Showing posts with label இரட்சகர். Show all posts
Showing posts with label இரட்சகர். Show all posts

Thursday, November 30, 2017

இயேசு எல்லாவற்றிலும் புதுமையானவர்

மனிதனைத் தேடி மனிதனாக வந்தவர்
குருவைத் தேடும் மானிடரிடையே
சீடரைத் தேடித் தெரிந்தெடுத்து
“சீடராக்குங்கள்” என்றார்

சட்டம் பேசி, கட்டம் கட்டிய தலைவர்கள் நடுவிலும்
தேவன்பின் மகத்துவம் பகிர்ந்து
தேவைகள் சந்தித்து, தேவனுக்காக வாழ
தேன்மதுர வாழ்வியல் நெறிகள் உதிர்த்தார்.

ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தார்
எதிரிகளை மன்னித்தார்
துரோகிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தார்
துவண்டவர்களையோ தூக்கி நிறுத்தினார்

வீழ்ச்ச்சியால் விரிசலான உறவில்
தன்னைத் தாழ்த்தி, கிரயம் தந்து
“நானே வழி” என இணைத்து
மனிதனைத் தேடி வந்த இறைவன் அவர்

நாம் தேடுவதற்கு முன்னமே
நம்மை தெரிந்தெடுத்துவிட்டார்
எதையும் கொடுப்பதற்கு முன்னமே
தம்மையே தந்து, அன்பைக் காட்டியவர்
தனித்துவமான புதுமையானவர்
இயேசு 
- Arputharaj
9538328573

Friday, September 29, 2017

"இயேசுவுக்காக…" பாடல்கள் பிறந்த கதை - 2



முந்தைய பதிவில் சங்கீதம் 27 ஐ அடிப்படையாகக் கொண்ட பாடல் உருவான கதையைச் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவில்  நான் எழுதியதிலேயே எனக்கு மிக மிகப் பிடித்தப் பாடல் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போகிறேன். 

2.  இயேசு எந்தன் கன்மலை
ஒரு நாள் காலையில் நடைபயிற்சி (walking) செய்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.  அச்சமயத்தில் இசையைப் பற்றி சிந்தித்துக் கொண்டு வருகிறேன். இன்று உலகில் எத்தனையோ விதமான இசை வடிவங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து இசை வடிவங்களிலும் மிகவும் துள்ளலான இசையுடன் அதைக் கேட்பவர்கள் மகிழ்ந்து ஆடிப் பாட பாடல்கள் இருக்கின்றன. கிறிஸ்தவத்தில் நாம் ஆடிப்பாடுவது இசைக்காகவோ அல்லது இசையின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நம் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். இதை நாம் உணர்ந்து வாழ்ந்தால் நாம் இப்பூமியிலேயே சொர்க்க வாழ்க்கையை வாழ முடியும். வாழ்க்கை மிகவும் சுகமாக இருப்பதை அனுபவிக்க முடியும். இதையே விதையாகக் கொண்டு அச்சமயத்தில் என் மனதில் எழுந்த உற்சாகமான உணர்வு மற்றும் எழுச்சியில் “இயேசு என்னைக் கைவிடார்” என்ற முதல் வரியை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறேன். வீடும் வந்து விட்டது.  உடனே கிதாரை எடுத்து என் மனதில் இருந்த டியூனை என் மொபைலில் பதிவு செய்து கொண்டேன். இது நடந்தது 2016 ஆகஸ்டில். வேறு அலுவல்கள் இருந்ததால் உடனே உட்கார்ந்து எதையும் எழுத முடியவில்லை. “இயேசு என்னைக் கைவிடார்” என்பதை மட்டும் மனதும் வாயும் திரும்பத் திரும்ப பாடி உச்சரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மேல் அடுத்து என்ன வரி என்பது என்னவென்று தெரியவில்லை.

அடுத்து வந்த சில நாட்கள் அந்த டியூன் மிகவும் பிரபலமான  Swing beat ல் இருப்பதை அறிந்து கொள்ள உதவின.  அமர்ந்து எழுத அமைதியான நேரம் கிடைத்த போது, இந்த டியூனுக்கு பாடல் வரிகள் எழுதவேண்டும் என்று நினைக்கையில், இயேசு எனக்கு என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அதையே இப்பாடல் வரிகளாக எழுத வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. அந்தத் தீப்பொறிச் சிந்தனை அடுத்த அரை மணிநேரத்திற்குள்ளாக பாடல் வரிகளை எழுதி முடிக்கப் போதுமானதாக இருந்தது. எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமலும், நான் அறிந்து அனுபவித்து சுவைத்ததை வைத்து மட்டுமே எழுத வேண்டும் என்ற ஒன்றை மட்டும் நான் அளவுகோலாக வைத்துக் கொண்டேன்.  என் மனதில் இருந்த துள்ளலான இசைக்கு, அதன் படி நான் எழுதின பாடலின் வரிகள் இதோ…
1.  
                                 இயேசு எந்தன் கன்மலை
            கவலை கண்ணீர் எனக்கில்லை
   வேதனை வருத்தம் வருகையில் 
   வேந்தனை நோக்கிப் பார்க்கிறேன்
    சிலுவையில் வெற்றி சிறந்தவர்
             எனக்காக யாவையும் முடிப்பவர்
    சிந்தனை செய்து பாடுவேன்  
     வந்தனம் சொல்லி போற்றுவேன்             

2.இயேசு எந்தன் இரட்சகர்
இன்னல் நீக்கும் வைத்தியர்
தழும்புகளால் நான் சுகமானேன்
கழுவப்பட்டு மகனானேன்
பழையவை எல்லாம் ஒழிந்தன
கிருபையால் எல்லாம் புதியன
சிந்தனை செய்து பாடுவேன்
வந்தனம் சொல்லிப் போற்றுவேன்

3. இயேசு எந்தன் மேய்ப்பரே
உயிரைத் தந்து மீட்டவர்
தனிமையில் தவிக்கும் வேளையில்
கரம் பற்றி நடத்தி தேற்றுவார்
அனைத்தும் அவரால் ஆகுமே
(தோல்விகள் தோற்றுப் போகுமே)
அவரால் வாழ்க்கை சுகமே
சிந்தனை செய்து பாடுவேன்
வந்தனம் சொல்லி போற்றுவேன்

4. இயேசு எந்தன் நாயகர்
தந்தையும் தாயுமானவர்
கண்ணின் மணிபோல் காப்பவர்
காலமும் துணைநிற்பவர்
இருள் நீக்கி வெளிச்சம் தருபவர்
இனிமையே வாழ்க்கை இன்பமே
சிந்தனை செய்து பாடுவேன்
வந்தனம் சொல்லி போற்றுவேன்
By Arputharaj
+91 9538328573

Saturday, April 11, 2009

கிறிஸ்து வராதிருந்தால்..........?


கிறிஸ்து வராதிருந்தால் என்ற தலைப்பிட்ட ஒரு கிறிஸ்மஸ் கார்டை கண்ட போதகர் சிந்தனையில் மூழ்கினார். அப்படியே தூங்கியும் விட்டார் (ரொம்ப சிந்தித்தால் இது நடப்பது வாடிக்கைதானே!) அப்போது.............

ஆலயத்திற்கு செல்ல புறப்பட்டார். தெருக்களைக் கடந்து சென்றார். ஆலயத்தைக் காணமுடியவில்லை. வழி தவறிவிட்டோமோ என்று பதறிப் போய் அங்குமிங்கும் அலைந்தார். ஆலயமில்லை. ஆலயமில்லையே என்று எண்ணினார். துக்கம் தொண்டையை அடைத்தது.

வீட்டிற்கு திரும்பினார். நூலகத்திற்குள் நுழைந்தார். இரடசகராகிய இயேசுவைக் குறித்த 
புத்தகங்களைத்தேடினார். ஒரு புத்தகத்தையும் காணோம். மற்ற ஏதேதோ புத்தகங்கள் நிறைந்திருந்தது. ஏமாற்றமடைந்தார். ஒன்றுமே புரியாமல் திகைத்து நின்றார்.

வாசல்கதவு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தார். ஐயா எங்க அம்மா சாகும் தருவாயில் இருக்காங்க, சீக்கிரம் வந்து பாருங்க என்று ஒரு சிறுமி அழுதுகொண்டே சொன்னாள். துரிதமாக சிறுமியின் கையை பிடித்துக் கொண்டு அவளுடன் புறப்பட்டு சென்றார். அந்தத்தாயைப் பார்த்தார். அம்மா உங்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியை ஆண்டவர் தருவார் என்று சொல்லி வேதாகனத்தைப் புரட்டினார். மல்கியா கடைசிப் புத்தகமாயிருந்தது. அதற்குப் பின் வேதப்புத்தகத்தில் ஒன்றுமில்லை. சுவிசேஷத்தைக் காணோம். நிருபங்களைக் காணோம். ஜீவனைக் கொடுத்து இரட்சிப்பை அருளிய அவருடைய சுவிசேஷங்களைக் காணோமே! வாயில் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. பதறினார்.
மறு நாள் அந்த தாயார் மரித்துவிட்ட செய்தியறிந்து அடக்க ஆராதனை நடத்திவைக்க சென்றார். சவப்பெட்டியின் அருகில் நின்று அவர் செய்தி கொடுக்கும் வேளை வந்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கிறிஸ்து இல்லாததால் மகிமையான உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கை வரவில்லை. ஆகவே பரலோகத்தின் நித்திய வாழ்வைக் குறித்து பேச முடிய வில்லை. மண்ணுக்கு மண்ணாக ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆண்டவரே நீர் பிறக்கவில்லையோ என்று தன்னையும் அறியாமல் கதறி அழுதார். கட்டுப் படுத்த முடியாமல் கலறையில் சாய்ந்து அழுதார். திடீரென விழித்து எழுந்தார். கண்டது கனவுதான் என்று உணர்ந்தார். ஆண்டவரே நீர் வராதிருந்தால் எனக்கு இரட்சிப்பு ஏது? உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஏது? நித்தியத்தில் உம்மோடிருப்போம் என்ற நம்பிக்கை ஏது? என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். O come let us adore Him....O come let us adore Him Christ the Lord. என்ற இனிமையான பாடலின் ஒலி ஆலயத்திலிருந்து இனிமையாக ஒலிக்க ஆரம்பித்து செவிக்கின்பமாக தொனிக்க ஆரம்பித்தது.

 நன்றி: பாலைவன நீரோடைகள்

பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.