Monday, March 22, 2021

ஒளி வீசும் ஒரு பரிந்துரை ஜெபம்

  வாசிக்க: உபாகமம் 9, 10; சங்கீதம் 81,  மாற்கு 13:1-23

வேதவசனம்: உபாகமம் 8: 18. கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
19. கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.

கவனித்தல்: இஸ்ரவேலர்கள் ”தங்க கன்றுகுட்டி” சிலை செய்து தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தபின், அவர்களுக்காக பரிந்துரை ஜெபம் செய்ததை மோசே இங்கு நினைவுகூருகிறார். இரண்டாவது முறையாக அவர் நாற்பது நாள் இரவும் பகலும் அவர் உபவாசம் இருந்து ஜெபித்தார். முதல் முறை அவர் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தபோது, அவர் தேவனுடன் இருந்தார், அப்போது தேவன் அவரிடம் அந்நாட்களில் நியாயப்பிரமாணம் குறித்தும், ஆசரிப்பு கூடார வேலை குறித்தும், மற்றும் பல காரியங்களைக் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இரண்டாவது முறை நாற்பது நாட்கள் மோசே உபவாசம் இருந்த போது, அவர் தேவனுக்கு முன்பாகச் சென்று, இஸ்ரவேலர்கள் தேவனுக்கு விரோதமாகச் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டும் என மன்றாடினார். உபாகமம் 9:26-28 ல் மோசே செய்த வல்லமையான ஜெபத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம். இஸ்ரவேலர்கள் பாவம் செய்து தேவனைக் கோபப்படுத்தியபோது, தேவன் மோசேயைப் பெரிய ஜாதியாக்குகிறேன் என்று வாக்குப் பண்ணினபோது அவர் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, அவர்களுடைய பாவத்தை நிவிர்த்தி செய்யும்படி ஜெபித்து, “தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்” என்றான் (யாத்.32:30-32). நாம் உபாகமம் 9ல் வாசிப்பது போல, அவன் தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து கிடந்தான். இஸ்ரவேலரின் மகாபெரிய பாவத்தினிமித்தம் கர்த்தருக்கு முன்பாக மோசே தன்னத்தானே தாழ்த்தினான். இஸ்ரவேலருக்காக மோசே செய்த ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்டு பதிலளித்தார். இதில் கர்த்தருடைய சமூகம் இஸ்ரவேலர்களுடன் வரவேண்டும் என்பதற்கான ஜெபமும் அடங்கும். நிச்சயமாகவே, தேவன் நம் ஜெபங்களைக் கேட்டுப் பதிலளிக்கிறார்! மோசேயின் பரிந்துரை ஜெபத்தைப் பற்றிய குறிப்பில் ஆச்சரியமான மற்றும் சுவராசியமான ஒரு விஷயம் என்னவெனில், மோசே தேவனோடே பேசினதினாலே அவனுடைய முகம் பிரகாசமடைந்திருந்தது. மோசேயோ அதை அறியாதிருந்தான் (யாத்.34:29). பரிந்துரை ஜெபமானது பதில்களைப் பெற்றுத்தருவதுடன், ஜெபிக்கிற நபரையும் பிரகாசமான நபராக மாற்றிவிடுகிறது. 
 
பயன்பாடு:  எனக்காக எப்போதும் பரிந்து பேசும் இயேசு இருக்கிறார் (எபி.7.25). ஆண்டவராகிய தேவனிடத்தில் நான் நம்பிக்கையுடன் உறுதியாக இருப்பதற்கு என்னை இது உற்சாகப்படுத்துகிறது. ஆயினும், நான் மோசேயின் இடத்தில் வைக்கப்பட்டால், நான் என்ன செய்வேன்/என்ன செய்ய வேண்டும்? சபையில், கிறிஸ்தவ நிறுவனங்களில், மற்றும் தனிநபர்களிடத்தில் தவறுகள், ஆன்மீக வீழ்ச்சி, கீழ்ப்படியாமை, மற்றும் பாவங்களை நான் பார்க்கும்போது, நான் என்ன செய்கிறேன்? அது என்னவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பெரிதோ சிறிதோ, அவர்களுக்காக, அக்காரியங்களுக்காக நான் ஜெபிக்க வேண்டும். 
 
ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, எங்கள் ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்டு பதிலளிப்பதற்காக உமக்கு நன்றி. மற்றவர்களுக்காக பரிந்து பேசி ஜெபிக்கும் ஒரு இருதயத்தை எனக்குத் தாரும். என் ஆண்டவராகிய இயேசுவே, மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, சிலுவையில் நீர் பாவ நிவிர்த்திக்காக உம் ஜீவனையே பலியாகக் கொடுத்ததை நினைவுகூர்ந்து, மனதுருக்கத்துடன் மற்றவர்களுக்காக ஜெபிக்க எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: