சமீபத்தில் ஒரு வயதான தம்பதியர் பேசக் கேட்டேன். முதலில் அந்த பெரியவர் முன்வந்து, தனது எளிமையான ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்து பேசத்துவங்கினார். அவர் 13 வயதாயிருக்கும்போது தனது பிசினஸை ஆரம்பித்திருக்கிறார். முதலாவது அவர் செய்த தொழில் - கார் கழுவுதல். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் நேர்மையாக இருந்து, படிப் படியாக மிகவும் நல்ல ஒரு நிலைமைக்கு தேவன் அவரை உயர்த்தி இருக்கிறார். இதை அவர் சொல்கையில், இன்று என்னிடம் இருக்கும் பணத்தை வைக்க இடமில்லை என்று சொல்லுமளவுக்கு உள்ளதாகச் சொன்னார். அதன் பின் அவர் சொன்னதுதான் ஹைலைட்!
என்னிடம் உள்ள செல்வம் எதையும் நான் என் பிள்ளை(களு)க்கு விட்டுச் செல்லப் போவதில்லை என்றார். சற்று அதிர்ச்சியாகவும், அதெப்படி என்று கேள்வியாகவும் இருந்தது. அவர் தொடர்ந்து சொல்லுகையில், நான் என் பிள்ளைகளுக்கு என் செல்வத்தை அல்ல, என்னுடைய நல்ல நடத்தை அல்லது குணாதிசயத்தையே விட்டுச் செல்ல விரும்புகிறேன். மற்றபடி, செல்வம் அனைத்தையும் வாழும்போதே நற்காரியங்களுக்காக செலவிட்டுக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து அதைச் செய்து முடிப்பேன் என்றும் நிதானமாக சொல்லி முடித்தார். அந்த பெரியவர் பேச ஆரம்பித்த சற்று நேரத்தில், அவர்கள் மனைவியும் மேடை ஏறி, இருவரும் மாறி மாறி பேசினார்கள், தொடர்ச்சித் தன்மையில் எந்த தொய்வும் இல்லை. அவர் பேசியதும், அவர்கள் இருவரும் நடந்து கொண்ட பண்பும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது.
ஒன்றை சொல்ல மறந்து விட்டேன். தன் பிள்ளைகளுக்கு செல்வத்தையல்ல, குணத்தையே விட்டுச் செல்ல விரும்புகிறேன் என்று அவர் சொன்ன போது, அவர்களின் மகளும் மருமகனும் அதே இடத்தில் தான் இருந்தனர் என்பது சிறப்பு.
இந்த பதிவின் தலைப்புதான் என் மனதில் இருக்கும் தற்பரிசோதனைக் கேள்வி - உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் விட்டுச் செல்ல விரும்பும் சொத்து?