Sunday, March 7, 2021

விசுவாச தொடுதல்

 வாசிக்க: எண்ணாகமம் 15, 16; சங்கீதம் 66;  மாற்கு 5:21-43

வேதவசனம்: மாற்கு 5:30. உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
31. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
32. இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.

கவனித்தல்:  மாற்கு 5:21-43 ல், மரித்துக் கொண்டிருந்த யவீருவின் மகளைக் குணமாக்குவதற்காக இயேசு அவனுடைய வீட்டிற்குப் போகும்வழியில் நிகழ்ந்த ஒரு குறிப்பிடத்தக்க குணமாக்கும் அற்புதம் பற்றி நாம் வாசிக்கிறோம். நாம் நற்செய்தி நூலில் வாசிப்பது போல, அந்த நாளில் இருந்த பல சிகிச்சைகளை முயற்சித்தும் குணமடையாமல், நம்பிக்கையின்றி அந்த (பெயர் அறியப்படாத) பெண் இருந்தாள். சுகமடைவதற்குப் பதிலாக, அவள் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போனது. வாழ்க்கையில் அவளுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் போய் இருந்திருக்க வேண்டும். ஆயினும், இயேசுவைப் பற்றி அவள் கேள்விப்பட்ட போது, அவளுடைய இருதய விசுவாசமானது  “நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்” என்று சிந்திக்க வைத்தது. இயேசுவின் வஸ்திரங்களைத் தான் தொடும்போது, அவள் தன் ஏமாற்றம் மற்றூம் வேதனைகள் நிறைந்த ஆண்டுகள் ஒரு முடிவுக்கு வரும் என்று விசுவாசித்தாள். நியாயப்பிரமாணத்தின்படி, அவள் தீட்டான (அ) அசுத்தமான ஒரு பெண். அவள் யாரையாகிலும் தொட்டாலோ அல்லது எவராவது அவளைத் தொட்டாலோ அவர்களும் தீட்டுப்பட்டவர்களாகி விடுவர், தீட்டானவர்களாகக் கருதப்படுவர் (லேவியராகமம் 15). இயேசுவைச் சுற்றிலும் ஜனங்கள் நெருக்கியடித்துக் கொண்டிருக்கையில், அவள் இயேசுவின் வஸ்திரங்களை மட்டும் தொட தீர்மானித்தாள். இந்த நிகழ்வை பரிசுத்த அகஸ்டின் மிக அழகாக பின்வருமாறு கூறுகிறார், “மாம்சம் அழுத்துகிறது, விசுவாசமோ தொடுகிறது.” அவள் இயேசுவைத் தொட்டதும், தாமதமின்றி உடனே சுகமடைந்தாள். அவளுடைய விசுவாச தொடுதலை எவரும் கவனிக்க மாட்டார்கள் என்று அவள் நினைத்திருக்கக் கூடும். ஆனால் இயேசு உடனே திரும்பி ஒரு கேள்வி கேட்பதைப் பார்க்கிறோம். இயேசுவின் கேள்வியிலும் சீடர்களின் பதிலிலும் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். அவள் செய்ததை மிகச் சரியாக இயேசு சொன்னார். அவளைக் கண்டுபிடிக்கும்படி இயேசு சுற்றிலும் பார்த்தார். இயேசு அந்தப் பெண்ணின் விசுவாசத்தையும் அவளுடைய சுகமாகுதலையும் அனைவரும் அறியச் செய்தார். இப்படியாக, அவள் இனி தீட்டானவள் அல்ல, மாறாக அவளுடைய பாடுகளில் இருந்து விடுதலை பெற்றவள் என அவர் அறிவித்தார். 

பயன்பாடு: ஒரு குறிப்பிட்ட வியாதி, அல்லது ஒரு போராட்டம், அல்லது ஒரு சோதனை, அல்லது ஒரு பாவம் இவற்றுடன் நான் எவ்வளவு காலம் போராடிக்கொண்டு அல்லது வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என்பதல்ல. மாறாக, இயேசுவின் தொடுதலால் நான் விடுதலை பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் நான் எவ்வளவு சீக்கிரமாக இயேசுவிடம் வருகிறேன் என்பது மிக முக்கியமானது ஆகும்.  இயேசு என் விசுவாசத்தையும், நம்புகிற இருதயத்தையும் பார்க்கிறார். மனித எல்லைக்கு அப்பாற்பட்ட பலன்களை விசுவாசமானது பெற்றுத்தருகிறது. சில நேரங்களில், சிறப்பான நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் கூட என் வேதனைகள் மற்றும் கவலைகளுக்கு எந்த தீர்வையும் தருவதில்லையே என நான் நினைக்கிறேன். ஆனால் இயேசு ஒருபோதும் அப்படிப்பட்ட நினைவுகளைத் தருவதில்லை. நான் இயேசுவின் அருகில் வந்த உடனே, என் விவரிக்கமுடியாத மலைகள் அனைத்தும் அவருக்கு முன்பாக உருகி ஓடுவதை நான் காண்கிறேன். அவர் என் விசுவாசத்தைக் கனப்படுத்தி, ஜனங்கள் அதை அறியும்படிச் செய்கிறார். இயேசுவின் நிமித்தமாக, நான் விடுதலை பெற்றவனாக, எல்லா கவலைகளிலும் இருந்து இரட்சிக்கப்பட்டவனாக நான் இருக்கிறேன். நான் அவரை துதிக்கவும், உயர்த்தவும் அனேக காரணங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவரை நிராகரிக்க அல்லது விசுவாசியாமலிருக்க ஒரு காரணமும் இல்லை. 

ஜெபம்:   இயேசுவே, இன்றும் கூட நீர் சுகமாக்கமுடியாத பல வியாதிகளில் இருந்து சுகத்தையும், பிரச்சனைகளில் இருந்து விடுதலையும் கொடுத்து வருவதற்காக உமக்கு நன்றி. இப்பொழுது நான் இருக்கிற வண்ணமாகவே நான் உம் முன் வருகிறேன்.  ஆண்டவரே, என் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றி, உம் மகிமைக்காக எடுத்து பயன்படுத்தும். நான் முழுவதுமாக என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: