ஒரு ஊரில் ஒரு அசூரன் இருந்தானாம். அவனை எப்படியாவது நம்ம ஊருக்குக் கொண்டு வந்துரணும்னு ஒரு அதிகாரி திட்டம் போட்டு குறைந்த செலவிலும் மிகுந்த பாதுகாப்பாகவும் கொண்டு வர ஏற்பாடு பண்ணினார். ஆனால் அந்த அதிகாரியின் போதாத நேரம், அந்த அசூரனைக் கொண்டு வருவதற்கு முன், அவர் இருந்த இடத்தில் வந்த வேறொரு அதிகாரி வந்துட்டார். அந்த புதிய அதிகாரிக்கு அசூரனைப் பற்றியும் தெரியாது, அதை பாதுகாப்பாக கொண்டு வருவது பற்றியும் தெரியாது. மொத்தத்தில் பாதுகாப்புனா என்னன்னு தெரியாதுன்னு வச்சுக்கங்களேன்.
எவரையும் நம்பாத இந்த புது அதிகாரி தானே நேரடியாக அந்த அசூரனின் எஜமானர்களிடம் சென்று, ஒரு புது உடன்படிக்கைப் பண்ணினார். அதில் தன் நண்பர் சுனிலையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டால்தான் உடன்படிக்கை, இல்லையேல் அந்த அசூரனை எங்க ஊருக்கு எடுத்துட்டு போக மாட்டேன்னு அடம்பிடிச்சார். உடனே பயந்து போன அந்த எஜமான், இவருக்கு குல்பி ஐஸ் வாங்கிக் கொடுத்து ஐஸ் வைத்து, ஓ தாராளமா உங்க சுனிலை எங்க கூட சேர்த்துக்கலாம். சுனிலுக்கு நீங்க குடுக்காட்டியும் நாங்க கமிஷன் என்ன, லாபத்திலேயே பங்கு கொடுக்கத் தயார். ஒகே வான்னு கேட்டார் எஜமான். அட, இதை விட வேறேன்ன வேணும்னு நம்ம புது அதிகாரி துள்ளினார்.
“ஆனா ஒரு கண்டிஷன்”, நீங்க முன்பு கேட்ட மாதிரி, கேட்ட விலைக்குக் கொடுக்க மாட்டோம். நாங்க சொல்ற விலைக்கு, எங்களுக்கு எப்ப தோணுதோ அப்பதான் அசூரனை அனுப்புவோம்.” இதற்கு சம்மதிச்சா உடனே ஒரு கமிஷனை உங்க சுனிலுக்குக் கொடுக்குறோம்னு அந்த முதலாளி சொன்னார். இவரும் மார்பை நிமிர்த்து வெற்றிக் களிப்பில் ஊர் திரும்பினார். ஆனால் ஆண்டுகள் கடந்தும், அந்த அசூரன் தான் இன்னமும் ஊர் வந்து சேரவில்லை.
ரொம்ப நாளா அசூரன் வந்து சேரலையே, மக்கள் கேள்வி கேட்பாங்களேன்னு யோசித்த அந்த அதிகாரி, இனிமேல் நானே அந்த அசூரனின் வேலையைப் பார்க்கலாம்னு இருக்கேன். நான் அதிகாரியாக இருந்தாலும், உங்கள் எல்லாருக்கும் பாதுகாவலனாக, உங்களைக் காக்கும் காவலனாக இருப்பேன். நீங்கள் என்னைக் காக்கும் காவலனாக இருப்பீர்களா என்று மக்களிடம் கேட்டு, மக்கள் அனைவரையும் காவல் காக்கும் வேலைக்கு அழைப்பு கொடுத்தார். மக்களில் ஒரு சிலர் அட இந்த அதிகாரி இப்படி அர்ப்பணிப்போடு இருக்கிறாரே, காக்கிச் சட்டைக் காவலனை விட, காக்கி டவுசர் காவலனாகிய இவர்தான் உண்மையான காவலாளி என அவர் சொன்னதற்கு தலையை ஆட்டி, அவருக்கு அவர்கள் ஓ போட்டனர்.