நாம் வாழ்கிற காலத்தில் வாழ்ந்த தேவ மனிதர்களில் மறைந்த சகோ. சாம் ஜெபத்துரை அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தில் இருந்து பல நல்ல பிரசங்கிகள் எழும்பியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவராலும் கர்த்தருக்காக எழுதுவதில் பிரகாசிக்க முடியவில்லை.
கர்த்தரின் எழுத்தாணி என அவரைப் பற்றி சொல்வது மிகைப்படுத்தப்பட்ட ஒரு வாசகம் என்றாலும், கர்த்தருக்காக எழுதுவதில் ஒய்வறியாதவர். உருப்படியாக, பக்திவிருத்திக்கேதுவாக தொடர்ந்து எழுதுவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல என்பது உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ந்தேர்ச்சியான உழைப்பும் வாசிப்பும் இல்லையேல் தொடர்ந்து எழுதுவது மிகவும் சிரமம். சகோ. சாம் ஜெபத்துரை அவர்கள் அனேக நற்காரியங்களை எழுதியும், மொழிபெயர்த்தும் தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு ஒரு அரும்பெரும் பங்காற்றியிருக்கிறார் என்பது கொஞ்சமும் மிகைப்படுத்தல் இல்லாத உண்மை.
ஒரு நற்செய்தியாளராக தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து அனேக வாலிபர்களை கிறிஸ்துவுக்காக எழுப்பி இருக்கிறார். சுவிசேஷகர்களாக கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்பும் எவரும், இவரின் ஜெபம் மற்றும் வைராக்கியம் ஆகியவற்றை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். சென்னைக்கு அருகில் உள்ள ஒரு மலையில் தினந்தோறும் சென்று இராமுழுதும் ஜெபிக்கிற வழக்கத்தை அவர் கொண்டிருந்தார். நண்பர்களே! ஜெபிக்கிறவர்கள் என்றைக்குமே தேவனால் பயன்படுத்தப்படாமல் போவதில்லை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.
இவர் தன்னை ஒரு எழுத்தாளராகவோ, நற்செய்தியாளராகவோ சுருக்கிக் கொள்ளாமல், எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை தயங்காது செய்தார். ஒரு காலத்தில் இவரின் பாடல் கேசட்டுகள் மிகவும் பிரபலமாக இருந்தன. நல்ல மலையாளப் பாடல்களை தமிழுக்கு அறிமுகம் செய்ததுடன், இவரே நல்ல பாடல்களை எழுதவும் செய்தார். வேளை வந்த போது, தன் பயணங்களைக் குறைத்துக் கொண்டு சபை ஊழியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
பொதுவாக ஒருவரின் மறைவின் போது, அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையே சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். என்னளவில் சில் விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமலிருந்தது உண்மைதான். மணிபர்சில் அபிசேகம் போன்ற சில காரியங்களைச் சொல்வதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. இவர் தவறே செய்யாதவர் என்றும் நான் சொல்ல வில்லை. ஆனால் தவறே செய்யாதவர் எவர்தான் உண்டு. அவைகளின் மத்தியிலும் இவர் மீண்டும் எழுந்து தேவனுக்காக இறுதி வரை ஓடியமைக்காக தேவனை துதிக்கிறேன். இவர் உண்டாக்கிய நல்ல விளைவுகள் மற்றும் எண்ண மாற்றங்களுக்காக தேவனை நன்றியோடு நினைக்கிறேன். கடைசியாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஞாயிறு அன்று ஆராதனை துவங்குவதற்கு சற்று முன்பு இவருடைய மனைவி மரித்து விட்டார்கள். அன்று ஞாயிறு ஆராதனைக்கு எந்த பங்கமும் வரக் கூடாதென, அவர் ஆராதனைக்கு முன்னரோ அல்லது ஆராதனை வேளையிலோ சொல்லாமல், அன்றும் வழக்கம் போல கர்த்தருடைய செய்தியை வைராக்கியமாக பிரசங்கித்து ஆராதனை முடிந்த பின் அனைவரையும் அமரச் செய்து, கண்ணீருடன் தன் மனைவியின் மறைவைச் சொல்லி இருக்கிறார். இது அவருடைய சபையில் ஊழியம் செய்கிற என் உறவினர் ஒருவர் சொன்ன செய்தி. அவர் மறைந்தாலும், அவர் ஆரம்பித்த ஊழியங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை மற்றும் ஜெபமாக இருக்கும். அதுதான் நமது விருப்பமும் கூட!
தேவனுடைய சமூக இளைப்பாறுதலில் பிரவேசித்திருக்கும் அருமை சகோதரன் சாம் ஜெபத்துரை அவர்களுக்காக தேவனை துதிக்கிறேன்!
Arputharaj
Bangalore
+91 9538328573