மேலும் நம்மூர்களில் துஷ்டி வீடுகளில் துக்கம் விசாரித்தல் என்பது எல்லாரும் பின்பற்றும் ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. ஒருவர் மரித்த பின் அவர் எப்போது, எப்படி மரித்தார்? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, வாழும்போது அவர் நல்லவராகவே வாழ்ந்தார் என்ற நற்சாட்சியை கொடுத்து துக்கமாக இருப்பவர்களை தேற்றுவார்கள். அதுவுமல்லாது ஒருவர் மரித்துவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டால், அழைப்பு இல்லாமலேயே அங்கே அனைவரும் (பகை உள்ளவர்கள் கூட) செல்வர், அந்த வீட்டாரின் துக்கத்தில் பங்கு கொள்வர். ஆனால் இதிலும் எனக்கு நீண்ட காலமாக ஒரு தவறான கருத்து இருந்துவந்தது. நாம் துக்கம் விசாரிக்கும்போது அவர்களின் துக்கம் அதிகரிக்கத்தானே செய்யும் என்கிற கருத்தை உடையவனாயிருந்தேன். காரியம் அறியாத மூடனாகவே இருந்திருக்கிறேன். ஆனபடியால்தான் எனக்கு மிகவும் பிரியமான சகோ.பேதுரு அவர்களின் சகோதரன் மரித்த போது வெகுகாலம் அவர்களிடம் பேசுவதைக் கூட தவிர்த்தேன். நான் அது பற்றி விசாரித்தால் அவர்களின் துக்கம் அதிகரித்துவிடுமே என்று அஞ்சினேன் (எவ்வளவு மதியீனம் பாருங்கள். சகோதரன் என்னை மன்னிப்பாராக) இவவாறு எனது கருத்துக்களினால் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு பின்பு வருந்துவதே எனக்கு வேதனையாக இருக்கிறது.
துக்கவீடுகளில் எல்லாம் எடுத்துக்காட்டப்படும் வசனங்களில் ஒன்று, ”விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.” (பிரசங்கி 7:2). துக்க வீட்டுக்குச் செல்கிறவன் சிந்திப்பான் என்று வசனம் கூறுகிறது. நானும் இப்போது ஒரு துக்க வீட்டில் இருக்கிறேன் ஆகையால் சற்று சிந்திக்கிறேன்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதலாம் அற்புதம் ஒரு கல்யாண விருந்திலே ஆரம்பித்தது. ஆனால் அதற்கப்புறம் அவர் கல்யாண விருந்துக்குச் சென்றதாக வேதம் கூறவில்லை. அதேவேளையில் இயேசு சாவு நிகழ்ந்திருந்த பல வீடுகளுக்குச் சென்றதாக வேதம் நமக்கு கூறுகிறது.
1.மரித்துப் போன யவீருவின் மகளை இயேசு உயிரோடே எழுப்பினார். அங்கே இயேசு சொன்ன வார்த்தை “ ’தலீத்தாகூமி’சிறு பெண்ணே எழுந்திரு.”
2. விதவையின் மரித்துப் போன வாலிப மகனை பாடையைத் தொட்டு உயிரோடே எழுப்பினார்.
3. மரித்து நான்கு நாட்கள் ஆன லாசருவை கல்லறையிலிருந்து, “லாசருவே வெளியே வா” என்று கூறி அவனை உயிரோடே எழுப்பினார். (லாசருவிற்குதான் உலகத்தில் இரண்டு கல்லறைகள்)
எல்லாவற்றிற்கும் மேலாக லாசருவின் வீட்டிற்குச் செல்லும் போது இயேசு கண்ணீர் விட்டார் என்றும் வேதம் கூறுகிறது. லாசருவை உயிரோடே எழுப்புவதற்கு முன் இயேசு அவர்களின் துக்கத்திலே பங்கு கொண்டதை நாம் காண்கிறோம். “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்றுதானே வேதம் நமக்குக் கூறுகிறது (ரோமர் 12:15). நம் துக்கத்தில் இயேசுவும் கலந்து கொள்கிறார் என்பதே எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது.
ஆதியிலே ஏதேனின் மனிதன் பாவம் செய்த போது மரணமானது மனிதனுடைய வாழ்க்கையில் பிரவேசித்தது. அங்கே பாவம் செய்த போது, நடந்ததை மூன்று வகைப்படுத்தலாம்.
1. உடனடி ஆவிக்குரிய மரணம் - Immediate Spritual Death (தேவனுடம் தொடர்பு துண்டிக்கப்படுதல்)
2. படிப்படியான சரீர மரணம் - Gradual physical Death
3. நித்திய மரணம் - Ultimate Eternal Death
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்றாலும் கூட “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” பாவம் செய்து ஆத்துமாவிலும் சரீரத்திலும் மரித்து நித்தியத்தை இழந்த மனிதனுக்காகவே இயேசு இந்த பூமிக்கு வந்தார். தம்மையே தந்தார். நம்மையும் உயிர்ப்பித்தார். மரித்தவர்களைக் குறித்த உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும் தாம் உயிர்த்து நம்மிடம் விதைத்திருக்கிறார். ஆகவே ஒரு கிறிஸ்தவன் மரணத்தை கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.”
