Saturday, March 20, 2010

கிறிஸ்தவர்களை ஆட்டிப்படைக்கும் எண்கள்

யுமராலஜி பார்ப்பவர்கள் மட்டும்தான் எண்களைக் குறித்து கவலைப்படுவார்கள் என்று நினைக்கவேண்டாம். நாங்களும் அக்கூட்டத்தில் உண்டு என்று சத்தமின்ன்றி உரைக்கும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமுண்டு. சோதிடம், எண்ணியல் போன்றவற்றில் நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களைப் பற்றி நான் கூறவில்லை. ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களிடையே இருக்கும் ஒரு காரியம்தான் கட்டுரைக்கான கரு.

இராசிபலன், அதிர்ஷ்டம் போன்றவற்றில் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவர்களிடம் சென்று உங்களுக்கு பிடித்த (அதிர்ஷ்ட அல்லது இராசியான) எண் எது என்று கேட்டால் (பெரும்பாலும்) உடனே வரும் பதில் : 7, 3 அல்லது 777 , 333 . மேற்கண்ட எண்களில் ஏதாவது ஒன்றைத்தான் கிறிஸ்தவர்கள் கூறுவர்.

சமீபத்தில் நான் எனது ந்ண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு குட்டி புத்தகம் வாசிக்க கிடைத்தது. எனக்கு குட்டிப் புத்தகங்கள் என்றால் தனியார்வமுண்டு. என் வாசிப்பில் அனேக குட்டி புத்தகங்கள் பல பெரிய குண்டு புத்தகங்களை விட சிறந்தனவாகவும் சீக்கிரம் வாசிக்க ஏதுவாகவும் இருந்திருக்கிற படியால் அவற்றின் மீது தனிப்பாசம். சரி கதைக்கு வருவோம். என் கையில் கிடைத்த அந்த புத்தகம் எதைப் பற்றிய புத்தகம் என்பதற்காக முன்அட்டையை பார்த்த எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அப்புத்தகம் இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஒரு வேத வல்லுநர் எழுதியது. அப்புத்தகத்தில் இல்லை இல்லை அதன் அட்டையில் நான் கண்டது இதுதான்

333 பிதாவின் பரிபூரணம்
444 ஆவியின் பரிபூரணம்
555 குமாரனின் பரிபூரணம்
666 பிசாசின் பரிபூரணம்
777 தேவனின் பரிபூரணம்


இதைப் பார்த்த உடனேயே அப்புத்தகத்த வாசிக்கும் ஆர்வம் தொலைந்து என் மனதில் ஆயிரம் கேள்விகள்தான் எழும்பியது. வேதத்தில் எங்கேயாகிலும் மேற்கூறிய எண்கள் கூறப்பட்டிருக்கிறதா? 666 என்ற இலக்கத்தை மட்டும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்தில் காண்கிறோம். அங்கும் அதுதான் பிசாசின் பரிபூரணம் என்று சொல்லப்படவே இல்லை. எதையாவது வித்தியாசமாக சொல்லவேண்டும் என்று ஏன் இப்படியெலாம் யோசிக்கின்றனர் என்பதுதான் எனது பெரும் யோசனையாக இருந்தது.

வேதத்தில் தேவன் எங்கேயாகிலும் இந்த எண் தான் எனக்கு பிடித்தமான எண். ஆகவே அதை கணக்கிட்டு எனக்கு அதைச் செய் இதைச் செய் என்று கூறினாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

தேவன் நேரடியாக கூறவில்லை ஆனால் சில இடங்களில்
”ஏழுமுறை சுற்றி வா
மூன்று மூன்றாகச் செய் எதைச் செய்தாலும்,
மூன்று சாட்சி, மூன்று நாள், மூன்று காளை, மூன்று தூதர் மூன்று மூன்று என்று வரும் காரியங்கள் பைபிளில் எவ்வளவு இருக்கு தெரியுமா என்று”
அடுக்கும் ஐயாமார்கள் அனேகர் உண்டு.

ஆனால் இவை எல்லாமே வேதத்தில் இருந்தாலும் அவை நமக்கு இராசியான எண்களோ அல்லது அதிர்ஷ்ட எண்களோ அல்ல. நம் விசுவாசம் எண்களில் அல்ல ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்காக பட்ட எண்ணற்ற பாடுகள் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் உள்ளது. (அதிலும் கூட ஆண்டவர் அடைந்த ஏழு பாடுகள் என்று புலம்பல் பாடுபவர்கள் உண்டு. )

இப்படி எண்களை வைத்து பிரசங்கம் பண்ணுதல் அல்லது புத்தகம் எழுதுதல் மக்களுக்கு கவர்ச்சியாகவும் புதுமையாகவும் தோன்றலாம். இன்னும் சொல்லப் போனால் வேதாகமத்தை வைத்து காணிக்கை பார்க்கும் சில ஊழியர்களுக்கு சொல்ல சூப்பரா இருக்கும். ஒரு கிறிஸ்தவ தொலைக்காட்சியில் எப்போது பார்த்தாலும் எங்களுடன் சேர்ந்து மூன்று முறை சொல்லுங்கள் ஏழு முறை சொல்லுங்கள் ஆசீர்வாதத்தை அள்ளுங்கள் என்பன போன்ற இடிமுழக்கங்களை சகிக்கவே முடியவில்லை.

நாம் எவ்வளவுதான் தேறினவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட கிறிஸ்தவ அசட்டுத்தனங்களிலிருந்து விலகி மற்றவரையும் விலக்க முயற்சிப்போமாக. இயேசு சீக்கிரத்தில் வரப் போகிறார். அவர் வரும் போது நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? என்றும் நம்மிடம் விசுவாசம் இருக்கிறதா என்றும் தான் பார்ப்பாரே அன்றி நம்ம விசுவாசி இன்னைக்கு மூன்று முறை தொழுதாரா? ஏழுமுறை தோத்திரம் சொன்னாரா என்பதை ஏறிட்டு கூட பார்க்க மாட்டார். ஆயிரம் தோத்திர பலிக்கு பலியாகி இந்துமத ஆசாரங்கள் போன்று அதை பின்பற்றும் அல்லது மந்திரமென விடாது கூறும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது.


ஆகவே
விழித்திருங்கள்; உலகிற்கு
விலகியிருங்கள்
எச்சரிக்கையாயிருங்கள்
எதிர்த்து நில்லுங்கள் எதிரியை
என்றும் வென்றிடுங்கள்.

1 comment:

Pethuru Devadason said...

////இதைப் பார்த்த உடனேயே அப்புத்தகத்த வாசிக்கும் ஆர்வம் தொலைந்து என் மனதில் ஆயிரம் கேள்விகள்தான் எழும்பியது.////

அட... இதிலும் நியூமராலஜியா?