Monday, March 8, 2021

இயேசுவை ஆச்சரியப்படுத்தின அவிசுவாசம்

வாசிக்க: எண்ணாகமம் 17, 18; சங்கீதம் 67;  மாற்கு 6:1-29

வேதவசனம்: மாற்கு 6:4. இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
5. அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல்,
6. அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்.

கவனித்தல்:  இயேசு ஆச்சரியப்படுவதாக முழு நற்செய்தி நூலிலும் இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே நாம் வாசிக்கிறோம்.  அவை இரண்டுமே இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்துடன் தொடர்புடையது என்பது சுவராசியமானது ஆகும். இங்கே, இயேசு “அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்” என நாம் வாசிக்கிறோம். இந்த வேதப்பகுதியை வாசிக்கும்போது, தன் சொந்த ஊரில் அல்லது தன் குடும்பத்தினர் மத்தியில் உரிய மரியாதையையும் கனத்தையும் பெறவில்லை என்று நாம் புரிந்து கொள்கிறோம். இயேசுவின் வார்த்தைகள், அற்புதச் செயல்கள், மற்றும் ஞானத்தைக் கண்ட ஜனங்கள் ஆச்சரியமடைந்தனர். ஆயினும், இயேசுவைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த தவறான எண்ணம் காரணமாக அவர்களால் அவர் மீது விசுவாசம் வைக்க முடியவில்லை. அந்த (விசுவாசத்) தடையின் விளைவாக தன் ஜனங்கள் மத்தியில் இயேசுவால் அனேக அற்புதங்கள் செய்ய முடியாமல் போனது.   அவர்களுடைய அவிசுவாசம் குறித்து அவர் ஆச்சரியமடைந்திருக்க வேண்டும். ஏனெனில், சுகவீனமான ஒருவர் சுகம் பெற்றால், மற்ற எவரையும் விட அந்த சுகவீனமாக இருந்த அந்த நபர் தான் அதிக பலன் பெறுகிறவராக இருப்பார்.  அற்புத சுகம் மிகவும் தேவையாயிருக்கிற ஒரு நபர் எப்போதாவது அற்புதங்களைச் செய்கிற ஒரு ஊழியரை ஏற்றுக் கொள்ள மறுப்பாரா? இங்கே இயேசுவின் ஊரார் அதைச் செய்தார்கள். ஆகவே இயேசு ஆச்சரியப்பட்டார்.  

பயன்பாடு: நான் இயேசுவை என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஆயினும், என் வாழ்க்கையும் செயல்களும் என் விசுவாசத்தை பிரதிபலிக்காவிடில், நான் விசுவாசிக்கிறபடி அவரைக் கனப்படுத்தவில்லை (அ) மதிக்கவில்லை என்று அர்த்தம்.  என் அவிசுவாசமானது இயேசுவின் அற்புதங்களைத் தடுக்கக் கூடும். மாறாக அவர் மேல் உள்ள என் விசுவாசமோ, சாத்தியமில்லாத எதையும் செய்யக் கூடிய அவருடைய அற்புத வல்லமையை நான் காணும்படி என்னை பலப்படுத்தும். இயேசு என் விசுவாசத்தைக் காண்கிறார். அவர் அதற்கு மதிப்பு கொடுக்கிறார். நான் அவரை எல்லா விதத்திலும் கனப்படுத்த வேண்டும். 

ஜெபம்:   இயேசுவே, உம்மை நம்பத்தவறிய அவிசுவாசமான தருணங்களுக்காக நான் வருந்துகிறேன். உம் வல்லமை மற்றும் ஞானத்தை நம்புவதில் எனக்கு இருந்த விசுவாசக் குறைபாடுகளுக்காக என்னை மன்னியும். என் இருதயத்தில் நீர் விதைத்திருக்கிற விசுவாசத்திற்காக உமக்கு நன்றி. என் இரட்சகரே, உம்மை அறிந்து கொள்வதிலும், உம்மைப் பற்றிய விசுவாசத்திலும் நான் வளர எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: