மன்னிப்பது தெய்வீகம் என்கிற மூதுரை நம்மிடை இருப்பினும்
மன்னிப்பது என்பது மிகவும் கடினமானதாகவே நமக்கு இருக்கிறது. மன்னிப்பேன்
ஆனால் அதை மறக்கமாட்டேன் என்பர் சிலர். இதுவும் ஒருவிதத்தில் மன்னியாமையே.
இன்றைய அவசர உலகில் பல வியாதிகளுக்கு காரணமாக மன்னிக்கமுடியாத தன்மை
இருக்கிறது என்பதை அறிந்த போது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும்
இருந்தது.
நாம் ஆண்டவரிடம் எத்தனைமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறோம் என்பதை
கணக்கிட்டால்........... அது முடியுமா என்பது சந்தேகம்தான். ஆண்டவரிடம்
மன்னிப்பு கேட்கதயங்காத நாம் நம் சக மனிதர்களிடம் நாம் செய்த தவறுகளுக்காக
மன்னிப்பு கேட்க மிகவும் தயங்குகிறோம். நம் சுயமரியாதையும் ஈகோவும் நம்மை
பின்னுக்கு இழுக்கிறது. ஆண்டவரே அவரிடம் என்னால்
மன்னிப்பு
கேட்கமுடியவில்லை
ஆகவே
அதற்கும் சேர்த்து உம்மிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நாம்
ஜெபிக்கிறோம். நாம் யாராயிருந்தாலும் எவரிடமும் மன்னிப்பு கேட்க தயங்கக்
கூடாது.
எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் உண்டு. அவரின் சகோதரி மகன்
மிகவும் கறுப்பாக இருப்பான். சிறு குழந்தைதான். ஆனால் எனக்கென்னவோ அந்த
குழந்தையை பார்க்கும்போதெல்லாம் கோபமும் வெறுப்பும் வந்தது. பொதுவாக நான்
அவ்வாறு இருப்பதில்லை. ஆனாலும் அந்த குழந்தையைப் பார்க்கும்போது
என்னையுமறியாமல் நான் வெறுத்தேன். அதை ஆசையுடன் தூக்க கூட எனக்கு மனம்
வரவில்லை. அதனால்
அவனும் என்னைப் பார்த்தாலே ஒதுங்கி வெறுள ஆரம்பித்தான். ஒரு நாள் நான்
செய்வது மிகப்பெரிய தவறு என்று ஜெபத்தில் உணர்ந்தேன். அதற்கு சாக்குப்
போக்கு சொல்லாமல் முதலாவதாக தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். அடுத்தபடியாக
நாம் மறுமுறை அந்த(3 வயது) குழந்தையை தனியே எடுத்துச் சென்று அதனிடம்
மனிப்பு கேட்டேன். அதன்பின்பு அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் பேரன்பு
சுரந்தது.
அந்தக் குழந்தையும் என்னுடன் நன்றாக பழகினது. அதன்பின் அக்குழந்தை
உரிமையுடன் என்னுடன் செய்த வால்தனங்கள் ஏராளம். அதை நான் மிகவும்
இரசித்தேண்.
நாம் தவறு செய்திருப்பின் அதைக் குறித்து மனம் வருந்தி மன்னிப்பு
கேட்பதோ அல்லது மன்னிப்பதோ நமக்கு கடினமானதாக இருக்காது. நாம் தவறு
செய்யாதபோது நமக்கு தீங்கிழைக்கப்படும்போது நாம் என்ன செய்யவேண்டும்.
இயேசுவை நோக்கிப் பார்க்கவேண்டும். அவர் என்ன செய்தாரோ அதையே நாமும்
செய்யவேண்டும். முழுமனதுடன் மன்னித்து அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும். நாம்
அவர்களைக்
குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக அவர்களுக்காக பரிந்து பேச வேண்டும். அவ்வறு
நாம் செய்யும் போது நீதியாகிய பலனை நாம் தேவனிடமிருந்து பெறுவோம்.
இயேசு பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு
விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிறார். ஆனாலும் அவர்
தண்டிக்கப் பட்டார். நிந்திக்கப்பட்டார். சிலுவையிலறையப்பட்டார். அவர்
நீதிமான் என்பது சகலருக்கும் தெரிந்திருந்தது. பிலாத்துவும் அதை
அறிக்கையிட்டான். ஆனாலும் அவரை பாதகர் கையிலே ஒப்புக் கொடுத்தான். இயேசுவோ
அனைவரையும்
மன்னித்தார். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று
அவர்களின் அறியாமையை எடுத்துக் கூறினார். இப்படிப்பட்ட விபரீதங்களை
பொறுமையுடன் சகித்த அவரை நாம் நினைத்துக் கொள்வோம்.
நாம் ஒருவரை மன்னிக்கமுடியாமல் இருக்கும்போது அவரைப் பற்றிய எரிச்சல்
நம்மிடம் இருப்பதால் அது நம் ஆவிக்குரிய வாழ்க்கையையும் பாதிக்கிறது. நம்
ஜெபம் தியானம் எல்லாம் வெறுமையாகிறது. தேவனுடைய பிரசன்னம் உணரக் கடினமானது
ஆகிவிடுகிறது. ஆகவே நாம் மன்னிப்பின் மேன்மையை உணர்ந்தவர்களாய் ஆண்டவரே
என்னை மன்னியும்! பிறரை மன்னிக்கவும் பிறரிடம் தயங்காது மன்னிப்பு
கேட்கவும் அருள்புரியும் என்று அவரிடம் கேட்போம். செயல்படுவோம்.
(2008 ல் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் எழுதியது)
No comments:
Post a Comment