குர்-ஆனில் மோசே (மூஸா)
முந்தைய பதிவில், முஸ்லீம்களின் தீர்க்கதரிசியான முஹம்மது பற்றி குர்-ஆனில் மிக மிக குறைவாக நான்கு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லி இருந்தேன். அப்படியானால், குர்-ஆனில் அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் யார் என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், அதற்கான பதில் - மூஸா (வேதாகமத்து மோசே). ஏறக்குறைய 136 தடவை மோசே பற்றி குர்-ஆனில் நாம் வாசிக்கலாம் என்றாலும், பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மோசேயின் கதைக்கும் குர்-ஆனின் உள்ள மோசே கதைக்கும் பல வித்தியாசங்களும், சில ஒற்றுமைகளுமே உண்டு. குர்-ஆனில் பல இடங்களில் மோசேயின் கதை வந்தாலும், முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் இஸ்ரவேலர்களுக்கு மோசே அளித்த போதனைகள் பற்றிய குறிப்புகள் குர்-ஆனில் கிடையாது. இறைவன் மோசேக்குக் கொடுத்த இரண்டு கற்பலகைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த கற்பலகைகளில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. மோசே மூலமாக இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் வேதத்தை இறக்கினான் என்று சொன்னாலும், அவ்வேதம் பற்றிய விவரங்கள் குர்-ஆனில் இல்லை. மாறாக, மோசே பற்றி குர்-ஆனில் வாசிக்கும்போது வெவ்வேறு வேதாகமக் சம்பவங்களைக் கலந்து குழப்பி எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரணமாக, பார்வோன் தன் ஆலோசனைக்காரர்களில் ஒருவனாகிய ஆமானிடம், நெருப்பில் சுட்ட செங்கற்களினால் விண்ணை முட்டும் ஒரு கோபுரம் கட்டச் சொன்னதாகவும், பார்வோன் அந்த கோபுரத்தில் ஏறிச் சென்று மோசே சொல்கிற தேவன் இல்லை என்று சொல்லி மோசேயை ஒரு பொய்யன் என்று சொல்வதாக குர்-ஆன் கூறுகிறது(கு.28:38). வேதாகமத்து மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியாக வேண்டும் என்று முஸ்லீம்களின் தீர்க்கதரிசி முஹம்மது முயன்றதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். மோசே மூலமாக இஸ்ரவேலர்களுக்கு சட்டம் (நியாயப்பிரமாணம்) கொடுக்கப்பட்டது போல, முஹம்மது மூலமாக குர்-ஆன் தங்களுக்குக் கொடுக்கப்பட்டது என முஸ்லீம்கள் நம்புகிறார்கள். ஆயினும் வேதாகமத்து மோசேயின் சம்பவத்தில் மிக முக்கியமான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, இரட்சிப்பு, இறைவன் இஸ்ரவேலர்கள் கூட இருந்து வழிநடத்தியது என பல முக்கியமான காரியங்கள் குர்-ஆன் கூறும் மோசேயின் கதையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” என்று வேதாகமத்து மோசே சொல்லியிருக்கிறார் (உபாகமம் 18:15). முஹம்மதுதான் அந்த தீர்க்கதரிசி என்று முஸ்லீம்கள் வாதாடினாலும், உபாகமம் 18ம் அதிகாரத்தை தொடர்ந்து வாசிக்கையில் அது உண்மை அல்ல என்பதைக் கண்டு கொள்ள முடியும். பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கையில் இயேசு கிறிஸ்து பற்றியே மோசே சொல்லி இருப்பதை அறியலாம். அது மட்டுமல்ல, “அன்பு கூறுதல்” என்ற ஒரே வார்த்தையில் நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புதுப் பிரமாணத்தை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார் (மத்தேயு 22:37-40; மாற்கு 12:29-31). “இவருக்கு (இயேசுவுக்கு) செவிகொடுங்கள்” என்று தேவன் சொன்னதாக வேதம் சொல்கிறது (மத்தேயு 17:5; மாற்கு 9:7; லூக்கா 9:35). நாம் செவிகொடுக்கிறோமா? செவிகொடுத்தல் என்பது, கேட்டு அதன் படி செய்வது ஆகும்.
வேதாகமம் கூறும் இயேசுவை இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்துகொள்ளவும், இறை அன்பை ருசிக்கவும் ஜெபிப்போம்.
No comments:
Post a Comment