உயிரோடிருக்கிற நாம் நம் முடிவைக் குறித்து சிந்திக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது. சமீபத்தில் இராபர்ட் ஏனன் என்பவரைக் குறித்து வாசித்தேன். அவர் சீக்கிரம் மரித்துவிடுவார் என்பதை தேவன் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இத்தனைக்கு அவர் நல்ல திடகாத்திரமான வாலிபர். நோயாளி இல்லை. ஒரு நாள் அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது அன்று சற்று விநோதமாக ஒரு சாக்பீஸை எடுத்து தன் வீட்டு கதவில் மரணம் என்று எழுதினார். வெளியே வாசலில் “பரலோகம்” என்று எழுதிவிட்டு சென்றார். சென்ற இடத்தில் அவர் மரித்தும் போனார். பாருங்கள். நாம் மரிக்கும் போது எங்கே செல்வோம் என்கிற நிச்சயமுள்ளவர்களாக இருக்கிறோமா? ஒரு பரிசுத்தவான் தன் மரணப்படுக்கையில் இப்படியாகச் சொன்னார், “நான் இங்கே கண்களை மூடுவேன், விழிக்கும்போது பரலோகத்தில் இருப்பேன்” இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. மரணம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் உயிர்த்தெழுதலானது மறுபிறப்பின் அனுபவம் உடையவர்களுக்கு மாத்திரமே!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது” என்பதை பறை சாற்றியது. உலகப்பிரகாரமாக எவரும் சீக்கிரம் மரிக்க விரும்ப மாட்டார்கள். யாவருமே மரணத்தருவாயில் ஒரு போராட்டத்திற்கு பின்பே பெரும்பாலும் தங்கள் உலக ஓட்டத்தை முடிக்கின்றனர். ஆனால் நாம் மரணத்திற்கு பயப்படுகிறவர்களாக இருக்கக் கூடாது. தேவனுக்கே பயப்படவேண்டும். மரணத்தைப் பார்த்து, “மரணமே உன் கூர் எங்கே?” என்று சவாலிடத்தக்கவர்களாக இருக்கவேண்டும். “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” தேவனுக்கு மாத்திரம் பயப்படுகிறவர்கள் வேறு எதற்கும் அது மரணமானாலும் கூட பயப்பட மாட்டார்கள்.
தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களும் மரணத்திற்கு பயப்பட மாட்டார்கள். “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”
எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ஒருவர் மரிக்கும் தருவாயில் தனது கடைசி ஆசையாக இப்படிச் சொன்னார்: “நான் மரித்த பின்பு, எனது மரணத்திற்காக யாரும் துக்கப்பட கூடாது, மாறாக கர்த்தருக்குள் மரித்தார் என்று மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். ஊரெங்கும் இரங்கல் அஞ்சலி சுவரொட்டிகளுக்குப் பதிலாக நான் கர்த்தருக்குள் மரித்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுதான் அச்சிட வேண்டும் என்று கூறினார். அது போலவே செய்தார்கள். நமக்கு இது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா! சிலருக்கு பைத்தியக்காரத்தனமாகக் கூட தோன்றும். கிறிஸ்தவர்கள் மரிக்கும் போது அவர்களைப் பிரிபவர்களுக்கு நிச்சயம் வேதனை வருத்தம் இருக்கும். ஆனால் மரிப்பவருக்கு அதுவே பரமானந்தத்தின் நித்திய துவக்கம். இப்படிப்பட்ட நம்பிக்கை நமக்கு இருக்கிற படியால் நாம் மற்ற உலகத்தார் போல துக்க முகமாய் இருக்க வேண்டியதில்லை. இப்போது உயிரோடிருக்கிற நாமும் அவர்களுடன் ஒரு நாள் சேர்ந்து கொள்வோம். (1 தெசலோனிகேயர் 4:13-18)
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம் என்று வேதம் 1 கொரிந்தியர் 15:26ல் கூறுகிறது. நமது இயேசு மரணத்தை ஜெயித்தார். நாமும் ஜெயிப்போம். இப்போது ஒருவேளை இழப்பினால் நாம் துவண்டு விடலாம். ஆனால் நாம் நித்தியத்தில் சேரும்போது, “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்ற நிலை உண்டாகும். அல்லேலுயா!
நான் வாழாத ஒரு வாழ்வு
நான் சாகாத ஒரு சாவு
இன்னொருவர் வாழ்வு
இன்னொருவர் சாவு
இவையன்றோ என் நித்ய வாழ்வுக்கு ஈடு
இரு முறை மரித்தால்
ஒரு மரணம்
ஒரு முறை மரித்தால்
இரு மரணம்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.(நீதிமொழிகள் 12:28)
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.(சங்கீதம் 116:15)
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573