Sunday, March 14, 2021

இங்கே பதில் கிடைக்கும்!

 வாசிக்க: எண்ணாகமம் 29, 30; சங்கீதம் 73,  மாற்கு 9:1-29

வேதவசனம்: சங்கீதம் 73: 15. இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
16. இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,
17. அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.

கவனித்தல்: நம் மனதில் இருக்கிற முக்கியமான கேள்விகளில் ஒன்றுக்கு பதிலளிப்பதாக சங்கீதம் 73 இருப்பதால், அது நம் கவனத்தை எளிதில் பெறுகிறது. இங்கே சங்கீதக்காரன் சறுக்குதலுக்கு மிகவும் சமீபத்தில் இருந்ததாக வெளிப்படையாக அறிக்கை செய்கிறார். துன்மார்க்கரின் செழிப்பை அவர் பார்த்துக் கொண்டிருக்குமட்டும், துன்மார்க்கர் மிகவும் வெற்றிகரமானவர்களாகவும், எவ்விதக் கவலைகளும் இல்லாதவர்களாகவும் இருப்பதாக அவர் நினைத்தார். துன்மார்க்கரின் செழிப்பான நிலைமை பற்றிய சங்கீதக்காரனின் வார்த்தைகள், ஒரு பொறாமையுள்ள இருதயத்தின் மிகைப்படுத்தலான வார்த்தைகளாக இருக்கக் கூடும். ஆயினும், அது சங்கீதக்காரனுக்கு எவ்விதத்திலும் உதவ வில்லை. மாறாக, தான் அனுதினமும் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், துன்மார்க்கரோ தன்னம்பிக்கையுடன் நினைத்ததைச் செய்து முடிப்பவர்களாகவும் இருப்பதாக அவர் நினைத்தார்.  15வது வசனத்தில், நாம் நினைப்பவைகளையெல்லாம் பேசக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கையை காண்கிறோம். அவர் தேவனுடைய பரிசுத்தஸ்தலத்தில் நுழைந்த உடனே, அவர் தன்னை அழுத்திக் கொண்டிருந்த சிந்தனைகளின் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டுகொண்டார். தேவனுடைய பரிசுத்த ஸ்தலம் என்பது, தேவனைத் துதிப்பதற்கும் ஜெபம் செய்வதற்கும் அவருடைய வார்த்தைகளும் அவர் செய்த செயல்களும் வாசிக்கப்படுகிற, நினைவுகூரப்படுகிற ஒரு இடம் ஆகும். அது தேவன் தம் ஜனங்களின் மத்தியில் வாசம் பண்ணுகிற இடம் ஆகும்.  “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் (1 கொரி.3:16). தேவனுடைய பிரசன்னத்தின் வெளிச்சத்தில், துன்மார்க்கரின் முடிவு என்ன என்பதை சங்கீதக்காரன் புரிந்து கொண்டார்.  சங்கீதக்காரன் அல்ல, துன்மார்க்கர் தாம் சறுக்குதலான இடத்தில் இருந்தனர். முக்கியமாக, பரலோகத்திலும் பூமியிலும், தேவனை விட அதிகம் விரும்பபடத்தக்கது எதுவும் இல்லை என்பதைக் கண்டுணர்ந்து கொண்டார். 
 
பயன்பாடு: இந்த உலகத்தில், மக்கள் ஏராளமான  செல்வத்தைச் சேர்த்து, எல்லாவற்றிலும் வெற்றிகரமானவர்களாக இருந்தால், அவர்கள் மக்களின் கவனத்தையும் புகழ்ச்சியையும் பெறுகிறார்கள். அவர்கள் எப்படி, எவ்விதத்தில் செல்வத்தையும் வெற்றிகளையும் பெறுகிறார்கள் என பலர் பார்ப்பதில்லை. நான் அப்படி இருக்கக் கூடாது. துன்மார்க்கரைப் பார்க்கும்படி என கவனம் கவர்ந்திழுக்கப்படும்போது, நான் உடனடியாக தேவனுடைய பரிசுத்தஸ்தலத்திற்கு வரவேண்டும். என் கவனமெல்லாம் தேவன் மீதே இருக்க வேண்டும், எந்த மனிதன் மீதும் அல்ல. ஏனெனில், நான் எதைக்காட்டிலும் தேவனை அதிகம் விரும்புகிறேன். நான் எங்கிருந்தாலும், நான் தேவனிடம் சென்று, அவர் சமூக பிரசன்னத்தைப் பெற்றனுபவிக்க முடியும். தேவனுடைய பிரசன்னத்தில், நான் அவருடைய வார்த்தைகளை, அவர் செய்தவைகளை வாசித்து தியானிக்கும்போது,  நான் என்னுடைய ஆசீர்வாதங்களை புரிந்து கொள்ள முடியும். “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்”

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, மற்றவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நான் தடுமாறி சறுக்கி விழக் கூடும். ஆனால், உம்மை நோக்கிப் பார்க்கையில், நான் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் பெற்று, வாழ்க்கையின் கடினமான கேள்விகளுக்கான பதில்களையும் புரிந்து கொள்கிறேன். தந்தையே, நீர் எப்போதும் என்னுடன் இருந்து, பத்திரமாக என்னை வழிநடத்துகிறீர். நீரே என் பலமும், பங்குமாக இருக்கிறீர். தேவனே, உம்மைத் தவிர, நான் வேறேதையும் விரும்பவில்லை. ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: