Saturday, December 25, 2010

இயேசு பிறந்த போது என்ன நடந்தது?

உலகமெங்கிலும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேளிக்கைகள்,  விருந்து மற்றும் அலங்காரங்களினால் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. ஈராயிரம் வருடங்களுக்கு முன் இயேசு இவ்வுலகில் பிறந்த போது என்ன நடந்தது என்பதை சற்று ஆராய்வோமாகில் நம் கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவைகளாக மாறும்.

ஞானிகளின் வருகையும் தொழுகையும்
உலக இரட்சகராக இயேசு பிறந்திருக்கிறார் என்கிற செய்தி தேவ ஜனங்களாகிய யூதர்களுக்கே தெரியாமல் இருந்தது. ஆனால் அறிவில் சிறந்த சாஸ்திரிகள் ஒரு சிலர் கிழக்கு தேச நாடுகளில் இருந்து இரட்சகர் பிறப்பை தம் ஞானத்தினால் அறிந்தனர். விண்மீன் வழிகாட்ட எருசலேம் சேர்ந்தனர். எருசலேம் வந்ததும் சாஸ்திர்கள் அதுவரை தங்களுக்கு வழிகாட்டின விண்மீனை நோக்காமல்  நேராக அரண்மனை சென்று யூதருக்கு இராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? என்று கேட்டனர். யூதர்களின் இராஜாவாகிய ஏரோதின் அரண்மனையில் இக்கேள்வி பெரும் சல சலப்பை உண்டாக்கியது.
            இயேசுவைப் பற்றிய எவ்வித தகவல்களும் அவர்களுக்கு இல்லை. இஸ்ரவேலர்களுக்கோ ஏற்கனவே வேதாகமத்தில் தெளிவான தீர்க்கதரிசனங்கள் இருந்தன. இம்மானுவேல் எங்கே பிறப்பார், எப்பொழுது பிறப்பார் என்றெல்லாம் அவர்களுக்கு வேதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர்கள் இரட்சகர் இயேசுவை எதிர்பார்க்கவும் இல்லை, அதைக் குறித்து யோசிக்கவும் இல்லை.
             சாஸ்திரிகளின் கேள்வியினால் தூண்டப்பட்ட யூத வேத பாரகர்கள் தீர்க்கதரிசியினால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டு பெதலகேமில் இயேசு பிறப்பார் என்ற உண்மையை உரைத்தனர். சாஸ்திரிகளுக்கு பதில் கிடைத்தது, ராஜாவுக்கோ திகில் பிடித்தது. தனக்கு போட்டியாக வேறு யாரும் வந்து விடக் கூடாதே என்ற பதை பதைப்பு. உள்ளூர ஒரு சதி திட்டம் தீட்டினான். ஆனாலும் அது வெற்றி பெற வில்லை.
                 எருசலேமுக்குப் பின் பெதலகேம் நோக்கி தங்கள் பயணத்தை துவக்கிய சாஸ்திரிகளுக்கு மறுபடியும் கிடைத்தது விண்மீனின் வழிகாட்டல். நட்சத்திரத்தைக் கண்டு அகமகிழ்ந்து பயணத்தைத் தொடர்ந்து தேவன் மனிதனாக அவதரித்த மாட்டுக் கொட்டகை வந்து சேர்ந்தனர். அங்கே இயேசுவைக் கண்டு சாஷ்டாங்கமாக விழுந்து அவரைப் பணிந்து கொண்டார்கள். தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து காணிக்கைகளையும் அவர் முன் வைத்தனர். அதன் பின்பே தங்கள் தேசத்திற்கு திரும்பினர்.

ஞானிகளின் வருகையும் தொழுகையும் நமக்கு சொல்லும் செய்தி என்ன?
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமியா.29:13) என்று வேதம் கூறுகிறது. கிழக்கு தேசத்தைச் சேர்ந்த அந்த சாஸ்திரிகள் (இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்வதுண்டு) தங்களிடம் தேவனுடைய வார்த்தை இல்லை என்ற போதிலும் அவரைக் காணும்படி தேடினர். தேடுகிறவன் எவனும் கண்டுகொள்கிறான் என்ற வ்சனத்திற்கேற்ப அவர்கள் ஆண்டவரைக் கண்டு பணிந்து கொண்டனர். அதுமாத்திரமல்ல, இயேசுவுக்கு கனத்தையும் மகிமையையும் வயது, கல்வி என்ற எந்த வித்தியாசம் பாராது அவரைப் பணிந்தனர். விலையேறப்பெற்ற பொன், வெள்ளி, தூப வர்க்கங்களை படைத்து மகிழ்ந்தன்ர். தங்களைத் தாழ்த்தினர். அதன் பின்பே காணிக்கைகளைப் படைத்தனர்.

அறிவிப்பும் அகமகிழ்வும்
இயேசு பிறந்த செய்தி உலக மனிதர்களுக்கு வேண்டுமானால் தெரியாமலிருந்திருக்கலாம். ஆனால் தேவன் மனிதனாக அவதரித்ததை தேவதூதர்கள் கண்டு மகிழ்ந்து அச்சந்தோசத்தின் செய்தியை அறிவிக்க விரைந்தனர். மிகவும் புகழ் பெற்றவர்களையும் வசதிபடைத்தவர்களையும் தேடி அவர்கள் செல்லாமல், இரவில் மந்தைகளை காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் சென்றனர். அங்கே தேவ தூதனின் வருகையால் மகிமை பிரகாசித்தது, மேய்ப்பர்களை பயம் சூழ்ந்தது. பயந்த மேய்ப்பரை தூதன் பார்த்து,”பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றான் (லூக்கா 2:10-12).
                 மிகுந்த சந்தோசத்தின் செய்தியை தூதர் அறிவித்த அந்த ஷணமே திரளான தேவ தூதர்கள் அவனுடன் இணைந்து ”உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காமல் தேவனை துதித்தார்கள்.
                   தேவ தூதர்களின் அகமகிழ்வையும் அறிவிப்பையும் கண்ட மேய்ப்பர்கள் ஆர்வத்துடன் இயேசுவைக் காண விரைந்தனர். சொல்லப்பட்டவைகள் அனைத்தும் முற்றிலும் உண்மை என கண்டு இயேசுவைக் குறித்து பலருக்கும் ஆச்சரியப்பட்டனர். கேள்விப்பட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர். மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.

ஆட்டிடையர் அறிவிப்பு - அகமகிழ்வு - ஆச்சரியம்
    இந்நாட்களில் கிறிஸ்துமஸ் கீத பவனி என்ற பெயரில் பல இடங்களுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட் ஒருவருடன் பெரும்பாலான சபையார் செல்கிறதைக் காண்கிறோம். அதிலும் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கே கிறிஸ்து பிறப்பு நற்செய்தி அறிவிக்கப்படும் துர்பாக்கிய நிலைமையைக் காண்கிறோம். இயேசு பிறப்புச் செய்தி அவரைக் குறித்து அறியாத, வய்ல்வெளி மேய்ப்பர்களுக்கே தூதர்களால் அறிவிக்கப்பட்டது. இன்றும் சுவிசேச களங்களில் இயேசுவைக் குறித்து அறியாத பல கோடிபேர் உண்டு. கிறிஸ்துமஸை ஒரு பண்டிகையாகக் கொண்டாடாமல் அவரின் பிறப்பை அறியாதவர் அறிந்து கொள்ளச் செய்யும் அறிவிப்பு நாளாக அனுசரிக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
                              தூதர்களில் நற்செய்தி அறிவிப்பு மட்டும் மேய்ப்பர்களை இயேசுவைக் காணச் செல்லும்படி தூண்டவில்லை. மாறாக அவர்கள் பாடிய உற்சாக துதி பாடல் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனாலும் இன்று நாம் பாடும் பெரும்பாலான கிறிஸ்துமஸ் பாடல்கள் தாலாட்டுப் பாடல்களாக இருப்பது ஏன்? நம் பாடல்கள் தூங்குகிறவர்களை இன்னும் தூங்கச் செய்யவா? அல்லது அவர்களை தட்டி எழுப்பி மீட்பர் பிறந்தார் என மீட்பின் செய்தியை அறிவிப்பதற்கா? யோசித்து பார்ப்போமாக.
    தேவதூதர்களின் அறிவிப்பு, பரம சேனைகளின் கீதம், மேய்ப்பர்களின் ஆச்சரியம் இவை எல்லாம் உண்மை என்றாலும் மரியாளுக்கு அவை பரவச உணர்வை அளிப்பதற்குப் பதிலாக, சிந்தனை உணர்வை அளித்தது.
    கிறிஸ்துமஸ் ஆடம்பரம், அலங்காரம், ஆரவாரம் இவை அனைத்தும் நமக்கு ஒரு பரவச உணர்வைக் கொண்டு வருவதற்காக அல்ல. கிறிஸ்துவின் பிறப்பு நாம் சிந்தித்துப் பார்ப்பதற்காகவே. கிறிஸ்தவர்களாகிய நாம் உற்சாகமாக கிறிஸ்து பிறந்தார் என அறியாத மாந்தரிடம் அறிவிப்போம். நம் அறிவிப்பும் ஆனந்தமும் அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தூண்டி ஆண்டவர் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்க்கட்டும். கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொருவரின் அனுபவமாகட்டும்.
  இயேசு ஏன் பிறந்தார்
ஏழைக் கோலமதாய்
பாவியை மீடக பாசமாய்
பாரில் வந்துதித்தார்
 

Wednesday, October 6, 2010

சிந்தனைக்கு - மன்னிப்பு

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
          உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.

நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.

எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் .

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

தவறு செய்துவிட்டு தேவனிடம் மன்னிப்புக்காக கெஞ்சும் நான், மற்றவர்கள் எனக்கு விரோதமாக தவறிழைக்கும்போது அவர்களை மன்னிக்க விருப்பம் உடையவனாயிருக்கிறேனா?

Monday, September 13, 2010

தசம பாகம் குறித்த சில சிந்தனைகள்

1.தசம பாகம் கொடுத்தல் என்பது நியாயப்பிரமாணம் கொடுப்பதற்கு முன்பே விசுவாசத்தினால் ஏவப்பட்டு கொடுக்க ஆரம்பித்த ஒரு காரியம்.
2. புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தசம பாகம் கொடுப்பது தவறு அல்ல, ஆனால் முதலாவது கொடுக்கவேண்டியது நமது இருதயத்தையும் பிற்பாடே நமது பொருளுடைமைகளும்.
3. கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் என்பதால் நாம் நியாயப்பிரமாணத்தின்படி தசம பாகம் கொடுத்தால் தவறு, ஆனால் விசுவாசத்தினால் கொடுப்பது என்பதில் தசம பாகம் ஆரம்பமே.
4. புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் கொடுப்பதை உற்சாகமாகக் கொடுக்கவேண்டும். உதாரத்துவமாகக் கொடுக்கவேண்டும். விசனமாயும் கட்டாயமாயுமல்ல. அப்படிக் கொடுத்தால் அதிலே ஒரு பிரயோஜனமும் இருக்காது.
5.தசம பாகம் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது தவறு. தேவன் ஆசீர்வதிப்பதிலிருந்து நாம் கொடுக்கிறோம். வாங்குதல் கொடுத்தல் பிரமாணத்தின்படி நாம் தேவனுக்காகக் கொடுக்கும்போது திரும்பவும் பெற்றுக் கொள்கிறோம்.
6. ஊழியக்காரன் தசமபாகம் காணிக்கைக் குறித்து பயமுறுத்தியோ, நயமாகவோ பிரசங்கம் பண்ண வேண்டிய தேவையில்லை. தேவனுடைய வார்த்தையை உண்மையாகக் கூறினால் தேவன் ஒரு காக்கையைக் கொண்டாவது போஷிப்பார். ஊழியக்காரனின் கண்கள் தசம பாகங்கள் காணிக்கை மீதல்ல, தேவன் மீதே இருக்க வேண்டும்.
7. தசம பாகம் கொடுத்தால் பரலோகம், கொடுக்காவிட்டால் நரகம் என்பது மிகவும் தந்திரமான ஒரு நய வசனிப்பு. இதற்கு வேத ஆதாரமில்லை.
8, நீங்கள் உங்களது காணிக்கை தசம பாகங்களை நீங்கள் செல்லுகிற சபைக்கு கொடுப்பது நல்லது என்றாலும் அது கட்டாயமல்ல.
9.தேவன் உங்களுக்கு கொடுக்க ஏவும் எவருக்கும் உங்கள் காணிக்கையைச் செலுத்தலாம். ஏனெனில் உங்களது காணிக்கை தேவனுக்கேயன்றி மனிதருக்கல்ல.
10. தசம பாகம் காணிக்கைகளை விட அதிக முக்கியமானது ஏழைகள், திக்கற்றவர்கள், விதவைகள், ஆதரவற்றவர்கள், அந்நியர்கள் ஆகியவர்களுக்கு உதவுவது ஆகும். ஏனெனில் காணிக்கை என்பதற்கும் கர்த்தருக்கே கடன் கொடுப்பது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா!
11. நமக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிற தேவனுக்கு தசம பாகம் கூட கொடுக்க மனதில்லாதிருப்பதும், உணர்ர்சிவச பிரசங்கங்களைக் கேட்டு உள்ளதையும் கொடுத்து ஏமாறுவதும் தவறு.
12. நாம் தேவனுக்காகக் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று நமது இருதயம் மாத்திரமல்ல, நமது நேரமும் கூட. அவரோடு ஒரு நாளில் குறைந்தது இரண்டு பணிநேரம் செலவிடுவது வாழ்க்கைக் குழப்பங்கள் மாத்திரமல்ல, வேதாகமக் குழப்பங்களும் வரும் வாயிலை மூடிவிடும். நேரம் உங்களைத் தேடி வராது, நீங்கள்தான் அதைத் தேடிப் போக வேண்டும். தூக்கத்தைக் குறைத்தாலே எளிதில் நாம் நேரத்தைக் கண்டுகொள்ளலாம்.

Friday, July 2, 2010

மரணம் - சில சிந்தனைகள்

"விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்" என்று வேதம் கூறுகிறது. ஆனால் எனக்கு இந்த இரு இடங்களுக்கும் போவது சற்று அலர்ஜியான காரியமாகவே இருந்து வந்திருக்கிறது. சிறுவயது முதலே கூட்டத்தை கண்டால் விலகி இருக்கவே விரும்புவேன். அதிலும் துக்க வீட்டிற்குச் சென்றால் எல்லாரும் சோகமாகவும் கண்ணீருடனும் இருக்கும்போது என்னையுமறியாமல் அழுது விடும் காரணத்தால் அங்கே செல்வதையும் தவிர்த்து விடுவேன்.

மேலும் நம்மூர்களில் துஷ்டி வீடுகளில் துக்கம் விசாரித்தல் என்பது எல்லாரும் பின்பற்றும் ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. ஒருவர் மரித்த பின் அவர் எப்போது, எப்படி மரித்தார்? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, வாழும்போது அவர் நல்லவராகவே வாழ்ந்தார் என்ற நற்சாட்சியை கொடுத்து துக்கமாக இருப்பவர்களை தேற்றுவார்கள். அதுவுமல்லாது ஒருவர் மரித்துவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டால், அழைப்பு இல்லாமலேயே அங்கே அனைவரும் (பகை உள்ளவர்கள் கூட) செல்வர், அந்த வீட்டாரின் துக்கத்தில் பங்கு கொள்வர். ஆனால் இதிலும் எனக்கு நீண்ட காலமாக ஒரு தவறான கருத்து இருந்துவந்தது. நாம் துக்கம் விசாரிக்கும்போது அவர்களின் துக்கம் அதிகரிக்கத்தானே செய்யும் என்கிற கருத்தை உடையவனாயிருந்தேன். காரியம் அறியாத மூடனாகவே இருந்திருக்கிறேன். ஆனபடியால்தான் எனக்கு மிகவும் பிரியமான சகோ.பேதுரு அவர்களின் சகோதரன் மரித்த போது வெகுகாலம் அவர்களிடம் பேசுவதைக் கூட தவிர்த்தேன். நான் அது பற்றி விசாரித்தால் அவர்களின் துக்கம் அதிகரித்துவிடுமே என்று அஞ்சினேன் (எவ்வளவு மதியீனம் பாருங்கள். சகோதரன் என்னை மன்னிப்பாராக) இவவாறு எனது கருத்துக்களினால் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு பின்பு வருந்துவதே எனக்கு வேதனையாக இருக்கிறது.

துக்கவீடுகளில் எல்லாம் எடுத்துக்காட்டப்படும் வசனங்களில் ஒன்று, ”விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.” (பிரசங்கி 7:2). துக்க வீட்டுக்குச் செல்கிறவன் சிந்திப்பான் என்று வசனம் கூறுகிறது. நானும் இப்போது ஒரு துக்க வீட்டில் இருக்கிறேன் ஆகையால் சற்று சிந்திக்கிறேன்.

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதலாம் அற்புதம் ஒரு கல்யாண விருந்திலே ஆரம்பித்தது. ஆனால் அதற்கப்புறம் அவர் கல்யாண விருந்துக்குச் சென்றதாக வேதம் கூறவில்லை. அதேவேளையில் இயேசு சாவு நிகழ்ந்திருந்த பல வீடுகளுக்குச் சென்றதாக வேதம் நமக்கு கூறுகிறது.
 
1.மரித்துப் போன யவீருவின் மகளை இயேசு உயிரோடே எழுப்பினார். அங்கே இயேசு சொன்ன வார்த்தை “ ’தலீத்தாகூமி’சிறு பெண்ணே எழுந்திரு.”
2. விதவையின் மரித்துப் போன வாலிப மகனை பாடையைத் தொட்டு உயிரோடே எழுப்பினார்.
3. மரித்து நான்கு நாட்கள் ஆன லாசருவை கல்லறையிலிருந்து, “லாசருவே வெளியே வா” என்று கூறி அவனை உயிரோடே எழுப்பினார். (லாசருவிற்குதான் உலகத்தில் இரண்டு கல்லறைகள்)

எல்லாவற்றிற்கும் மேலாக லாசருவின் வீட்டிற்குச் செல்லும் போது இயேசு கண்ணீர் விட்டார் என்றும் வேதம் கூறுகிறது. லாசருவை உயிரோடே எழுப்புவதற்கு முன் இயேசு அவர்களின் துக்கத்திலே பங்கு கொண்டதை நாம் காண்கிறோம். “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்றுதானே வேதம் நமக்குக் கூறுகிறது (ரோமர் 12:15). நம் துக்கத்தில் இயேசுவும் கலந்து கொள்கிறார் என்பதே எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது.

ஆதியிலே ஏதேனின் மனிதன் பாவம் செய்த போது மரணமானது மனிதனுடைய வாழ்க்கையில் பிரவேசித்தது. அங்கே பாவம் செய்த போது, நடந்ததை மூன்று வகைப்படுத்தலாம்.
1. உடனடி ஆவிக்குரிய மரணம் - Immediate Spritual Death (தேவனுடம் தொடர்பு துண்டிக்கப்படுதல்)
2. படிப்படியான சரீர மரணம் - Gradual physical Death
3. நித்திய மரணம் - Ultimate Eternal Death

“பாவத்தின் சம்பளம் மரணம்” என்றாலும் கூட “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” பாவம் செய்து ஆத்துமாவிலும் சரீரத்திலும் மரித்து நித்தியத்தை இழந்த மனிதனுக்காகவே இயேசு இந்த பூமிக்கு வந்தார். தம்மையே தந்தார். நம்மையும் உயிர்ப்பித்தார். மரித்தவர்களைக் குறித்த உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும் தாம் உயிர்த்து நம்மிடம் விதைத்திருக்கிறார். ஆகவே ஒரு கிறிஸ்தவன் மரணத்தை கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.”

உயிரோடிருக்கிற நாம் நம் முடிவைக் குறித்து சிந்திக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது. சமீபத்தில் இராபர்ட் ஏனன் என்பவரைக் குறித்து வாசித்தேன். அவர் சீக்கிரம் மரித்துவிடுவார் என்பதை தேவன் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இத்தனைக்கு அவர் நல்ல திடகாத்திரமான வாலிபர். நோயாளி இல்லை. ஒரு நாள் அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது அன்று சற்று விநோதமாக ஒரு சாக்பீஸை எடுத்து தன் வீட்டு கதவில் மரணம் என்று எழுதினார். வெளியே வாசலில் “பரலோகம்” என்று எழுதிவிட்டு சென்றார். சென்ற இடத்தில் அவர் மரித்தும் போனார். பாருங்கள். நாம் மரிக்கும் போது எங்கே செல்வோம் என்கிற நிச்சயமுள்ளவர்களாக இருக்கிறோமா? ஒரு பரிசுத்தவான் தன் மரணப்படுக்கையில் இப்படியாகச் சொன்னார், “நான் இங்கே கண்களை மூடுவேன், விழிக்கும்போது பரலோகத்தில் இருப்பேன்” இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. மரணம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் உயிர்த்தெழுதலானது மறுபிறப்பின் அனுபவம் உடையவர்களுக்கு மாத்திரமே!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது” என்பதை பறை சாற்றியது. உலகப்பிரகாரமாக எவரும் சீக்கிரம் மரிக்க விரும்ப மாட்டார்கள். யாவருமே மரணத்தருவாயில் ஒரு போராட்டத்திற்கு பின்பே பெரும்பாலும் தங்கள் உலக ஓட்டத்தை முடிக்கின்றனர். ஆனால் நாம் மரணத்திற்கு பயப்படுகிறவர்களாக இருக்கக் கூடாது. தேவனுக்கே பயப்படவேண்டும். மரணத்தைப் பார்த்து, “மரணமே உன் கூர் எங்கே?” என்று சவாலிடத்தக்கவர்களாக இருக்கவேண்டும். “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” தேவனுக்கு மாத்திரம் பயப்படுகிறவர்கள் வேறு எதற்கும் அது மரணமானாலும் கூட பயப்பட மாட்டார்கள்.

தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களும் மரணத்திற்கு பயப்பட மாட்டார்கள். “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”

எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ஒருவர் மரிக்கும் தருவாயில் தனது கடைசி ஆசையாக இப்படிச் சொன்னார்: “நான் மரித்த பின்பு, எனது மரணத்திற்காக யாரும் துக்கப்பட கூடாது, மாறாக கர்த்தருக்குள் மரித்தார் என்று மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். ஊரெங்கும் இரங்கல் அஞ்சலி சுவரொட்டிகளுக்குப் பதிலாக நான் கர்த்தருக்குள் மரித்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுதான் அச்சிட வேண்டும் என்று கூறினார். அது போலவே செய்தார்கள். நமக்கு இது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா! சிலருக்கு பைத்தியக்காரத்தனமாகக் கூட தோன்றும். கிறிஸ்தவர்கள் மரிக்கும் போது அவர்களைப் பிரிபவர்களுக்கு நிச்சயம் வேதனை வருத்தம் இருக்கும். ஆனால் மரிப்பவருக்கு அதுவே பரமானந்தத்தின் நித்திய துவக்கம். இப்படிப்பட்ட நம்பிக்கை நமக்கு இருக்கிற படியால் நாம் மற்ற உலகத்தார் போல துக்க முகமாய் இருக்க வேண்டியதில்லை. இப்போது உயிரோடிருக்கிற நாமும் அவர்களுடன் ஒரு நாள் சேர்ந்து கொள்வோம். (1 தெசலோனிகேயர் 4:13-18)

பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம் என்று வேதம் 1 கொரிந்தியர் 15:26ல் கூறுகிறது. நமது இயேசு மரணத்தை ஜெயித்தார். நாமும் ஜெயிப்போம். இப்போது ஒருவேளை இழப்பினால் நாம் துவண்டு விடலாம். ஆனால் நாம் நித்தியத்தில் சேரும்போது, “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்ற நிலை உண்டாகும். அல்லேலுயா!

நான் வாழாத ஒரு வாழ்வு
நான் சாகாத ஒரு சாவு
இன்னொருவர் வாழ்வு
இன்னொருவர் சாவு
இவையன்றோ என் நித்ய வாழ்வுக்கு ஈடு


இரு முறை மரித்தால்
ஒரு மரணம்
ஒரு முறை மரித்தால்
இரு மரணம்

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.(நீதிமொழிகள் 12:28)
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.(சங்கீதம் 116:15)

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Sunday, June 27, 2010

இயேசுவைப் பின்பற்றவா

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்? - எந்தன்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்?



சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா -நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா



எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்றி வா



ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
.

பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மை பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இரங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன்


தம்பி அண்ணா அழைக்கிறேன் வா, உடன்பிறப்பே ஓடி வா, இரத்தத்தின் இரத்தமே இறங்கி வா என்று அழைக்கும் குரல்களுக்கும், தலைவர்களுக்கும் உலகில் பஞ்சமில்லை. பின்பற்றி எதிர்பார்த்து ஏமாந்து ஒன்றும் மிஞ்சாமல் நொந்து மனம் வெதும்பும் மனிதர்களே உலகில் ஏராளம். ஏமாற்றும் தலைவர்களும் மாற்றம் தராத கொள்கைகளும் உண்டு. எல்லாரும் கொள்கைகளைக் காட்டி, இலட்சியங்களை முன்னிறுத்தி பெரும் மனக்கோட்டை எழுப்பி, எப்படியாவது அடைந்திடலாம் வா என்றழைக்கின்றனர்.

இயேசுவோ ”என்னைப் பின்பற்றி வா” என்றழைக்கிறார். அவர் அழைப்பதிலும் கூட வித்தியாசமானவர். நீங்கள் “பின்பற்றும் படி” நான் மாதிரியை வைத்துப் போகிறேன் என்றார். என்னைப் பின்பற்ற தன்னை(சுயத்தை) வெறுக்க வேண்டும் என்றார். இயேசுவைப் பின்பற்றுவதற்கும் சுயத்தை வெறூப்பதற்கும் என்ன சம்பந்தம்? பின்பற்றுவதற்கு நிபந்தனைகளா? இல்லை. இல்லை. இயேசுவைப் பின் பற்றுதல் என்பதே அவரின் அடிச் சுவடுகளில் நடப்பதுதானே. “உமது சித்தத்தின் படி ஆகக்கடவது” என்று பிதாவின் கரத்தில் தனது சுயத்தை கொடுத்து ஜெயத்தை எடுத்தவரன்றோ நம் இயேசு பெருமான். அதையே நாமும் செய்யவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.
” கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் ஆசைகளையும் அதன் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்”

(இன்னமும் பின்தொடர்ந்து வரும்)

Friday, June 18, 2010

தமிழின் முதல் உரைநடைத்தமிழ் நூல் - கிறிஸ்தவ நூலும் கூட

நாம் பள்ளிக்கல்வி பயிலும் போது தமிழின் முதல் உரைநடைத்தமிழ், முதல் நாவல் (புதினம்) பிரதாப முதலியார் சரித்திரம் என்று படித்திருப்போம். அதற்கு மேல் அதைக் குறித்து பெரும்பாலும் பெரும்பாலானோர்க்கு (எனக்கும்தான்) எதுவும் தெரியாது. அதை எழுதின மாயூரம் வேதநாயகம் குறித்தாவது எதாவது தெரிந்திருக்குமா என்றால் அதுவும் எங்கேயோ கேட்ட குரல்தான். 

தமிழ் செம்மொழி அந்தஸ்தை இந்தியாவில் பெற்று சில வருடங்களே ஆகினும் உலக மொழிகளில் தொன்மையான நூல்களை கொண்ட ஆறே ஆறு நூல்களில் தமிழும் ஒன்று என்பது எவ்வளவு பெருமைக்குரியது. இந்தியாவில் தமிழும் சமஸ்கிருதமும் தொன்மையானவை. ஆனால் சமஸ்கிருதம் பேச்சுமொழி அல்ல. அந்து மந்திரம் ஓதுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுத்துமொழியாகவும் பேச்சுமொழியாகவும் இருந்து சாதனை புரிந்து வருகிறது. அதுவே சிலருக்கு வேதனையாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. தொல்தமிழானது இயற்றமிழ்இசைத்தமிழ்நாடகத்தமிழ் என மூன்று வகைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. உலகில் வேறெந்த மொழிகளிலும் இம்மாதிரியான பகுப்புகள் கிடையாது என மொழியியலார் கூறுகின்றனர். இவ்வகையான சிறப்புகள் தமிழுக்கு இருந்தாலும் பாமரனுக்கும் படிக்காதோருக்கும் புரியும் வண்ணம் தமிழ் நூல்கள் இருக்கவில்லை. இதற்கு காரணம் பேச்சுத்தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் காணப்பட்ட இடைவெளிதான். ஏன் நீங்களே ஏதாகிலும் பழைய செய்யுளை எடுத்து படித்தால் தலையும் புரியாமல் காலும் புரியாமல் திருதிருவென நாம் முழிப்பதே இதற்கு சாட்சி. சாம்பிளுக்கு ஒன்றை தருகிறேன்.

காக்கக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
நோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்குக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா. பாடியவர் - காளமேகப் புலவர்)

என்ன வாசித்துப் பார்த்தீர்களா? நாக்கு சுளுக்கிவிட்டதாநாம் பள்ளிக்கூடத்தில் படித்த இந்த பாடலின் பொருள் எளிமையானதுதான் (தெரிந்தால் அட இவ்வளவுதானா? இதற்கா இந்த பில்டப்பு என்று சொல்லிவிடுவீர்கள்). ஆனால் எல்லாருக்கும் பொருள் புரியாது கற்றறிந்தவர்களே தமிழை ரசிக்க ருசிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. எதுவரைக்கும்உரைநடைத்தமிழ் என்ற ஒன்று வரும் வரைக்கும்.  உரைநடைத்தமிழுக்கான தேவை உணரப்பட்டு வந்தாலும் அதைச் செய்ய எவரும் முன்வருகிலர். ஏனெனில் முன்னைய பாரம்பரியங்களிலிருந்து விடுபட்டு புதிய பாதை போட எவருக்கும் துணிவு இல்லை.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பார் அத்தகைய துணிவு பெற்று தமிழின் முதல் உரைநடை நூல், முதல் புதினம் ஆகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். இந்நூல் பிரதாப முதலியார் என்பவர் தனது சுய சரிதையை சொல்லும் பாங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலைக்குறித்து சொல்லுவதற்கு முன்பு நூலாசிரியர் வேதநாயக்ம் குறித்து கொஞ்சமாவது சொல்ல வில்லை எனில் நான் பெரும் பாவியாவேன். ஏனெனில் தமிழ்கூறும் நல்லுலகில் இவர் குறித்த தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதே! இவர் கிறிஸ்தவர் என்பதினாலோ என்னவோ!
மாயூரத்தில் நீதியரசராக பணியாற்றிய வேதநாயகம் திருச்சி குளத்தூரில் பிறந்தவர். இவரே இந்தியாவின் முதல் இந்திய மற்றும் தமிழ் நீதிபதி ஆவார் என்பது ஒரு ஆச்சரியமான செய்திதான். தமிழுக்காக தமிழ் கிறிஸ்தவர்களும் அயல்தேச மிசனெரி ஊழியர்களும் ஆற்றிய திருத்தொண்டை எவ்வளவுதான் மறைக்க பலர் முயன்றாலும் ஆயிரம் கைகளை வைத்தாலும் ஆதவனை மறைக்க முடியுமோ? என்பதுபோல நம்மவர்களின் படைப்புக்கள் அவர்களின் நல் முயற்சிகளுக்கு சான்றாக உள்ளன.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூல் கதைநாயகன் தனது சுய சரிதையை கூறுமாறு தன்னிலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் இவ்வகைப் படைப்புகள் இன்றளவும் மிகவும் குறைவே. ஆங்கிலமொழியில் தன்னிலை தன்மையிலான படைப்புகள் ஏராளம் உண்டு. தமிழில் மிகவும் குறைவாக இவ்வகையில் படைப்புகள் இருப்பதற்கு முழு நூலையும் தன்னிலையில் எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதன்று.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தலைப்பு நமக்கு வாசிக்கும் விருப்பத்தை அவ்வளவாக தூண்டாவிடினும் நூலின் உள்ளடக்கம் மிகவும் சுவையாகவும் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதாகவும் உள்ளது. இந்த நூலை ஆசிரியர் எழுதக் காரணம் முதல் நாவலை எழுதி புகழ் பெற வேண்டும் என்பதல்ல... ஏனெனில் அவர் ஏற்கனவே மிகவும் புகழ்பெற்றவர், முதல் இந்திய நீதிபதி. தாம் ஏன் எழுதினோம் என்பதைப் பாடலாகவே எழுதி வைத்திருக்கிறார்.
"வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது
செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா!
நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல்
இருக்கிற வரையில் இந்த தேசம் சரியான சீர்திருத்தம் அடையாது
என்பது நிச்சயம்'
பிரதாப முதலியார் சரித்திரம் நூல் வெறும் நாவல் மட்டுமல்ல, பல உலகச் சம்பவங்களையும், தத்துவங்களையும் அதைவிட முக்கியமாம சிறந்த நகைச்சுவைகளையும் உடையதாக உள்ளது. நகைச்சுவை என்பது இன்னாட்களில் திரைப்படங்களில் வருவது போல தனி டிராக்கில் செல்லாமல் கதியினூடேயே பின்னிப்பிணைந்து வருகிறது. உதாரணமாக ..,
“நாங்கள் வந்தபோது எங்கள் வீட்டிற்கு வீட்டிற்கு எதிரேயிருக்கிற மைதானத்தில் கூத்தாடிகள் வேஷம் போட்டுக்கொண்டு, இராம நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்த போது இராமரும், ல்ஷ்மணனும் நகரத்தை விட்டு புறப்பட்டு காட்டுக்குப் போகிற சமயமாயிருந்தது; அப்பொழுது தசரதல் கௌசல்யை முதலான சகல ஜனங்களும் அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். அதை கண்டவுடனே நான் கனகசபையைப் பார்த்து, “ அந்தப் பொல்லாத கைகேசியினாலே இராமர் பட்டத்தை இழந்து மனமுருகி வாழவும் சம்பவித்திருக்கிறதே! இந்த அநியாயத்தை பார்த்துக் கொண்டு நான் சும்மா இருப்பது தர்மமா?என்று கேட்க அவன் “இந்த அக்கிரமத்தை தடுக்க முயற்சிக்காமல் நாம் சும்மா இருப்பது அழகல்ல என்றான். நானும் அவனும் மற்றப்பிள்ளைகளும் எங்கள் கைகளில் இருந்த சிலம்பக் கம்முகளுடன் சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஜனங்களின் தலைமேல் ஏறிமிதித்துக் கொண்டு, நாடகசாலைக்குள்ளே பிரவேசித்துவிட்டோம். அங்கே தன் பிள்ளைக்கு பட்டாபிசேகம் ஆகுமென்கிற அகக்களிப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்த கைகேயியை வளைத்துக் கொண்டு எங்கள் கை சலிக்கிற வரையில் அடித்தோம். அவள் “ பரதனுக்கு பட்டம் வேண்டாம், வேண்டாம்என்று சொல்லிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள். அப்பொழுது கூனி அகப்பட்டிருந்தால் அவளை எமலோகத்துக்கு அனுப்பியிருப்போம். அவளுடைய அதிர்ஷ்ட வசத்தால் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாள்: காட்டுக்குப் போகிற இராமரிடம் நகரத்துக்கு திரும்பும்படிச் சொன்னோம். அவர்  “பிதுர் வாக்கிய பரிபாலனம் (தந்தையின் வாக்கை நிறைவேற்ற) செய்வதற்காக நான் காட்டுக்கு போவது அகத்தியம்”  என்றார். நீர் போனால் காலை ஒடித்துவிடுவோம் என்று வழிமறித்துக் கொண்டு அவருக்கு நியாயத்தை எடுத்துக் காட்டி மெய்ப்பித்தோம். எப்படி என்றால் “ சும்மா இருந்த உம்மை உம்முடைய தகப்பனார் அழைத்து உம்மைப் பட்டங்கொள்ளும்படி சொல்லி, நீரும் அதற்கு சம்மதித்து ஊருக்கு முரசறைவித்த பின், உமக்குக் கொடுத்த இராச்சியத்தை பரதனுக்கு கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டா? அப்படி அவர் கொடுத்தால் அது அசத்தியமல்லவா? உமக்கு பட்டாபிஷேகம் ஆனால்தான் உம் தந்தையாருடைய சத்தியம் நிலைக்கும்.
“என்னே அரசர் இயற்கை யிருந்தவா
தன்னே ரிலாத தலைமகற்கு தாரணியை
முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தாற் பிழையாதோ மெய்யென்பார்
என்று கம்பரும் சொல்லியிருக்கிற படியால், ஊருக்குத் திரும்பும் என்றேன். இராமர் நான் சொன்ன வாய் நியாயத்தைப் பார்க்கிலும், தடியடி நியாயத்துக்கும் பயந்து உடனே நகரத்துக்கு திரும்பினார். நான் வசிட்டர் முதலானவர்களை அழைத்து இராமருக்கு மகுடாபிஷேகம் செய்வித்தேன். இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும் அவருடைய தம்பியும் சீதையும் வனத்துக்குப் போகாமலும், தசரதர் இறவாமலும், இராவணன் சீதையை எடுத்தானென்ற அ அபவாதம் இல்லாமலும் இராவணாதிகளை ராமர் கொலை செய்தாரென்கிற பழிச்சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் ராஜ்ஜியபாராம் தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் பேரை நிலை நிறுத்தினேன்.
ஒரு நாள் எங்கள் குடும்ப வைத்தியர் வீதியில் வருகிறதைக் கண்டு அவர் கண்ணில் படாமல் நான் ஓடி ஒளிந்து கொண்டேன். கனகசபை “ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்?என்று கேட்டான். “நமக்கு சில நாளாய் வியாதி வரவில்லையே! வைத்தியருக்கு கோபமாயிருக்குமென்றூ பயந்து ஒளிந்து கொண்டேன் என்றேன். மறுபடி ஒரு நாள் அந்த வைத்தியர் என்னைக் கண்டு, “ பூர்வீக மனுஷர்கள் எல்லாரும் தீர்க்காயுசாயிருந்தார்கள்; இந்தக் காலத்து மனுஷர்களுக்கு ஆயுசு குறைந்துபோனதற்கு காரணமென்ன?என்றூ கேட்டார். நான் அவ் அரைப் பார்த்து “ பூர்வீகத்தில் வைத்தியர்கள் இல்லாதபடியால் அவர்கள் நீடிய ஆயுசு உள்ளவர்களாயிருந்தார்கள்; இந்தக் காலத்தில் வைத்தியர்கள் அதிகமாயிருப்பதால் ஆயுசு குறைந்து விட்டதுஎன்றேன்.

மேலே சொன்னவை பிரதாப முதலியார் சரித்திரம் நூலில் உள்ள  கடலளவு நகைச்சுவையில் ஒரு துளியே. மேலும் மூட நம்பிக்கைகளுக்கெதிராகவும் பல சிந்திக்கக் கூடிய கருத்துக்களையும் இந்நூலில் நாம் அடிக்கடி காணலாம்.

பிரதாப முதலியார் சரித்திரம் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதை நீங்கள் வாசித்தால்தான் முழுமையான சுவையை நீங்கள் பெற முடியும். வாசிக்க ஆரம்பித்தால், முடிப்பது கடினம். இந்நூலின் மின் பதிப்புக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். வாசித்து மகிழுங்கள்.
Download Link:
http://uploading.com/files/1b3489dd/pirathabamuthailyar.PDF/

இன்னுமதிக தகவல்களுக்கு:

2. ஆண்களுக்குத் தலை பத்தா? வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-1

3.மாயூரம் வேதநாயகர் நாவல் மட்டுமா எழுதினார்?

4.மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள் - வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-3

5. மாமிசம் உண்ணும் பிராமணர்கள்

6. மாயூரம் வேதநாயகரின் சமுதாயப்பணி

7. சாதனையாளர் மாயூரம் வேதநாயகர்

 8. மறக்கப்பட்டாரா மாயூரம் வேதநாயகம் பிள்ளை?

 

 


 

 

 


Tuesday, May 11, 2010

ஆதியாகமம் - வெளிப்படுத்தல் ஒரு ஒப்பீடு

1. ஆதியாகமம்          : வானமும் பூமியிம் படைக்கப்பட்டன. (1:1)
    வெளிப்படுத்தல்  : முந்தின வனமும் பூமியும் ஒழிந்து போயின (21:1)

2. ஆதியாகமம்          : பாழும் வெறுமையுமான பூமி (1:2)
   
வெளிப்படுத்தல்  :  புதிய பூமி (21:1)

3. ஆதியாகமம்          : இருள் மூடியிருந்தது ( 1:2)
   
வெளிப்படுத்தல்  :  இரவே இல்லை(22:5)

4. ஆதியாகமம்          : சூரிய சந்திராதிகள் படைக்கப்பட்டன. (1:14,15) 
   
வெளிப்படுத்தல்  : சூரியன் சந்திரன் தேவையில்லை (21:23)

5. ஆதியாகமம்          : சாத்தான் சுயாதீன மக்களை தண்டிக்கிறான் (3:1-7) 
   
வெளிப்படுத்தல்  :  சாத்தான் எரி நரகத்தில் எறியப்படுகிறான் (20:10)

6. ஆதியாகமம்          : மனிதன் சாத்தானுக்கு அடிமை ஆகிறான். ரோமர் 6:16; ஆதி.3:6) 
      வெளிப்படுத்தல் :  மனிதன் அரசாளுகிறான் (20:4)

7. ஆதியாகமம்           : மனிதன் வெட்கத்தாலும் பயத்தாலும் ஒளிந்து கொள்கிறான்.(3:8,9)
   
வெளிப்படுத்தல்   :  மனிதன் ஆனந்தத்தால் ஆரவாரிக்கிறான் (19:4, 5:10)

8. ஆதியாகமம்           : மனிதன் தேவ சமூகத்தை இழக்கின்றான் ( 3:23)
   
வெளிப்படுத்தல்   :  மனிதன் தேவனோடு கூடவே தங்குகிறான் (21:3)

9. ஆதியாகமம்           : தேவன் மனிதனை துரத்துகிறார் (3:24) 
   
வெளிப்படுத்தல்   :தேவன் மனிதனை அழைக்கிறார் (22:17)

10. ஆதியாகமம்         : மரணம் மக்களை ஆண்டு கொள்கிறது (2:17)
     
வெளிப்படுத்தல் :  மரணமே இல்லை (21:4)

11. ஆதியாகமம்         : சாபம் உலகத்தை பிடிக்கிறது (3:17)
    
வெளிப்படுத்தல்  :  சாபமே இல்லை (22:3) 

12.ஆதியாகமம்          : ஜீவ கனி புசிக்கமுடியாதவாறு விலக்கப்படுகிறது (3:24)
    
வெளிப்படுத்தல்  :  ஜீவ கனி புசிக்க கொடுக்கப்படுகிறது. (22:2) 


Friday, April 16, 2010

கிறிஸ்தவ சபையின் விசுவாசப் பிரமாணங்கள்

இன்று ஆவிக்குரிய சபைகள் செல்வோருக்கு விசுவாசப் பிரமாணங்கள் எந்தளவுக்கு பரிச்சயம் என்பது ? தான். பாரம்பரிய சபைகளில் கூட விசுவாசப் பிரமாணங்கள் பெரும்பாலோனாரால் விசுவாசிக்கப்படுகிறதும் இல்லை, பிரமாணங்களாகவும் இல்லை. வெறுமனே உச்சரிக்கப்படவே செய்கிறது. எத்தனை விசுவாசப் பிரமாணங்கள் என்பது கூட அனேகருக்கு தெரியாது. இக்காலத்தில் விசுவாசப்பிரமாணங்கள் குறித்த அவசியம் என்ன என்ற ? இதை வாசிப்பவருக்கு எழலாம். இக்கால் சபைகளில் வாசிக்கப்படவேண்டும் என்பதற்கால அல்லாது சபையின் அடிப்படை விசுவாசம் என்ன என்பதை சுருக்கமாக அறிந்து கொள்ளவாவது நாம் அவற்றை குறைந்த பட்சம் தெரிந்து கொள்வது நல்லது.

விசுவாசப் பிரமாணங்கள் எத்தனை?

3


அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்
நிசேயா விசுவாசப் பிரமாணம்
அதனாசியஸ் விசுவாசப் பிரமாணம்

அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்:
அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்; பாவ மன்னிப்பும்; சரீரம் உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

(அப்போஸ்தல விசுவாசப் பிரமாணமானது அப்போஸ்தலர்களின் விசுவாசத்தினடிப்ப்டையிலமைந்தது ஆகும். மூல மொழியில் 12 வரிகளில் உள்ளது. ஒவ்வொரு அப்போஸ்தலரும் தம் தம் பங்காக ஒரு வரி எழுதியதாக சொல்லப்படுகிறது)

நிசேயா விசுவாசப் பிரமாணம்
வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.
கர்த்தருமாய் ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும்கூட தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.

(நிசேயா விசுவாசப் பிரமாணம் நிசேயா என்ற இடத்தில் கூடின கிறிஸ்தவ தலைவர்கள் கவுன்சிலில் இயற்றப்பட்டது ஆகும். அக்காலத்தில் சபையில் நிலவி வந்த குழப்ப உபதேசங்களைக் களையும் பொருட்டு நிசேயா கவுன்சில் கூடி ஆராய்ந்து பல முடிவுகளை எடுத்து முடிவில் வெளியிட்ட பிரமாணம் தான் நிசேயா விசுவாசப் பிரமாணம்.)

அதனாசியஸ் விசுவாசப் பிரமாணம்
இரட்சிப்படைய விரும்புகிறவன் எவனோ: அவன் திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசத்தை எல்லாவற்றிலும் முதன்மையாய் பற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த விசுவாசத்தைப் பழுதின்றி முழுமையும் அனுசரியாதவன்: என்றைக்கும் கெட்டுப் போவான் என்பதில் சந்தேகமில்லை.
திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசமாவது: தேவத்துவமுள்ளவர்களை கலவாமலும், தேவத்துவத்தைப் பிரியாமலும்,
ஏகதேவனை திரித்துவமாகவும்: திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்கவேண்டுமென்பதே.
பிதாவானவர் ஒருவர், குமாரனானவர் ஒருவர், பரிசுத்த ஆவியானவர் ஒருவர்.
ஆனாலும் பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்: ஒரே தேவத்தன்மையும் சம மகிமையும் சம நித்திய மகத்துவமும் உண்டு.
பிதா எப்படிப்பட்டவரோ, குமாரனும் அப்படிப்பட்டவர்: பரிசுத்த ஆவியும் அப்படிப்பட்டவர்.
பிதா சிருஷ்டிக்கப்படாதவர், குமாரனும் சிருஷ்டிக்கப்படாதவர்: பரிசுத்த ஆவியும் சிருஷ்டிக்கப்படாதவர்.
பிதா அளவிடப்படாதவர், குமாரனும் அளவிடப்படாதவர்: பரிசுத்த ஆவியும் அளவிடப்படாதவர்.
பிதா நித்தியர் நித்தியர், குமாரனும் நித்தியர்: பரிசுத்த ஆவியும் நித்தியர்.
ஆகிலும் மூன்றி நித்திய வஸ்துக்களில்லை. நித்திய வஸ்து ஒன்றே.
அப்படியே மூன்று அளவிடப்படாத வஸ்துக்களில்லை, மூன்று சிருஷ்டிக்கப்படாத வஸ்துக்களில்லை: சிருஸ்டிக்கப்படாத வஸ்து ஒன்றே, அளவிடப்படாத வஸ்து ஒன்றே.
அப்படியே பிதா சர்வ வல்லவர், குமாரனும் சர்வ வல்லவர்: பரிசுத்த ஆவியும் சர்வ வல்லவர்.
ஆகிலும் மூன்றி சர்வ வல்ல வஸ்துக்களில்லை. சர்வ வல்ல வஸ்து ஒன்றே.
அப்படியே பிதா தேவன், குமாரனும் தேவன்: பரிசுத்த ஆவியும் தேவன்.
ஆகிலும் மூன்று தேவர்களில்லை: தேவன் ஒருவரே.
அப்படியே பிதா கர்த்தர், குமாரனும் கர்த்தர்: பரிசுத்த ஆவியும் கர்த்தர்.
ஆகிலும் மூன்று கர்த்தர்களில்லை: கர்த்தர் ஒருவரே.
அம்மூவரில் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேவனென்றும் கர்த்தரென்றும் அறிக்கையிடவேண்டுமென்று: கிறிஸ்துமார்க்க சத்தியம் கட்டளையிட்டிருக்கிறது போல;மூன்று தேவர்கள் உண்டென்றும், மூன்று கர்த்தர்கள் உண்டென்றும் சொல்லக் கூடாதென்று: திருச்சபைக்குரிய பொதுவான சித்தாந்தம் கட்டளையிட்டிருக்கிறது.
பிதா ஒருவராலும் உண்டாக்கப்பட்டவருமல்ல: சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவருமல்ல.
குமாரன் பிதாவினாலேயே இருக்கிறவர்: உண்டாக்கப்பட்டவருமல்ல, சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவரே.
பரிசுத்த ஆவி பிதாவினாலும் குமாரனாலும் இருக்கிறவர்: உண்டாக்கப்பட்டவருமல்ல, சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவருமல்ல; புறப்படுகிறவரே.
ஆகையால் மூன்று பிதாக்களில்லை, ஒரே பிதாவும்; மூன்று குமாரரில்லை, ஒரே குமாரனும்; மூன்று பரிசுத்த ஆவிகளில்லை, ஒரே பரிசுத்தஆவியும் உண்டு.
அன்றியும் இந்த திரித்துவத்தில் ஒருவரும் முந்தினவருமல்ல, பிந்தினவருமல்ல: ஒருவரில் ஒருவர் பெரியவருமல்ல, சிறியவருமல்ல.
மூவரும் சம நித்தியரும்: சரிசமானருமாம்.
ஆதலால் மேற்சொல்லியபடி, எல்லாவற்றிலும்: ஏகத்துவத்தை திரித்துவமாகவும், திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்க வேண்டும்.
ஆனபடியால், இரட்சிப்படைய விரும்புகிறவன்: திரித்துவத்தைக் குறித்து இப்படி நினைக்க வேண்டும்.
மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மனுஷாவதாரத்தைக் குறித்து சரியானபடி விசுவாசிப்பதும்: நித்திய இரட்சிப்படைவதற்கு அவசியமாயிருக்கிறது.
நாம் விசுவாசித்து அறிக்கையிடுகிற சரியான விசுவாசமாவது, தேவ குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்து: தேவனும் மனுஷனுமாய் இருக்கிறார்.
உலகங்கள் உண்டாவதற்கு முன்னே அவர் ஜெனிப்பிக்கப்பட்டு, பிதாவின் தன்மையுடைய தேவனாகவும்: உலகத்தில் பிறந்த தம்முடைய தாயின் தன்மையுடைய மனுஷனாகவும் இருக்கிறார்.
குறைவற்ற தேவனாயும்: பகுத்தறிவுடைய ஆத்துமாவும் நரதேகமும் பொருந்திய குறைவற்ற மனுஷனாயும் இருக்கிறார்.
தேவத்தன்மையின் படி பிதாவுக்கு சரியானவர்: மனுஷ்த்தன்மையின் படி பிதாவுக்குத் தாழ்ந்தவர்.
அவர் தேவனும் மனுஷனுமாயிருந்து: இருவராயிராமல், கிறிஸ்து என்னும் ஒருவராகவே இருக்கிறார்.
தேவத்தன்மை மனுஷத்தன்மையாய் மாறினதினாலேயல்ல: தெய்வத்தில் மனுஷத்தன்மையை சேர்த்துக் கொண்டதினாலேயே ,ஒருவராயிருக்கிறார்.
இரண்டு தன்மையும் கலந்ததினாலேயல்ல: ஒருவராகப் பொருந்தினதினாலே, முற்றூம் ஒருவராயிருக்கிறார்.
பகுத்தறிவுடைய ஆத்துமாவும் சரீரமும் பொருந்தி, ஒரே மனுஷனாயிருப்பது போல: தேவனும் மனுஷனும் பொருந்தி ஒரே கிறிஸ்துவாயிருக்கிறார்.
அவர் நமக்கு இரட்சிப்புண்டாக பாடுபட்டு: பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்.
அவர் பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க திரும்ப வருவார்.
அவர் வரும்பொழுது, சகல மனுஷரும் தங்கள் சரீரங்களோடு எழுந்து: தங்கள் கிரியைகளைக் குறித்து க்ணக்கு ஒப்புவிப்பார்கள்.
நன்மை செய்தவர்கள் நித்திய ஜீவனையும்: தீமை செய்தவர்கள் நித்திய அக்கினியையும் அடைவார்கள்.
திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசம் இதுவே. இதை ஒருவன் உண்மையாக விசுவாசியாவிட்டால் இரட்சிப்படையான்.
பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்: மகிமையுண்டாவதாக.
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

(அதநாசியஸ் விசுவாசப் பிரமாணம் அதநாசியஸ் என்பவரால் எழுதப்ப்ட்டது என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வேத பண்டிதர்கள் இதை எழுதியது அதநாசியஸ் என்று கூறுவதில்லை. எனினும் இப்பிரமாணம் விஸ்தீரணமாக இருப்பது இதன் சிறப்பு. இதனாலேதானோ என்னவோ அனேகர் இதை அறிந்திருப்பதுமில்லை, பாரம்பரிய சபைகளில் பயன்படுத்துவதுமில்லை.)

கடைசியாக விசுவாசப்பிரமாணங்களை விசுவாசம் இல்லாமல் சொல்லி என்ன பிரயோஜனம், கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை எதற்கு. பேச்சில் அல்ல செயலில் காட்டப்படும் விசுவாசமும் கிறிஸ்தவமுமே இன்றைய தேவை.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Saturday, March 20, 2010

கிறிஸ்தவர்களை ஆட்டிப்படைக்கும் எண்கள்

யுமராலஜி பார்ப்பவர்கள் மட்டும்தான் எண்களைக் குறித்து கவலைப்படுவார்கள் என்று நினைக்கவேண்டாம். நாங்களும் அக்கூட்டத்தில் உண்டு என்று சத்தமின்ன்றி உரைக்கும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமுண்டு. சோதிடம், எண்ணியல் போன்றவற்றில் நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களைப் பற்றி நான் கூறவில்லை. ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களிடையே இருக்கும் ஒரு காரியம்தான் கட்டுரைக்கான கரு.

இராசிபலன், அதிர்ஷ்டம் போன்றவற்றில் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவர்களிடம் சென்று உங்களுக்கு பிடித்த (அதிர்ஷ்ட அல்லது இராசியான) எண் எது என்று கேட்டால் (பெரும்பாலும்) உடனே வரும் பதில் : 7, 3 அல்லது 777 , 333 . மேற்கண்ட எண்களில் ஏதாவது ஒன்றைத்தான் கிறிஸ்தவர்கள் கூறுவர்.

சமீபத்தில் நான் எனது ந்ண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு குட்டி புத்தகம் வாசிக்க கிடைத்தது. எனக்கு குட்டிப் புத்தகங்கள் என்றால் தனியார்வமுண்டு. என் வாசிப்பில் அனேக குட்டி புத்தகங்கள் பல பெரிய குண்டு புத்தகங்களை விட சிறந்தனவாகவும் சீக்கிரம் வாசிக்க ஏதுவாகவும் இருந்திருக்கிற படியால் அவற்றின் மீது தனிப்பாசம். சரி கதைக்கு வருவோம். என் கையில் கிடைத்த அந்த புத்தகம் எதைப் பற்றிய புத்தகம் என்பதற்காக முன்அட்டையை பார்த்த எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அப்புத்தகம் இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஒரு வேத வல்லுநர் எழுதியது. அப்புத்தகத்தில் இல்லை இல்லை அதன் அட்டையில் நான் கண்டது இதுதான்

333 பிதாவின் பரிபூரணம்
444 ஆவியின் பரிபூரணம்
555 குமாரனின் பரிபூரணம்
666 பிசாசின் பரிபூரணம்
777 தேவனின் பரிபூரணம்


இதைப் பார்த்த உடனேயே அப்புத்தகத்த வாசிக்கும் ஆர்வம் தொலைந்து என் மனதில் ஆயிரம் கேள்விகள்தான் எழும்பியது. வேதத்தில் எங்கேயாகிலும் மேற்கூறிய எண்கள் கூறப்பட்டிருக்கிறதா? 666 என்ற இலக்கத்தை மட்டும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்தில் காண்கிறோம். அங்கும் அதுதான் பிசாசின் பரிபூரணம் என்று சொல்லப்படவே இல்லை. எதையாவது வித்தியாசமாக சொல்லவேண்டும் என்று ஏன் இப்படியெலாம் யோசிக்கின்றனர் என்பதுதான் எனது பெரும் யோசனையாக இருந்தது.

வேதத்தில் தேவன் எங்கேயாகிலும் இந்த எண் தான் எனக்கு பிடித்தமான எண். ஆகவே அதை கணக்கிட்டு எனக்கு அதைச் செய் இதைச் செய் என்று கூறினாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

தேவன் நேரடியாக கூறவில்லை ஆனால் சில இடங்களில்
”ஏழுமுறை சுற்றி வா
மூன்று மூன்றாகச் செய் எதைச் செய்தாலும்,
மூன்று சாட்சி, மூன்று நாள், மூன்று காளை, மூன்று தூதர் மூன்று மூன்று என்று வரும் காரியங்கள் பைபிளில் எவ்வளவு இருக்கு தெரியுமா என்று”
அடுக்கும் ஐயாமார்கள் அனேகர் உண்டு.

ஆனால் இவை எல்லாமே வேதத்தில் இருந்தாலும் அவை நமக்கு இராசியான எண்களோ அல்லது அதிர்ஷ்ட எண்களோ அல்ல. நம் விசுவாசம் எண்களில் அல்ல ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்காக பட்ட எண்ணற்ற பாடுகள் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் உள்ளது. (அதிலும் கூட ஆண்டவர் அடைந்த ஏழு பாடுகள் என்று புலம்பல் பாடுபவர்கள் உண்டு. )

இப்படி எண்களை வைத்து பிரசங்கம் பண்ணுதல் அல்லது புத்தகம் எழுதுதல் மக்களுக்கு கவர்ச்சியாகவும் புதுமையாகவும் தோன்றலாம். இன்னும் சொல்லப் போனால் வேதாகமத்தை வைத்து காணிக்கை பார்க்கும் சில ஊழியர்களுக்கு சொல்ல சூப்பரா இருக்கும். ஒரு கிறிஸ்தவ தொலைக்காட்சியில் எப்போது பார்த்தாலும் எங்களுடன் சேர்ந்து மூன்று முறை சொல்லுங்கள் ஏழு முறை சொல்லுங்கள் ஆசீர்வாதத்தை அள்ளுங்கள் என்பன போன்ற இடிமுழக்கங்களை சகிக்கவே முடியவில்லை.

நாம் எவ்வளவுதான் தேறினவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட கிறிஸ்தவ அசட்டுத்தனங்களிலிருந்து விலகி மற்றவரையும் விலக்க முயற்சிப்போமாக. இயேசு சீக்கிரத்தில் வரப் போகிறார். அவர் வரும் போது நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? என்றும் நம்மிடம் விசுவாசம் இருக்கிறதா என்றும் தான் பார்ப்பாரே அன்றி நம்ம விசுவாசி இன்னைக்கு மூன்று முறை தொழுதாரா? ஏழுமுறை தோத்திரம் சொன்னாரா என்பதை ஏறிட்டு கூட பார்க்க மாட்டார். ஆயிரம் தோத்திர பலிக்கு பலியாகி இந்துமத ஆசாரங்கள் போன்று அதை பின்பற்றும் அல்லது மந்திரமென விடாது கூறும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது.


ஆகவே
விழித்திருங்கள்; உலகிற்கு
விலகியிருங்கள்
எச்சரிக்கையாயிருங்கள்
எதிர்த்து நில்லுங்கள் எதிரியை
என்றும் வென்றிடுங்கள்.