நான் அந்நாட்களில் ஞாயிற்றுக் கிழமை ஆலயத்துக்குப் போவதும் வருவதும் யாருக்கும் தெரியாது. ஏன், ஆலயத்தில் உள்ளவர்களுக்குக் கூட தெரியாதபடி சரியாக ஆராதனை துவங்குகிற சமயத்தில் உள்ளே நுழைந்து, முடிந்தவுடனே முதல் ஆளாக வெளியே வந்து விடுவேன். அப்படிப்பட்ட நாட்களில், ஒரு நாள் சபையில் உள்ள ஒரு தம்பி சகோ.தீமோத்தேயு என்னைப் பிடித்துக் கொண்டு, அண்ணன் ஞாயிறுக்கிழமை சாயங்கால நேரங்களில் என்ன செய்வீர்கள் என்று கேட்டான். சும்மா நண்பர்களைப் பார்ப்பேன், அவ்வளவுதான் என்றேன். முடிந்தால் சாயங்காலம் எங்களுடன் கலந்து கொள்ள முடியுமா, நாங்கள் கிராம ஊழியத்திற்கு குழுவாகச் செல்வோம், ரொம்ப நல்லா இருக்கும் என்றான். சரி வருகிறேன் என்று சொல்லி ஆரம்பித்தது என் தெருப் பிரசங்க அனுபவங்கள்.
பாஸ்டர் கே.ஜே. ஆபிரகாம் அவர்கள் மூலமாக இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற சில பெரிய அண்ணன்மார்கள், ஊழியர்கள் மற்றும் சில சபை மக்கள் ஒரு குழுவாக தொட்டி ஆட்டோவில் அமர்ந்து ஜெபத்துடன் அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்வோம். பொதுவாக, முதலில் ஜனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு பாடல் பாடப்படும். இது போன்ற தெருப் பிரசங்க அல்லது திறந்தவெளி பிரசங்கங்களுக்கென்ற சில பாடல்கள் இருக்கின்றன. அதில் எங்கள் குழுவினர் அடிக்கடிப் பாடும் பாடல்களில் ஒன்றுதான், சாரோள் நவரோஜி அம்மையார் எழுதிப் பாடிய, “பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்” பாடல். எனக்கு எல்லாம் புதிது என்பதால், என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதுதான் நான் பெரும்பாலும் செய்கிறதாக இருக்கும். குழுவில் உள்ள யாராவது ஒருவர் பாட, மற்றவர்கள் ஜெபிக்கவோ அல்லது துண்டுப் பிரதி விநியோகம் செய்யவோ சென்று விடுவர். சகோ. சாலமோன் வழக்கமாக விரும்பிப் பாடுவார். இப்பாடலைப் பாடும்போதே அதைப் பாடுபவர்களும், கேட்பவர்களும் ஒரு விதமான உணர்ச்சி வெள்ளத்தில் ஏன் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை நானும் மெகாபோனை வாங்கி பாட ஆரம்பித்தபோது உணர ஆரம்பித்தேன். அப்படி ஒரு கருத்தாழம், வசன செறிவு மற்றும் அன்பின் அழைப்பு நிறைந்த ஒரு பாடல். நீங்களும் கேட்டு அதை அனுபவிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து அதைப் பெறலாம்.
பாடலை எவ்வளவுதான் சாதாரணமாக கட்டுப்பாட்டுடன் பாட ஆரம்பித்தாலும், ஒவ்வொரு சரணங்களையும் படிக்க படிக்க கண்களில் ஜலம் கட்டிக் கொண்டு, இறுதிப் சரணம் படிக்கும்போது இருதயத்தின் ஆழத்தில் இருந்து, “நம்பி ஓடி வா” என்று ஏக்கப் பெருமூச்சுகளுடன் கதறலாக வார்த்தைகள் வரும். தெருப் பிரசங்கங்கள் மூலமாக நான் பெற்றுக் கொண்ட, கற்றுக் கொண்ட கிறிஸ்தவப் பாடங்கள் ஏராளம். அதில் முதலாவது என்னவெனில், தகுதியில்லாத என்னையும் எடுத்து இயேசு பயன்படுத்த முடியும் என்பதே. இரண்டாவது, நான் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன, கற்றது கைம்மண்ணளவு என்பது ஆகும். இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம். அவைகளை பிறிதொரு சமயத்தில் சொல்கிறேன். இப்பொழுது உங்களுக்கு “பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்” பாடல் தெரியும் எனில் என்னுடன் சேர்ந்து பாட அழைக்கிறேன். தெரியவில்லை எனில், கொடுத்திருக்கும் இணைப்பில் கேட்டு, இணைந்து பாடுங்கள்.
பல்லவி
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
அனுபல்லவி
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
சரணங்கள்
1. காட்டிக் கொடுத்தான் முப்பதுவெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல் கொதா மலைக்கு இயேசுவை
2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன்போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசி தாகமும்
படுகாயமும் அடைந்தாரே
3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முள்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் காணும் உள்ளம் தாங்குமோ
4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா
5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா
6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நாடி நம்பி வா
தனித்திருக்கும் இந்நாட்களில் இயேசு இரட்சகரின் தியாகத்தையும், அவர் நமக்காக செய்து முடித்தவைகளையும் நினைத்துப் பார்த்து நம்மை அவரிடம் ஒப்புக் கொடுப்பது எவ்வளவு தேவையானதாக இருக்கிறது பாருங்கள்.
- அற்புதராஜ் சாமுவேல்
30/4/2020
30/4/2020