Sunday, June 4, 2017

"3 Chords" திரு. சாமுவேல் அபிசேகரா அவர்களுடன் ஒரு நாள்...


திரு. சாமுவேல் அபிசேகரா அவர்களை உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் 3 Chords என்ற பெயரில் ஒரு இசைக்குழு நடத்தி, மங்கா புகழுடைய அனேக பாடல்களை இயற்றியவர் இவர் என்றால் ஓரளவுக்கு சிலர் நினைவுகூரக் கூடும்.   “பாலன் பிறந்தார் பாடுவோம்”, “பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க” உயிர்தெழுந்த நல் தேவனின் தூய ஆலயம் இதுவே” போன்ற பல பாடல்களை எழுதி இசைத்தவர் இவர். சமீபத்தில் இவர் சென்னையில் வசிக்குமிடம் அறிந்து, விசாரித்து, தொலைபேசி வழியாக அறிமுகமும் ஆகி, மே மாத இறுதியில் சென்னை சென்றிருந்த போது அன்னாருடைய வீட்டிற்குச் சென்று சந்திக்க தேவன் கிருபை செய்தார். அதிலிருந்து சில துளிகளை உஙளுடை பகிர்வதில் பேரானந்தமே!

திரு. சாமுவேல் அபிசேகரா அவர்களின் இருப்பிடம் அறிய பலரையும் தொடர்பு கொண்ட போது, சிஎஸ்ஐ தூய யாக்கோபு ஆலயத்தின் தற்போதைய பாடகர் குழு தலைவரான திரு பாலசிங் அவர்கள் ஐயா அவர்களைப் பற்றிச் சொல்லும்போது “78 வயதானாலும் இன்னமும் அவர்கள் வாசிக்கும் முறையில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை” என்பதாகும். நான் அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வில்லை. திரு. சாமுவேல் அபிசேகரா அவர்களை ஒருவழியாகக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டபோது, என்னுள் நான் பாடகர் குழுவில் இருக்கும்போது படித்த அவருடைய பாடல்கள் அனைத்தும் அப்படியே பொங்கி எழும்பியதை என்னால் உணர முடிந்தது. அவருடன் பேசுகையில் ஒரு சில பாடல்களைப் பற்றி மட்டும் பேசி, நேரடியாக ஒரு முறை கர்த்தருக்குச் சித்தமானால் பார்க்கலாம் என்றேன். சரி என்றார்.

சென்னை சென்றபோது சமயம் வாய்த்தது. ஒரு சிறிய அறிமுகத்துடன் அவரைப் பற்றி, அவரது இசையைப் பற்றி ஒரு சில கேள்விகள் கேட்டேன். திரு. சாமுவேல் அபிசேகரா அவர்கள் அவருடைய தகப்பனாரிடம் இருந்தே இசையைக் கற்றிருக்கிறார். இவரது தகப்பனார் ஒரு சபை குருவாக இருந்தவர், தன் மகன் சாமுவேல் போல பெரிய ஊழியக்காரனாக வரவேண்டும் என சாமுவேல் அபிசேகரா என பெயரிட்டிருக்கிறார். 1969ல் முதன் முதலாக ஒரு இசைக்குழு ஆரம்பித்து, பின்பு 70 மற்றும் 80 களில் மிகச் சிறந்த பாடல்களை இசைத்துப் பாடி இருக்கின்றனர்.

நானும் ஒரு இசைத் தொகுப்பு ஒன்றை வெளியிட முய்ற்சிப்பதையும், எனக்கு மேற்கத்திய இசை தெரியாது, ஆனால் பழைய பாரம்பரிய கீர்த்தனைகளின் வழியில் கர்நாடக இசை சார்ந்தே நான் அதிகம் பாடல்கள் எழுதுகிறேன் எனச் சொன்னபோது, அதை ஏற்றுக் கொண்டு அதுவும் தேவைதான் என்று சொன்னபோது மிகவும் ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் பொதுவாக இசை உலகில் ஒரு தரப்பினர் ஒன்றைச் சார்ந்து இருந்தால், அதைத் தவிர மற்றவைகளை சீக்கிரத்தில்  ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, வரவேற்பறையில் இருந்த பியானோ பற்றி எங்கள் பேச்சு சென்றது. 1970களில் 4000 ரூபாய்க்கு (அந்நாட்களில் அது பெரும்பணம்) அந்த பியானோவை இன்னொருவரிடம் இருந்து  வாங்கி இருக்கிறார். அந்த ஜெர்மன் பியானோ வாங்கும்போதே பழையது தான் என்றாலும் இன்னமும் பொலிவுடன் இருந்தது. இன்றைய விலையில் சில பல இலட்சங்கள் கொடுத்தாலும் அது போன்ற ஒன்றை வாங்குவது கடினம். இதுவும் அவரே சொன்னதுதான்.

ஒரு பாடல் வாசித்துக் காண்பிக்க முடியுமா  என்று தயக்கத்துடன் கேட்ட போது, தயங்காது உடனே வாசிக்க ஆரம்பித்தார். நான் மறுபடியும் அவரிடம், இவ்வரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்ற எண்ணத்துடன், வீடியோ எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டு மீண்டும் முதலில் இருந்து வாசிக்கக் கேட்டேன். கனிவுடன் சம்மதித்து, வாசித்தார். மொபைலில் நான் வீடியோ எடுத்ததால் ஒலிப்பதிவு சற்று இரைச்சலுடன் இருந்தாலும், அவர் பியானோவில் வாசித்துக் கொண்டே பாடுவதை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டவில்லை. நீங்களும் அதைக் கேட்க அதன் இணைப்பை இக்கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.

இவர் இயற்றிய பாடல்களில் சிலவற்றிற்கு மட்டும் இசைக் குறிப்புகள் எழுதி ஒரு புத்தகமாக அச்சடித்து வைத்திருக்கிறார். அதை மகிழ்வுடன் வாங்கினேன், அதன் லாபம் அப்படியே ஒரு மிஷனுக்குச் செல்கிறது என்று அறிந்து மகிழ்ந்தேன். இவருடைய பாடல்கள் முன்பு ஒலி நாடா வடிவில் இருந்தன. இப்போது ஒலித் தகடுகளில் எங்கும் கிடைப்பதில்லை. பார்க்கலாம். கர்த்தருக்குச் சித்தமானால்...

திரு சாமுவேல் அபிசேகரா அவர்கள் மிகவும் எளிமையான மனிதர். நவீன உலகின் அறிமுகம் அவ்வளவாக இல்லை எனினும், தன்னால் இயன்றதை இன்னமும் 78 வயதான பின்னரும் தொடர்ந்து செய்து வருகிறார். விடைபெறுமுன் ஜெபிக்கச் சொல்லி கேட்டேன். அவரோ தன் மனைவி அவர்களை அழைத்து ஜெபிக்கச் சொன்னார். அம்மா அவர்கள் மிகவும் உருக்கமாக அன்புடன் ஜெபித்தது சிஎஸ்ஐ தாய்மார்களின் அனேக ஜெபத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

இவர் மிகப்பெரிய இசை ஜாம்பவான் என்றாலும் அதற்கான எந்த அறிகுறியையும் இவர் நடை உடை பாவனையில் காண முடியாது. என் நண்பர் ஒருவரின் தாத்தா அவர்கள் சொல்லும்போது, ஹேண்டல் மானுவேல் என்பவரைக் காட்டிலும் இவரின் இசை வாசிப்பு மிகவும் தனித்துவமானது என்று சொல்லி இருக்கிறார். நம் தமிழ் கிறிஸ்தவ சபைக்கு இப்படிப்பட்ட நல்ல இசைக் கலைஞர்களைத் தந்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.


https://www.youtube.com/watch?v=cRuk2a5mDg0