Friday, March 19, 2021

இஸ்ரவேலே, கேள்!

வாசிக்க: உபாகமம் 5, 6; சங்கீதம் 79,  மாற்கு 12:1-27

வேதவசனம்: உபாகமம் 6: 4. இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
5. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.
6. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. 
7. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பே(சு).

கவனித்தல்: உபாகமம் 6:4 முதலான வசனங்கள் யூதர்களின் காலை மாலை ஜெபங்களில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒருவராக இருக்கிற தேவன் மீதான தங்கள் நம்பிக்கையை அவர்கள் தெரிவிக்கும் யூத விசுவாச அறிக்கையின் ஒரு பகுதியாக இவ்வேதபகுதி இருக்கிறது. இது ஷேமா (The Shema) என்று அறியப்பட்டிருக்கிறது.  உபாகமம் 6:4 தேவனுடைய ஒருமையை (அதாவது அவர் ஒருவரே) என்பதையும், தேவனுடைய தனித்தன்மையை (அதாவது, அவருக்குச் சமமானவர்/ஒப்பானவர் எவரும் இல்லை) என்பதையும் வலியுறுத்துகிறது.  இஸ்ரவேலரைச் சுற்றிலும் வாழ்ந்த மக்கள் விக்கிரக வணக்கம் செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கையில், இஸ்ரவேலர்கள் தங்கள் விசுவாசத்தை தேவனுக்கு மாத்திரமே வெளிப்படுத்தவேண்டும். தேவன் ஒருவரே என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் echad  (எகாத்) என்ற வார்த்தையைக் கவனிப்பது மிகவும் சுவராசியத்தைத் தருகிறது. எகாத் என்ற வார்த்தையின் பொருள் தேவன் ஒரே ஒருவர் மாத்திரமே (ஒன்றே ஒன்று மட்டுமே) என்பதாக அல்லாமல், பன்மையில் ஒருமையைக் குறிக்கும் ஒரு வார்த்தையாக அது இருக்கிறது. உபாகமம் 6:5 ஆம் வசனத்தில் இருந்து, வெளியரங்கமாகவும் அந்தரங்கமாகவும் ஒருவர் தன் விசுவாசத்தை செயல்களில் காட்டுவது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவையுள்ள நேரங்களில் நினைவுபடுத்திக் கொள்ளவும், தேவனைப் பற்றி தியானிக்கவும், நாம் தேவனுடைய கற்பனைகளை நம் இருதயத்தில் காத்துக் கொள்ள வேண்டும். தேவனைப் பற்றிய அறிவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது, அவர்களும் தேவனை அறியச் செய்வது மிக முக்கியமானதாகும். நாம் என்ன செய்தாலும், எங்கிருந்தாலும், உட்கார்ந்து அல்லது நடந்து கொண்டிருந்தாலும் , படுத்திருந்தாலும் அல்லது எழுந்திருந்தாலும் நாம் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்துப் பேசலாம்/ பேசவேண்டும். ஆயினும், அது ஒரு சடங்காக செய்யப்படாமல், தேவன் மீது உள்ள அன்புடன் செய்யப்படவேண்டும். 
 
பயன்பாடு:  நான் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது/வாசிக்கும்போது, என் தேவன் யார் என்பதை நான் அறிந்து கொள்கிறேன். அவர் எல்லாவற்றிற்கும் மேலானவர். அவரைப் போல, அவருக்கு ஒப்பானவர் வேறு யாரும் இல்லை. நான் தேவனைப் பற்றி அறிந்து கொள்ளும்போது, அவர் மீதான என் அன்பு என்பது என் இதயம், ஆத்துமா மற்றும் என் கைகளின் இயல்பான வெளிப்பாடாக அது இருக்கிறது. நான் தேவனுடைய வார்த்தைகளை என் இதயத்தில் காத்துக் கொள்ளும்போது, என் வாழ்வில் வரக்கூடிய அனேக ஆபத்துகளில் இருந்து அது என்னைப் பாதுகாக்கிறது.  நான் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும், நான் தேவனுடைய வார்த்தையைக் குறித்து சிந்திக்க்கவும், பேசவும் முடியும்.நான் அதை அனுதினமும் செய்வேன். 

