குடிச்சறியோம்! கூப்பிட்டா சத்தமில்லே!
சட்டியிலே மாவரைத்துச் சந்தியெல்லாம் கோலமிட்டு
கோலம் அழியுமுன்னே ஒருகொள்ளை மழை பெய்யாதோ!
நாடு செழிக்க நல்ல மழை பெய்யாதோ!
காடு செழிக்க கனத்த மழை பெய்யாதோ!
ஏத்து மீனும் ஏறாதோ?
எங்க பஞ்சம் தீராதோ?
ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என மழை பெய்யும்வரை இந்த மழைப்பாட்டு தெருக்களில் சிறுமிகளால் பாடப்பட்டு மழைச்சோறு உருண்டை கொடுக்கப்படும். நாட்டுப்புறப்பாடல்களுக்குப் பின் இருக்கும் கதை பல நேரங்களில் கண்ணீரை வரவைக்கிறது. இந்தப் பாட்டு பற்றி சொல்லும்போது, எங்கள் ஊர் கிணற்றில் தண்ணீர் வற்றி ஒரு தம்ளர் அல்லது குவளைத் தண்ணீருக்கு அது ஊறும்வரை காத்திருந்து மக்கள் குடித்ததாக கேள்விப்பட்டேன்.
இந்த ஆண்டு 32 சதவீத மழைபற்றாக்குறை இருப்பதாக சொல்லுகிறார்கள். இதனால் முதலாவதாக கஷ்டப்படப்போவது விவசாயிகளும் ஏழை எளிய மக்களும் தான். அவர்கள் படப்போகிற வேதனையை நினைக்கும்போது ஒரு பைபிள் வசனம் நினைவுக்கு வந்தது. ஜெபித்தேன். நீங்களும் செய்யலாம்.
பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். சகரியா 10:1
- அற்புதராஜ் சாமுவேல்
18 ஜூன் 2026
