கேள்வி: லூக்கா 6:13ன் படி இயேசு தெரிந்தெடுத்தது பன்னிரெண்டு அப்போஸ்தலரைத்தானே. அப்படியிருக்க பவுல் எப்படி அப்போஸ்தலரானார்?
இயேசு கிறிஸ்து மரித்து பின்பு உயிர்த்து மகிமையாக பரமேறின பின் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸுக்குப் பதிலாக வேறொருவரை சீட்டு போட்டு எடுத்தனர். அது யூத வழக்கம்.
ஆனால் தேவன் தேர்ந்தெடுத்த ஒரு மனிதனே இந்த பவுல் ஆவார். அவர் எந்தளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ அதை விட அதிக வைராக்கியத்துடன் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்க கிளம்பினார். அவர் மூலமாகவே அனேக தேவ இரகசியங்களும் புதிய ஏற்பாட்டில் உள்ள பெரும்பாலான புத்தகங்களும் தேவ ஏவுதலால் எழுதப்பட்டன.
கிறிஸ்தவர்களை துன்புறுத்தப் புறப்பட்ட பவுலை இயேசு தமஸ்குவில் சந்தித்தார், தன்னை வெளிப்படுத்தினார். அத்தோடு சவுல் எனப்பட்ட இந்த பவுலைக் குறீத்தும் அங்கு வெளிப்படுத்துகிறதை காணலாம்: "அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான் "(அப்போஸ்தலர் 9).
ஆகவே பவுல் மனுசரால் ஏற்படுத்தப் பட்ட ஒரு அப்போஸ்தலனாயிருக்கவில்லை. தேவனே அவரை தெரிந்தெடுத்தார், வழி நடத்தி போதித்தார். இதையே பின்பு பவுல் பின்வருமாறு கூறுகிறார்: "மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்" என்று கூறுகிறார்.
மேலும் தான் அறிவித்த சுவிசேசத்தைக் குறித்து சொல்லுகையில் "நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்" என்றார். ஆகவே பவுல் எப்படி அப்போஸ்தலரானார் என்று நாம் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. தனக்குத்தானே அப்போஸ்தலர் என்று பட்டம் கொடுத்து கொள்ளும் இக்கால அப்போஸ்தலர் அல்ல அவர். தேவன் அவரை அப்போஸ்தலராக அழைத்தார். அதையே அவர் மக்களுக்கு எழுதும் போது அழைக்கப்பட்டவனாக அப்போஸ்தலனாக எழுதினார். இதில் இரகசியமொன்றுமில்லை. அப்போஸ்தலன் என்றால் "அழைக்கப்பட்டவன்" "அனுப்பப்பட்டவன்" என்பதுதான் பொருள். இக்காலத்தில் அப்போஸ்தலன் என்றால் ஏதோ பெரிய பட்டமாக கருதப்படுகிறது. அதுவுமல்லாமல் பிஷப் என்றால் பெரிய இராஜா என்கிற எண்ணம். அதனால் இப்போது பிஷப்கள் பெருத்துவருகிறார்கள். பிஷப் பட்டம் விற்கப்படுகிறது.
இப்படிப்பட்ட பட்டங்களால் நாம் அறியப்படுவதை விட "ஒரு நல்ல கிறிஸ்தவன்" என்கிற பேரைப் பெற்று தேவனுக்கு சாட்சியாக வாழ்வது எவ்வளவு மேலானது!
No comments:
Post a Comment