ஆண்டவராகிய இயேசு சொன்ன உவமைகள் அனைத்தையும் கவிதை நடையில் எழுத வேண்டும் என்ற ஆசை உந்தித் தள்ள, அதன் முதல் முயற்சியாக நல்ல சமாரியன் கதையை கவிதையாக படைத்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
நல்ல மேய்ப்பன் சொன்ன நல்ல சமாரியன் கதை
திருடர்கள் குறித்த பயம் இன்றி
பயணம் செய்தவன் ஒருவன்
குற்றுயிரும் குலையுயிருமாக
மரத்திலிருந்து விழுந்த இலையைப் போல்
அடிபட்டு, அனைத்தையும் இழந்து
அலங்கோலமாய் வழியருகே வீழ்ந்த
உதவி செய்வார் யாரென ஏங்கி
வழிமேல் விழிவைத்தான்
அவசரமாய் ஒரு மனிதன்
அருகில் வந்து பார்த்தான்
ஐயோ பூசைக்கு நேரமாகிவிட்டதேயென
ஓசையின்றி அவ்விடமிட்டகன்றான்
ஆசாரியன் எனும் பூசாரி அவனை தடுத்தது
ஆசாரமோ - யாருக்குத் தெரியும்!
அடுத்து வந்தவன் அங்கி தரித்தவன்
அருகில் கூட வராமல் கொஞ்சமும் இரக்கமின்றி
அப்படியே வழியை விட்டு விலகிப் போனான்
முன்னவர்க்கு இல்லாத அக்கறை எனக்கெதுக்கு என
முன்பை விட வேகமாய் நடந்து, முந்த முயன்றான்
பண்பிலான் அன்பிலான் என்ற லேவியன்
ஒதுக்கப்பட்டவன் ஒருவன் வழியில்
ஓரமாய் விழுந்து கிடந்தவனைப் பார்த்ததும்
இறங்கி அவன் அருகே சென்று பதைபதைத்து
ஐயோ என்றிரங்கி காயம் கட்டி மருந்து வைத்து
நொடியும் தாமதியாமல் வாகனத்திலேற்றி
பத்திரமாய் பார்த்துக்கொள்ளவே
சத்திரம் சென்று சேர்த்தான் சீக்கிரமாய்
பையில் இருப்பதை எல்லாம் எடுத்து
கையில் கொடுத்து, இது போதாதெனில் – அடுத்து
வருகையில் இன்னமும் தரத் தயார்
இவனை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்வாயாயென
அடிபட்டவனை சத்திரத் தலைவனிடம் விட்டுச் சென்றவன்
தன்னலமற்ற அன்புடன் மாபெரும் சேவை செய்தவன்
சமாரியன் – அவனுக்குத் தெரிந்தது வலி மாற்றும் வழி
நித்திய வாழ்க்கைக்கு வழி கேட்ட
நியாய சாஸ்திரிக்கு வழிகாட்ட
இயேசு சொன்ன கதையிதின் செய்தி
இறைவனை நேசிப்பது என்பது கோவிலில் மட்டுமல்ல
மற்ற(எ)வரையும் உன்னை நேசிப்பது போல நேசி
இதுவே இறைவன் காட்டிய வழி
இதுவே இறைவனைக் காட்டும் வழி
இதுவே திருமறையின் திவ்யவாசகம்
- Arputharaj
9538318573