ஜெபம்:  சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் யார் என்பதை எனக்கு வெளிப்படுத்துகிறதற்காக உமக்கு நன்றி. நீரே என் ஆண்டவர், நீரே என் தேவன். உம்மைப் போல யாருண்டு! என் மீட்பரே, உம்மை முழு இருதயத்தோடு நேசிக்கவும்,  வார்த்தைகளில் மட்டுமல்ல, செயல்களிலும் என் அன்பை காண்பிக்க எனக்கு உதவும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Hear, O Israel!

READ: Deuteronomy 5, 6; Psalm 79; Mark 12:1-27

SCRIPTURE: Deuteronomy 6: 4 Hear, O Israel: The Lord our God, the Lord is one.
5 Love the Lord your God with all your heart and with all your soul and with all your strength.
6 These commandments that I give you today are to be on your hearts.
7 Impress them on your children. Talk about them when you sit at home and when you walk along the road, when you lie down and when you get up. 

OBSERVATION: Deuteronomy 6:4-9 plays an important role in the Jewish morning and evening prayers. It is a part of Jewish faith declaration of their belief in one God, which is known as "The Shema." Deut. 6:4 emphasizes God's unity (i.e. he is one) and God's uniqueness (i.e. there is no equal to him). While the people who lived around the Israelites were into idol worship and had polytheistic beliefs, Israelites were to express their allegiance to God alone.  It is interesting to see the Hebrew word echad that is used to express the unity of God. The word Echad refers the uniplurality of God, not the absolute oneness. From Deut.6:5 onwards, an instruction for a child of God is given to show his faith in action, both internally and outwardly. To remember in times of need and to meditate on God, we should keep God's commandments in our heart. It is very important to pass on the knowledge of God to the next generation so that they too can know God. Whatever we do, whether we sit or walk, lie down or get up, we can/should talk about God's words. However, it should be done  with Love, not as a ritual.

APPLICATION: When I hear God's word, I understand who my God is! He is the LORD! He sovereigns over everything. There is none like him. When I know about God, my love for him is a natural expression of my heart, soul and hands. When I keep God's words in my heart, it saves me from many dangers that could come along in my life. No matter what I do or where I am, I can think and talk about the Word of God. I will do it everyday.

PRAYER: Almighty God, thank you for revealing  me who you are! My God and my Lord, there is none like you. My redeemer, help me to love you wholeheartedly and to express my love in actions, not just in words.  Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

நான் ஜெபிக்கும்போது நினைவில் கொள்ளவேண்டிய இரண்டு காரியங்கள்

 வாசிக்க: உபாகமம் 3, 4; சங்கீதம் 78,  மாற்கு 11:20-33

வேதவசனம்: மாற்கு 11: 24. ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
25. நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

கவனித்தல்:  மேலே காணும் வேதபகுதியானது ஜெபம் பற்றிய இரண்டு முக்கியமான பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. முதலாவதாக, நாம் ஜெபங்களில் எதையாகிலும் தேவனிடம் கேட்கும்போது, நாம் அதைப் பெற்றுக் கொண்டோம் என்று விசுவாசிக்க வேண்டும். பின்னர் அதை உடையவர்களாக நாம் இருப்போம். அனேக நவீன கால “விசுவாச வார்த்தை” மற்றும் "மிஞ்சின கிருபை” போதகர்கள் தங்கள் விளக்கங்களை இந்த வசனத்திற்குக் கொடுத்து அனேகரை தவறாக வழிநடத்துகிறார்கள். நம் ஜெபங்களுக்காகக் காத்திருந்து, நாம் கேட்டவுடன் அதை செயல்படுத்தும் ஒருவரல்ல நம் தேவன். நம் சுயநல இருதயத்தில் இருந்து வரும் கட்டளை ஜெபங்களை உடனே செயல்படுத்த, அவர் ஒரு தானியங்கி இயந்திரமோ அல்லது இயந்திர மனிதனோ (ரோபோ) அல்ல.  மாற்கு 10 ஆம் அதிகாரத்தில், ”எதைக்கேட்டாலும்” என்ற கோரிக்கையுடன் வந்த சீடர்களுக்கு இயேசு என்ன செய்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.இங்கே மாற்கு 11:24 ல், ”எவைகள்” என்ற வார்த்தை நாம் விரும்புகிற எதைவேண்டுமானாலும் தேவனிடம் கேட்கலாம் என்பதைக் குறிக்கவில்லை. அப்படி பொருள் தருமெனில், அது உலகப் பொருள்களுக்கு முதலிடம் கொடுக்கும் கருத்தியல் சிந்தனைக்கு (materialism)  அழைத்துச் செல்வதாக இருக்கும். நாம் பேராசைப்படுபவைகளுக்கு அல்ல, நமக்குத் தேவையானவைகளைக் குறித்து ஜெபிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறோம். ஒருவரின் பேராசையை எதுவும் திருப்தி செய்யாது. நாம் தேவனுடைய வார்த்தை மற்றும் சித்ததிற்கேற்ப ஜெபிக்கும்போது, நாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்க முடியும், பின்னர் தேவனுடைய வேளையில் உடையவர்களாகவும் இருப்போம். ஜெபம் செய்ய இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார். ஏனெனில், அவர் நம்முடன் உறவாட/உரையாட விரும்புகிறார். 

இரண்டாவதாக, நாம் ஜெபிக்கும்போது, நமக்கு விரோதமாக காரியங்களைச் செய்த மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறோம். அனேக கிறிஸ்தவர்கள் நடைமுறையில் இது சாத்தியமற்றது என நினைக்கிறார்கள். நான் எப்படி இதைச் செய்ய முடியும், ஏன் செய்யவேண்டும், நான் என்ன தவறு செய்தேன் என்பன போன்ற பல கேள்விகளை அவர்கள் கேட்கிறார்கள். பழிவாங்கல் மற்றும் கசப்பு காரணமாக, தங்களால் மன்னிக்க முடியாத நபர்களுக்கு எதிராக சிலர் ஜெபிக்கவும் செய்கிறார்கள். நீங்கள் பரலோகத்தில் இருந்து மன்னிப்பைப் பெற விரும்பினால், மற்றவர்களை மன்னியுங்கள் என்று இயேசு இங்கே சொல்கிறார். எவருக்கும் விரோதமாக எதையும் மனதில் வைக்க வேண்டாம். மன்னிக்கமுடியாத தன்மை என்பது உண்மையில் நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற ஒரு சுய தண்டனை ஆக இருக்கிறது. நாம் மற்றவர்களை மன்னியாமல் இருக்கிற காலம் வரைக்கும், நாம் மன்னியாமல் இருக்கிற மனிதர்களைப் பார்க்கிலும் நாம் தான் அதிக வேதனைகளை அனுபவிக்கிறவர்களாக இருக்கிறோம். தேவன் நம் பாவங்களை மன்னிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கும்போது, நமக்கு விரோதமாக மற்றவர்கள் செய்த சிறிய பாவங்களை அல்லது காரியங்களை நாம் மன்னிக்க வேண்டும் என தேவன் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. மற்றவர்களை மன்னித்தல் என்பது உண்மையில் நம்மை அழுத்துகிற அனேக காரியங்களில் இருந்து நம்மை விடுவிக்கிறதாகவும், தேவனுடைய மன்னிப்பு, மகிழ்ச்சி மற்றும் மனச்சமாதானம் ஆகியவைகளை பெற்றனுபவிக்க உதவுகிறதாகவும் இருக்கிறது. 
 
பயன்பாடு: நான் ஜெபிக்கும்போது, தேவன் விரும்புகிறது எதுவோ அதை அவர் எனக்குத் தரும்படி நான் கேட்பேன். நான் தேவனுடைய இருதயத்தையும், விருப்பங்களையும் புரிந்து கொள்ள தேவனுடைய வார்த்தை எனக்கு உதவுகிறது. எனக்கு எதிரான ஒரு நபர் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் கூட, நான் அவரை மன்னிக்க தயாராக இருப்பேன். நான் மற்றவர்களை மன்னிக்கும்போது, தேவன் அதைக் கண்டு, என்னை மன்னிப்பதன் மூலம் என் செயலை கனப்படுத்துகிறார். இந்த இரண்டு காரியங்களையும் நான் செய்யும்போது, என் ஜெபங்களை தேவன் ஏற்றுக் கொள்கிறார் என்ற என் நம்பிக்கையை அது அதிகரிக்கிறது.

ஜெபம்:  இயேசுவே,  ஜெபம் பற்றிய இந்த அருமையான விலைமதிப்பற்ற இரண்டு முத்துக்களுக்காக உமக்கு நன்றி. ஜெபத்தில் நான் எதையும் சரியாகக் கேட்கவும், எவ்வித வெறுப்புமின்றி மற்றவர்களை மன்னிக்கவும் எனக்கு உம் ஞானத்தையும் பலத்தையும் தாரும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Two Things to Remember when I Pray

READ: Deuteronomy 3, 4; Psalm 78; Mark 11:20-33

SCRIPTURE: Mark 11: 24 Therefore I tell you, whatever you ask for in prayer, believe that you have received it, and it will be yours.
25 And when you stand praying, if you hold anything against anyone, forgive them, so that your Father in heaven may forgive you your sins.”

OBSERVATION: The above scripture passage teaches us two important lessons about prayer. Firstly, when we ask something in our prayers to God, we need to believe that we have received it. Then we will have it. Many modern day "Word of Faith" and "Hyper Grace" preachers give their own interpretations to this verse and mislead many Christians. Our God is not someone who just waits for our prayers to execute our words immediately. He is not a vending machine or a Robot to act upon our commanding prayers of our selfish heart. In Mark 10, we already saw what Jesus did to his disciples who came with a demand of "whatever we ask." Here in Mark 11:24, the word  "whatever" does not mean that we can ask God whatever we want. If so, it would lead to materialism. We are expected to pray for what we need, not what we greed. Nothing satisfies one's greediness. When we pray in line with God's word and will, we can believe that we received, and will have it  in HIS time. Jesus encourages us to pray, for he loves to commune with us.

Secondly, when we pray, we are expected to forgive others who did things against us. Many Christians think that it is practically impossible. They ask questions like, how can I, why, what wrong I did, and so on. In vengeance and bitterness, some even pray against the people whom they find it hard to forgive. Here, Jesus tells us that if you want to receive forgiveness from heaven, forgive others. Do not hold anything against anyone. Unforgiveness is actually a painful self-punishment. As long as we do not forgive others, it is we who experience  more pains than the people we did not forgive. When we expect God to forgive our sins, what is wrong for God to expect us to forgive the petty sins or things that others committed against us. Forgiving people is actually set us free from many pressing things and helps us to experience God's forgiveness, joy and peace. 

APPLICATION: When I pray, I will ask God to give me whatever he desires. The word of God helps me to understand his heart and desires. Even if a person who is against me does not ask for a forgiveness, I will be ready to forgive him/her. When I forgive others, God sees it and honors it by forgiving me. When I do this two, it increases my confidence of God's acceptance of my prayers.

PRAYER: Jesus, thank you for these two wonderful pearls regarding prayer. Give me your wisdom and strength to ask "whatever" rightly in prayer, and to forgive others without any grudge. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Thursday, March 18, 2021

ஒரு கனியற்ற மரத்தின் அழிவு

  வாசிக்க: உபாகமம் 1, 2; சங்கீதம் 77,  மாற்கு 11:1-19

வேதவசனம்: மாற்கு 11: 13. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே (இயேசு)  கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
14. அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

கவனித்தல்:  இயேசு அத்திமரத்தில் கனி கிடைக்குமா என்று தேடிப் பார்த்தது, எருசலேம் தேவாலயத்திற்கு அவர் செல்வதற்கு முன் நிகழ்ந்த பீடிகையான ஒரு செயல் ஆகும். அத்தி மரம் இலைகள் நிறைந்து இருக்கும்போது வழக்கமாக அதில் கனிகள் அதிகம் இருக்கும். இங்கே, இந்த மரம் ஒரு விதிவிலக்காக இருக்கிறது.  தொலைவில் இருந்து பார்க்கும்போது அது கனி நிறைந்த மரம் போல காட்சியளித்தது. ஆனால், இயேசு அருகில் வந்து பார்த்தபோது, இலைகளைத் தவிர வேறொன்றுமில்லை. இலைகள் நிறைந்த அந்த மரத்தின் கனியற்ற தன்மை குறித்து இயேசு ஏமாற்றமடைந்திருக்க வேண்டும். அந்த மரம் பற்றி இயேசு சொன்னதை அவருடைய சீடர்கள் கேட்டனர். பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசிகள் தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனை பற்றி தீர்க்கதரிசனம் சொல்லும்போது இஸ்ரவேலர்களை அத்திமரத்துடன் ஒப்பிட்டனர் ( உதாரணமாக, எரே.8:13, ஓசியா 9:10). இயேசு எருசலேம் தேவாலயத்தில் வந்த போது, அந்த இடத்தின் பரிசுத்தக் குலைச்சலை அவர் பார்த்தார். தேவனை அறியாத புறஜாதியார் தேவனைத் தொழுதுகொள்ள அனுமதிப்பதற்குப் பதிலாக, ஆராதனை மற்றும் ஜெபத்திற்கான அந்த இடத்தை யூதர்கள்  ஒரு வியாபார மையமாக மாற்றி இருந்தனர். எருசலேம் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் பின்னாட்களில் எப்படி நிறைவேறியது என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. 
 
பயன்பாடு: வெளித்தோற்றத்தில் நான் என்னை மற்றவர்களுக்கு எப்படி காண்பிக்கிறேன் என்பதைக் குறித்து நான் கவலைப்படுகிறவனாக இருக்கக் கூடும். ஆனால், இயேசுவோ, நான் கனிதருகிற ஒரு நபராக இருப்பதைக் காண விரும்புகிறார். என்னில் இலைகளைத் தவிர வேறெதையும், அதாவது எந்தக் கனியும் என்னில் காணப்படவில்லை எனில், நான் இயேசுவுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கிறவனாக இருக்கிறேன்.  கனியுள்ள ஒரு நபராக நான் இருப்பதற்கு, தேவனுடைய வார்த்தையை நான் தியானித்து, அதன்படி வாழவேண்டும் (சங்.1). இயேசுவின்  சீடராகிய நான், இயேசு அந்த கனியற்ற அத்தி மரத்தைப் பற்றி சொன்னதை நான் கேட்கிறேன். நான் இலைகளைக் குறித்து அல்ல, கனிகளைக் குறித்த கரிசனையுள்ளவனாக இருப்பேன். 

ஜெபம்:  இயேசுவே, நான் உமக்கு கனிதருகிறவனாக இருக்க வேண்டும் என்று நினைவுபடுத்துவதற்காக உமக்கு நன்றி. ஒரு உண்மையான சீடராக வாழ்ந்து, உம் அன்பைக் காண்பிக்கவும், மற்றவர்களுடன் கனியுள்ள வாழ்க்கையை நான் பகிர்ந்து கொள்ளவும்  எனக்கு உதவும். உமக்காக அதிகக் கனிகளைத் தருவதற்கு, நான் உம்மில் நிலைத்திருக்க எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573