இன்று ஆவிக்குரிய சபைகள் செல்வோருக்கு விசுவாசப் பிரமாணங்கள் எந்தளவுக்கு பரிச்சயம் என்பது ? தான். பாரம்பரிய சபைகளில் கூட விசுவாசப் பிரமாணங்கள் பெரும்பாலோனாரால் விசுவாசிக்கப்படுகிறதும் இல்லை, பிரமாணங்களாகவும் இல்லை. வெறுமனே உச்சரிக்கப்படவே செய்கிறது. எத்தனை விசுவாசப் பிரமாணங்கள் என்பது கூட அனேகருக்கு தெரியாது. இக்காலத்தில் விசுவாசப்பிரமாணங்கள் குறித்த அவசியம் என்ன என்ற ? இதை வாசிப்பவருக்கு எழலாம். இக்கால் சபைகளில் வாசிக்கப்படவேண்டும் என்பதற்கால அல்லாது சபையின் அடிப்படை விசுவாசம் என்ன என்பதை சுருக்கமாக அறிந்து கொள்ளவாவது நாம் அவற்றை குறைந்த பட்சம் தெரிந்து கொள்வது நல்லது.
விசுவாசப் பிரமாணங்கள் எத்தனை?
3
அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்
நிசேயா விசுவாசப் பிரமாணம்
அதனாசியஸ் விசுவாசப் பிரமாணம்
அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்:
அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்; பாவ மன்னிப்பும்; சரீரம் உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.
(அப்போஸ்தல விசுவாசப் பிரமாணமானது அப்போஸ்தலர்களின் விசுவாசத்தினடிப்ப்டையிலமைந்தது ஆகும். மூல மொழியில் 12 வரிகளில் உள்ளது. ஒவ்வொரு அப்போஸ்தலரும் தம் தம் பங்காக ஒரு வரி எழுதியதாக சொல்லப்படுகிறது)
நிசேயா விசுவாசப் பிரமாணம்
வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.
கர்த்தருமாய் ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும்கூட தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.
(நிசேயா விசுவாசப் பிரமாணம் நிசேயா என்ற இடத்தில் கூடின கிறிஸ்தவ தலைவர்கள் கவுன்சிலில் இயற்றப்பட்டது ஆகும். அக்காலத்தில் சபையில் நிலவி வந்த குழப்ப உபதேசங்களைக் களையும் பொருட்டு நிசேயா கவுன்சில் கூடி ஆராய்ந்து பல முடிவுகளை எடுத்து முடிவில் வெளியிட்ட பிரமாணம் தான் நிசேயா விசுவாசப் பிரமாணம்.)
அதனாசியஸ் விசுவாசப் பிரமாணம்
இரட்சிப்படைய விரும்புகிறவன் எவனோ: அவன் திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசத்தை எல்லாவற்றிலும் முதன்மையாய் பற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த விசுவாசத்தைப் பழுதின்றி முழுமையும் அனுசரியாதவன்: என்றைக்கும் கெட்டுப் போவான் என்பதில் சந்தேகமில்லை.
திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசமாவது: தேவத்துவமுள்ளவர்களை கலவாமலும், தேவத்துவத்தைப் பிரியாமலும்,
ஏகதேவனை திரித்துவமாகவும்: திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்கவேண்டுமென்பதே.
பிதாவானவர் ஒருவர், குமாரனானவர் ஒருவர், பரிசுத்த ஆவியானவர் ஒருவர்.
ஆனாலும் பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்: ஒரே தேவத்தன்மையும் சம மகிமையும் சம நித்திய மகத்துவமும் உண்டு.
பிதா எப்படிப்பட்டவரோ, குமாரனும் அப்படிப்பட்டவர்: பரிசுத்த ஆவியும் அப்படிப்பட்டவர்.
பிதா சிருஷ்டிக்கப்படாதவர், குமாரனும் சிருஷ்டிக்கப்படாதவர்: பரிசுத்த ஆவியும் சிருஷ்டிக்கப்படாதவர்.
பிதா அளவிடப்படாதவர், குமாரனும் அளவிடப்படாதவர்: பரிசுத்த ஆவியும் அளவிடப்படாதவர்.
பிதா நித்தியர் நித்தியர், குமாரனும் நித்தியர்: பரிசுத்த ஆவியும் நித்தியர்.
ஆகிலும் மூன்றி நித்திய வஸ்துக்களில்லை. நித்திய வஸ்து ஒன்றே.
அப்படியே மூன்று அளவிடப்படாத வஸ்துக்களில்லை, மூன்று சிருஷ்டிக்கப்படாத வஸ்துக்களில்லை: சிருஸ்டிக்கப்படாத வஸ்து ஒன்றே, அளவிடப்படாத வஸ்து ஒன்றே.
அப்படியே பிதா சர்வ வல்லவர், குமாரனும் சர்வ வல்லவர்: பரிசுத்த ஆவியும் சர்வ வல்லவர்.
ஆகிலும் மூன்றி சர்வ வல்ல வஸ்துக்களில்லை. சர்வ வல்ல வஸ்து ஒன்றே.
அப்படியே பிதா தேவன், குமாரனும் தேவன்: பரிசுத்த ஆவியும் தேவன்.
ஆகிலும் மூன்று தேவர்களில்லை: தேவன் ஒருவரே.
அப்படியே பிதா கர்த்தர், குமாரனும் கர்த்தர்: பரிசுத்த ஆவியும் கர்த்தர்.
ஆகிலும் மூன்று கர்த்தர்களில்லை: கர்த்தர் ஒருவரே.
அம்மூவரில் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேவனென்றும் கர்த்தரென்றும் அறிக்கையிடவேண்டுமென்று: கிறிஸ்துமார்க்க சத்தியம் கட்டளையிட்டிருக்கிறது போல;மூன்று தேவர்கள் உண்டென்றும், மூன்று கர்த்தர்கள் உண்டென்றும் சொல்லக் கூடாதென்று: திருச்சபைக்குரிய பொதுவான சித்தாந்தம் கட்டளையிட்டிருக்கிறது.
பிதா ஒருவராலும் உண்டாக்கப்பட்டவருமல்ல: சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவருமல்ல.
குமாரன் பிதாவினாலேயே இருக்கிறவர்: உண்டாக்கப்பட்டவருமல்ல, சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவரே.
பரிசுத்த ஆவி பிதாவினாலும் குமாரனாலும் இருக்கிறவர்: உண்டாக்கப்பட்டவருமல்ல, சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவருமல்ல; புறப்படுகிறவரே.
ஆகையால் மூன்று பிதாக்களில்லை, ஒரே பிதாவும்; மூன்று குமாரரில்லை, ஒரே குமாரனும்; மூன்று பரிசுத்த ஆவிகளில்லை, ஒரே பரிசுத்தஆவியும் உண்டு.
அன்றியும் இந்த திரித்துவத்தில் ஒருவரும் முந்தினவருமல்ல, பிந்தினவருமல்ல: ஒருவரில் ஒருவர் பெரியவருமல்ல, சிறியவருமல்ல.
மூவரும் சம நித்தியரும்: சரிசமானருமாம்.
ஆதலால் மேற்சொல்லியபடி, எல்லாவற்றிலும்: ஏகத்துவத்தை திரித்துவமாகவும், திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்க வேண்டும்.
ஆனபடியால், இரட்சிப்படைய விரும்புகிறவன்: திரித்துவத்தைக் குறித்து இப்படி நினைக்க வேண்டும்.
மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மனுஷாவதாரத்தைக் குறித்து சரியானபடி விசுவாசிப்பதும்: நித்திய இரட்சிப்படைவதற்கு அவசியமாயிருக்கிறது.
நாம் விசுவாசித்து அறிக்கையிடுகிற சரியான விசுவாசமாவது, தேவ குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்து: தேவனும் மனுஷனுமாய் இருக்கிறார்.
உலகங்கள் உண்டாவதற்கு முன்னே அவர் ஜெனிப்பிக்கப்பட்டு, பிதாவின் தன்மையுடைய தேவனாகவும்: உலகத்தில் பிறந்த தம்முடைய தாயின் தன்மையுடைய மனுஷனாகவும் இருக்கிறார்.
குறைவற்ற தேவனாயும்: பகுத்தறிவுடைய ஆத்துமாவும் நரதேகமும் பொருந்திய குறைவற்ற மனுஷனாயும் இருக்கிறார்.
தேவத்தன்மையின் படி பிதாவுக்கு சரியானவர்: மனுஷ்த்தன்மையின் படி பிதாவுக்குத் தாழ்ந்தவர்.
அவர் தேவனும் மனுஷனுமாயிருந்து: இருவராயிராமல், கிறிஸ்து என்னும் ஒருவராகவே இருக்கிறார்.
தேவத்தன்மை மனுஷத்தன்மையாய் மாறினதினாலேயல்ல: தெய்வத்தில் மனுஷத்தன்மையை சேர்த்துக் கொண்டதினாலேயே ,ஒருவராயிருக்கிறார்.
இரண்டு தன்மையும் கலந்ததினாலேயல்ல: ஒருவராகப் பொருந்தினதினாலே, முற்றூம் ஒருவராயிருக்கிறார்.
பகுத்தறிவுடைய ஆத்துமாவும் சரீரமும் பொருந்தி, ஒரே மனுஷனாயிருப்பது போல: தேவனும் மனுஷனும் பொருந்தி ஒரே கிறிஸ்துவாயிருக்கிறார்.
அவர் நமக்கு இரட்சிப்புண்டாக பாடுபட்டு: பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்.
அவர் பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க திரும்ப வருவார்.
அவர் வரும்பொழுது, சகல மனுஷரும் தங்கள் சரீரங்களோடு எழுந்து: தங்கள் கிரியைகளைக் குறித்து க்ணக்கு ஒப்புவிப்பார்கள்.
நன்மை செய்தவர்கள் நித்திய ஜீவனையும்: தீமை செய்தவர்கள் நித்திய அக்கினியையும் அடைவார்கள்.
திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசம் இதுவே. இதை ஒருவன் உண்மையாக விசுவாசியாவிட்டால் இரட்சிப்படையான்.
பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்: மகிமையுண்டாவதாக.
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
(அதநாசியஸ் விசுவாசப் பிரமாணம் அதநாசியஸ் என்பவரால் எழுதப்ப்ட்டது என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வேத பண்டிதர்கள் இதை எழுதியது அதநாசியஸ் என்று கூறுவதில்லை. எனினும் இப்பிரமாணம் விஸ்தீரணமாக இருப்பது இதன் சிறப்பு. இதனாலேதானோ என்னவோ அனேகர் இதை அறிந்திருப்பதுமில்லை, பாரம்பரிய சபைகளில் பயன்படுத்துவதுமில்லை.)
கடைசியாக விசுவாசப்பிரமாணங்களை விசுவாசம் இல்லாமல் சொல்லி என்ன பிரயோஜனம், கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை எதற்கு. பேச்சில் அல்ல செயலில் காட்டப்படும் விசுவாசமும் கிறிஸ்தவமுமே இன்றைய தேவை.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573