Tuesday, May 9, 2017

உயிரின் நிறம் - புத்தக விமர்சனம்

 புளியங்குடி வ. அருள் சாமுவேல், உயிரின் நிறம், Notion press,2017. Chennai.p. 1-239. INR 250.

நூல் ஆசிரியரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை அவருடைய பெயரே சொல்லிவிடுகிறது. ஆசிரியப் பணி செய்தாலும், தமிழார்வம் மற்றும் சமூக நலன் உந்தித் தள்ள இவர் முகநூலில் எழுதியவைகளையே தொகுத்து புத்தகமாக்கியுள்ளார்.  கிறிஸ்தவர்களில் எழுத்தாற்றல் உள்ளவர்கள் அருகி வரும் சூழலில், எவரையும் வாசிக்கத் தூண்டும் இவருடைய எழுத்து நடை அருட்கொடையே. கவனிக்க... இப்புத்தகம் கிறிஸ்தவப் புத்தகமல்ல. ஆயினும் வாசிக்க ஆரம்பித்த பின், கீழே வைக்க மனமில்லாது ஒரே மூச்சில் இரண்டரை மணி நேரங்களில் வாசித்து முடித்தேன்.

எல்லாவற்றிற்கும் நிறம் உண்டு, ஆனால் உயிருக்கு? அருகில் நின்று பார்த்த மரணம், விடுதி என்ற பெயரில் மாணவர்கள் சிறைவைக்கப்படுதல், அர்த்தமற்ற அழைப்பிதழ்கள், மேன்மக்கள் சிறப்பு என தான் கண்டவைகளை எழுதுவதிலும், பட் பட் படா பட் என வெடிக்கும் சத்தம் போல் குழந்தைகளின் சந்தோசத்துக்காக வாதாடுவதிலும், பெண் பெருமை பேசும் கட்டுரைகளிலும், அதே பெண்டிர்  படும் வேதனைகளைப் பேசுவதிலும் உள்ள ஒளிவு மறைவற்ற தன்மை ஒரு நேர்மையை முன்வைக்கிறது. அனைத்துக் கட்டுரைகளையும் பற்றிச் சொன்னால் நூலாசிரியர் காப்புரிமை வழக்கு தொடரக் கூடும். ஒவ்வொரு கட்டுரைகளுமே, அவை எழுதியது எப்போதோ என்றாலும், இன்று தான் மலர்ந்த ரோஜா போல புதுப் பொலிவுடனும், அத்துடன் உண்மையைக் குத்தி உணர்த்தும் முட்களுடனும் இருக்கிறது.

என் வாசிப்பில், “மேன்மக்கள் மேன்மக்களே” கட்டுரையில் செத்துப் போன மனைவிக்காக டெத் சர்டிபிகேட் வாங்க உதவி கேட்டு வரும் மனிதர், படிவம் நிரப்புவதற்காக எடக்கு மடக்காக பதில் கொடுப்பவர், கடைசியில் டெத் சர்டிபிகேட் கிடைத்தால் எதாவது பணம் கிடைக்குமா, டெத் சர்டிபிகேட் எதற்கு என்று கேள்வி கேட்கும்போது, “ அந்த கழுதை எங்கூட வாழ்ந்ததற்கு ஒரே அடையாளம் இந்த சர்டிபிகேட்தான் சார். அவ போட்டோ கூட என்கிட்ட இல்லை. என் கடையில இந்த சர்டிபிகேட்டை மாட்டி வச்சிடுவேன். தினசரி அதையே பார்த்து பார்த்து செத்துப் போயிடுவேன் சார்” என்று சொல்லிக் கதறி அழும்போது நானும் அந்த முகம் தெரியா, பெயர் தெரியா மனிதனுக்காக அழுதேன். ”எடுக்கவோ...கோர்க்கவோ” கட்டுரையில் எந்தச் சூழலையும் மாறுபட்ட சிந்தனையில் (lateral thinking) எதிர்கொள்வது எப்படி என்பதை தன் அனுபவத்தில் இருந்தும், மகாபாரதக் கதையில் இருந்தும் மிக அழகாகத் தருகிறார். தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடித்து மகிழும் குழந்தைகளின் மன ஓசையை அப்படியே ஒரு பெரியவர் விளக்கினால் எப்படியிருக்கும்! பட் பட் படா பட் என நம்மையும் பட்டாசு வெடிக்க அழைக்கிறது. வீதியெங்கும் ஓநாய்கள் கட்டுரை சமுதாயத்தின் நிலைமையை தோலுரித்துக் காட்டுவது ஒரு புறம், மறுபுறம் ஒரு அவலச் சுவையான சந்திப்பு முன் வைக்கும் வாதத்திற்கு வலு சேர்க்கிறது.

இந்நூலில் கண் முன், தன் முன் நிகழ்ந்தவைகளே கட்டுரைகள் என்பது சிறப்பு.  எல்லாக் கட்டுரையிலும் ஒரு சமுதாயக் கேள்வி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம் முன் வைக்கப்படுகிறது. இக்கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியரின் சிந்தனை மற்றும் அனுபவங்களில் இருந்து பெறப்பட்டிருந்தாலும், அவை ஒரு சமுதாய அறத்தை முன்வைக்கின்றன.  பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என மனிதர்களைச் சுற்றி, குடும்பங்களைச் சுற்றியே கட்டுரைகள் இருப்பது இப்புத்தகத்திற்கு “U" சர்டிபிகேட்டை தருகிறது.  குறை என்று சொல்லப் போனால், சில கட்டுரைகளில் சொற்றொடர் அமைப்பையும், ஆஹா என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் அது ஆஉறா என்பது போல இருக்கும் எழுத்துருவுவையும் இப்படிச் சில தவிர்க்கக் கூடிய சிறு பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். அது போக, வழக்கமான ச்முதாயக் கருத்துத் திரைப்படங்களில் உள்ளது போல, அட்வைஸ் மழை. ஆசிரியர் என்பதால் இயல்பாகவே இது வந்திருக்கும் என்று கருதுகிறேன்.  உயிரின் நிறம் ஆசிரியரின் பரிசு, ஆனால் இலவசம் அல்ல. ஆனால் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.


புத்தகத்தின் தலைப்பு சொல்லும், “உயிரின் நிறம்” என்ன என்று அறிந்து கொள்ள வேண்டுமானால் வாழ்க்கையை ஆசிரியர் சொல்வது போல சுவாசிக்க வேண்டும். இதை அறிய இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசிக்க வேண்டும். அப்போது கண்ணுக்குப் புலனாகா காற்று உங்களை வருடிச் செல்வதை அனுபவித்து உணர்வது போல உயிரின் நிறம் என்ன என்பதையும் உணர்வீர்கள். (சு)வாசிக்க வாருங்கள்.

Lowest price available at Infibeam

No comments: