Wednesday, March 24, 2021

இயேசுவுக்காக ஒரு அழகிய செயல்

 வாசிக்க: உபாகமம் 13, 14; சங்கீதம் 83,  மாற்கு 14:1-31

வேதவசனம்: மாற்கு 14: 6. இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
7. தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.
8. இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.

கவனித்தல்: விலையேறப்பெற்ற தைலத்தை தன் தலையில் ஊற்றின ஒரு பெண்ணுக்காக இயேசு பேசுவதை நாம் இங்கு பார்க்கிறோம். அங்கிருந்தவர்கள் “விசனமடைந்து”, “அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்” (வ.4,5). ஏனெனில் அவர்கள் (யோவான் 12:4-6ன் படி, யூதாஸ்காரியோத்து) அந்த ”வெள்ளைக்கல் பரணி”யின் விலைமதிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்த தைலத்தின் மதிப்பு ஒரு தினக் கூலி பெறுபவரின் ஒரு வருட சம்பளத்திற்குச் சமமானதாக இருந்தது. அந்நாட்களில் அந்த அதிக விலைபெறுகிற வெள்ளைக்கல் பரணியை எவரேனும் வைத்திருந்தால், அதை தங்கள் பெருமையின் ஒரு அடையாளமாக கருதி இருப்பர். இயேசு அவளுடைய நன்றியறிதலின் செயலை அப்படியே ஏற்றுக் கொண்டார். நம் தகுதிக்கு மீறி, நம்மால் முடியாதவைகளைத் கொடுக்க/செய்ய வேண்டும் என்று இயேசு ஒருபோதும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. அந்தப் பெண்ணிடம் அவர் செய்தது போல, நாம் நம்மால் செய்யக் கூடியதைச் செய்யும்போது அவர் அதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறார் (வ.8). இயேசுவைப் பற்றிய நற்செய்தி செல்லும் இடம் எங்கிலும் அவளுடைய செயல் நினைவுகூரப்படும் என்று சொல்லி, அந்தப் பெண்ணின் தியகச் செயலை இயேசு பாராட்டினார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் அடுத்ததாக, யூதாஸ்காரியோத்து தானாகவே முன்வந்து பிரதான ஆசாரியரிடம் சென்று வெறும் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக (அதாவது, தினக்கூலி பெறுபவரின் நான்கு மாத சம்பளம்) இயேசுவைக் காட்டிக் கொடுக்க சம்மதித்தான் என்று நாம் வாசிக்கிறோம். இயேசுவைக் காட்டிலும் யூதாசுக்கு 30 வெள்ளிப் பணம் அதிக மதிப்புடையதாக இருந்திருக்கவேண்டும். இப்படியாக, அவனால் செய்யக் கூடியதை அவன் செய்தான். எவ்வளவு மோசமான ஒரு செயல்! மறுபக்கத்திலோ, அந்தப் பெண் விலையேறப்பெற்ற அந்த தைல புட்டியை உடைத்து, நறுமண தைலத்தை இயேசுவின் தலையின் மேல் ஊற்றினாள் என நாம் வாசிக்கிறோம். அவளுடைய செயலினால் பரவின நறுமணத்தை அந்த அறையில் இருந்த அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுடைய இருதயம் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ஆயினும் இயேசுவோ, இது தன் அடக்கத்திற்கான முன் ஆயத்தமாக இருக்கிறது என்று அவர்களிடம் சொன்னார். எவ்வளவு அழகிய ஒரு செயல் இது!

பயன்பாடு:  நான் இயேசுவுக்குப் படைக்க/செய்யக் கூடிய மிகச் சிறந்த காரியம் என்ன! நான் காணிக்கைகளைக் கொடுக்கலாம், ஊழியங்களைத் தாங்க பணம் அனுப்பலாம். ஆனால் இயேசுவோ கொடுக்கிற என் இதயத்தைப் பார்க்கிறார், நான் கொடுக்கிற பொருளை அல்ல. அந்தப் பெண்ணைச் சுற்றி இருந்த அனைவரும் அந்த வெள்ளைக்கல் பரணி தைலத்தின் விலைக் குறிப்பைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில், அந்த நறுமண தைலத்தைக் கொடுத்த அவளுடைய இருதயத்தை இயேசு பார்த்தார். இயேசுவைப் பொறுத்தவரையில், ஒரு நபரின் இருதயத்தைப் பார்க்கிலும் விலைமதிப்பற்றது எதுவுமில்லை. நான் என் இதயத்தை இயேசுவுக்குக் கொடுக்கும்போது, அவர் அதை ஏற்றுக்கொண்டு என்னைப் பாராட்டுகிறார். நான் என் இதயத்தை இயேசுவிடம் கொடுக்கும்போது, நறுமணமானது எங்கும் பரவி, நான் இருக்கும் இடத்தை அனைவருக்கும் இனிமையான இடமாக மாற்றுகிறது. அது எவ்வளவு அழகானதாக இருக்கும்!
 
ஜெபம்:  இயேசுவே, என் வாழ்வில் நீர் செய்துவருகிற எல்லா காரியங்களுக்காகவும் உமக்கு நன்றி. எண்ணி முடியாத அழகிய செயல்களை என் வாழ்வில் நீர் செய்திருக்கிறீர். உம் அன்பிற்காக நன்றி. நான் உம் மீது வைத்திருக்கும் அன்பை அனுதினமும் என் வாழ்வில் வெளிப்படுத்த எனக்கு உதவும். ஆமென்.


- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: