Sunday, November 15, 2009

Teen Questions : என் கேள்விகளை தருகிறேன். உங்கள் பதில் என்ன? 1


நான் கிறிஸ்துவுக்காக வாழ போராடிக் கொண்டிருக்கும் கோடிகளில் ஒரு சிறு போராளி. ஆனால் என் மனதில் அவ்வப்போது எழும்பும் கேள்விகளும், வாழ்க்கையில் வரும் தோல்விகளும் துவளச் செய்கின்றன. என் கேள்விகளை தருகிறேன். உங்கள் பதில் என்ன?




கேள்வி 1: கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்ற தீர்மானத்தை நான் எடுத்திருக்கிறேன். ஆனால் என்னால் அவருக்காக வாழவேண்டும் என்ற தீர்மானத்தில் நிலைத்து நிற்கமுடியவில்லை? ஒவ்வொருமுறையும் நான் தோற்றுவிடுகிறேன். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என்று ஒன்று உண்டா? அதை வாழ என்ன செய்யவேண்டும்? எனக்குத்தெரிந்து வெற்றியுள்ள கிறிஸ்தவர்கள் எவரும் இருப்பதாக தெரியவில்லை. எல்லாருமே(ஊழியர்களையும் சேர்த்துத்தான்) போலி வேஷம் போடுவதாகவே தோன்றுகிறது. ஏன்?

ஹலோ! ஸ்வீட் டீன் ! உன் கேள்வி உன் எண்ண அலைகளை கரைக்கு கொண்டுசேர்த்துள்ளது. உன் போல் போராடிக் கொண்டிருக்கும் பலருக்கு இப்பதில் பிரயொஜனமாயிருக்கும்.

முதலாவதாக நீ அறிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், இன்றும் வெற்றியுள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள் அனேகம் உண்டு. எலியா தீர்க்கதரிசி தன் காலத்தில் தேவனுக்காய் வாழ எவரும் இல்லை என்று எண்ணினான். ஆனால் தேவன் அவனுக்கு அளித்த பதில் என்ன? 7000 பேர் இருக்கிறார்கள் என்றார்(1இராஜாக்கள்.19:18). அன்றே 7000 பேர்கள் இருந்திருந்தால் இன்று குறைந்தது ஒரு 70கோடி பேராவது நிச்சயமாக இருப்பார்கள். ஆகவே வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை நிச்சயமாகவே (அவ்வாறு வாழ விரும்பும் எவருக்கும்) உண்டு. போலிகளைக் கண்டு நீ ஏமாற வேண்டாம். அவர்களைக் குறித்து பேசுவது வீண்.




கிறிஸ்தவ வாழ்வில் தோல்விகள் வரலாம். ஆனால் கிறிஸ்தவம் ஒரு போதும் தோற்காது. தோல்விகள் ஏன் வருகின்றன என்று சற்று உற்று நோக்கினால் அவை நமக்கு வரும் சோதனைகளினாலேயே(Temptations) என்பதை விளங்கிக் கொள்ளலாம். நாம் இவ்வுலகத்திலிருக்கிற படியால் உலகக் காரியங்கள் பல விதத்தில் நம்மை பின் நோக்கி இழுக்கின்றன. நாம் இவ்வுலகத்தில் இருக்கும் காலமட்டும் சோதனைகள் வரத்தான் செய்யும். சோதனைகளே வரக்கூடாது என்பது அல்ல வெற்றிக் கிறிஸ்தவம். சோதனைகளை ஜெயிப்பதுதான் வெற்றிக் கிறிஸ்தவம்.


நமக்கு வரும் சோதனைகளை நாம் எவ்வாறு ஜெயிக்கலாம்?

இயேசுக்கிறிஸ்துவினால்: ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்(எபிரெயர்.2:18). இயேசு சொன்னார்: திடன்கொள்ளுங்கள்! நான் உலகத்தை ஜெயித்தேன்(யோவான்16:33).

விசுவாசத்தினால்: தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1யோவான்.5:4). தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், வசனத்தினாலும் : மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

மேலே நீ கண்டபடி உன் வெற்றி கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உதவ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவரை விசுவாசி, அவர் உனக்காக செய்து முடித்தவைகளை விசுவாசி. சோதனைகளினால் நீ தாக்கப் படாமல் இருக்க நினைத்தால் விசுவாசம் என்னும் கேடகத்தை பயன்படுத்து. தேவனுடைய பட்டயமாகிய ஆவியின் பட்டயத்தை சரியாகப் பயன் படுத்து. வெற்றி உனக்குத்தான். உனக்கு வரும் சோதனைகள் மட்டுமல்ல உன்னை தாக்க வரும் பிசாசும் கூட உன்னை விட்டு ஓடிப் போவான். சோதனையையும் பிசாசையும் நீ எதிர்த்துத்தான் ஆகவேண்டும்.(எபேசியர்:6)

வெற்றி பெற வேறு வழி இல்லை. குறுக்கு வழி நாடாதே! சிலர் ஜெபமே ஜெயம் என்று சொல்வார்கள். அதற்கு வேத வசன ஆதாரம் கிடையாது. விசுவாசம் இல்லை எனில் ஜெபம் சுபம் ஜெயம் தராது. நீ இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவன். இவை உனக்கு புரிந்திருக்கும். சாத்தான் உன்னை தொடமுடியாது. உனக்கும் தேவனுக்கும் ஏதாவது இடைவெளி இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக உன் தவறுகளை அவரிடம் அறிக்கையிட்டுவிடு. வெற்றி என்றுமே உன் பக்கம்தான். உன் சாட்சியை கேட்க ஆவலாக இருக்கிறேன்.



கேள்வி 2: பருவ மாறுதலில் பல எண்ணங்கள் மனதில் சிறகடிக்கிறது. முக்கியமாக ஒரு விசயத்தில் என்னால் கன்ட்ரோலாகவே இருக்க முடியவில்லை. மனது அலைபாய்கிறது. என்ன விசயம் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்? நான் என்ன செய்ய வேண்டும்?





முதல் கேள்விக்கான பதிலை ஆராய்ந்து அத உன் வாழ்க்கையில் செயல்படுத்து. சிறிது நாட்கள் கழித்து வா. அப்போதும் இந்த கேள்வி உன்னிடம் இருந்தால்........ பதில் சொல்கிறேன். அதுவரை பொறுத்திரு.

- S.Arputharaj

No comments: