Saturday, March 13, 2021

இயேசுவைப் பின்பற்ற ஒரு சவால்

வாசிக்க: எண்ணாகமம் 27, 28; சங்கீதம் 72,  மாற்கு 8:22-37

வேதவசனம்: மாற்கு 8: 36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

கவனித்தல்: மாற்கு 8ம் அதிகாரத்தில், இயேசுவின் சீடராக இருப்பது என்றால் என்ன என்று இயேசு சொல்லிக் கொண்டிருந்தபோது இந்த கேள்விகளை இயேசு கேட்டதாக நாம் வாசிக்கிறோம். உலக வரலாற்றில், உலக பொருட்களையும் புகழையும் நாடிச் சென்ற பல புகழ்பெற்ற மனிதர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம். தாங்கள் அடைய வேண்டும் என்று அவர்கள் இருதயம் விரும்பியவைகளை பெற்ற பின்னரும் கூட, தங்களுக்கு சமாதானமும் திருப்தியும் இல்லை என்று அவர்களில் பலர் அறிக்கையிட்டிருக்கின்றனர். உதாரணமாக, அனேக நாடுகள் மீது போர் தொடுத்து வெற்றிமேல் வெற்றி பெற்ற மாவீரன் அலெக்ஸாண்டர் தான் மரித்த பின் தன் சவப்பெட்டியில் இருந்து தன் வெறுமையான கைகள் வெளியே தெரியும்படி தொங்கவிடப்பட வேண்டும் என்பதை தன் கடைசி ஆசையாக சொன்னார் என்று சொல்லப்படுகிறது. மறுபக்கத்திலோ, தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் தங்கள் தியாக வாழ்கை மற்றும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணமுள்ள ஒரு வாழ்க்கை மூலம் அனேக உயரங்களை அடைந்த, உலகத்தையே தலைகீழாக மாற்றின அனேக விசுவாச வீரர்கள் சபை வரலாற்றில் உண்டு. இந்த முழு உலகத்தையும் ஆதாயம் செய்தாலும் அது ஒருவரின் ஆத்தும மீட்புக்கு போதுமானதாக இருக்காது. நம் ஆத்துமா எவ்வளவு விலையேறப்பெற்றது! நம் ஆத்துமாவிற்கு ஈடானதாக கொடுக்கக் கூடியது என இந்த உலகத்தில் எதுவும் இல்லை. நம் ஆத்துமாவை மீட்கும் பொருளாக, இயேசு தம்மையே சிலுவையில் தியாகபலியாக ஒப்புக் கொடுத்து அதற்கான விலைக்கிரயத்தைச் செலுத்தினார் என வேதம் கூறுகிறது.  இயேசுவைப் பின்பற்ற விரும்புபவர்கள் அனைவரும் அவரவர் சிலுவையை எடுத்துக் கொண்டு இயேசுவைப் பின்பற்றவேண்டும் என அவர் அழைக்கிறார். எந்த உலகப் பொருட்களும் தர இயலாத மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் இயேசு நமக்குத் தருகிறார். முக்கியமாக, இயேசு நமக்குத் தருவது தற்காலிகமானதல்ல, நித்தியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
 
பயன்பாடு:  இயேசுவின் சீடராகிய நான், இயேசுவைப் பின்பற்றத் தேவையானது என்ன என்பதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். தம் சீடர்கள், தன்னைத்தான்  வெறுத்து, சிலுவையை எடுத்துக் கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என ஆண்டவராகிய இயேசு விரும்புகிறார்.  உலகக் காரியங்களுக்குப் பின் செல்வது தற்காலிகமான மகிழ்ச்சியையும் ஆதாயத்தையும் தரக்கூடும். ஆயினும், தற்காலிகமான சந்தோசம் மற்றும் ஆதாயத்திற்காக நான் என் அழைப்பையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நான் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. என் விருப்பங்களைக் காட்டிலும் நான் தேவனுக்கும் தேவனுடைய விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். என் சுயத்திற்கு மரிப்பதுதான் நான் அனுதினமும் சுமக்க வேண்டிய சிலுவை ஆகும். நான் கஷ்டங்கள், பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் வழியாகச் செல்ல வேண்டியதிருந்தாலும், தேவன் எனக்கு உறுதியளித்திருக்கிற, எனக்கு முன்பாக இருக்கிற நித்தியத்திற்கு முன்னால் அவையெல்லாம் ஒன்றுமேயில்லை.  “சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே! பின்னோக்கேன் நான், பின்னோக்கேன் நான்.”  

ஜெபம்:   இயேசுவே, உம்மை எப்படிப் பின்பறவேண்டும் என்ற உம் இருதய விருப்பத்தை எனக்கு நினைவுபடுத்தியதற்காக நன்றி. தேவ பக்திக்கேற்றபடி என் முன்னுரிமைகளை நான் திட்டமிட எனக்கு உதவும். ஆண்டவரே, என் சுயத்தை வெறுக்கவும்,  என் சிலுவையை  சுமக்கவும் எனக்கு உம் பலத்தைத் தாரும். எல்லாவற்றிற்கும் மேலாக, உலகக் காரியங்களைப் பின்பற்றுவதை விட இயேசுவின் சீடராக இருப்பது பாக்கியம் என நான் கருதுகிறேன்.  ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: