Showing posts with label உயிர்த்தெழுதல். Show all posts
Showing posts with label உயிர்த்தெழுதல். Show all posts

Wednesday, April 15, 2020

மூன்றாம் நாளில் உயிர்தெழுவார் என்று பழைய ஏற்பாட்டில் எங்குள்ளது?

கேள்வி - சகோ. ரமேஷ்: 1 கொரி15:4ல் வேதவாக்கியங்களின் படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து" என்று வாசிக்கிறோம். பழைய ஏற்பாட்டில் எங்குள்ளது மூன்றாம் நாளில் உயிர்தெழுவார் என்று?.

1. நாம் நற்செய்தி நூலில் வாசிக்கிற படி, மூன்றாவது நாளில் உயிர்த்தெழுதல் என்பது ஆண்டவர் தனது பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி சொல்லிய நேரடி தீர்க்கதரிசனம் ஆகும். அவர் சொன்ன போது சீடர்கள் அதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். அப். பவுல் கொரிந்தியருக்கு நிருபம் எழுதின காலத்தில், நற்செய்தி நூல்கள் எழுத்து வடிவத்தில் எழுதப் படாவிட்டாலும், அப்போஸ்தலர்கள் மற்றும் ஆதிச்சபை ஊழியர்கள் மூலமாக இயேசுவின் வார்த்தைகள் சொல்லப்பட்டு வந்ததற்கு அனேக ஆதாரங்கள் உண்டு. அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் அவற்றில் சிலவற்றை நாம் காண்கிறோம். ஆக, ஆதிச் சபையில் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் வேத வாக்கியங்களாக கருதப்பட்டன என்றும், அதன் படி பார்த்தால் நாம் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

2. பழைய ஏற்பாட்டின் படி என்று கேட்டிருக்கிறீர்கள். பழைய ஏற்பாட்டின்படி அல்லது நியாயப்பிரமாணத்தின்படி அவர் ”மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார்” என்று 1 கொரி.15:4 வசனத்தில் இருக்கிறதா? விதண்டாவாதத்திறாக நான் இதைச் சொல்ல வில்லை. கேள்வியைப் புரிந்து கொள்வதற்காக, ஒரு தெளிவுக்காக எழுதுகிறேன். பொதுவாக வேதவாக்கியங்களின் படி என்று வாசிக்கும்போது, நாம் பழைய ஏற்பாட்டு புத்தகங்களைக் குறிப்பதாக கருதுகிறோம். நீங்களும் அப்படியே கருதி எழுதி இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

3. பழைய ஏற்பாட்டுக்கு வருவோம். பழைய ஏற்பாட்டில் மூன்றாவது நாளில் என்பது, யோனாவின் சம்பவத்தைத் தவிர மற்றவை எதிலும் நேரடியாகச் சொல்லப்படவில்லை.
ஆனாலும் இயேசுகிறிஸ்துவின் பாடு, மரணம் பற்றி சங்கீதம் 16, ஏசாயா 53, தானியேல் 9 என பல தீர்க்கதரிசனங்கள் உண்டு. இங்கே மூன்றாம் நாள் பற்றிதான் கேள்வி என்றாலும் கூட, இயேசு கிறிஸ்துவின் பாடு, மரணம் தீர்க்கதரிசன நிறைவேறுதல் என்பதைப் புரிந்து கொள்ளும் போது, உயிர்த்தெழுதலும் கூட தீர்க்க தரிசன நிறைவேறுதல் என்பது புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

4. பழைய ஏற்ப்பாட்டின் படி, யூதர்கள் மூன்றாவது நாளில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்களினால் ”மூன்றாவது நாள்” என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அவற்றில் முதலாவது, ஆதியாகமம் 22 ல் ஆபிரகாம் ஈசாக்கை பலியிடச் சென்ற சம்பவம் ஆகும். கிறிஸ்தவர்களாகிய நாம் உயிர்த்தெழுதலுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் போல, அல்லது அதைவிட அதிகமாக யூதர்கள் ஈசாக்கை பலியிடச் சென்ற சம்பவத்தை நினைவு கூருகின்றனர். ஆங்கிலத்தில் Binding of Isaac என்றும், எபிரேய மொழியில் Aqidah என்றும் சொல்கின்றனர்.  ஆதியாகமம் 22:4 ல், ஆபிரகாம் மூன்றாம் நாளில் அந்த இடத்தைப் பார்த்ததாக வாசிக்கிறோம். அங்கு என்ன நடந்தது என்பது நாமறிந்த ஒன்றாக இருப்பதால் அதைப் பற்றி இங்கே எழுதவில்லை.

5. இதே போல,  ஆதியாகமம் 42:18, யாத்திராகமம் 19:16, யோசுவா 2:16, மற்றும் எஸ்றா 8:15 போன்ற  வேத பகுதிகள் காரணமாக மூன்றாவது நாளை முக்கியமானதாக அல்லது ஒரு அடையாளமாக யூதர்கள் கருதினர். இது போக ஓசியா 6ம் அதிகாரத்தில் உயிர்த்தெழுதலைப் பற்றிய ஒரு நம்பிக்கையைப் பற்றி 2ம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம்.

இப்படியாக பல வேத வசனங்கள் இருப்பதால், வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வதில் எந்தவிதமான முரண்பாடும், தவறும் இல்லை. வேதவாக்கியங்களின் படி இது முற்றிலும் சரியே.

மேலும், வேதவாக்கியங்களின் படி என்று ஏன் எழுத வேண்டும் என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உயிர்த்தெழுதல் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தன் முதல் நிருபத்தில் எழுதுகிறார். அவர்கள் கண்டு சாட்சி கொடுத்த உயிர்தெழுதல் என்பது கட்டுக்கதை அல்ல, மாறாக வேத வாக்கியங்களின்படியான தீர்க்க தரிசன நிறைவேறுதல் என்பதை அவர்கள் எழுதி வைத்துச் சென்றிருக்கின்றனர்

Sunday, March 10, 2019

3. லெந்து காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

லெந்து காலம் என்றால் என்ன என்றும், அது வேதாகமத்தின் அடிப்படையில் சரியா என்றும் முந்தைய இரு பதிவுகளில் பார்த்தோம். லெந்து காலத்தில் புலனடக்கம் அல்லது இச்சையடக்கம் என்பது சார்ந்து கிறிஸ்தவர்கள் பலர் சில விசயங்களை லெந்து காலத்தில் கடைபிடிக்கின்றனர். அதில் அசைவ உணவுகள், அலங்காரம் ஆகியவைகளை தவிர்த்தல் முக்கியம் என நம்புகின்றனர்.  இதினால் ஏதும் பலன் உண்டா என்றும், வேதாகமத்தின் படி இது சரியானதா என்றும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


ஆண்டவராகிய இயேசுவின் சீடர்கள் யூத வழக்கத்தின் படி கைகளைக் கழுவாமல் உணவருந்தின போது, வேதபாரகரும் பரிசேயர்களும் அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு இயேசு, “வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” என பதில் சொன்னார் (மத்தேயு 15:11). அலங்காரம் மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நல்லதுதான். ஆயினும் இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இவைகளைச் செய்வதினால் மட்டும் எவரும் தேவனை பிரியப்படுத்திவிட முடியாது. இரண்டாவதாக, சபைக்காகவும் மற்றவர்களுக்காகவும் அர்த்தமின்றி கடமைக்காக செய்யும்போது இவைகள் வெறும் சடங்காச்சாரமாகிவிடுகின்றன.


இருதயத்தில் இருந்து எழும் விருப்பத்தின் காரணமாக, ஜெபம் மற்றும் உபவாசத்திற்கு தடையாக இருக்காத படி இவைகளைத் தவிர்த்தல் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆயினும் இது வேதக் கட்டளை அல்ல.  லெந்து காலத்தை ஆசரிக்கும் ஒரு கிறிஸ்தவர், அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் அவர் செய்வது தவறு என்று எவரும் சொல்ல முடியாது. இது மற்ற விசயங்களுக்கும் இது பொருந்தும். அசைவ உணவுகளை, அலங்காரத்தை தவிர்த்தல் என புலனடக்கம் சார்ந்த விசயங்களில் அக்கறை செலுத்துபவர்கள், வழக்கமாக அவைகளுக்குச் செலுத்தும் விலையை, பணத்தை சேகரித்து ஏழைகளுக்குச் செலவிடலாம். உணவற்ற ஏழைக்கு அந்த அசைவ உணவையும், ஆடையற்ற தரித்திரருக்கு நல்ல உடையையும் வாங்கிக் கொடுத்து அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கலாம்.

 உணவுக் கட்டுப்பாடு மற்றும் மனக் கட்டுப்பாடு ஆகியவை எக்காலத்திலும் சரீரத்திற்கும், மனதிற்கும் ஆரோக்கியமானவை. இவைகளில், உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் ஒரு சீரான நல்ல முடிவைக் காண விரும்புகிறவர்கள், லெந்து காலத்தை முன்னிட்டு, கர்த்தருக்காக தியாகமாக எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற மனதோடு இவைகளை முழு விருப்பத்தோடு முயற்சித்துப் பாருங்கள். மிகுந்த பலனைக் காண்பீர்கள். ஆயினும் இது கட்டாயம் அல்ல.

ஆண்டவராகிய இயேசு சொன்னது போல, புறம்பான காரியங்களுக்கு நம் முழுக் கவனத்தையும் செலுத்திவிட்டு, இருதயத்தில் இருந்து வரும் தீய எண்ணங்களுக்கு நாம் இடங்கொடுக்கிறவர்களாக இருக்கக் கூடாது  (மத்தேயு 15:19). புறத் தூய்மையைக் காட்டிலும் அகத் தூய்மை மிக முக்கியமானதாகும். அதற்கு நாம் வேத வசனம், ஜெபம் மற்றும் தியானம் மூலமாக இயேசுவுடனான உறவில் நல்ல ஐக்கியத்தோடு இருப்பது மிகவும் அவசியம். அதுவே நம் நோக்கமாக இருக்க வேண்டும், லெந்து காலத்தில் மட்டுமல்ல, வருடத்தின் எல்லா நாட்களிலும். இவைகளில் நடைபயில விரும்புகிறவர்கள் இந்நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- தொடர்ந்து ச(சி)ந்திப்போம்
அற்புதராஜ்

Saturday, March 9, 2019

2. லெந்து காலம் வேதாகம அடிப்படையில் சரியா? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

எனது முந்தைய பதிவில்  “லெந்து காலம்” பற்றிய ஒரு சிறிய குறிப்பை உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.  பொதுவாகவே, கிறிஸ்தவ சபைகளிலும், கிறிஸ்தவர்களிடையேயும், “பரிசுத்த வேதாகமத்தில் லெந்து காலம் பற்றி இருக்கிறதா?” என்றும்,  “ஆதிக் கிறிஸ்தவ சபையில் கிறிஸ்தவர்கள் லெந்து காலம் என்ற ஒன்றை ஆசரித்தனரா?” என்றும் கேட்பதுண்டு. இது மிகவும் நல்ல கேள்வி ஆகும். எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் முறையானதாக இருக்காது. ஆகவே, இக்கட்டுரையில் லெந்து காலத்துக்கும், வேதாகமத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று ஆராய விரும்புகிறேன்.

இத்தொடரின் முதல் கட்டுரையில், லெந்து காலம் என்பது ஈஸ்டருக்கு முந்தின நாற்பது நாட்களைக் குறிக்கிறது என்றும், பரிசுத்த வேதாகமத்தில் “நாற்பது நாட்கள்” என்பது பல முக்கியமான வேதாகம நபர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்ததையும் கோடிட்டு காண்பித்திருந்தேன். ஆனாலும் அதை வைத்து லெந்து காலத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா என எனக்கு நானே நான் கேள்வி கேட்டுக் கொள்கிறேன். வேதாகமத்தில் லெந்து காலம் என்ற ஒன்றை எடுத்துக் காண்பியுங்கள் பார்க்கலாம் என்று அனேகர் சொல்லக் கேட்டிருக்கிறேன். முதலில் நாம் சில அடிப்படையான விசயங்களை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். மூல பரிசுத்த வேதாகமம் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டது. வேதத்தின் அடிப்படையில்,தேவனுடைய ஆள்தத்துவம், அன்பு மற்றும் அதன் வெளிப்பாடு ஆகியவைகளே கிறிஸ்தவ உபதேசத்தின் அஸ்திபாரம் ஆகும்.  லெந்து காலம் என்பது ஆதிச் சபையில் இருந்து, ரோமக் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டாண்டு சபைகளுக்குள் வந்த நல்ல ஒரு பாரம்பரியமாகும். ஆயினும் எதையும் பொருளுணராமல் கடமைக்குச் செய்யும்போது அதன் பொருளும் அர்த்தமற்றதாகி விடும், அது மட்டுமல்லாது அதைச் செய்பவர்களும் அப்படிப்பட்ட பாரம்பரியத்திற்கு எதிரானவர்களின் எளிய இலக்காக மாறிவிடுவார்கள். லெந்து காலத்தைப் பொறுத்த வரையிலும் அது தான் நடந்தது, நடக்கிறது. பெந்தெகோஸ்தே சபைகள் பெருகின வேளையில், ரோமக் கத்தோலிக்க சபை மற்றும் பாரம்பரிய சபைகளின் பண்டிகைகள் பெந்தெகோஸ்தே சபையினரால் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு பல கேள்விகள் முன் வைக்கப் பட்டன. அவைகளில் ஒன்றுதான் லெந்து காலம் பற்றியதும் ஆகும்.  

என்னைப் பொறுத்தவரையில், லெந்து காலம் என்ற ஒன்றை வேதாகமத்தில் இருந்து காண்பியுங்கள் என்று கேட்பதும், திரித்துவம் என்ற வார்த்தையை வேதாகமத்தில் இருந்து காண்பியுங்கள் என்பதும் ஒன்றுதான். வேதாகமத்தைப் பற்றியும், வேதாகம தேவனைப் பற்றியும் சரியான புரிதலில்லாமல் இருந்தால்தான் இப்படிப் பட்ட கேள்விகள் வரும். நான் இதைக் குறையாக சொல்ல வில்லை, ஒரு சுய பரிசோதனைக்காகவே சொல்கிறேன். லெந்து காலத்துக்கு ஆதரவாகப் பேசுகிறவர்களில் பெரும்பாலானோர், லெந்து காலம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்களாகவும், லெந்து காலம் பற்றிய கேள்விகளுக்கு முறையான பதில் சொல்லத் தயங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். அதிக பட்சமாக, ரோமர் 14:5,6 வசனங்களைக் காண்பித்து, “நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்” என்று வாதிடுகிறார்கள். லெந்து காலம் என்பது ஒரு விசேஷமான ஒன்று என்பதுடன் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். ஏன் விசேஷம், என்ன செய்ய வேண்டும் என்பதில் எல்லாம் அதிக அக்கறை கிடையாது. இப்படியாக, லெந்து காலத்தை ஏற்றுக் கொள்கிறவர்களையும், நிராகரிக்கிறவர்களையும் நான் ஒரே அளவுகோலுடன் காண முயற்சிக்கிறேன்.

 லெந்து காலம் என்பது இடையில் திணிக்கப்பட்ட ஒரு நடைமுறை அல்ல. இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் ஓய்வு நாளுக்கு (ஈஸ்டருக்கு) முந்தைய நாற்பது நாட்களை பக்தியுடன் ஆசரிப்பது என்பது ஆதிச் சபைகளில் இருந்து வந்த பழக்கம், நிசேயா கவுன்சிலில் முறைப்படுத்தப் பட்டு, பின்னர் வந்த காலங்களில் இச்சையடக்கம் சம்பந்தப் பட்டவைகளும் சேர்ந்து நாம் இன்று காண்பது போல இருக்கிறது. நாற்பது நாட்கள் மட்டும் கட்டுப்பாடாக இருந்து விட்டு மற்ற நாட்கள் எல்லாம் இஷ்டம் போல வாழ்வதைத் தான் வேதாகமம் போதிக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு முறையான பதிலை முன் வைக்க வேண்டும். அதே நேரத்தில் இப்படி கேள்வி கேட்பவர்கள் வருடத்தின் எல்லா நாட்களும் வேதாகமத்தின் படி வாழ்கிறார்களா என்றும் கேள்வி கேட்க விரும்புகிறேன். எல்லாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது என் நோக்கமன்று. மாறாக கேள்வி கேட்பவர்களும் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கேட்கிறேன்.

ஆம் உண்மைதான், வெறும் நாற்பது நாட்கள் மட்டும் கறி சாப்பிடாமல், பூ வைக்காமல், நல்ல உடை உடுத்தாமல், துக்க வீட்டில் இருப்பது போல சோகமாக இருந்துவிடுவதினால் தேவனை பிரியப்படுத்தி விட முடியும் என்றால் அதை விட முட்டாள்தனமான ஒன்று வேறேதுவும் இருக்க முடியாது. சபை ஒழுங்கில் இருப்பதற்காக லெந்து காலத்தை ஆசரிக்காமல், நமக்காக வந்து மரித்துயிர்த்த இயேசுவைப் பற்றிய சிந்தனைக்கு அதிக இடம் கொடுத்து, மனதையும் செயலையும் இயேசு காண்பித்த மாதிரிக்கு நேராக ஒருமுகப்படுத்துவது நலம். இதை வாசிக்கும் நண்பர்களே,  நம்மில் எவருமே 100 சதவீதம் பரிசுத்தவான்கள் அல்ல, அதற்காக, நாம்  பரிசுத்த அழைப்பினால் நம்மை அழைத்த பரிசுத்த தேவனை நோக்கிப் பார்ப்பதை விட்டு விடுவதில்லை. நம் பலவீனத்தின் மத்தியிலும் அவரை நோக்கிப் பார்த்து, நம்மை சுத்திகரித்துக் கொள்கிறோம். உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வின் அன்றாட அனுபவமாக இதைச் சொல்வார்கள்.
லெந்து காலத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒருவரையொருவர் கடித்து பட்சிப்பதற்குப் பதிலாக, வேதாகம அடிப்படையில், பயனுள்ள எதாவது ஒன்றைச் செய்யலாம் என்றால் பின் வரும் யோசனையை முயற்சித்துப் பாருங்கள்.
1. உங்களை அடிக்கடி சோதனைக்குட்படுத்தும் எதாவது ஒரு காரியத்தைப் பற்றி தீர்மானமாக முடிவெடுத்து, இந்த நாற்பது நாட்களில் அதை செயல்படுத்த கர்த்தருக்குள் முடிவெடுத்து செயல்படுங்கள். வருடத்தின் எல்லா நாட்களும் நாம் கர்த்தருக்குள், கர்த்தருக்கேற்றபடி வாழ்வது தான் இலக்கு. அதை ஜெபத்துடன் இந்நாட்களில் துவங்கலாம். சிறிய இலக்குகள் பெரிய சாதனைகளுக்குள் நம்மை வழிநடத்தும். நானும் இந்த வருடம் அப்படி ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன். (குறிப்பாக வாலிபப் பிள்ளைகள், உங்களை தொந்தரவு படுத்தும் பாவச் சோதனைகளுக்கு எதிராக ஒரு உறுதியான முடிவெடுங்கள்).
2. ”நானல்ல, கிறிஸ்துவே” என்பது தான் ஒவ்வொரு கிறிஸ்தவரின் இருதய விருப்பம். ஆனால் எல்லாருக்கும் நடைமுறையில் அது சாத்தியப்படுவதில்லை. ஆகவே, இயேசுவுடன் கூட இருப்பதுதான் இதற்கு உதவும். அனுதினமும் வேதம் வாசித்து, குறைந்தது ஒரு மணிநேரமாவது ஜெபத்தில் தரித்திருங்கள். ஜெபத்தில், நீங்கள் எதையாவது பேசிக்கொண்டே இருக்காமல், நீங்கள் வாசித்த வேத பகுதியில் இருந்து தேவனுடைய தன்மை மற்றும் அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை தனிமையில் தேவனுடன் கேளுங்கள். எதுவும் கடினமல்ல.
3. குறைந்தது ஒருவரிடமாவது இயேசுவைப் பற்றி பேசுங்கள். கிறிஸ்தவரல்லாதோர் என்றல்ல, உங்கள் வீட்டில் உள்ள சின்ன பிள்ளைகளிடம் கூட இதை நீங்கள் செய்யலாம் ( நாம் தான் இதில் expert ஆச்சுதே!).

மேலே நான் கூறிய மூன்று காரியங்களும் வாசிக்க, கேட்க மிக எளிதானதாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் செயல்படுத்துவது என்பது சவாலானதாகும். லெந்து காலத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் எவரையும் இந்த சவாலுக்கு அழைக்கிறேன். கர்த்தரை முன் வைத்து, அவருக்காக வாழ விரும்பும் எவருக்கும் இந்த மூன்று காரியங்களும் இடறலாக இருக்காது என்று விசுவாசிக்கிறேன். லெந்து காலத்தில், வேதாகம அடிப்படையில் வாழ்கிறேனா, வாழ முயற்சிக்கிறேனா என்று அதை ஆதரிப்பவர்களும், அப்படி வாழ முயற்சிப்பது தவறாகுமா என்று எதிர்ப்பவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

- தொடர்ந்து ச(சி)ந்திப்போம்
அற்புதராஜ்
+91 9538328573

Wednesday, March 6, 2019

1. லெந்து காலம் என்றால் என்ன? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

லெந்து காலம் என்பது கிறிஸ்தவர்களால் பாரம்பரியமாக அனுசரிக்கப்படும் ஒன்றாகும். லெந்து, Lent என்ற வார்த்தையானது கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளில் உயிர்த்தெழுதல் நாளுக்கு முந்தைய நாற்பது நாட்களைக் (Forty days before Easter) குறிக்கிற ஒன்றாக இருக்கின்றது. லெந்து காலம் என்பது சாம்பற் புதன் கிழமை அன்று துவங்கி உயிர்த்தெழுதலை நினைவுகூறும் ஈஸ்டர் பண்டிகை வரையிலான நாட்களை உள்ளடக்கியது ஆகும்.  நாற்பது நாட்கள் என்று பொதுவாக கிறிஸ்தவர்கள் கூறினாலும், உண்மையில் 46 நாட்களை உள்ளடக்கியதே லெந்து காலம் ஆகும். லெந்து காலத்தில் வரும் ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதே நாற்பது என்ற எண் பரவலாகப் பயன்படுத்தப்படுவதன் காரணம் ஆகும்.

நாற்பது என்ற எண் வேதாகமத்தில் அடிக்கடி குறிப்பிடப் பட்டிருக்கிற ஒரு எண் ஆகும். மோசே, நோவா, எலியா, யோனா மற்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவர்களின் வாழ்க்கையில் நாற்பது நாட்கள் என்பது ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது. லெந்து காலம் என்பது கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே கிறிஸ்தவ சபைகளில் இருந்து வருகிற ஒன்றாகும். லெந்து காலம் என்பது நாளடைவில் தவக் காலமாக மாறிவிட்டது. உபவாசம், மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக தற்போது ஆசரிக்கப்படுகிறது.
உயிர்த்தெழுந்த இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் அவர் பட்ட பாடுகளை நினைவுகூறுவதுடன், இயேசு வந்த நோக்கம் நம் வாழ்விலும், நம் மூலமாகவும் நிறைவேற நம்மை நாமே பரிசோதித்துக் கொள்வதற்காக இந்நாட்களை பயன்படுத்திக் கொள்வது அர்த்த முள்ளதாக இருக்கும்.

- அற்புதராஜ்
9538328573

Friday, July 2, 2010

மரணம் - சில சிந்தனைகள்

"விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்" என்று வேதம் கூறுகிறது. ஆனால் எனக்கு இந்த இரு இடங்களுக்கும் போவது சற்று அலர்ஜியான காரியமாகவே இருந்து வந்திருக்கிறது. சிறுவயது முதலே கூட்டத்தை கண்டால் விலகி இருக்கவே விரும்புவேன். அதிலும் துக்க வீட்டிற்குச் சென்றால் எல்லாரும் சோகமாகவும் கண்ணீருடனும் இருக்கும்போது என்னையுமறியாமல் அழுது விடும் காரணத்தால் அங்கே செல்வதையும் தவிர்த்து விடுவேன்.

மேலும் நம்மூர்களில் துஷ்டி வீடுகளில் துக்கம் விசாரித்தல் என்பது எல்லாரும் பின்பற்றும் ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. ஒருவர் மரித்த பின் அவர் எப்போது, எப்படி மரித்தார்? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, வாழும்போது அவர் நல்லவராகவே வாழ்ந்தார் என்ற நற்சாட்சியை கொடுத்து துக்கமாக இருப்பவர்களை தேற்றுவார்கள். அதுவுமல்லாது ஒருவர் மரித்துவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டால், அழைப்பு இல்லாமலேயே அங்கே அனைவரும் (பகை உள்ளவர்கள் கூட) செல்வர், அந்த வீட்டாரின் துக்கத்தில் பங்கு கொள்வர். ஆனால் இதிலும் எனக்கு நீண்ட காலமாக ஒரு தவறான கருத்து இருந்துவந்தது. நாம் துக்கம் விசாரிக்கும்போது அவர்களின் துக்கம் அதிகரிக்கத்தானே செய்யும் என்கிற கருத்தை உடையவனாயிருந்தேன். காரியம் அறியாத மூடனாகவே இருந்திருக்கிறேன். ஆனபடியால்தான் எனக்கு மிகவும் பிரியமான சகோ.பேதுரு அவர்களின் சகோதரன் மரித்த போது வெகுகாலம் அவர்களிடம் பேசுவதைக் கூட தவிர்த்தேன். நான் அது பற்றி விசாரித்தால் அவர்களின் துக்கம் அதிகரித்துவிடுமே என்று அஞ்சினேன் (எவ்வளவு மதியீனம் பாருங்கள். சகோதரன் என்னை மன்னிப்பாராக) இவவாறு எனது கருத்துக்களினால் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு பின்பு வருந்துவதே எனக்கு வேதனையாக இருக்கிறது.

துக்கவீடுகளில் எல்லாம் எடுத்துக்காட்டப்படும் வசனங்களில் ஒன்று, ”விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.” (பிரசங்கி 7:2). துக்க வீட்டுக்குச் செல்கிறவன் சிந்திப்பான் என்று வசனம் கூறுகிறது. நானும் இப்போது ஒரு துக்க வீட்டில் இருக்கிறேன் ஆகையால் சற்று சிந்திக்கிறேன்.

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதலாம் அற்புதம் ஒரு கல்யாண விருந்திலே ஆரம்பித்தது. ஆனால் அதற்கப்புறம் அவர் கல்யாண விருந்துக்குச் சென்றதாக வேதம் கூறவில்லை. அதேவேளையில் இயேசு சாவு நிகழ்ந்திருந்த பல வீடுகளுக்குச் சென்றதாக வேதம் நமக்கு கூறுகிறது.
 
1.மரித்துப் போன யவீருவின் மகளை இயேசு உயிரோடே எழுப்பினார். அங்கே இயேசு சொன்ன வார்த்தை “ ’தலீத்தாகூமி’சிறு பெண்ணே எழுந்திரு.”
2. விதவையின் மரித்துப் போன வாலிப மகனை பாடையைத் தொட்டு உயிரோடே எழுப்பினார்.
3. மரித்து நான்கு நாட்கள் ஆன லாசருவை கல்லறையிலிருந்து, “லாசருவே வெளியே வா” என்று கூறி அவனை உயிரோடே எழுப்பினார். (லாசருவிற்குதான் உலகத்தில் இரண்டு கல்லறைகள்)

எல்லாவற்றிற்கும் மேலாக லாசருவின் வீட்டிற்குச் செல்லும் போது இயேசு கண்ணீர் விட்டார் என்றும் வேதம் கூறுகிறது. லாசருவை உயிரோடே எழுப்புவதற்கு முன் இயேசு அவர்களின் துக்கத்திலே பங்கு கொண்டதை நாம் காண்கிறோம். “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்றுதானே வேதம் நமக்குக் கூறுகிறது (ரோமர் 12:15). நம் துக்கத்தில் இயேசுவும் கலந்து கொள்கிறார் என்பதே எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது.

ஆதியிலே ஏதேனின் மனிதன் பாவம் செய்த போது மரணமானது மனிதனுடைய வாழ்க்கையில் பிரவேசித்தது. அங்கே பாவம் செய்த போது, நடந்ததை மூன்று வகைப்படுத்தலாம்.
1. உடனடி ஆவிக்குரிய மரணம் - Immediate Spritual Death (தேவனுடம் தொடர்பு துண்டிக்கப்படுதல்)
2. படிப்படியான சரீர மரணம் - Gradual physical Death
3. நித்திய மரணம் - Ultimate Eternal Death

“பாவத்தின் சம்பளம் மரணம்” என்றாலும் கூட “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” பாவம் செய்து ஆத்துமாவிலும் சரீரத்திலும் மரித்து நித்தியத்தை இழந்த மனிதனுக்காகவே இயேசு இந்த பூமிக்கு வந்தார். தம்மையே தந்தார். நம்மையும் உயிர்ப்பித்தார். மரித்தவர்களைக் குறித்த உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும் தாம் உயிர்த்து நம்மிடம் விதைத்திருக்கிறார். ஆகவே ஒரு கிறிஸ்தவன் மரணத்தை கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.”

உயிரோடிருக்கிற நாம் நம் முடிவைக் குறித்து சிந்திக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது. சமீபத்தில் இராபர்ட் ஏனன் என்பவரைக் குறித்து வாசித்தேன். அவர் சீக்கிரம் மரித்துவிடுவார் என்பதை தேவன் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இத்தனைக்கு அவர் நல்ல திடகாத்திரமான வாலிபர். நோயாளி இல்லை. ஒரு நாள் அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது அன்று சற்று விநோதமாக ஒரு சாக்பீஸை எடுத்து தன் வீட்டு கதவில் மரணம் என்று எழுதினார். வெளியே வாசலில் “பரலோகம்” என்று எழுதிவிட்டு சென்றார். சென்ற இடத்தில் அவர் மரித்தும் போனார். பாருங்கள். நாம் மரிக்கும் போது எங்கே செல்வோம் என்கிற நிச்சயமுள்ளவர்களாக இருக்கிறோமா? ஒரு பரிசுத்தவான் தன் மரணப்படுக்கையில் இப்படியாகச் சொன்னார், “நான் இங்கே கண்களை மூடுவேன், விழிக்கும்போது பரலோகத்தில் இருப்பேன்” இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. மரணம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் உயிர்த்தெழுதலானது மறுபிறப்பின் அனுபவம் உடையவர்களுக்கு மாத்திரமே!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது” என்பதை பறை சாற்றியது. உலகப்பிரகாரமாக எவரும் சீக்கிரம் மரிக்க விரும்ப மாட்டார்கள். யாவருமே மரணத்தருவாயில் ஒரு போராட்டத்திற்கு பின்பே பெரும்பாலும் தங்கள் உலக ஓட்டத்தை முடிக்கின்றனர். ஆனால் நாம் மரணத்திற்கு பயப்படுகிறவர்களாக இருக்கக் கூடாது. தேவனுக்கே பயப்படவேண்டும். மரணத்தைப் பார்த்து, “மரணமே உன் கூர் எங்கே?” என்று சவாலிடத்தக்கவர்களாக இருக்கவேண்டும். “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” தேவனுக்கு மாத்திரம் பயப்படுகிறவர்கள் வேறு எதற்கும் அது மரணமானாலும் கூட பயப்பட மாட்டார்கள்.

தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களும் மரணத்திற்கு பயப்பட மாட்டார்கள். “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”

எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ஒருவர் மரிக்கும் தருவாயில் தனது கடைசி ஆசையாக இப்படிச் சொன்னார்: “நான் மரித்த பின்பு, எனது மரணத்திற்காக யாரும் துக்கப்பட கூடாது, மாறாக கர்த்தருக்குள் மரித்தார் என்று மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். ஊரெங்கும் இரங்கல் அஞ்சலி சுவரொட்டிகளுக்குப் பதிலாக நான் கர்த்தருக்குள் மரித்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுதான் அச்சிட வேண்டும் என்று கூறினார். அது போலவே செய்தார்கள். நமக்கு இது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா! சிலருக்கு பைத்தியக்காரத்தனமாகக் கூட தோன்றும். கிறிஸ்தவர்கள் மரிக்கும் போது அவர்களைப் பிரிபவர்களுக்கு நிச்சயம் வேதனை வருத்தம் இருக்கும். ஆனால் மரிப்பவருக்கு அதுவே பரமானந்தத்தின் நித்திய துவக்கம். இப்படிப்பட்ட நம்பிக்கை நமக்கு இருக்கிற படியால் நாம் மற்ற உலகத்தார் போல துக்க முகமாய் இருக்க வேண்டியதில்லை. இப்போது உயிரோடிருக்கிற நாமும் அவர்களுடன் ஒரு நாள் சேர்ந்து கொள்வோம். (1 தெசலோனிகேயர் 4:13-18)

பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம் என்று வேதம் 1 கொரிந்தியர் 15:26ல் கூறுகிறது. நமது இயேசு மரணத்தை ஜெயித்தார். நாமும் ஜெயிப்போம். இப்போது ஒருவேளை இழப்பினால் நாம் துவண்டு விடலாம். ஆனால் நாம் நித்தியத்தில் சேரும்போது, “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்ற நிலை உண்டாகும். அல்லேலுயா!

நான் வாழாத ஒரு வாழ்வு
நான் சாகாத ஒரு சாவு
இன்னொருவர் வாழ்வு
இன்னொருவர் சாவு
இவையன்றோ என் நித்ய வாழ்வுக்கு ஈடு


இரு முறை மரித்தால்
ஒரு மரணம்
ஒரு முறை மரித்தால்
இரு மரணம்

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.(நீதிமொழிகள் 12:28)
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.(சங்கீதம் 116:15)

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Wednesday, April 15, 2009

அவரை எங்கே தேடுகிறீர்கள்?



மனிதன் தன் வாழ்வில் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டிருக்கிறான், திருப்தியடைவதில்லை என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. ஏனெனில் ஒரு மனிதன் மரணமடையும்போதுதான் அவனுடைய தேடல் முற்றுப் பெறுகிறது என்கிற தத்துவமும் உண்டு. ஆன்மீக விசயங்களிலும் இக்கூற்று பொருந்தும். ஆன்மீக தேடல் எங்கே முற்றுப் பெறும்?





ஆன்மீக ரீதியான தேடல்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று கடவுளை மறுப்பதற்காக தேடுதல்
மற்றொன்று கடவுளை தேடுதல்
ஆக மொத்தத்தில் எல்லாரிடமும் தேடல் என்பது குடிகொண்டிருக்கிறது. ஒன்றைக் குறித்த தேடலில் நாம் திறந்த மனதுடன் இருந்தால்தான் உண்மையை கண்டுகொள்ள முடியும். முன்னமே முடிவுசெய்யப்பட்ட முடிவுகளுடன் நாம் தேடினால் உண்மை என்பது எட்டாக்கனியாகவும் கானல் நீராகவும் ஆகிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் தேடுகிற எல்லாருமே தங்களுடைய முடிவு சரி தான் என்கிற முடிவுடன் தான் தேடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே தேடலில் தாங்கள் எதிர்பார்த்த முடிவுதான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி வரவில்லையெனில் அவற்றை நிராகரித்துவிடுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து ஒரு மனிதனா அல்லது கடவுளா என்பதையும் மேற்கண்ட இருசாராரும் தேடிக்கொண்டிருக்கீறார்கள் அல்லது அப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவரல்லாத ஆன்மீகவாதிகள் அவரும் ஒரு கடவுளாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

இயேசு கடவுள் என்பதை நிரூபிக்க ஆதிகிறிஸ்தவர்கள் அவரின் உயிர்த்தெழுதலைக் குறித்தே பிரசங்கித்தனர். நீங்கள் அவரைக் கொலைசெய்தீர்கள். தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்பதே சீடர்களின் முழக்கமாக இருந்தது. இயேசுவின் உயிர்த்தெழுதல் உண்டுபண்ணின மாற்றம் அக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் விளைவிக்கும் மாற்றங்கள் மகத்தானவைகளாக இருக்கீறது.


இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அறியாத சிலர் கல்லறையில் அவரின் பிணத்தைக் காண சென்றார்கள். அங்கே அவரைக் காணாமல் திகைத்தபோது உயிர்த்தெழுதல் செய்தி கேட்டு பரவசத்துடன் திரும்பினர்.

ஒருவேளை கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால்................?

கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால்? கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். என்று பவுல் 1கொரிந்தியர்15:17ல் கூறுகிறார். ஆம் கிறிஸ்து உயிர்த்தெழாவிடில் கிறிஸ்தவ விசுவாசம் வீணானதாக இருக்கும். கிறிஸ்தவம் என்ற ஒன்றே இருந்திருக்காது. கிறிஸ்த்வர்கள் பொய்யான ஒன்றை நம்புகிறவர்களாக இருந்திருப்பார்கள்(1கொரிந்தியர்15:15). ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அக்காலத்தியவர்கள் எவரும் மறுக்கவியலவில்லை. இயேசுகிறிஸ்துவின் பாவமற்ற தன்மையையும் அவருடைய உயிர்த்தெழுதலையும் அக்காலத்திய யூதர்களால் மறுக்கமுடியவில்லை. சரி. 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒன்றை நாம் இப்போது எப்படி நம்புவது?

பழங்காலச் செய்திகளை நாம் நம்புவதற்கு நம்மிடை இருப்பது வரலாற்று ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளுமே. ஒரு பழங்கால செய்தி கட்டுக்கதையாக இல்லாதபட்சத்தில் அதற்கு சான்று பகரும் ஆவணங்கள் வரலாற்றில் நிச்சயம் இருக்கும். அவ்வாறு அவற்றிற்கு சான்று இல்லையேல் நாம் அதை நம்பத்தேவையில்லை. நம்ம நாட்டிலேதான் புராணக் கதைகளை கூட உண்மை என்று நம்புகிறவர்களாச்சுதே! ( ஓ அதனாலதான் உண்மையை நம்ப மாட்டேங்குறாங்களோ)


இயேசுகிறிஸ்துவின் கல்லறை அன்று எவ்வாறு சான்று பகர்ந்ததோ அதே போல இன்றளவும் அவரின் உயிர்த்தெழுதலை சான்று பகருகிறது. அவரின் கல்லறை கட்டுக்கதை என்று சொல்பவர்களால் கிடைக்கப்பெற்ற வரலாற்று ஆவணங்களை மறுக்கவியலாது. ஜோசிபஸ் என்ற அக்காலத்திய(கிறிஸ்தவரல்லாதவர்) வரலாற்றாசிரியரின் எழுத்துக்களும் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கின்றன. ஆதாரங்கள் தோண்டத்தோண்ட கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதை நாம் ஏன் நம்ப வேண்டியிருக்கிறது எனில் சிவப்புச் சிந்தனையுடன் வரலாற்று மண்ணை அகழ்வாராய்வு செய்தவர்கள் கிறிஸ்து மற்றும் கிறிஸ்தவத்தின் உண்மைகளைக் குறித்த கண்டுபிடிப்புகளினால் கிறிஸ்து அடியவர்களாக மாறியுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் தொல்பொருளியலின் தந்தை என்று போற்றப்படும் சர் வில்லியம் ராம்சே ஆவார். இவர் தனது ஆய்வு முடிமுடுவுகள் குறித்துக் கூறும்போது............

I began with a mind unfavorable to it...but more recently I found myself brought into contact with the Book of Acts as an authority for the topography, antiquities, and society of Asia Minor. It was gradually borne upon me that in various details the narrative showed marvelous truth. (William M. Ramsay - St. Paul the Traveler and the Roman Citizen, The Bearing of Recent Discovery on the Trustworthiness of the New Testament).



கிறிஸ்து உயிர்த்தெழாவிடில் அவரின் மரணத்தினால் பயந்து மறுபடியும் மீன்ன் பிடிக்கச் என்ற அவருடைய சீடர்கள் உலகத்தைக் கலக்குபவர்கள் என்கிற அடைமொழியை பெற்றிருக்க மாட்டார்கள். உயிர்த்தெழுதல் பொய் எனில் , அந்தப் பொய்க்காக தங்கள் உயிரையும் கொடுக்க தயங்காது பிரசங்கித்திருக்க மாட்டார்கள். . உயிர்த்தெழுதலின் செய்தியைப் பிரசங்கித்ததற்Kகக அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்க மாட்டார்கள். கிறிஸ்தவம் கிறிஸ்துவுடன் புதைந்திருக்கும்.

இன்றைய அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களைத்தான் தெரிந்து கொள்வார்கள். மற்றவர்களை கடாசிவிடுவார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

அன்றிலிருந்து இன்றளவும் வெறுமையாக காணப்படும் கல்லறை சொல்லும் செய்தியை நம்பி கிறிஸ்துவின் அடியவராகலாம். அல்லது வெறுமையுடன் திரும்பலாம். முடிவு நம் கையில்தான்.

கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் செய்தி என்ன?
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். (மத்தேயு.28:6,7)

பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.(மாற்கு16:6)

உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கல்லறையை விட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். (லூக்கா.24:5 - 9)

நாமும் நது எல்லா பயங்களும் நீங்கி, நம் தேடலில் நாம் கண்டு கொண்டதை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும். ஏனெனில் ..............

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். (கொலோசேயர்.2:14:15)

மேலும் அவர் சீக்கிரம் வரப் போகிறார்.

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார்.

ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.