Tuesday, March 11, 2008

கர்த்தனே எம் துணையானீர் -பாடல் வரலாறு

கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் என் நிழலானீர்
கர்த்தனே என் துணையானீர்

                இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரிவுகளும் பிரிவினைகளும் ஏராளம் ஏராளம். போட்டி பொறாமைகளை பார்க்க வேண்டுமெனில் வெறெங்கும் போக வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு அவை கிறிஸ்தவ சபைகளிடையே மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். இன்னும் குறிப்பாக சொல்ல் வேன்டுமெனில், ரோமன் கத்தோலிக்க சபைக்கு பெந்தேகோஸ்தே காரர்களை பிடிக்காது. சி.எஸ்.ஐ காரர்களுக்கு பெந்தேகோஸ்தேகாரர்களையும், தங்களை இடித்துரைக்கும் பிரசங்கிமாரையும் பிடிக்காது.பெந்தே கோஸ்தே காரர்களுக்கு மேற்கண்ட இருவரையுமே பிடிக்காது. அத்துடன் மற்ற பெந்தே கோஸ்தே சபைகளுக்கு போகிறவர்களையும் பிடிக்காது. இதை தூண்டும் போதனைகளும் பிரசங்கங்களும் அதிகம். ஏனெனில் இவர்களின் சபை மட்டும் தான் பரலோகம் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கைதான். இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற கிறிஸ்தவத்துக்கு சொந்தகாரர்களிடம் மாட்டிக் கொண்டு வேதனை அனுபவித்த அனுபவித்துக் கொண்டிருக்கிற தேவ மனிதர் ஏராளம்.

                     நம் காலத்தைய தலைசிறந்த மிஷனெரிதலைவருள் ஒருவரும், சிறந்த பாடலாசிரியருமான சகோ.எமில் ஜெபசிங் அவர்களும் அதிலொருவர். என்னதான் சிறப்பாக பாடல் இயற்றினாலும் இவர் சி.எஸ்.ஐ சபையை சேர்ந்தவர் என்பதால் பரிசுத்த ஆவி பெறாதவர் என்று பெந்தேகோஸ்தேகாரர் சிலர் இவரை பகடியம் பண்ணினர். எமில் அண்ணன் என்று பாசமாய் அழைக்கப்படும் நம் சகோதரர் இவர்களின் பேச்சினால் மிகுந்த வேதனை அடைந்தார். தேவ சமூகத்தில் ஆறுதலுக்காக அமர்ந்து தன் உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி எழுதின பாடல் தான் இந்த "கர்த்தனே எம் துணையானீர்" என்ற அருமையான பாடல். தீமையையும் நன்மையாக மாற்றுகிற நம் தேவன் ஒரு அருமையான பாடலை நமக்கு தந்துள்ளார். அவருக்கே மகிமை. இப்பாடலின் வரிகளை உற்று நோக்கும் போது அவர் அடைந்த வேதனை என்ன தென்பதை நாம் அறிய முடிகிறது. நாம் இப்படிப்பட்ட கொள்கை விபரீதங்களுக்கு விலகியிருப்போமாக. ஏனெனில் நம்முடைய ஒரே எதிரி சாத்தானே! ஆகவே நாம் எல்லாரும் ஒருமனப்பட்டு, ஒற்றுமையாக ஒன்றுகூடி அவனை வீழ்த்துவதுதான் நம் இலட்சியமாக இருக்க வேண்டும். அப்படிபாட்ட நாள்தான் சீக்கிரம் வாராதோ?

கர்த்தாவே நீரே துணை

கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் என் நிழலானீர்
கர்த்தனே என் துணையானீர்

எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார்
மனு மக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்

பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
இராஜா உம் அன்பு என்னைக் கண்டது
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை

சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார்
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை

ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
இராஜனே உம்மைப் பாடக் கூடுமோ?
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை.

To hear this song: Follow the link and select the song
http://www.tamilchristian.net/netpage/emilpage/

        ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றிய புரொபசர் எமில் ஜெபசிங் தேவ ஊழியராக மாறி நண்பர் சுவிஷேச ஜெபக்குழுவின் அஸ்திபாரங்களில் ஒருவராக இருந்த முன்னோடி தலைவர் ஆவர். இவரின் ஊழியம் நம் இந்திய தேசத்திற்கே ஒரு ஆசீர்வாதம். சகோதரன் ரஷ்ய தேசத்திற்கு சென்றிருந்த போது அங்கு ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கென்றே ஒரு பிரத்யேக இசை வாசிக்கப் படுவதைக் கேட்டார். அதேபோல தமிழ் கிறிஸ்தவர்களியும் உற்சாகப்படுத்தி தேவனுகாக எழுப்பிவிட ஒரு பாடல் வேண்டும் என்று எண்ணினார். ஆகவே அந்தக் கருத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டதுதான் "உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்" பாடல் ஆகும்.