Wednesday, March 3, 2021

இயேசுவின் எச்சரிக்கை

 வாசிக்க: எண்ணாகமம் 7, 8; சங்கீதம் 62;  மாற்கு 3:20-35

வேதவசனம்: மாற்கு 3:28. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
|29. ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.

கவனித்தல்:  இன்றைய வேத வாசிப்புப் பகுதியில், இயேசுவுக்கு எதிராகச் சொல்லப்பட்ட மூன்று வித்தியாசமான குற்றச்சாட்டுகளை நாம் பார்க்கிறோம். அவருடைய குடும்பத்தினர்  “அவர் மதிமயங்கியிருக்கிறார்” என்றும், வேதபாரகர்கள் “இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான்” என்றும் சொன்னார்கள். மேலும், இயேசு  “அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறார்” என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். சூனியக்காரர்கள் மற்றும் மந்திரவாதிகள் பெரிய அல்லது பலமான பிசாசுகளின் துணையுடன் சிறிய அல்லது குட்டிப்பிசாசுகளை துரத்துகிறார்கள் என சொல்லப்படுகிறது. இதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கவோ அல்லது கவனித்திருக்கவோ கூடும். இங்கு, வேதபாரகர்கள் அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை இயேசுவின் மீது வைக்கிறார்கள். அதாவது, சாத்தானின் துணையுடன் இயேசு பிசாசுகளை துரத்துகிறார் என அவர்கள் குற்றஞ்சாட்டினர். அவருடைய நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் வேதபாரகர்களின் பொல்லாத திட்டங்களில் இருந்து இயேசுவைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பி, அவர் “மதி மயங்கி இருக்கிறார்” என்று சொல்லி இருக்கக் கூடும். 

ஆயினும், வேதபாரகர்களின் குற்றச்சாட்டு இயேசுவை அவமரியாதை செய்வதோடல்லாமல், இயேசுவை அனுப்பின பிதாவாகிய தேவனையும் இயேசுவின் மூலமாக கிரியைகளை நடப்பித்த ஆவியானவரையும் அவதூறு செய்வதாக அது இருந்தது. நித்தியகாலமாக மன்னிக்கப்பட முடியாத அவதூறான ஒரு பாவத்தைச் செய்வதாக தன்னைக் குற்றஞ்சாட்டினவர்களிடம் இயேசு சொன்னார். மேலும்,  தனக்குத்தானே பிரிந்திருக்கும் ஒரு  இராஜ்ஜியமும்,  ஒரு வீடும் நிலைத்து நிற்க முடியாது என்ற உண்மையையும் அவர் சுட்டிக் காட்டினார். ஆகவே, சாத்தான் ஒரு போதும் தன் இராஜ்ஜியத்திற்கு எதிராக நிற்க மாட்டான் என அவர் சொன்னார். ஆனால், இந்த வேதபாரகர்களோ தேவனுடைய கிரியைகளுக்கு எதிராக நின்று கொண்டிருந்தனர்.  ஏனெனில், இயேசுவின் புகழ் மக்களிடையே அதிகரித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் பொறாமைப் பட்டும், மக்கள் மீது அவர்களுக்கு இருந்த அதிகாரத்திற்கு அவரால் ஆபத்து வரக்கூடும் என பயந்தும்  இருந்தனர். ஆகவே, இந்த மாதிரியான தவறான குற்றச் சாட்டுகள் மூலமாக ஜனங்களை அவருக்கெதிராக திருப்ப அவர்கள் முயன்றனர். 

பயன்பாடு:  என் வார்த்தைகளைக் குறித்து நான்  கவனமாக இருக்க வேண்டும். பலர் சொல்வது மற்றும் செய்வது போல, எந்த நிதானிப்பும் இல்லாமல் எதைப் பற்றியும் இது சாத்தானின் செயல் என சொல்லக் கூடாது.  தேவனுடைய கிரியையையும் பிசாசின் செயல்களையும் வேறுபடுத்திப் பார்க்க நான் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுதலாகக் கூட, தேவ ஆவியானவருக்கு விரோதமாக தூஷணம் ஏதும் சொல்லிவிடக் கூடாது. இயேசுவைப் போல, நானும் சாத்தானுக்கு எதிராக நின்று, பிசாசுகளைத் துரத்த வேண்டும்.  

ஜெபம்: இயேசுவே,  உம் வார்த்தைகள் மற்றும் கிரியைகளுக்கு என் முழு கவனத்தையும் கொடுக்க எனக்கு உதவும். தேவனே, உமக்கு விரோதமாக பாவம் செய்வதன் ஆபத்து பற்றி புரிந்து கொள்ள உதவும். என் வாய்க்கு காவல் வையும். என் வாயின் வார்த்தைகள் உமக்குப் பிரியமானதாக இருப்பதாக. ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: