Saturday, March 27, 2021

பாவத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த மரணம்

வாசிக்க: உபாகமம் 19, 20; சங்கீதம் 86,  மாற்கு 15:33-47

வேதவசனம்: மாற்கு 15:34 34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 
35. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
36. ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
37. இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

கவனித்தல்:  லெந்து காலங்களில், குறிப்பாக பெரியவெள்ளி ஆராதனைகளில், மாற்கு 15:34 ம் வசனம் இயேசு சிலுவையில் இருந்து பேசின வார்த்தைகளில் நான்காவது வார்த்தையாக நினைவுகூரப்படுகிறது. இயேசு சிலுவையில் இருந்த போது, அவருடைய மரணத்திற்கு முன்பும் பின்பும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அவருடைய சிலுவை மரணத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்களாக இருந்தார்கள். ஆயினும், இயேசுவின் சிலுவை மரணத்தின் போது அவரால் தாங்க முடியாத வேதனையாக இருந்தது அந்த இடத்தில் இருதவர்கள் செய்த நிந்தனைகளோ, பரியாசங்களோ, தூஷணங்களோ மற்றும் இரத்தம் வடிந்து கொண்டிருந்த காயப்பட்ட அவருடைய உடலின் வலியோ அல்ல. வேத வாக்கியங்களின் படி, உலகத்தின் பாவம் இயேசுவின் மீது சுமத்தப்பட்ட போது பிதாவிடம் இருந்து பிரிக்கப்பட்டதாக உணர்ந்ததுதான் அவருக்கு மிகுந்த வேதனையானதாக இருந்தது. மனித குலம் மீது தேவன் வைத்திருக்கும் மகா பெரிய அன்பின் வெளிப்பாடுதான் இயேசுவின் சிலுவை மரணம். அது அசாதாரணமான, கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மரணம் ஆகும். இயேசு நம்மை இரட்சிக்க சித்தமுடையவராயிருந்ததினால், தம்மை இரட்சிக்க சித்தம் இல்லாதவராயிருந்தார் என்று தேவ மனிதர் ஒருவர் சொல்கிறார். ”நாம் அவருக்குள் (இயேசுவுக்குள்) தேவனுடைய நீதியாகும்படிக்கு”, “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு” இயேசு நம் பாவங்களைச் சுமந்தார் என வேதாகமம் கூறுகிறது (2 கொரி.5:21; 1 பேதுரு 2:24). இயேசுவின் மரணத்தில், நம் மீட்பு வாழ்க்கையின் துவக்கம் அல்லது ஆரம்பத்தை நாம் காண்கிறோம். இயேசு மரித்த போது, மனித குலம் மீதான சக்தியை பாவமானது இழந்தது. அவர் அதை சிலுவையில் ஆணியடித்து, வெற்றி சிறந்தார்.

பயன்பாடு:  இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்கிறதைப் பார்க்கிலும், இயேசு ஏன் மரித்தார், சிலுவை மரணத்தின் மூலமாக என்ன செய்து முடித்திருக்கிறார் என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய பரிபூரணமான ஒப்புரவாக்குதலின் பலி நான் தேவனிடம் இழந்து போன உறவை திரும்பவும் பெற்றுக் கொள்ளவும் தேவனுடைய இரட்சிப்பை நான் பெற்றுக் கொள்ளவும் எனக்கு உதவுகிறது. அவர் அதற்கான விலையை செலுத்திவிட்ட படியால், நான் எதையும் கொடுக்க வேண்டியதில்லை. நான் இயேசுவின் தியாக பலியை ஏற்றுக் கொள்ளும்போது, அவருக்குள் இருக்கிற அனைத்து ஆசீர்வாதங்களையும் நான் பெற்றனுபவிக்க ஆரம்பிக்கிறேன். நான் அவருக்குள் வாழ்கிறபடியால், பாவம் மற்றும் மரணம் என்பவைகளின் பிரமாணத்தில் இருந்து நான் விடுதலையாக்கப்பட்டிருக்கிறேன்.

ஜெபம்: இயேசுவே, என்னை பாவத்தின் பிடியில் இருந்து விடுவித்து, என்னை உயர்த்துவதற்காக நீர் சிலுவையில் எனக்காக மரித்தீர். உம் அநாதி சினேகத்திற்காக நன்றி. நான் தேவனுடைய நீதியாகும்படியாகவும், அதற்கென வாழவும் நீர் செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டீர். என் இரட்சகரே! இன்றும் என்றும் உம் அன்பை நினைவுகூர்ந்து, நான் பாவமில்லாத ஒரு வாழ்வை வாழவும், நீதிக்கு பிழைத்திருக்கவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: