Thursday, March 18, 2021

ஒரு கனியற்ற மரத்தின் அழிவு

  வாசிக்க: உபாகமம் 1, 2; சங்கீதம் 77,  மாற்கு 11:1-19

வேதவசனம்: மாற்கு 11: 13. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே (இயேசு)  கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
14. அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

கவனித்தல்:  இயேசு அத்திமரத்தில் கனி கிடைக்குமா என்று தேடிப் பார்த்தது, எருசலேம் தேவாலயத்திற்கு அவர் செல்வதற்கு முன் நிகழ்ந்த பீடிகையான ஒரு செயல் ஆகும். அத்தி மரம் இலைகள் நிறைந்து இருக்கும்போது வழக்கமாக அதில் கனிகள் அதிகம் இருக்கும். இங்கே, இந்த மரம் ஒரு விதிவிலக்காக இருக்கிறது.  தொலைவில் இருந்து பார்க்கும்போது அது கனி நிறைந்த மரம் போல காட்சியளித்தது. ஆனால், இயேசு அருகில் வந்து பார்த்தபோது, இலைகளைத் தவிர வேறொன்றுமில்லை. இலைகள் நிறைந்த அந்த மரத்தின் கனியற்ற தன்மை குறித்து இயேசு ஏமாற்றமடைந்திருக்க வேண்டும். அந்த மரம் பற்றி இயேசு சொன்னதை அவருடைய சீடர்கள் கேட்டனர். பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசிகள் தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனை பற்றி தீர்க்கதரிசனம் சொல்லும்போது இஸ்ரவேலர்களை அத்திமரத்துடன் ஒப்பிட்டனர் ( உதாரணமாக, எரே.8:13, ஓசியா 9:10). இயேசு எருசலேம் தேவாலயத்தில் வந்த போது, அந்த இடத்தின் பரிசுத்தக் குலைச்சலை அவர் பார்த்தார். தேவனை அறியாத புறஜாதியார் தேவனைத் தொழுதுகொள்ள அனுமதிப்பதற்குப் பதிலாக, ஆராதனை மற்றும் ஜெபத்திற்கான அந்த இடத்தை யூதர்கள்  ஒரு வியாபார மையமாக மாற்றி இருந்தனர். எருசலேம் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் பின்னாட்களில் எப்படி நிறைவேறியது என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. 
 
பயன்பாடு: வெளித்தோற்றத்தில் நான் என்னை மற்றவர்களுக்கு எப்படி காண்பிக்கிறேன் என்பதைக் குறித்து நான் கவலைப்படுகிறவனாக இருக்கக் கூடும். ஆனால், இயேசுவோ, நான் கனிதருகிற ஒரு நபராக இருப்பதைக் காண விரும்புகிறார். என்னில் இலைகளைத் தவிர வேறெதையும், அதாவது எந்தக் கனியும் என்னில் காணப்படவில்லை எனில், நான் இயேசுவுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கிறவனாக இருக்கிறேன்.  கனியுள்ள ஒரு நபராக நான் இருப்பதற்கு, தேவனுடைய வார்த்தையை நான் தியானித்து, அதன்படி வாழவேண்டும் (சங்.1). இயேசுவின்  சீடராகிய நான், இயேசு அந்த கனியற்ற அத்தி மரத்தைப் பற்றி சொன்னதை நான் கேட்கிறேன். நான் இலைகளைக் குறித்து அல்ல, கனிகளைக் குறித்த கரிசனையுள்ளவனாக இருப்பேன். 

ஜெபம்:  இயேசுவே, நான் உமக்கு கனிதருகிறவனாக இருக்க வேண்டும் என்று நினைவுபடுத்துவதற்காக உமக்கு நன்றி. ஒரு உண்மையான சீடராக வாழ்ந்து, உம் அன்பைக் காண்பிக்கவும், மற்றவர்களுடன் கனியுள்ள வாழ்க்கையை நான் பகிர்ந்து கொள்ளவும்  எனக்கு உதவும். உமக்காக அதிகக் கனிகளைத் தருவதற்கு, நான் உம்மில் நிலைத்திருக்க எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: