Tuesday, March 30, 2021

லூக்கா எழுதிய தனித்துவமான அறிமுக உரை

வாசிக்க: உபாகமம் 25, 26; சங்கீதம் 89, லூக்கா 1: 1-38

வேதவசனம்: லூக்கா 1: 1. மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
2. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,
3. ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,
4. அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.

கவனித்தல்:  எந்தவொரு சட்ட ரீதியிலான நீதிமன்றத்திலும் செல்லுபடியாகக் கூடிய உறுதியான ஆதாரமாக இருக்கக் கூடிய சுருக்கமான ஆனால் மிகவும் வலிமையான ஒரு அறிமுகத்தை லூக்கா இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிற நற்செய்தி நூலுக்குத் தருகிறார். நாம் இங்கு காண்கிறது போல, லூக்கா தெயோப்பிலுவுக்கு எழுதுகிறார். இந்த தெயோப்பிலு யார் என்பது பற்றி பல்வேறு மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில், தெயோப்பிலு என்ற வார்த்தைக்கு “தேவனுடைய சினேகிதர்”, அல்லது “தேவனை நேசிக்கும் ஒருவர்”, அல்லது “தேவனால் நேசிக்கப்படுகிற ஒருவர்” என்று அர்த்தம் கொள்ளலாம். நற்செய்தி நூல் நமக்காகவே எழுதப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டது? உங்களுக்கு போதிக்கப்பட்டவைகளைக் குறித்த நிச்சயத்தை நீங்கள் அறிவதற்காக என லூக்கா மிகவும் சுருக்கமாகச் சொல்கிறார். குறிப்பிடப்பட்ட அந்த நோக்கத்திற்காக, அவர்தாமே “திட்டமாய் விசாரித்தறிந்த” அல்லது நன்றாக பரிசோதித்தறிந்த ஒரு முறையான சரித்திரத்தை நமக்குத் தருகிறார். மிகவும் முக்கியமாக, லூக்கா பெற்ற விவரங்கள் அனைத்தும் ”கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள்” அல்லது நேரடி சாட்சிகளிடம் இருந்து பெற்றவை ஆகும். மற்ற புராதன நூல்களைப் போல அல்லாது, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி நூல் அதில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் நடந்து ஒரு சில பத்தாண்டுகளுக்குப் பின் ஒரு குறுகிய கால இடைவெளியில் எழுதப்பட்டது ஆகும். உதாரணமாக, சமீபத்தில் வாழ்ந்த ஒருவரைப் பற்றி யாராவது ஒரு கற்பனையான (பொய்யான தகவல் உள்ள) புத்தகத்தை எழுதினால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். சொல்லப்பட்ட நபரின் தவறான சித்தரிப்பு குறித்து பேச அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகள் இருவரும் ஆசிரியருக்கு எதிராக வருவார்கள் அல்லவா! அனைத்து மனிதர்களுக்கும் இரட்சகரான தனித்துவமிக்க இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை லூக்கா தருகிறார். இயேசுவைப் பற்றி நற்செய்தி நூல் சொல்பவைகளை குறித்து நாம் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருக்க முடியும்.

பயன்பாடு:  நற்செய்தி நூலை நான் வாசிக்கும்போது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறை மட்டும் நான் வாசிக்கவில்லை. அது உலக இரட்சகரைப் பற்றிய நல்ல செய்தியைத் தருகிற மிகவும் கவனமாக எழுதப்பட்ட ஒரு ஆவணம் ஆகும். இது எனக்காகவும் என் ஆன்மீகத் தேவைகளுக்காகவும் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். அப்படி எனில், நான் வேதாகமத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என் முழு கவனத்தையும் நான் அதற்குக் கொடுக்க வேண்டும். இயேசுவின் வார்த்தைகள் மூலமாக தேவன் என்னுடன் என்ன பேச விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக நான் அனுதினமும் மிக கவனமாக வேதம் வாசிப்பேன்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, இந்த உலகத்தை இரட்சிக்க உம் குமாரன் இயேசு கிறிஸ்துவை அனுப்பியதற்காக நன்றி. இந்த உலகக் கவலையிலிருந்து என்னை விடுவித்து, உம்முடன் நித்திய வாழ்வை வாழ ஆயத்தப்படுத்துகிற நற்செய்திக்காக நன்றி. நான் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை வாசிக்கும் போது, அவரைப் போல வாழவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: