லெந்து காலம் என்றால் என்ன என்றும், அது வேதாகமத்தின் அடிப்படையில் சரியா என்றும் முந்தைய இரு பதிவுகளில் பார்த்தோம். லெந்து காலத்தில் புலனடக்கம் அல்லது இச்சையடக்கம் என்பது சார்ந்து கிறிஸ்தவர்கள் பலர் சில விசயங்களை லெந்து காலத்தில் கடைபிடிக்கின்றனர். அதில் அசைவ உணவுகள், அலங்காரம் ஆகியவைகளை தவிர்த்தல் முக்கியம் என நம்புகின்றனர். இதினால் ஏதும் பலன் உண்டா என்றும், வேதாகமத்தின் படி இது சரியானதா என்றும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஆண்டவராகிய இயேசுவின் சீடர்கள் யூத வழக்கத்தின் படி கைகளைக் கழுவாமல் உணவருந்தின போது, வேதபாரகரும் பரிசேயர்களும் அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு இயேசு, “வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” என பதில் சொன்னார் (மத்தேயு 15:11). அலங்காரம் மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நல்லதுதான். ஆயினும் இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இவைகளைச் செய்வதினால் மட்டும் எவரும் தேவனை பிரியப்படுத்திவிட முடியாது. இரண்டாவதாக, சபைக்காகவும் மற்றவர்களுக்காகவும் அர்த்தமின்றி கடமைக்காக செய்யும்போது இவைகள் வெறும் சடங்காச்சாரமாகிவிடுகின்றன.
இருதயத்தில் இருந்து எழும் விருப்பத்தின் காரணமாக, ஜெபம் மற்றும் உபவாசத்திற்கு தடையாக இருக்காத படி இவைகளைத் தவிர்த்தல் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆயினும் இது வேதக் கட்டளை அல்ல. லெந்து காலத்தை ஆசரிக்கும் ஒரு கிறிஸ்தவர், அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் அவர் செய்வது தவறு என்று எவரும் சொல்ல முடியாது. இது மற்ற விசயங்களுக்கும் இது பொருந்தும். அசைவ உணவுகளை, அலங்காரத்தை தவிர்த்தல் என புலனடக்கம் சார்ந்த விசயங்களில் அக்கறை செலுத்துபவர்கள், வழக்கமாக அவைகளுக்குச் செலுத்தும் விலையை, பணத்தை சேகரித்து ஏழைகளுக்குச் செலவிடலாம். உணவற்ற ஏழைக்கு அந்த அசைவ உணவையும், ஆடையற்ற தரித்திரருக்கு நல்ல உடையையும் வாங்கிக் கொடுத்து அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கலாம்.
உணவுக் கட்டுப்பாடு மற்றும் மனக் கட்டுப்பாடு ஆகியவை எக்காலத்திலும் சரீரத்திற்கும், மனதிற்கும் ஆரோக்கியமானவை. இவைகளில், உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் ஒரு சீரான நல்ல முடிவைக் காண விரும்புகிறவர்கள், லெந்து காலத்தை முன்னிட்டு, கர்த்தருக்காக தியாகமாக எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற மனதோடு இவைகளை முழு விருப்பத்தோடு முயற்சித்துப் பாருங்கள். மிகுந்த பலனைக் காண்பீர்கள். ஆயினும் இது கட்டாயம் அல்ல.
ஆண்டவராகிய இயேசு சொன்னது போல, புறம்பான காரியங்களுக்கு நம் முழுக் கவனத்தையும் செலுத்திவிட்டு, இருதயத்தில் இருந்து வரும் தீய எண்ணங்களுக்கு நாம் இடங்கொடுக்கிறவர்களாக இருக்கக் கூடாது (மத்தேயு 15:19). புறத் தூய்மையைக் காட்டிலும் அகத் தூய்மை மிக முக்கியமானதாகும். அதற்கு நாம் வேத வசனம், ஜெபம் மற்றும் தியானம் மூலமாக இயேசுவுடனான உறவில் நல்ல ஐக்கியத்தோடு இருப்பது மிகவும் அவசியம். அதுவே நம் நோக்கமாக இருக்க வேண்டும், லெந்து காலத்தில் மட்டுமல்ல, வருடத்தின் எல்லா நாட்களிலும். இவைகளில் நடைபயில விரும்புகிறவர்கள் இந்நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment