Tuesday, March 2, 2021

மும்மடங்கு ஆசீர்வாதம்

வாசிக்க: எண்ணாகமம் 5, 6; சங்கீதம் 61;  மாற்கு 3:1-19

வேதவசனம்: எண்ணாகமம் 6:22. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 23. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
24. கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
25. கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
26. கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
27. இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.

கவனித்தல்:  இங்கே நாம் காணும் வேதபகுதியானது நமக்கு நன்கு பரிட்சயமானது ஆகும். இந்த  ஆசீர்வாதமானது நம் ஆராதனைகளிலும் கூடுகைகளிலும் அடிக்கடிக் கேட்கும் ஒன்றாகவும் இருக்கிறது.  இந்த வேதப்பகுதி   “ஆசாரிய ஆசீர்வாதம்” என்று அறியப்படுகிறது.  சகல இஸ்ரவேலருக்குமான தேவனுடைய ஆசீர்வாதம் பற்றிய இந்த வேதப்பகுதி பலவிதமான அர்த்தங்களையும், விளக்கங்களையும் தருவதாக இருக்கிறது.  “கர்த்தர்” என்ற வார்த்தை (மூல மொழியில் யெகோவா) திரும்பத் திரும்ப மூன்று முறை வருவது, தேவனே சகல ஆசீர்வாதங்களுக்கும் காரணராக/ஊற்றாக இருக்கிறார் என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.  இந்த ஆசாரிய ஆசீர்வாதத்தின் முதல் வரியானது, தேவன் தம் ஜனங்களுக்கு அருளும் ஆசீர்வாதம் மற்றும் பாதுகாப்பைப் பற்றி உணர்த்துகிறது. தேவன் பார்ப்பார் என்கிற ஒரு விசுவாசியின் நம்பிக்கையையும், அவருடைய ஜெபங்கள் மற்றும் வேண்டுதல்களுக்கு கிருபையாய் பதில் கொடுப்பார் என்பதையும் இரண்டாவது வரி வெளிப்படுத்துகிறது. தேவன் கவனித்து, தன் அமைதியை சமாதானத்தைக் கொடுக்கிறார் என்ற உறுதியை மூன்றாவது வரி தருகிறது. ஷாலோம்! இந்த ஆசாரிய ஆசீர்வாதம் தொடர்ச்சியான ஒன்றாகும். இந்த ஆசீர்வாதம் தேவ ஜனங்கள் மீது சொல்லப்படும் போது, தேவ ஜனங்கள் தேவனுடைய பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதத்தை உடையவர்கள் என்பதை நினைவுபடுத்துவதாக இது இருக்கிறது. இந்த ஆசீர்வாதமான வார்த்தைகள் முக்கியமான நேரங்களிலும், தேவ ஜனங்கள் கூடி வரும்போதும் அவர்கள் மீது சொல்லப்பட்டது. சில பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆசீர்வாதத்திற்காக இந்த ஆசீர்வாதத்தை அவர்கள் மீது சொல்கின்றனர். தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அவருடைய ஆசீர்வாதம் தேவ சமாதானத்தை நமக்குத் தருகிறது என்பது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு காரியம் ஆகும். 

பயன்பாடு: தேவன் தம் ஆசீர்வாதத்திற்கு என்னை அழைத்திருக்கிறார். அவருடைய நாமம் என் புகலிடமாகவும் என்னை பாதுகாக்கும் அரணாகவும் இருக்கிறது. என் வாழ்க்கையின் கடினமான தருணங்களின் ஊடாக நான் செல்லும் வேளைகளில், நான் இந்த மும்மடங்கு ஆசீர்வாதத்தை நினைவு கூர்ந்து, தேவ சமாதானத்திற்காக காத்திருக்க வேண்டும். நான் தேவ சமூகத்தில் வருகையில், கர்த்தர் தம்முடைய முகத்தை என்மேல் பிரசன்னமாக்கி, என் மேல் கிருபையாயிருக்கிறார். எல்லாவற்றையும் விட, அவர் என்னைப் பார்க்கிறார். என் சூழ்நிலையை, என் பிரச்சனைகளை, என் கவலைகளை அவர் காண்கிறார்.    என் ஜெபத்தைக் கேட்டு அவர் தன் சமாதானத்தை எனக்குத் தருகிறார்.  அவருடைய ஆசீர்வாதமானது தொடர்ந்து எப்பொழுதும் என்னுடன் இருக்கிற ஒன்றாகும். அவருடைய சமூகத்தில் அனுதினமும் வாழும் ஒரு ஆசீர்வாதமான நபராக நான் வாழ வேண்டும் என தேவன் விரும்புகிறார். 

ஜெபம்:  பிதாவாகிய தேவனே, உம் மும்மடங்கு ஆசீர்வாதத்திற்காக நன்றி. வாழ்வின் எல்லா நன்மைகளுக்கும் காரணராக/ஊற்றாக இருப்பதற்காக உமக்கு நன்றி. நான் உம் பிரசன்னத்தில் வருகையில், உம் ஆசீர்வாத வார்த்தைகளை வாசிக்கிறேன்/கேட்கிறேன். என் இதயத்தை நிரப்பும் உம் சமாதானத்திற்காக நன்றி. அனுதினமும் நான் உம்முடன், உம் ஆசீர்வாதத்தில் வாழ எனக்கு அருளும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: