இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்? - எந்தன்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்?
சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா -நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்றி வா
ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
.
பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மை பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இரங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன்
தம்பி அண்ணா அழைக்கிறேன் வா, உடன்பிறப்பே ஓடி வா, இரத்தத்தின் இரத்தமே இறங்கி வா என்று அழைக்கும் குரல்களுக்கும், தலைவர்களுக்கும் உலகில் பஞ்சமில்லை. பின்பற்றி எதிர்பார்த்து ஏமாந்து ஒன்றும் மிஞ்சாமல் நொந்து மனம் வெதும்பும் மனிதர்களே உலகில் ஏராளம். ஏமாற்றும் தலைவர்களும் மாற்றம் தராத கொள்கைகளும் உண்டு. எல்லாரும் கொள்கைகளைக் காட்டி, இலட்சியங்களை முன்னிறுத்தி பெரும் மனக்கோட்டை எழுப்பி, எப்படியாவது அடைந்திடலாம் வா என்றழைக்கின்றனர்.
இயேசுவோ ”என்னைப் பின்பற்றி வா” என்றழைக்கிறார். அவர் அழைப்பதிலும் கூட வித்தியாசமானவர். நீங்கள் “பின்பற்றும் படி” நான் மாதிரியை வைத்துப் போகிறேன் என்றார். என்னைப் பின்பற்ற தன்னை(சுயத்தை) வெறுக்க வேண்டும் என்றார். இயேசுவைப் பின்பற்றுவதற்கும் சுயத்தை வெறூப்பதற்கும் என்ன சம்பந்தம்? பின்பற்றுவதற்கு நிபந்தனைகளா? இல்லை. இல்லை. இயேசுவைப் பின் பற்றுதல் என்பதே அவரின் அடிச் சுவடுகளில் நடப்பதுதானே. “உமது சித்தத்தின் படி ஆகக்கடவது” என்று பிதாவின் கரத்தில் தனது சுயத்தை கொடுத்து ஜெயத்தை எடுத்தவரன்றோ நம் இயேசு பெருமான். அதையே நாமும் செய்யவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.
” கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் ஆசைகளையும் அதன் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்”
(இன்னமும் பின்தொடர்ந்து வரும்)
Sunday, June 27, 2010
Friday, June 18, 2010
தமிழின் முதல் உரைநடைத்தமிழ் நூல் - கிறிஸ்தவ நூலும் கூட
நாம் பள்ளிக்கல்வி பயிலும் போது தமிழின் முதல் உரைநடைத்தமிழ், முதல் நாவல் (புதினம்) பிரதாப முதலியார் சரித்திரம் என்று படித்திருப்போம். அதற்கு மேல் அதைக் குறித்து பெரும்பாலும் பெரும்பாலானோர்க்கு (எனக்கும்தான்) எதுவும் தெரியாது. அதை எழுதின மாயூரம் வேதநாயகம் குறித்தாவது எதாவது தெரிந்திருக்குமா என்றால் அதுவும் எங்கேயோ கேட்ட குரல்தான்.
தமிழ் செம்மொழி அந்தஸ்தை இந்தியாவில் பெற்று சில வருடங்களே ஆகினும் உலக மொழிகளில் தொன்மையான நூல்களை கொண்ட ஆறே ஆறு நூல்களில் தமிழும் ஒன்று என்பது எவ்வளவு பெருமைக்குரியது. இந்தியாவில் தமிழும் சமஸ்கிருதமும் தொன்மையானவை. ஆனால் சமஸ்கிருதம் பேச்சுமொழி அல்ல. அந்து மந்திரம் ஓதுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுத்துமொழியாகவும் பேச்சுமொழியாகவும் இருந்து சாதனை புரிந்து வருகிறது. அதுவே சிலருக்கு வேதனையாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. தொல்தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று வகைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. உலகில் வேறெந்த மொழிகளிலும் இம்மாதிரியான பகுப்புகள் கிடையாது என மொழியியலார் கூறுகின்றனர். இவ்வகையான சிறப்புகள் தமிழுக்கு இருந்தாலும் பாமரனுக்கும் படிக்காதோருக்கும் புரியும் வண்ணம் தமிழ் நூல்கள் இருக்கவில்லை. இதற்கு காரணம் பேச்சுத்தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் காணப்பட்ட இடைவெளிதான். ஏன் நீங்களே ஏதாகிலும் பழைய செய்யுளை எடுத்து படித்தால் தலையும் புரியாமல் காலும் புரியாமல் திருதிருவென நாம் முழிப்பதே இதற்கு சாட்சி. சாம்பிளுக்கு ஒன்றை தருகிறேன்.
காக்கக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
நோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்குக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா. பாடியவர் - காளமேகப் புலவர்)
என்ன வாசித்துப் பார்த்தீர்களா? நாக்கு சுளுக்கிவிட்டதா? நாம் பள்ளிக்கூடத்தில் படித்த இந்த பாடலின் பொருள் எளிமையானதுதான் (தெரிந்தால் அட இவ்வளவுதானா? இதற்கா இந்த பில்டப்பு என்று சொல்லிவிடுவீர்கள்). ஆனால் எல்லாருக்கும் பொருள் புரியாது கற்றறிந்தவர்களே தமிழை ரசிக்க ருசிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. எதுவரைக்கும்? உரைநடைத்தமிழ் என்ற ஒன்று வரும் வரைக்கும். உரைநடைத்தமிழுக்கான தேவை உணரப்பட்டு வந்தாலும் அதைச் செய்ய எவரும் முன்வருகிலர். ஏனெனில் முன்னைய பாரம்பரியங்களிலிருந்து விடுபட்டு புதிய பாதை போட எவருக்கும் துணிவு இல்லை.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பார் அத்தகைய துணிவு பெற்று தமிழின் முதல் உரைநடை நூல், முதல் புதினம் ஆகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். இந்நூல் பிரதாப முதலியார் என்பவர் தனது சுய சரிதையை சொல்லும் பாங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலைக்குறித்து சொல்லுவதற்கு முன்பு நூலாசிரியர் வேதநாயக்ம் குறித்து கொஞ்சமாவது சொல்ல வில்லை எனில் நான் பெரும் பாவியாவேன். ஏனெனில் தமிழ்கூறும் நல்லுலகில் இவர் குறித்த தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதே! இவர் கிறிஸ்தவர் என்பதினாலோ என்னவோ!
மாயூரத்தில் நீதியரசராக பணியாற்றிய வேதநாயகம் திருச்சி குளத்தூரில் பிறந்தவர். இவரே இந்தியாவின் முதல் இந்திய மற்றும் தமிழ் நீதிபதி ஆவார் என்பது ஒரு ஆச்சரியமான செய்திதான். தமிழுக்காக தமிழ் கிறிஸ்தவர்களும் அயல்தேச மிசனெரி ஊழியர்களும் ஆற்றிய திருத்தொண்டை எவ்வளவுதான் மறைக்க பலர் முயன்றாலும் ஆயிரம் கைகளை வைத்தாலும் ஆதவனை மறைக்க முடியுமோ? என்பதுபோல நம்மவர்களின் படைப்புக்கள் அவர்களின் நல் முயற்சிகளுக்கு சான்றாக உள்ளன.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூல் கதைநாயகன் தனது சுய சரிதையை கூறுமாறு தன்னிலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் இவ்வகைப் படைப்புகள் இன்றளவும் மிகவும் குறைவே. ஆங்கிலமொழியில் தன்னிலை தன்மையிலான படைப்புகள் ஏராளம் உண்டு. தமிழில் மிகவும் குறைவாக இவ்வகையில் படைப்புகள் இருப்பதற்கு முழு நூலையும் தன்னிலையில் எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதன்று.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தலைப்பு நமக்கு வாசிக்கும் விருப்பத்தை அவ்வளவாக தூண்டாவிடினும் நூலின் உள்ளடக்கம் மிகவும் சுவையாகவும் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதாகவும் உள்ளது. இந்த நூலை ஆசிரியர் எழுதக் காரணம் முதல் நாவலை எழுதி புகழ் பெற வேண்டும் என்பதல்ல... ஏனெனில் அவர் ஏற்கனவே மிகவும் புகழ்பெற்றவர், முதல் இந்திய நீதிபதி. தாம் ஏன் எழுதினோம் என்பதைப் பாடலாகவே எழுதி வைத்திருக்கிறார்.
"வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது
செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா!
நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல்
இருக்கிற வரையில் இந்த தேசம் சரியான சீர்திருத்தம் அடையாது
என்பது நிச்சயம்'
செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா!
நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல்
இருக்கிற வரையில் இந்த தேசம் சரியான சீர்திருத்தம் அடையாது
என்பது நிச்சயம்'
பிரதாப முதலியார் சரித்திரம் நூல் வெறும் நாவல் மட்டுமல்ல, பல உலகச் சம்பவங்களையும், தத்துவங்களையும் அதைவிட முக்கியமாம சிறந்த நகைச்சுவைகளையும் உடையதாக உள்ளது. நகைச்சுவை என்பது இன்னாட்களில் திரைப்படங்களில் வருவது போல தனி டிராக்கில் செல்லாமல் கதியினூடேயே பின்னிப்பிணைந்து வருகிறது. உதாரணமாக ..,
“நாங்கள் வந்தபோது எங்கள் வீட்டிற்கு வீட்டிற்கு எதிரேயிருக்கிற மைதானத்தில் கூத்தாடிகள் வேஷம் போட்டுக்கொண்டு, இராம நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்த போது இராமரும், ல்ஷ்மணனும் நகரத்தை விட்டு புறப்பட்டு காட்டுக்குப் போகிற சமயமாயிருந்தது; அப்பொழுது தசரதல் கௌசல்யை முதலான சகல ஜனங்களும் அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். அதை கண்டவுடனே நான் கனகசபையைப் பார்த்து, “ அந்தப் பொல்லாத கைகேசியினாலே இராமர் பட்டத்தை இழந்து மனமுருகி வாழவும் சம்பவித்திருக்கிறதே! இந்த அநியாயத்தை பார்த்துக் கொண்டு நான் சும்மா இருப்பது தர்மமா?” என்று கேட்க அவன் “இந்த அக்கிரமத்தை தடுக்க முயற்சிக்காமல் நாம் சும்மா இருப்பது அழகல்ல” என்றான். நானும் அவனும் மற்றப்பிள்ளைகளும் எங்கள் கைகளில் இருந்த சிலம்பக் கம்முகளுடன் சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஜனங்களின் தலைமேல் ஏறிமிதித்துக் கொண்டு, நாடகசாலைக்குள்ளே பிரவேசித்துவிட்டோம். அங்கே தன் பிள்ளைக்கு பட்டாபிசேகம் ஆகுமென்கிற அகக்களிப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்த கைகேயியை வளைத்துக் கொண்டு எங்கள் கை சலிக்கிற வரையில் அடித்தோம். அவள் “ பரதனுக்கு பட்டம் வேண்டாம், வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள். அப்பொழுது கூனி அகப்பட்டிருந்தால் அவளை எமலோகத்துக்கு அனுப்பியிருப்போம். அவளுடைய அதிர்ஷ்ட வசத்தால் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாள்: காட்டுக்குப் போகிற இராமரிடம் நகரத்துக்கு திரும்பும்படிச் சொன்னோம். அவர் “பிதுர் வாக்கிய பரிபாலனம் (தந்தையின் வாக்கை நிறைவேற்ற) செய்வதற்காக நான் காட்டுக்கு போவது அகத்தியம்” என்றார். நீர் போனால் காலை ஒடித்துவிடுவோம் என்று வழிமறித்துக் கொண்டு அவருக்கு நியாயத்தை எடுத்துக் காட்டி மெய்ப்பித்தோம். எப்படி என்றால் “ சும்மா இருந்த உம்மை உம்முடைய தகப்பனார் அழைத்து உம்மைப் பட்டங்கொள்ளும்படி சொல்லி, நீரும் அதற்கு சம்மதித்து ஊருக்கு முரசறைவித்த பின், உமக்குக் கொடுத்த இராச்சியத்தை பரதனுக்கு கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டா? அப்படி அவர் கொடுத்தால் அது அசத்தியமல்லவா? உமக்கு பட்டாபிஷேகம் ஆனால்தான் உம் தந்தையாருடைய சத்தியம் நிலைக்கும்.
“என்னே அரசர் இயற்கை யிருந்தவா
தன்னே ரிலாத தலைமகற்கு தாரணியை
முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தாற் பிழையாதோ மெய்யென்பார்”
என்று கம்பரும் சொல்லியிருக்கிற படியால், ஊருக்குத் திரும்பும் என்றேன். இராமர் நான் சொன்ன வாய் நியாயத்தைப் பார்க்கிலும், தடியடி நியாயத்துக்கும் பயந்து உடனே நகரத்துக்கு திரும்பினார். நான் வசிட்டர் முதலானவர்களை அழைத்து இராமருக்கு மகுடாபிஷேகம் செய்வித்தேன். இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும் அவருடைய தம்பியும் சீதையும் வனத்துக்குப் போகாமலும், தசரதர் இறவாமலும், இராவணன் சீதையை எடுத்தானென்ற அ அபவாதம் இல்லாமலும் இராவணாதிகளை ராமர் கொலை செய்தாரென்கிற பழிச்சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் ராஜ்ஜியபாராம் தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் பேரை நிலை நிறுத்தினேன்.”
ஒரு நாள் எங்கள் குடும்ப வைத்தியர் வீதியில் வருகிறதைக் கண்டு அவர் கண்ணில் படாமல் நான் ஓடி ஒளிந்து கொண்டேன். கனகசபை “ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டான். “நமக்கு சில நாளாய் வியாதி வரவில்லையே! வைத்தியருக்கு கோபமாயிருக்குமென்றூ பயந்து ஒளிந்து கொண்டேன் ” என்றேன். மறுபடி ஒரு நாள் அந்த வைத்தியர் என்னைக் கண்டு, “ பூர்வீக மனுஷர்கள் எல்லாரும் தீர்க்காயுசாயிருந்தார்கள்; இந்தக் காலத்து மனுஷர்களுக்கு ஆயுசு குறைந்துபோனதற்கு காரணமென்ன?” என்றூ கேட்டார். நான் அவ் அரைப் பார்த்து “ பூர்வீகத்தில் வைத்தியர்கள் இல்லாதபடியால் அவர்கள் நீடிய ஆயுசு உள்ளவர்களாயிருந்தார்கள்; இந்தக் காலத்தில் வைத்தியர்கள் அதிகமாயிருப்பதால் ஆயுசு குறைந்து விட்டது” என்றேன்.
மேலே சொன்னவை பிரதாப முதலியார் சரித்திரம் நூலில் உள்ள கடலளவு நகைச்சுவையில் ஒரு துளியே. மேலும் மூட நம்பிக்கைகளுக்கெதிராகவும் பல சிந்திக்கக் கூடிய கருத்துக்களையும் இந்நூலில் நாம் அடிக்கடி காணலாம்.
பிரதாப முதலியார் சரித்திரம் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதை நீங்கள் வாசித்தால்தான் முழுமையான சுவையை நீங்கள் பெற முடியும். வாசிக்க ஆரம்பித்தால், முடிப்பது கடினம். இந்நூலின் மின் பதிப்புக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். வாசித்து மகிழுங்கள்.
Download Link:
http://uploading.com/files/1b3489dd/pirathabamuthailyar.PDF/
இன்னுமதிக தகவல்களுக்கு:
2. ஆண்களுக்குத் தலை பத்தா? வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-1
3.மாயூரம் வேதநாயகர் நாவல் மட்டுமா எழுதினார்?
4.மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள் - வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-3
5. மாமிசம் உண்ணும் பிராமணர்கள்
6. மாயூரம் வேதநாயகரின் சமுதாயப்பணி
7. சாதனையாளர் மாயூரம் வேதநாயகர்
8. மறக்கப்பட்டாரா மாயூரம் வேதநாயகம் பிள்ளை?
Subscribe to:
Posts (Atom)